முல்லைப் பெரியாறு அணை உரிமை வழக்கில் முகாமையான கட்டமொன்று வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 2006- ஆம் ஆண்டு கேரளத்திற்கெதிராகத் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கை விசாரித்து வரும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் அணையின் வலிமை குறித்து ஆய்ந்து தனக்குப் பரிந்துரைக்கும்படி அதிகாரமுள்ள வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழு தனது பரிந்துரையை 25.4.2012 அன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இது மூடி முத்திரையிடப்பட்டு வழங்கப்பட்டது.

2012 மே 4- ஆம் நாள் உச்ச நீதிம்னற அரசமைப்பு ஆயம் விசாரிக்கும் போதுதான் ஆனந்த் குழுவின் பரிந்துரைகள் என்ன வென்று தெரியவரும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்பரிந்துரைகள் யாவை என்பதை இந்து நாளேடு (26.4.2012) வெளியிட்டு விட்டது.

“முல்லைப் பெரியாறு அணை, கட்டுமான அடிப்படையிலும் நீரியல் அடிப்படையிலும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. சில செப்பனிடும் பணிகளைச் செய்த பின் தமிழ்நாடு அரசு 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம்.”

“ நில நடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வுகள் (Tremors)முல்லைப்பெரியாறு அணையையும் பாதிக்க வில்லை. இடுக்கி அணையையும் பாதிக்கவில்லை. நில நடுக்கத்தால் இரு அணைகளுக்கும் ஆபத்தில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனந்த்குழு, இப்பரிந்துரையை, தக்க வல்லுநர் குழுக்களின் ஆய்வு முடிவுகள், அறிக்கைகள் அடிப்படையிலேயே அளித்துள்ளது.

இப்பரிந்துரை, முதல் பரிந்துரையாக அவ்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக இன்னொரு பரிந்துரையும் அவ்வறிக்கையில் உள்ளது. அது வருமாறு:

“கேரளம் புதிய அணைகட்ட வேண்டும் மென்று கோருகிறது. இப்பொழுதுள்ளது பழைமையானது என்ற அடிப்படையில் புதிதாக அணை கட்ட வேண்டும் என்று விரும்பினால் மாற்று முன்மொழிவாக அதைப் பரிசீலிக்கலாம்.

”அவ்வாறு புதிய அணை கட்டப்பட்டால், அதில் அதிகபட்சம் தண்ணீர் தேக்கும் அளவு 155 அடியாக இருக்க வேண்டும். இதில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது பற்றியும், அணையைப் பராமரிப்பது பற்றியும் இரு மாநிலங்களும் புதிய உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்”.

ஏ.எஸ்.ஆனந்த தலைமையில் அவருக்கு அடுத்து நான்கு பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நடுவண் நீர்வளத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி.டி.தத்தே, நடுவண் நீர்வள ஆணைய முன்னாள் தலைமைப் பொறியாளர் டி.கே மேத்தா, தமிழகப் பேராளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன், கேரளப் பேராளராக முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோர் ஆவர்.

அணை வலுவாக உள்ளது 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்ற பரிந்துரைக்குக் கேரளத்தின் கே.டி. தாமஸ் மறுப்புக் கருத்து பதிவு செய்துள்ளார். புதிய அணைக்கட்டுவதென்றால் மாற்று முன்மொழிவாக அதைப் பரிசீலிக்கலாம் என்ற இரண்டாவது பரிந்துரைக்கு தமிழகத்தின் ஏ.ஆர்.இலட்சுமணன் மறுப்புக் கருத்துப் பதிவு செய்துள்ளார்.

4.5.2012 அன்று நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் ஏ.எஸ். ஆனந்த் குழுவின் பரிந்துரை பற்றி விசாரணை நடத்தும். தமிழக, கேரள அரசுகளின் வழக்கறிஞர்கள் தம் வாதங்களைப் பேசுவர். இறுதியில் தீர்ப்பு வரும்.

ஆனந்த் குழுவின் முதன்மைப் பரிந்துரை ”முல்லைப் பெரியாறு அணை கட்டுமான வகையிலும் நீரியல் ஆற்றல் வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது(Structurally and Hydrologically safe)” என்பதாகும். உச்சநீதிமன்ற அரசமைப்பு ஆயம் இதைத்தான் ஏற்றுத் தீர்ப்பளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஏற்கெனவே 2006 பிப்ரவரி 27-இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அணை வலுவாக இருக்கிறது முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் உள்ள செப்பனிடும் பணிகளை முடித்த பிறகு முழு அளவான 152 அடி வரை தேக்கலாம் என்று கூறியிருந்தது.

எனவே ஐந்து நீதிபதி ஆயம், தன் முன் உள்ள ஆனந்த் குழு பரிந்துரை உச்ச நீதிமன்றத்தின் முந்தையத் தீர்ப்பு இரண்டையும் வைத்து, 142 அடி தண்ணீர் தேக்க தமிழகத்திற்கு உரிமை வழங்கித் தீர்ப்பளிக்க வேண்டும்.

அவ்வாறு தீர்ப்பளித்தால் அதைக் கேரளம் ஏற்குமா? ஏற்காது என்று இப்போதே சொல்லலாம். கேரளத்தில் உள்ள காங்கிரசு, கம்யூனிஸ்ட், பா.ச.க. கட்சிகள் மலையாளிகளைத் தூண்டிவிட்டு தமிழர்களுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிராகப் போராட வைப்பார்கள்.
கடந்த டிசம்பரைப் போல் தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால் அதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் எதிர் வினையாற்ற வேண்டும். ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஒப்புக்கு அடையாளப் போராட்டம் நடத்திக் கொண்டும் இருக்கக் கூடாது.

ஒருவேளை உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்குப் பாதகமாகவோ, அல்லது இரண்டுங் கெட்டான் வகையிலோ தீர்ப்பளித்து விட்டால் சனநாயக வழி முறைப்படியும் சட்டப் படியும் தமிழகம் அத்தீர்ப்பை மாற்றி அமைக்கச் செயல் புரிய வேண்டும். என்ன தீர்ப்பு வந்தாலும், நாம் போராடித்தான் உரிமையை நிலைநாட்ட வேண்டியிருக்கும்.

நாடாளுமன்றக் குழுப் பயணம் ஒரு நாடகம்

சிங்களவெறி இலங்கை அரசைப் பாதுகாக்க அடுத்த நாடகம் ஒன்றை இந்திய அரசு அரங்கேற்றியுள்ளது. இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு ஈழத்தமிழர்களுக்கு எந்தவொரு சிறு நிவாரணமும் பெற்றுத் தராமல் திரும்பியுள்ளது.

இப்பயணத்தால் பயன் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறி அக்குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது என செயலலிதா அறிவித்தார். முதலில், இக்குழுவில் இடம் பெறுவதாக இருந்த தி.மு.க.வும் செயலலிதாவைப் பின்பற்றி ப் பின்னர் விலகியது.

உள்நாட்டு அகதிகளாக இனப்படுகொலைப் போரினால் இடம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களின் இயல்பு வாழ்க்கையை மீட்கவும், அவர்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியேற்றம் செய்யவும் மட்டுமின்றி, தமிழர்களுக்குப் பொருளுள்ள அதிகாரப்பகிர்வு வழங்கி நீடித்த இனஅமைதியை ஏற்படுத்தவுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம் என இந்திய அரசு அறிவித்தது.

இதில் எதுவும் நடப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவுமின்றி நாடாளுமன்றக் குழு நாடு திரும்பியது.

“இராசீவ் - செயவர்த்தனா ஒப்பந்தத்திற்கு இணங்க இலங்கையில் அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மட்டுமின்றி, அதற்கு மேலும் தமிழர்களுக்கு அதிக அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க மகிந்த இராசபட்சே உறுதியளித்தார்” என பா.ஜ.க.தலைவர் சுஷ்மா சுவராஜ் இப்பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் சொன்னார்.

ஆனால், சுஷ்மா சுவராஜோ இந்திய நாடாளுமன்றக் குழுவினரோ 13ஆவது திருத்த அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு குறித்து என்னிடம் கேட்கவும் இல்லை, அவ்வாறு உறுதிமொழி எதையும் நான் தரவுமில்லை என இலங்கைத் தடியரசுத் தலைவர் இராசபட்சே தெரிவித்ததாக இலங்கையின் தி ஐலேண்ட் ஏடு 25.4.2012 அன்று செய்தி வெளியிட்டது.

இதற்கு முன்னர், இலங்கை சென்று திரும்பிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இராசபட்சே 13ஆவது திருத்தத்திற்கு மேலும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க ஒப்புக் கொண்டதாக சொன்ன போதும் இதே போன்ற மறுப்பை இராசபட்சே தெரிவித்தார்.

அதற்கு முன்னால், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் இராசபட்சே இது போன்ற உறுதிமொழி வழங்கியதாக சொன்ன போது அப்போதும் அதை மறுத்த இராசபட்சே “இலங்கை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால் இதுபற்றி பரிசீலிப்பதாக மட்டுமே கூறினேன்” என்றார்.

இவ்வாறு இராசபட்சே அரசு மீண்டும் மீண்டும் மறுப்பறிக்கை வெளியிடுகிறபோது இந்தியத் தரப்பு அமைதி காத்தே வருகிறது. பதில் அறிக்கை தருவதில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதுவொன்றையும் வழங்கத் தகுதியற்ற 13ஆவது திருத்தத்திற்கே இவ்வளவுபாடு.

ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்தின்படி ஏதோ சில கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையிலுள்ளது இலங்கை அரசு. இந்தாண்டு அக்டோபரிலோ அல்லது அடுத்தாண்டிலோ இது குறித்த அறிக்கையை மனித உரிமை மன்றத்தில் முன்வைக்க வேண்டிய நெருக்கடிக்கு இலங்கை அரசு உள்ளது.

இதனால் இலங்கையின் சிங்களவெறி நடவடிக்கைக்கு சிறிய இடையூறு கூட இல்லையென்றாலும் அதையும் இலங்கை அரசு விரும்பவில்லை. சிங்களக் கட்சிகள் ஏற்கவில்லை.

இந்நிலையில், அங்கு தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் அதிகாரப்பகிர்வு குறித்து முயற்சிகள் தொடங்கியுள்ளதாகவும் உலக நாடுகளுக்குப் படம் காட்டவே இந்திய அரசு நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. உலக அரங்கில் குற்றவாளிக் கூண்டிலிருந்து சிங்கள அரசைப் பாதுகாப்பது தான் இப்பயணத்தின் உண்மையான நோக்கமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், தங்களது எதிர்காலத் தேர்தல் கூட்டணிகளைக் கணக்கில் கொண்டே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இப்பிரச்சினையைக் கையாளுகின்றன.

ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது அக்குற்றத்தில் பங்குவகித்த இந்திய அரசோடு, நெருக்கமாக ஒத்துழைத்தவர் தான் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால் இப்போது தனிஈழமே தீர்வு என்றும் அதற்கான கருத்து வாக்கெடுப்பை ஈழத்தமிழர்களிடையே நடத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றும் திடீர்க் கோரிக்கை வைக்கிறார்.

தமிழீழ ஆதரவு அமைப்பு என்ற ‘டெசோ’வை மீண்டும் உருவாக்கப்போவதாகவும் கருணாநிதி கூறுகிறார். காங்கிரசுக் கூட்டணியை விட்டு வேறு கூட்டணி காண்பதற்கான தேவையில் தி.மு.க. உள்ளது. அதற்கான முதல்நிலைக் குரல் தான் இது. ஈழத்தமிழர் சிக்கலை இன்னொரு வகையில் மீண்டும் தமது பதவி அரசியலுக்காகப் பயன்படுத்த முயல்கிறார் கருணாநிதி.

காங்கிரசுக் கட்சியை நிர்பந்தித்து தம்மோடு கூட்டணி காண வைக்க பலவகைக் காய்நகர்த்தல்களில் செயலலிதா ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்றாகவே ஈழத்தமிழர் சிக்கலையும் பயன்படுத்திக் கொள்கிறார்.

இவர்களது உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டிருப்பதால் இந்திய அரசு சிறிதும் அசைந்து கொடுக்காமல் தான் விரும்பிய திசையிலேயே சென்று கொண்டிருக்கிறது. சிங்கள அரசை விட்டுக்கொடுக்காமல்,அதனுடன் நல்லுறவை இந்தியா தொடர்கிறது.

இந்த வகையில் உலக அரசியல் அரங்கில் இலங்கையைப் பாதுகாப்பதற்கான இன்னொரு முயற்சி தான் இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணமாகும்.

ஈழத்தமிழர் குறித்த சிக்கலில் காங்கிரசு, பா.ச.க. உள்ளிட்ட இந்தியத் தேர்தல் கட்சிகள் அனைத்திற்கும் ஒரே கருத்து தான் என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இச்சிக்கலை சோனியா தலைமையோடோ அல்லது காங்கிரசுக் கட்சியோடோ மட்டுமே சுருக்கி விடக் கூடாது என்ற பாடம் மீண்டும் கிடைத்துள்ளது.

Pin It