இந்தியத் துணைக்கண்டத்தின் கல்வித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கியது. கட்டாய, கட்டணமில்லாக் கல்வி பெறும் உரிமை இந்தியாவின் அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்திய உச்ச நீதி மன்றம், தன்நிதி தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் ஏழை மற்றும் நலிந்த மக்களுக்கு 25 விழுக்காடு இடங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்ற சட்ட நிபந்தனை செல்லும் என்றும் கூறியது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையில் நீதிபதி சுதந்திரகுமார், நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் 12.4.2012 அன்று வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு கூறியது. இத்தீர்ப்பு மூவருக்கு ஒருவர் என்ற பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகும். நீதிபதிகள் கபாடியாவும், சுதந்திர குமாரும்தன் நிதிப்பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடங்கள் வழங்க வேண்டும் என்ற சட்ட விதியை உறுதி செய்து ஆணைப்பிறப்பித்தனர். மற்றொரு நீதிபதியான கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தன்நிதிப்பள்ளிகளை ஏழைகளுக்கு இடம் வழங்குமாறு வலியுறுத்த முடியாது எனத் தீர்ப்புரைத்தார்.

கபாடியா, சுதந்திரகுமார் ஆகிய பெரும்பான்மையினரின் தீர்ப்பே செயலுக்கு வரும். ஆயினும் இத்தீர்ப்பு மத, மொழிச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இலவச இடம் வழங்க வேண்டும் என்ற சட்ட நிபந்தனை செல்லாது எனக் கூறியது.

சிறுபான்மையினர் பள்ளிக்கு இவ்வாறு விலக்கு அளித்தது சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம்.

கட்டாய இலவசக் கல்வி குறித்த சட்டம் 2009 ஆகஸ்ட் 26 அன்று பிறபிக்கப்பட்டது. ”குழந்தை களுக்கான கட்டண மில்லாத கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 ” (The Right of Children to free and Compulsory Education act, 2009) என்ற சட்டம் நீண்ட போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி யைக் குறிக்கிறது.

இச்சட்டம் இந்தியக் குடிமக்களாக உள்ள 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாக் கட்டாயக் கல்வி பெறுவதை உறுதி செய்து அதனை அரசின் கட மையாக வலியுறுத்தியது.

இச்சட்டத்தின் விதி 2(n)( iv) யானது , எந்த விதிவிலக்குமின்றி அனைத்துத் தனியார் தன் நிதிப் பள்ளிகளும் இச்சட்ட நிபந் தனையை நிறை வேற்றக் கடமைப்பட்டவை எனக் கட்டாயமாக்கியது. சிறுபான் மையினரின் தன்நிதிப் பள்ளிக ளுக்கும் விதிவிலக்கு அளிக்கப் படவில்லை. அப்பள்ளிகளும் இச்சட்டத்திற்கு உட்பட்டவை என தெளிவாக்கியது.

இச்சட்டத்தின் விதி 12(1)(C) “அரசிடம் உதவி பெறாத சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளும் இவ்வா றான சிறுபான்மையினர் பள்ளி களும் தங்கள் பள்ளியில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது தங்கள் பள்ளி அமைந் துள்ள பகுதியில் வாழும் நலிந்த பிரிவு மாணவர்களைக் குறைந்தது 25 விழுக்காடு அளவுக் காவது சேர்த்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறியது. இம்மாணவர்களிடம் எந்த விதக் கட்டணமும் வாங்கக் கூடாது என நிபந்தனை விதித் தது.

இதனால் தன்நிதிப் பள்ளி களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட இச்சட்டத்தின் பிரிவு 12(2) வழி கூறுகிறது. “ இச் சட்டத்தின் 12(1)(c) படி கட்டணமில்லாக் கல்வி வழங்கு வதால் ஏற்படும் இழப்பை அந்தந்த மாநில அரசு அல்லது ஒன்றியப் பிரதேச அரசு ஈடு கட்ட வேண்டும். கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு அப்பள்ளி விதிக்கும் கட்டணம் எவ்வளவோ அல்லது அம் மாநில அரசு ஒரு மாணவருக்கு சராசரியாக செலவு செய்யும் தொகை எவ்வளவோ -இவற்றில் எது குறைவோ அதனை அப் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவிட வேண்டும்.” என்று கூறுகிறது.

இந்திய அரசு பிறப்பித்த இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தை செயல் படுத்து வதற்குத் தேவையான விதிகளை (RULES) தமிழக அரசு 2009 ஆம் ஆண்டிலேயே பிறப்பித்து விட்டது. இதன் படி தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர், துப்புரவு தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள், ஆண்டு வருமானம் 2 இலட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் இச்சலுகையைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

2010 ஆம் ஆண்டு கணக்குப் படி தமிழக அரசு தொடக் கப்பள்ளி மாணவர் களுக்கு செய்யும் செலவு ஆண்டுக்கு தலா 8000/- ரூபாய்.

இச்சட்டம் செயலுக்கு வரும் போது தமிழகத்தில் இயங்கும் தன்நிதிப்பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு அருகில் 3 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியில் வாழும் மேற்கண்ட நலிந்த வீட்டுப் பிள்ளைகளுக்கு 25 விழுக்காடு இடங்களை வழங்க வேண்டும். அதற்கு ஆண்டுக்கு தலா 8000/- ரூபாய் வீதம் கணக் கிட்டு அரசு இழப்பீட்டுத் தொகையை அப்பள்ளிகளுக்கு வழங்கிவிடும்.

கட்டணமில்லாக் கட்டாயக் கல்விச் சட்டம் 2009 சாதாரணச் சட்டமாகும். ஏற்கெனவே உச்ச நீதிமன்ற முழு ஆயத்தில் வழங்கப்பட்ட டி.எம்.ஏபாய் தீர்ப்பு தன்நிதிப் பள்ளிகளின் தங்குதடையற்ற கட்டணக் கொள்ளைக்கு அரண்சேர்த்து விட்டது.(டி.எம்.ஏ.பாய் வழக்குத் தீர்ப்பு குறித்த விரிவான திறனாய்வு காண்க : கல்வியை, வணிகமாக்கும், இடஒதுக்கீடு மறுக்கும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு, கி.வெங்கட்ராமன், தமிழர் கண்ணோட்டம், பிப்ரவரி 2003). இத்தீர்ப்பி லிருந்து 2009 இலவசக் கல்விச் சட்டத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டு மென்றால் அரசமைப்புச் சட்டத்தில் இதற்கு இசைவான திருத்தம் செய்தாக வேண்டும். இல்லையென்றால் இலவசக் கல்விச் சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு விடும்.

ஏற்கெனவே 2005 ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 15(5) பிரிவு சிறுபான்மையினர் அல்லாத பிறர் நடத்தும் தன்நிதிப் பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வியை செயல்படுத்த உதவி செய்யுமேயன்றி சிறுபான்மையினர் பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க இப்பிரிவு பயன்படாது.

இந்நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் இலவசக் கட்டயாக் கல்வியை செயல்படுத்து வதற்கு அரசமைப்பில் புதிய திருத்தம் தேவைப்பட்டது.

ஏற்கெனவே அரசமைப்புச் சட்ட விதி21 வழங்கும் “உயிர் வாழும் உரிமை”( Right to life) என்பதற்குக் கண்ணியத்தோடு வாழும் உரிமை என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் செழுமையான விளக்கம் அளித்து விட்டது. இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் தீர்ப்பில் “ கண்ணியமாக வாழ்வதற்குக் கல்வி உரிமை மிக அடிப்படை தேவை யென்பதால் கல்வி உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்” என இன்னும் விரிவாக்கி விளக்கமளிக்கப்பட்டது.

இதனை வழிகாட்டியாகக் கொண்டு இந்திய அரசமைப்பு சட்டத்தில் 21கி என்ற புதிய பிரிவு சேர்க்கப் பட்டது. 12.12.2002 ஆம் ஆண்டிலேயே இத்திருத்தம் முன் வைக்கப் பட்டாலும் பல்வேறு காரணங்களால் ஏறத்தாழ 8 ஆண்டு களுக்குப் பிறகு 1.4.2010 அன்றே பிறப்பிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் இப்புதிய பிரிவு 21A கூறுவது வருமாறு:

“6வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமில்லா இலவசக் கல்வியை அரசு வழங்கும். இதற்கான வழி முறைகளை அரசு சட்டத்தின் மூலமாகத் தீர்மானிக்கும்.”

அரசமைப்புச் சட்டத்தின் புதிய பிரிவான 21A இலவசக் கல்வி 2009க்கு அரண் சேர்த்தது.

21A தொடக்கத்தில் முன் வைக்கப்பட்ட போது வரைவு நிலையில் அதிலும் சிறுபான் மையினர் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது “அரசமைப்புச் சட்ட விதி 30(1)ன் படி அமைந்த மத மொழி சிறு பான்மையினர் பள்ளிகளுக்கு இச்சட்ட விதி பொருந்தாது.” என்ற அப்பிரிவு நாடாளுமன்ற விவாதத்தின் ஊடாக நீக்கப் பட்டது. அதாவது அரசமைப்புச் சட்ட விதி 30(1)ன் படி அமைந்த சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்கு குறித்து நாடாளுமன்றம் கருத்தில் கொண்டு விவாதித்தற்குப்பிறகே அதனை நீக்கி 21A யை அனைத்து பிரிவி னருக்கும் பொருந்துமாறு மாற்றியமைத்தது என்பது புலனாகும்.

விதிவிலக்கின்றி அனைத்துப் பிரிவு பள்ளிகளும் நலிந்த பிரிவு மாணவர்களை 25 விழுக்காடு அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற 2009 சட்டம் இவ்வாறு வலிமைபெற்றது.

கட்டணமில்லாக் கட்டாயக் கல்விச் சட்டம் 2009ஐ எதிர்த்துத் தமிழகம் உள்ளிட்டு இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு தன்நிதிப் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இவ்வாறு 30 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் குவிந்தன. “இராஜஸ்தான் அரசு உதவி பெறா பள்ளிகளின் சங்கம் - எதிர்- இந்திய ஒன்றிய அரசு” என்ற வழக்கோடு எல்லா மனுக்களும் இணைக்கப்பட்டு ஒரே தொகுப்பாக விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆயத்தின் பெரும்பான்மை யினர் தீர்ப்பை 12.4.2012 அன்று தலைமை நீதிபதி கப்பாடியா படித்தார். அன்றே நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தனது மாற்று தீர்ப்புரையை முன் வைத்தார்.

பெரிதும் டி.எம்.ஏ.பாய் தீர்ப்பையும் இனாம்தார் தீர்ப்பின் சில பகுதிகளையும் துணையாகக் கொண்டே தன்நிதிப் பள்ளிகள் தம் வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தன.

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நஞ்சு கக்கிய டி.எம்.ஏ.பாய் வழக்கு தீர்ப்பு “உயர் கல்வியில் தன் நிதிக்கல்வி நிறுவனங்கள் குறை வான தகுதியுள்ள மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கித் தங்கள் நிறுவனங்களின் தரத்தை குறைத்துக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்த முடியாது.” எனக்கூறியது.

இந்த வாதத்தை எதிர் கொண்ட தலைமை நீதிபதி கப்பாடியா தனது இப்போதைய தீர்ப்பில் “டி.எம்.ஏ பாய் தீர்ப்பு உயர் கல்வி தொடர்பானது. அங்கு இட ஒதுக்கீட்டின் காரணமாக தரம் குறைந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத் தினால் பாதிப்பு ஏற்பட்டது. என்ற வாதத்தை ஏற்கமுடியும். ஆனால் தொடக்கப் பள்ளிக ளில் சேரவரும் பிள்ளைகளி டையே தரம் பார்ப்பதற்கு வழி யில்லை. எனவே தரம் தாழ்ந்து விடும் என்ற வாதம் இங்கு பொருந்தாது. இது குறித்த டி.எம்.ஏ.பாய் தீர்ப்பும் பொருந் தாது” என்று தெளிவுப்படுத்தினார்.

இதனடிப்படையில் 2009 சட்டத்தில் 12(1)(c) க்கு எதிராக தன்நிதிப்பள்ளிகள் முன்வைத்த எதிர்ப்புகளை தள்ளுபடி செய்தார். கட்டணமில்லா இலவசக் கல்வி என்பதை அனைத்து வகைப் பள்ளிகளும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என தீர்ப்புரைத்தார். அரசு உதவிபெறாத சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளும் தங்கள் பகுதிகளில் வாழும் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு 25 விழுக்காடு சேர்த்துக் கொள்ளவேண்டும். என இத்தீர்ப்பு வலியுறுத்தியது. இச்சட்டம் அறிவிக்கிற இழப்பீட்டை அரசிடமிருந்து இப்பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இத்தீர்ப்பு அனுமதியளித்தது.

இத்தீர்ப்பு வரும் கல்வியாண்டியிலிருந்தே செயலுக்கு வரும் என்பதும் தெளிவாக்கப் பட்டது.

ஆயினும் அரசமைப்புச் சட்ட விதி 30 (1) கீழ் சிறுபான் மையினராக அறிவிக்கப் பட்டுள்ளோர் நடத்தும் பள்ளி களுக்கு இத்தீர்ப்பு பொருந்தாது. என உச்சநீதிமன்றம் கூறுவது தான் வியப்பளிக்கிறது. அதாவது மத, மொழிச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நலிந்தபிரிவினர்களைக் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை என்றாகிறது.

டி.எம்.ஏ.பாய் தீர்ப்பும், இனாம்தார் தீர்ப்பும் “இட ஒதுக்கீடு”, “தேசியமயமாக்கல்” ஆகியவற்றை அருவருப்பானவை போல வெறுப்போடு சித்தரிக்கின்றன.

இத்தீர்ப்புகளைப் பின் பற்றியே இப்போதைய தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளதால் 25 விழுக்காடு இடங்களில் நலிந்த பிரிவு மாணவர்களை சேர்ப்பதையே இட ஒதுக்கீடு என்பதாக வரையறுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வரையறுத்துக் கொள்ளும்போது கூட “இந்த இடஒதுக்கீடு” சிறுபான்மையினர் அல்லாத தன்நிதிப் பள்ளிகளுக்குப் பொருந்தும் எனக் கூறுகிற இத்தீர்ப்பு சிறுபான்மையினர் தன்நிதிப் பள்ளிகளுக்கும் மட்டும் பொருந்தாது எனக் கூறுவது தன்முரண் பாடானது. தனது நிலைப் பாட்டிற்கு அரசமைப்புச் சட்ட விதி30(1)ஐ காரணமாகக் கூறுகிறது.

கட்டாயக் கல்விச் சட்டத் தின் பிரிவு 12(1)(C) எந்த இடத்திலும் ”இட ஒதுக்கீடு”( Reservation) என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. 25 விழுக்காடு எண்ணிகைக்கு நலிந்த பிரிவு மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று கூறுகிறது. பிரிவு 12(2) இதற்குரிய இழப் பீட்டையும் அளித்துவிடுகிறது. அரசமைப்புச்சட்ட விதி 15(4)ஐ பயன்படுத்தி பிறப்பிக்கப்பட்ட பல்வேறு இட ஒதுக்கீட்டு சட்டங்களை போன்றது அல்ல இந்த ஒதுக்கீட்டு விதி. இங்கு இழப்பீடு தரப்படுகிறது இழப்பீடு தந்ததற்குபிறகு அதனை இட ஒதுக்கீடு என வகைப் படுத்திவிட முடியாது.

இது இட ஒதுக்கீடு என்று கொள்ளப்பட்டாலும் அரசமைப்புச் சட்டவிதி 21A-ன் படி கட்டணமில்லாக் கட்டாயக் கல்வி வழங்குவதற்கான சட்டங்களை “தீர்மானிக்கும்” (DETER MINE) அதிகாரம் அரசுக்கு உண்டு என உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு உறுதிபடக் கூறு கிறது. சிறுபான்மையினர் அல்லாத தன்நிதிப் பள்ளிகளை பொருத்தளவில் இது அரச மைப்புச்சட்ட விதி 19(6)ன் படி யான நியாயமான வரம்பு தான் (REASONAL RESTRICTION) என வரையறுக்கிறது. ஆனால் இந்த வரையறுப்பு சிறுபான்மையி னரின் தன்நிதிப் பள்ளிகளுக்குப் பொருந்தாது என்கிறது. அங்கு மட்டும் அது நியாயமற்ற வரம் பாகிவிடுவதாக (UNREASONAL RESTRICTION) கூறுகிறது.

மத, மொழி சிறுபான்மையினர் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்களை அமைத்து நிர்வகித்துக் கொள்ள உரிமையுண்டு என அரசமைப்புச் சட்டவிதி 30(1) உறுதியளிக்கிறது. மதக்கல்வி சார்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி மதம் சாராத பொதுக் கல்வி வழங்கும் பள்ளிகள், கல்லூரிகள் நடத்தவும் இவ்விதி வாய்ப்பளிக்கிறது. ஆயினும் மதக்கல்வியைப் பொருத்தளவில் நாட்டுப் பாதுகாப்பு காரணத்தைத் தவிர பிற காரணங்களுக்காக அரசின் தலையீடு கூடாது என 30(1) பாதுகாப்பு அளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறுவது ஏற்கத் தக்கதே.

ஆனால் பொதுக்கல்வி என்று வருகிறபோது சிறுபான்மை நிறுவனம் என்ற அதன் நிர்வாகத் தன்மை பாதிக் கப்படாத வகையில் அரசு தலையிடுமானால் அதனை நியாயமற்ற வரம்பீடு என வரையறுக்க முடியாது. அந்த வகையில் சிறு பான்மையினர் அல்லாதோர் தன்நிதிப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுவது போல 25 விழுக்காடு நலிந்த பிரிவு மாணவர்களை சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதிப் பள்ளிகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத் துவது சட்ட விரோதமாகாது. இது விதி 19(6)ஐ மீறிய நியாய மற்ற வரம்பீடும் அல்ல. 30(1) சிறுபான்மையினருக்கு வழங்கும் பாதுகாப்பை மீறியதும் ஆகாது.

சிறுபான்மையினர் தங்கள் சிறுபான்மை மொழி எழுத்துகளை பாதுகாத்து கொள்வதற்கோ மதக் கருத்துகளை பரப்புவதற்கோ தங்களுக்குள் நடத்திக் கொள்கிற சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களும், இச்சிறுபான்மையினர் நடத்தும் பொதுக் கல்வி நிறுவனங்களும் ஒரே தன்மையானவை அல்ல.

சிறுபான்மையினர் நடத்தும் பொதுக்கல்வி நிறுவனங்களில் பயில்வோரும் பிற கல்வி நிறுவனங்களில் பயில்வோரும் ஒரே வகைக் கல்வியையே படிக்கின்றனர். மேல் நிலைக் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் இவ்விரண்டு வகையினரும் பொதுவாகப் போட்டியிட வேண்டியவர்கள். இதனால் இவற்றிக்கிடையே பொது நிலையைப் பேண வேண்டியது அரசின் பொறுப்பு.

கோட்பாட்டளவில் இந்நிலைப் பாட்டை ஏற்று கொள்கிற இத்தீர்ப்பு மாணவர் சேர்க்கையில் இப்பள்ளிகளில் அரசு தலையிடக் கூடாது எனத் தடுக்கிறது. மாணவர் சேர்க்கையில் அரசு தலையிடுவது நியாயமற்ற வரம்பீடு என்கிறது. 30(1)க்கு முரணானது எனக் கூறுகிறது. இதற்கு உச்சநீதிமன்றம் சொல்லும் ஒரே காரணம் நலிந்த பிரிவு மாணவர்கள் 25 விழுக் காட்டினர் சேர்க்கப்பட்டால் அச்சிறுபான்மையினர் பள்ளிகளில் சிறுபான்மைத்தன்மை குலைந்துவிடும் என்பதுதான்.

இப்போது சிறுபான்மையினர் நடத்தும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெரும் பாலோர் அந்நிறுவனத்தை நடத்தும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். எடுத்துக்காட்டாக கிறித்துவர் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் உரிமம் பெற்று நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பான்மையோர் கிறித்துவர்கள் அல்லர். ஜெயின் பள்ளியில் படிப்போர் பெரும்பாலும் ஜைனர்கள் அல்லர். இவ்வாறு வேற்று சமூகத்தினர் கல்வி பயிலுவது அக்கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தின் சிறுபான்மைத் தன்மையை குலைத்து விடவில்லை.

ஒருவேளை உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும் அச்சம் உண்மையானதென்றால் இச்சிறு பான்மையினர் நடத்தும் தன்நிதிப் பள்ளிகளில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த நலிந்த மாணவர்களை முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; பிற நலிந்த மாணவர்களை அதற்கு அடுத்த நிலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் வரம்பு கட்டியிருக்கலாமே. இதற்காக இச்சட்டத்திலிருந்து சிறுபான்மையினர் பள்ளிக்கு முற்றிலும் விலக்கு அளித்திருக்க வேண்டிய தில்லையே.

மேற்கண்ட விவரங்களிலிருந்து கட்டணமில்லா கட்டாயக் கல்வி சட்டம் 2009 ஐ சிறுபான்மையினர் பள்ளிக்கும் விலக்களிக்காமல் அனைத்துப் பள்ளிகளுக்கும் கட்டாய மாக்கு வதில் எந்த சட்டச்சிக்கலோ, இயற்கை நீதிப் பிரச்சினையோ எழவில்லை என்பது புலனாகும்.

டி.எம்.ஏ.பாய் வழக்கிலாகட்டும் இந்த வழக்கிலா கட்டும் தீர்ப்பளித்த நீதிபதிகள் உலகமயம், பார்ப்பனியம் ஆகிய கருத்தியல்களில் சிக்கியுள்ளதையே எடுத்துக்காட்டுகிறது.

ஒரு சட்டத்தையோ, முன்னால் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பையோ திறனாய்வு செய்யும் போது, அதனை முற்போக்கு திசையில் விளக்கி பிற்போக்கு கருத்துகளை விலக்கி தீர்ப்பு உரைப்பதே நீதிபதிகளின் சமூகக்கடமை ஆகும். 1980களில் நீதிபதிகள் பகவதி, வி.ஆர்.கிருஷ் ணய்யர், சந்திரசூட் போன்றவர்கள் இவ்வாறே தீர்ப்பு வழங்கினர்.

தலைமை நீதிபதி கபாடியா இவர்களைப் பின்பற்றியிருக்க வேண்டும்.

30(1)க்கு, இயற்கை நீதிக்குப் பொருந்தாத விளக்கம் அளிப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

எப்படியோ பிற்போக்கான கூறோடு இத்தீர்ப்பு வந்து விட்டது.

எனவே இந்திய அரசு சிறு பான்மையினர் பள்ளிகளுக்குக் கட்டாயக் கல்விச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்திருப்பதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். தமிழக அரசும் இவ்வாறான மேல் முறையீடு செய்ய வேண்டும்.

அதற்கிடையில் கட்டணமில்லாக் கட்டாயக் கல்விச்சட்டத்தை தன்நிதி பள்ளிகள் வழுவாமல் கடைபிடிப்பதைத் தமிழக அரசு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். சேர்க்கப்படும் நலிந்த பிரிவு மாணவர்களைத் தனிக் கவனம் செலுத்தி கைதூக்கிவிட வேண்டுமேயன்றி தனிப் பிரிவாக (செக்சன்) ஒதுக்கி வைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிற கட்டணமில்லா பேருந்து பருவச்சீட்டு (இலவச பஸ்பாஸ்) வழங்க வேண்டும். சீருடையில் ஒத்தத் தன்மையிருப் பதை உறுதி செய்ய வேண்டும். இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு மாணவர், ஆசிரியர் விகிதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

இனியாவது அனைவருக்கும் அடிப்படைக் கல்வி சென்று சேரட்டும்.

Pin It