நகரம் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நகரத்தின் பரபரப்பான இடம் அது. கடைவீதி, தொடர்வண்டி நிலையம், பேருந்துநிலையம், வணிகவளாகம் போன்ற ஒரு பொது இடம். மக்கள் கூடுமிடம்.

அங்கே இருந்த ஒலிபெருக்கி ஏதோ ஒரு இசையை ஒலிப்பரப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு பிரபல பாடல் ஒலிக்கத்துவங்குகிறது. அங்கே வந்த ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் கூட்டத்தின் மையத்திற்கு வந்து அப்பாடலுக்கு ஆடத் துவங்குகிறார். கூட்டத்தில் சிலர் அதை கவணிக்கிறார்கள். அப்படி பார்த்தவர்களில் ஒருவர் அருகில் வந்து அவரும் ஆடிக்கொண்டிருப்போரோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார். பாடலும், அதிலிருக்கும் துள்ளலும் வசீகரமாக இருக்கிறது. அதைப்பார்த்த மேலும் சிலரும் அவர்களோடு சேர்ந்து ஆடத்துவங்குகிறார்கள். கூட்டம் இதை ஆச்சரியத்தோடு பார்க்கத்துவங்குகிறது. ஆட்டத்தின் உற்சாகம் மெல்லப் பரவுகிறது. மேலும் பலர் ஆட்டத்தில் இணைந்துக்கொள்கிறார்கள்.

கூட்டம் இவ்வாட்டத்திற்கு ஒத்திசைந்து கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறது. வேடிக்கை பார்த்தவர்கள், அவ்வழியே கடந்துச் சென்றவர்கள் எல்லோரும் தங்கள் உடமைகளை ஆங்காங்கே வைத்துவிட்டு, அவ்வாட்டதில் பங்கெடுக்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆடுபவர்கள் அனைவரும் ஒத்திசைந்து ஒரேவிதமான நடனத்தை நிகழ்த்துகிறார்கள். கூட்டத்திற்கு இன்னும் மகிழ்ச்சி. பரவசம், கொண்டாட்டம் என அவ்விடமே கோலாகலமாகிறது. ஆட்டம் தொடர்கிறது. கூட்டம் பரவசப்படுகிறது. ஆடுபவர்களும் வேடிக்கை பார்ப்பவர்களும் தங்கள் நிலை மறந்து ஆட்டத்தோடு ஒன்றிப்போய் பரவசப்படுகிறார்கள். சட்டென்று ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிகிறது. ஆடியவர்கள் அனைவரும் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்கள் வழியே கலைந்து சென்று விடுகிறார்கள். வேடிக்கைப் பார்த்த கூட்டமும், பிரமிப்போடு கலைந்துச் செல்லுகிறது. நகரம் அதன் போக்கில் இயக்கி கொண்டிருக்கிறது.

இப்படியான ஒரு நிகழ்ச்சி, பரபரப்பான நம் நகர வாழ்க்கையில் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? யோசித்துப்பாருங்கள். ஓடிக்கொண்டிருக்கும் வேலைகளிடையே, இசையும் அதனோடு ஒத்திசைந்த நடனமும் காணக்கிடைத்தால்?. அதுவும் நம்மை சுற்றி இருப்பவர்களும் அதில் இணைந்து ஆடினால், நம் மனநிலை என்னவாகயிருக்கும்? முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், பின்பு இசையில் நடனத்தில் கவரப்பட்டு மனம் பரவசப்படும் அல்லவா.. நம்முடைய எல்லா அலுவல்களையும் மறந்து அதில் கவனம் செலுத்துவோம் அல்லவா?

ரோட்டில் ஒரு கூட்டம் கூடி இருந்தாலே என்னவென்று எட்டிப்பார்க்கும் ஆட்கள் நாம். இதில் இசையும் நடனமும் என்றால், கேட்டவா வேண்டும்.. நின்று, கைத்தட்டி, ரசித்துவிட்டுதான் அவ்விடத்தை விட்டு நகருவோம். இது எல்லா நாடுகளுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இந்த மனநிலையைத்தான் இத்தகைய ஆட்டங்கள் குறிவைக்கின்றன. அதுவே இவ்வகையான நடனம் உருவாவதற்கு அடிப்படை.

இவ்வகையான நடனத்தை நிகழ்த்துபவர்களை ‘Flash mob’ என்கிறார்கள். சட்டென்று தோன்றி மறையும் கும்பல் என்று அர்த்தம் கொள்ளலாம். இவ்வகையான கும்பல், தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஒன்றிணைக்கப்படுகிறது.

ஒரு பொது இடத்தில் கூடும் இக்கும்பல், ஒரு பிரபலமான பாடலுக்கு நடனம் ஆடத்துவங்குகிறது. கேளிக்கை (entertainment), சமூக சாடல்-நையாண்டி (satire), கலை வெளிப்பாடு (artistic expression) போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இவ்வகை நடனம் நிகழ்த்தப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் ஆர்பாட்டம், வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் விளம்பர யுத்தி போன்றவை இப்பிரிவில் அடையாளப்படுத்தப்படுவதில்லை. பொது விழிப்புணர்வுக்காக, முன்னேற்பாடுகளோடு நிகழ்த்தப்படும் நடனங்களும் இவ்வகையில் உண்டு.

முதல்முறையாக 2003-இல் மேன்ஹாட்டன் நகரத்தில், ‘Bill Wasik’ என்னும் ‘Harper's Magazine’ ஆசிரியரால் இது ஒன்றிணைக்கப்பட்டது. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாவதாக அதே ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி ஒரு பல்பொருள் அங்காடியில் இருநூறு நபர்கள் ஒன்று கூடி, ஒத்திசைத்து கைத்தட்டி, ‘Flash mob’வகையை ஆரம்பித்து வைத்தார்கள்.

ஏப்ரல் 2006-இல் லண்டன் ஒரு தரையடி தொடர்வண்டி நிலையத்தில்(Underground station) ஒன்று கூடிய கும்பல் ஆடிய நடனம் உலக கவனத்தை கவர்ந்தது. அவரவர் கையடக்க இசைக்கருவிகளின் (portable music devices) மூலம் இசையை ஏற்படுத்திக்கொண்டு, நடனம் ஆடினார்கள். நான்காயிரம் நபர்களை உள்ளடக்கிய அந்த ஒன்றுகூடல், அந்நிலையத்தின் இயல்பு நிலையை பாதித்தது. ‘silent disco’ என்று பெயரிடப்பட்ட அந்த நடனம் தான், இன்று வரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ‘Flash mob’ நிகழ்வாக இருக்கிறது. அது மிக அதிக அளவில் இணையத்தின் மூலமும், தொலைபேசியின் மூலம் பரப்பப்பட்டது.

பல நாடுகளில் பிரபலம் அடைந்த இவ்வகை ஒன்றுகூடல், உலக முழுவதும் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. ஒருவித உற்சாக கவன ஈர்ப்புக்காக நிகழ்த்தப்படும் இவ்வகை நடன ஒன்றுகூடல், சில சமயங்களில் வன்முறையில் முடிந்திருக்கிறது. அருகிலிருக்கும் கடைகளுக்கு சேதம் ஏற்படுத்துவது, பொதுமக்களுக்கு தொந்தரவு தருவது என சில சங்கடமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. ஆகையால் சில நாடுகளில் இதை தடை செய்திருக்கிறார்கள். அதற்காகவே தனி சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நடனங்கள் ஒருவகையில் நம்முடைய ‘தெருமுனை நாடகம்’ போன்றவைதான். பரபரப்பான அன்றாட அலுவலில் உழலும் மனிதர்களிடையே திடிரென்று இசையையும் கதையையும் நுழைத்து கவணத்தைப் பெறுவது. அதனூடாக கருத்துக்களை பரப்புவது. அதன் நவீனவடிவமாக இதனைக் கொள்ளலாம்.

இவ்வடிவத்தை ‘why this Kolaveri Di’ பாடலை பிரபலப்படுத்த அத்திரைப்படக்குழு மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டது. சென்னை, மும்பை, அமெரிக்கா, லண்டன் என தொடங்கி பல நாடுகளில் ‘Flash mob’ நடனம், இப்பாடலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. youtube-இல் தேடிப்பாருங்கள். பல கானொளிகள் காணக்கிடைக்கும்.

இன்றைய இளைய தலைமுறை பல விதங்களில் தங்களை ஒன்றிணைக்கிறது. பல காரணங்களுக்கு ஒன்று கூடுகிறது. அப்படி ஒன்றுகூட பல வழிகள் அவர்களுக்கு இருக்கிறது. கொண்டாட்டம், மகிழ்ச்சி பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல், பல சமூக காரணங்களுக்காகவும் இன்றைய இளைய தலைமுறை ஒன்று கூடுகிறது என்பதை மறுக்க முடியாது.

இதைப்போன்று மற்றொரு வகை ஒன்றுகூடல் இருக்கிறது. அதை ‘Smart mob’ என்று அழைக்கிறார்கள். வளர்ந்துவரும் நவீன தொலைத்தொடர்பு முறைகளான இணையம், சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், chat மற்றும் மின்கருவிகள் மூலம் சமுதாய, அரசியல் கருத்துக்களை, தகவல்களை பரிமாறிக்கொள்ளுவதும் அதன் அடிப்படையில் ஒன்றிணைந்து போராடுவதும் இக்குழுக்களின் பண்பு. இவை ஏனைய போராட்ட முறைகளைப்போல் இல்லாமல் அறிவுச்சார்ந்து, பயன் தரும் விதத்தில் இயங்குவதால் ‘புத்திசாலி கும்பல்’ என்று அழைக்கிறார்கள்.

‘Howard Rheingold’ என்ற எழுத்தாளர் தன் ‘Smart Mobs: The Next Social Revolution’என்ற புத்தகம் மூலம் இதனை அறிமுகப்படுத்தினார். வளர்ந்துவரும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், மக்களுக்கான அதிகாரத்தை கொடுக்கும் என்பதற்கான அறிகுறியே ‘Smart mob’என்றார். 2002-இல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ‘Smart mob’ கருத்தாக்கத்தை அவ்வாண்டின் ‘Year in Ideas’ என குறிப்பிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியில், தொலைத்தொடர்புத்துறை நீண்ட தூரம் வந்துவிட்டது. இவ்வளர்ச்சி ஆட்சியாளருக்கும் பணமுதலாளிகளுக்கும் எவ்வகையில் உதவுகிறதோ அதே வகையில், சாமானியனுக்கும் உதவுகிறது. மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள பல அறிவியல் சாதனங்கள் உதவுகின்றன. பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துக்கள் வலுப்பெறுகின்றன.

வியாபார ஊடகங்களை நம்பிக்கொண்டிருக்காமல் தகவல்களை மிக வேகமாக பரப்ப முடிகிறது. முகநூல், டுவிட்டர், மின்னஞ்சல், வலைப்பூ, இணையக்குழு, தொலைபேசி போன்றவை அதற்கான முன்னோடிகள். இன்றைய தலைமுறையின் எண்ணங்களை பரிமாறும் வாகனங்கள் இவைகள்தான். ஒருவகையில் மக்களுக்கான அதிகாரத்தை, அங்கீகாரத்தை பெற்றுத்தருகின்றன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கடந்த ஆண்டுகளில், உலகில் நடந்த பல போராட்டங்கள் இத்தகைய சாத்தியங்களை பயன்படுத்திதான் நடந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எகிப்தியர்களிலிருந்து தமிழன் வரை இணையத்தின் மூலம் பரிமாறிக்கொண்ட கருத்துகளும், அதன் அடிப்படையில் ஒன்றுகூடியதும் நாம் அறிந்தவைதான். இத்தகைய வசதிகளை சரியான பாதையில் கொண்டுச் செல்லுவதும் அதனை பயனுறு வகையில் வளர்த்தெடுப்பதும் வரும்காலத்திற்கு வலுசேர்க்கும். மக்களுக்கான ஊடகங்களை தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தி இருக்கிறது. அதை சரியான விதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது நம் பொறுப்பு.

Pin It