திரு பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” என்ற நூல் வெளியீட்டு விழா 13.04.2012 அன்று மாலை தி.நகர் சர்.பி.ட்டி தியாகராயர் அரங்கத்தில் எழுச்சியாக நடந்தேறியது.

உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் தலைமை வகித்தார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ நூலை வெளியிட, தமிழ்த் தேசியத் கட்சி பொதுச் செயலாளர் கணக்காயர் திரு.மு.பாலசுப்பிரமணியன் நூலைப் பெற்றுக் கொண்டார்.

பெரியார் தி.க.தலைவர் தோழர் தா.செ.மணி, இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர் தோழர் இரா.நல்ல கண்ணு, தமிழர் தேசிய இயக்க பொதுச்செயலாளர் தோழர் பரந்தாமன், மதுரா டிராவல்ஸ் திரு.வி.கே.டி.பாலன், உலகத் தமிழர் பேரமைப்பு பொருளாளர் திரு.சா. சந்திரேசன், திருச்சி கே.சௌந்தரராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முனைவர் த.செயராமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். முன்னதாக திரு. செ.ப. முத்தமிழ்மணி வரவேற்றார்.

நிகழ்வின் இறுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ சிறப்புரையாற்றினார். திரு.பழ.நெடுமாறன் ஏற்புரை வழங்கினார். தோழர்.பூங்குழலி நன்றி நவின்றார். அரங்கின் கொள்ளளவை விஞ்சிக் கூட்டம் நிரம்பியிருந்தது.

வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.பெ.மணியரசன் பேசியதிலிருந்து:

 “பிரபாகரனிடம் தனிமனித ஒழுக்கம், இலட்சியத்தில் உறுதி, போர்த்திறன், நேர்மை ஆகியவற்றை நாம் படிப்பினையாகக் கொண்டு தமிழ்த் தேச விடுதலைக்கு அணியமாக வேண்டும்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் போரிட்டபோது கலைஞர் கருணாநிதி புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை அழைத்து ராஜீவ்-ஜெயவர்த் தனே ஒப்பந்தத்தை ஏற்று விடுதலைப்போரை கைவிடு மாறு கேட்டுக்கொண்டார். "பிரிவினைத் தடைச்சட்டம் வந்த போது தனித் திராவிட நாட்டுக் கோரிக்கையை தி.மு.க. கைவிட்டதால்தான் நான் முதலமைச்சராக முடிந்தது. எனவே இயக்கத்தைப் பாதுகாக்க நீங்கள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையைக் கைவிடுங்கள்" என்று கூறி னார். அப்போது பாலசிங்கத்துடன் சென்றிருந்த மூத்த புலித்தோழர் , “ இலட்சியத்திற்காகத்தானே இயக்கம் , இலட்சியத்தைக் கைவிட்டபிறகு இயக்கம் எதற்கு" என்று கேட்டார். அந்நிகழ்வு இந்நூலில் பதிவாகியுள்ளது.

1987 ஜூலை மாதம் இராஜீவ்காந்தி, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆண்டன் பாலசிங்கம் ஆகியோரை தில்லிக்கு அழைத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்குமாறு வலியுறுத்தினார். பிரபாகரன் அவ்வொப்பந்தத்தால் பயன் இருக்காது என்றும், அதைக் கூடஜெயவர்த்தனா நிறை வேற்றமாட்டார் என்றும் கூறி ஏற்க மறுத்து விட்டார். அப்போது இராஜீவ்காந்தி, “ ஒப்பந்தத்தை ஏற்கா விட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காமல் இருங்கள்" என்று கேட்டுக் கொண்டார். உடனே பிரபாகரன் பாலசிங்கத்தின் காதில், “ஒரு விடயத்தை ஏற்கவில்லையென்றால் எதிர்ப்பதாகத்தானே அர்த்தம். ஏற்காத போது எதிர்க்காமல் எப்படி இருப்பது என்று கூறினார். இந்நிகழ்வுகளை அய்யா நெடுமாறன் பதிவு செய்துள்ளார். ஒன்றை ஏற்காத போது அதை எதிர்க்காமல் இருக்கும் வித்தை தமிழக அரசியலில் சர்வசாதாரணம்.

கள்ளம் கபடமற்ற விடுதலைப் போராளியான பிரபாகரனுக்கு தமிழக சந்தர்ப்பவாத அரசியல் தெரியவில்லை. முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் விடுதலைப் போரை முன்னெடுத்த பிரபாகரன் அவர்களிட மிருந்து தமிழக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகளில் முக்கியமானது எந்த நெருக்கடி வந்தாலும் இலட்சியத்தைக் கைவிடாத உறுதியாகும். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை பாராட்டினால் மட்டும் போதாது தமிழகத்திற்கு ஏற்ற வகையில் பின்பற்றவும் வேண்டும்." இவ்வாறு பெ.மணியரசன் பேசினார்.

Pin It