மக்கள் உரிமையைப் பறிக்கும் காவல் துறையினர் தங்கள் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். சட்டப்படியான அடியாள் பட்டாளமாகவே காவல்துறையினர் வைக்கப் பட்டுள்ளனர். நிறைந்த படிப்பு, உயர்ந்த பதவி என்பவையெல்லாம் சாரத்தில் அடியாள் கூட்டத்தின் தரவரிசை தவிர வேறன்று.

அரசின் அடியாள் கூட்டம் என்ற நிலையிலிருந்து இழிந்து ஆளுங்கட்சியின் அடியாள் கூட்டமாகக் காவல்துறை கேடுற்றது. அதிகாரக் காமுகர்கள் சனநாயகத்தின் மீது நடத்தும் வல்லுறவால் ஏற்பட்ட விளைவுகள் இவை.

கடந்த 23.2.2012 அன்று இரவு சென்னை வேளச்சேரியில், வங்கிக் கொள்ளையர் ஐந்து பேரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களைத் தளைப்படுத்த முயன்ற போது கொள்ளையர்கள் காவல்துறையினரைச் சுட்டதாகவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் காவல்துறையினர் திருப்பிச் சுட்ட போது கொள்ளையர்கள் இறந்துவிட்டதாகவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் திரிபாதி செய்தியாளர்களிடம் 23.2.2012 பொழுது விடிந்ததும் கூறினார்.

இது மோதல் கொலை அன்று, போலி மோதல் கொலை என்று மனித உரிமை அமைப்பினர் கூறுகின்றனர். இந்து நாளேடு வலுவாக ஐயம் கிளப்பியுள்ளது.நம்மைப் பொறுத்தவரை இது காவல்துறையினர் நடத்திய போலி மோதல் கொலை என்றே கருதுகிறோம். இம்முடிவிற்கு நாம் வருவதற்கான காரணங்களை விளக்கும் கட்டுரை இவ்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று காவல்துறையினர், தாமாக முடிவு செய்து விடமுடியாது. உண்மையில் மோதல் ஏற்படும் போது, களத்தில் செயல்படும் காவல்துறையினர் அத்து மீறி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சுட்டுக்கொல்லும் நிகழ்வுகள் ஏராளம்!

ஆனால், தேடப்படும் குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக்கொன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் திட்டமிடப்பட்ட போலி மோதல்களே! இவ்வாறான போலி மோதல் கொலைகளைக் காவல்துறை அதிகாரிகள் தாமாக நடத்திவிடமுடியாது.

மாநில அரசைப் பொறுத்தவரை, மாநிலமுதலமைச்சரின் முடிவுப்படியோ அல்லது அவரது ஒப்புதல் பெற்றோ தான் போலிமோதல் கொலைகள் எல்லா மாநிலங்களிலும் அரங்கேற்றப் படுகின்றன.தேடப்படுவோர் எங்களைச் சுட்டார்கள், அவர்களை நாங்கள் சுட்டுக் கொன்றோம் என்று காவல்துறை பொய் சொல்வதற்குப் பெயர் போலி மோதல் என்பதாகும்.

வேளச்சேரி ஐவர் கொலை போலி மோதல் கொலைகள்தாம் என்றால், தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதாவின் முடிவுப்படியோ அல்லது ஒப்புதல் பெற்றோதான் அவை நடந்திருக்க வேண்டும்.

இந்திய மனித உரிமை ஆணையம் தமிழகக் காவல்துறைத் தலைவருக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், தொடர்புடைய மண்டலக் காவல்துறைக் கண்காணிப்பாளர்க்கும் (துணை ஆணையர்க்கும்) ‘மோதல் கொலைகள்’ எவ்வாறு நடந்தன என்று விசாரித்து அறிக்கை அளிக்கும் படி ஆணையிட்டுள்ளது. எட்டுக்கிழமைகளுக்குள் (வாரங்களுக்குள்) இவ்வறிக்கைகள் அனுப்பப்பட வேண்டும்.

வேளச்சேரியில் நடந்தது காவல் துறையினர் செய்த கொலைகள்தாம், தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யுமாறு கட்டளை இட வேண்டும் என வேண்டுகோள் வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.புகழேந்தி பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கும்படி மனித உரிமை அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவ்விசாரணைகளில் வேளச்சேரியில் காவல்துறை நடத்தியது திட்டமிட்ட கொலைதான் என்று முடிவு வந்துவிட்டால் என்ன நடக்கும்? தொடர்புடைய காவல்துறையினர் வேலை இழப்பர். அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும். முதலைமைச்சர் செல்வி செயல்லிதா மீது எந்த நடவடிக்கையும் வராது. அவர்தான் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார். ‘சட்டத்தின் மாண்பைக் காப்பாற்ற’ தமது கடமையைச் செய்வார்.

1969-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் கலைஞர் கருணாநிதி காவல்துறையைக் கண்டபடி பயன் படுத்தி ஆட்டம் போட்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு “ முனைவர்” பட்டம் வ்ழங்கப்படுவதை எதிர்த்துக் காங்கிரசு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காட்டுவிலங்காண்டித்தனமாகக் காவல்துறையினர் மாணவர்களைத் தாக்கினர். உதயகுமார் என்ற மாணவனுக்கு நீந்தத் தெரியாது என்ற போதிலும் அடிதாங்க முடியாமல் அங்கிருந்த குளத்துக்குள் இறங்கிவிட்டான். நீரில் மூழ்கி இறந்துவிட்டான்.

அப்போது காவல்துறை என்ன சொன்னது, உதயக்குமார் மாணவனே அல்லன் என்றும் அவன் யாரோ என்றும் அவன் எப்படி இறந்தான் என்று தெரியாது என்றும் கூறிவிட்டது. உதயகுமாரின் தந்தையார் பெருமாள்சாமி நாயுடு. அவரைத் துன்புறுத்தி, “இறந்தது என் மகன் இல்லை” என்று சொல்ல வைத்தனர் அவ்வாறே பெருமாள் சாமி கோட்டாட்சியர் விசாரணையில் கூறினார். பின்னர் நடந்த விசாரணைக்குழுவின் முடிவில்தான் இறந்தது பெருமாள் சாமி மகன் உதயக்குமார்தான் என்று உண்மை வெளியானது.

முதலமைச்சர் சொன்னால் எந்தக் கொடுங்குற்றத்தையும் எவ்வளவு கீழ்த்தரமான இழி செயலையும் செய்ய அணியமாக உள்ள அடியாள் படைதான் காவல்துறை என்பது பல தடவை மெய்பிக்கப்பட்டுள்ளது.

1991-இல் முதல்வரான பின் ஆடாத ஆட்டம் ஆடினார் செயல்லிதா. 32 அகவையைக் கடந்த வி.என். சுதாகரன் என்ற ஒரு நபரைத் தம் வளர்ப்பு மகனாக அறிவித்து 100 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் அதுவரை, இல்லாத அளவுக்கு அந்நபருக்கு ஆடம்பரத் திருமண விழா நடத்தினார். அத்திருமண விழாவில் எடுபிடி வேலை செய்தவர்கள் பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகள் ‘யாருக்கும் தலைவணங்காத’ தேவாரம் என்ற மிகப் பெரிய அதிகாரி சாம்பார்வாளியும் கையுமாக அலைந்தார் என்று ஏடுகள் எழுதின.

அதே செயலலிதா, 2001-இல் ஆட்சிக்கு வந்த போது அதே சுதாகரன் வீட்டில் காவல்துறை மூலம் கஞ்சா வைக்கச் செய்து, கஞ்சாக்கடத்தல் என்ற பொய் வழக்குப் போட்டுத் தளைப்படுத்தி சிறையில் அடைத்தார். காவல்துறை என்னென்ன வேலையெல்லாம் செய்திருக்கிறது! ஏன்? அதிகாரத்தை நத்திப் பிழைப்பதுதான் காரணம்!

உரிய விசாரணை முறையும் அதன் முடிவும் இல்லாமல், ஒருவர் உயிரைப் பறிக்கக் கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்ட விதி 21. அதே போல் ஒரு குடிமகனின் கண்ணியமான வாழ்வுரிமைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவ்விதி கூறுகிறது.

போலி மோதல் கொலைகள் அனைத்தும் விதி 21-க்கு எதிரானவையே. தமிழ்நாட்டில் போலி மோதல் கொலைகள் பல நடந்துள்ளன. உண்மையான சனநாயகம் இங்கு நிலவியிருந்தால், கருணாநிதியும், செயல்லிதாவும் வாழ்நாள் சிறையாளிகளாக நடுவண் சிறையில் இருப்பார்கள்.

வங்கிக் கொள்ளையர்கள் சிறை பிடிக்கப்பட்டு, அவர்களின் இதரக் கூட்டாளிகள் அல்லது தலைமைத் தடியர்கள் போன்றோரையும் அறிந்து அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படப் பணியாற்றுவதே காவல்துறையின் கடமை.அதற்குமாறாக அவர்கள் கொல்லப்படுவது, அவர்களோடு தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள அரசே வாய்ப்பளித்துள்ளது.

இன்னொரு சிக்கல் இதில் உள்ளது அவர்கள் ஐந்து பேரும் உண்மையான வங்கிக் கொள்ளையர்கள் தாமா? இனிமேல் அதை ஐயமற முடிவு செய்வது கடினம். விசாரித்தறிய யார் இருக்கிறார்கள்? ஒரு வேளை அவர்களில் யாரவது உயிரோடிருந்து உண்மை நிலைகளைக் கூறிவிட்டால் உயர் அதிகாரிகள் யாருக்கும் ஆபத்து வருமா? எதுவும் இருக்கலாம்.

காவல்துறையைத் தன்னாட்சி அதிகாரமுள்ள வாரியமாக மாற்ற வேண்டும் என்று த.தே.பொ.க. கூறி வருகிறது. அது நீதிமன்றம், சட்டமன்றம், ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிறைவேற்றப்படும் கண்டனத் தீர்மானம் தான் காவல்துறைத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமளிக்க வேண்டும். காவல்துறைத் தலைவரையும் இன்னும் சில உயர் அதிகாரிகளையும் அமர்த்தம் செய்ய ஆளுங்கட்சி எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணையப் பிரதிநிதிகள் கொண்ட குழு இருக்க வேண்டும்.

காவல்துறையினர் தவறு செய்யும் போது நடவடிக்கை எடுக்க அதன் கட்டமைப்புக்குள் கடுமையான விதிகள் இருக்க வேண்டும். இங்குக் காவல்துறை வாரியக் கட்டமைப்பு பற்றி சில கருத்துகள் மட்டும் கூறப்பட்டுள்ளன. இன்னும் சிந்திக்க வேண்டும். மனித உரிமை அமைப்புகள் கருத்துகள் வழங்க வேண்டும். கனடாவில் காவல்துறை வாரியம் செயல்படுகிறது. அங்குள்ள நடைமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.

இப்பொழுது நடந்த வேளச்சேரி கொலைகளுக்கு நாம் பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

1. உடனடியாக பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அது இரண்டு மாதங்களுக்குள் பரிந்துரை வழங்கக் காலவரம்பு விதிக்க வேண்டும்.

2. ஐந்து பேர் கொல்லப்பட்டதை கொலை வழக்காகப் (இ.த.ச. 302) பதிவு செய்ய வேண்டும். குற்றச் சதி இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து 302 உடன் 120பி பிரிவை இணைக்க வேண்டும்.

Pin It