'சாதி' என்பது முரண்பட்ட வடிவங்கள் கொண்டது. கருத்தளவினதாய் - தொட்டறியக் கூடியதாய், உயர்வு பெற்றதாய் - தாழ்வு பெற்ற தாய், சமூக அமைப்பின் அடிக்கட்டு மானத்தில் உள்ளதாய்- அதே சமயம் அதன் மேல் கட்டுமானத்தில் உள்ளதாய் பல வடிவங்களில் செயல்படுகிறது. தன்னை அழிக்க வரும் நஞ்சைத் தானே உணவாக உட்கொண்டு வளர்கிறது சாதி.

மூல சாதி வடிவத்தின் மீது வர்ணாசிரம தர்மத் தத்துவம் உட்கார்ந்து, சாதியை நிலைக்கச் செய்ததை முன்பகுதியில் பார்த்தோம். சாதிக்குள் “வர்க்கம்” உட்கார்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். உழைப்பு - உழைப்புச் சுரண்டல் என்ற அடிப்படையில் மனிதர்களுக்குள் ஊடாடிச் செயல்புரிகிறது வர்க்கம்.

சாதி என்பது சாரத்தில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். கீழ்நிலைச் சாதிகள் உழைக்கும் வர்க்கமாகவும் மேல்நிலைச் சாதிகள் பெரிதும் உழைப்பைச் சுரண்டும் வர்க்கங்களாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

வர்க்கச் சுரண்டலுக்கு மிக உகந்த வடிவம் சாதி. பிறப்பிலேயே உழைப்பாளிகளாக ஒரு பெருங்கூட்டம் பிறக்கும் வாய்ப்பை முதலாளிகளுக்கு வாரி வழங்கியிருக்கிறது சாதி.

முதலாளிய உற்பத்தி முறை வந்தால், ஒரே தொழிற்சாலையில் பல சாதித் தொழிலாளிகளும் ஒரே நிறையில் வேலை செய்வார்கள். இதனால் சாதி மறைந்து போகும் என்று சமூகவியல் அறிஞர்கள் கருதினார்கள். இந்தியாவெங்கும் பயணிகளை ஏற்றிக்கொண்டு போகும் தொடர்வண்டிகளே சாதியை மெல்ல மெல்ல ஒழித்துவிடும் என்றும் அவ்வறிஞர்கள் கருதினார்கள். ஆனால் இந்தியாவில் இந்து மதத்தில், அவ்வாறான மாற்றம் நிகழ்ந்திடவில்லை.

முதலாளிய உற்பத்தி முறைக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு சாதி வாழ்கிறது. அதனால்தான் தன்னைக் கொல்ல வரும் நஞ்சையே உணவாக உட்கொண்டு வளர்கிறது சாதி என்று குறிப்பிடுகிறோம்.

தொழிற்சாலையில் சாதி இருக்கிறது. முதலாளிகள் சாதிச்சார்போடு நடந்து கொள்கிறார்கள். சாதியை வளர்க்கிறார்கள். தொழிலாளிகளிடையே சாதி முரண்பாடு இருக்கிறது. அவர்களிட மும் சாதி வளர்கிறது.

karcilai_370நிலக்கிழமைக்கு முன்பே சாதிக்கூறுகள் இருந்தன. நிலக்கிழமை சமூக அமைப்பில் சாதிகள் வளர்ச்சியும் வடிவமும் பெற்றன. முதலாளியம் வந்தால் சாதிகள் அழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக முதலாளியத்தில் சாதி புத்துயிர் பெற்றது.

அனைவர்க்கும் வாக்குரிமை கிடைத்தால், சாதி இழிவுகள் நீங்கும், சாதி அடையாளங்கள் மெல்லமெல்ல மறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முறையும் அனைவர்க்கும் வாக்குரிமையும் செய லுக்கு வந்தபின் சாதி இவற்றின் மீது சவாரி செய்கிறது.

தேர்தல் கட்சிகள், சாதிகளை வாக்கு வங்கிகளாக மாற்றுகின்றன. அனைவர்க்கும் பொதுவானவையாக உருவெடுத்த தேர்தல் கட்சிகள், ஒவ்வொரு வட்டாரத்திலும் அடர்த்தியாக உள்ள சாதியினரை, சாதிக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களிடம் வாக்கு வங்கியை உருவாக்கிக்கொள்கின்றன. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் நீண்ட காலமாகத் தேர்தல் கட்சிகள் வாக்கு வங்கிகளை உருவாக்கிக் கொண்டன.

இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகள் சில, தங்களுக்கான அரசியல் கட்சியை உருவாக்கிக் கொண்டன. இதைப் பார்த்த பின் பிற்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரை வாக்கு வங்கிகளாக்கிக் கொள்ளும் தேர்தல் கட்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாயின.

இப்பொழுது தமிழ்நாட்டில் நிறைய சாதிக் கட்சிகள் உள்ளன. அனைவர்க்கும் வாக்குரிமை, தேர்தல் சனநாயகம் என்பது சாதியை மங்கச்செய்து மறையச்செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாதி உணர்ச்சியை வளர்க்கவே பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

தன்னைக் கொல்ல வரும் நஞ்சை உணவாக உண்டு செழிக்கிறது சாதி.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சாதி மக்களின் உரிமைகளை ஓரளவு மீட்டு சமத்துவம் கொண்டுவர இட ஒதுக்கீடு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அதே வேளை அதன் பக்க விளைவாக, இட ஒதுக்கீட்டை முதன்மைப்படுத்திக்கொண்டு புதிது புதிதாக சாதி அமைப்புகள் உருவாயின. இட ஒதுக்கீட்டுப் பங்குச் சிக்கலில் சாதிகளுக்கிடையே சண்டையும் ஏற்பட்டன.

கடைசியில் கணக்குப் பார்த்தால் இட ஒதுக்கீடு, சாதி சமத்துவத்திற்குப் பங்களித்ததை விட சாதி முரண்பாட்டிற்கும் சாதி இறுக்கத்திற்கும் பங்களித்ததே அதிகம்.

எங்களைப் “பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் சேருங்கள்” “மிகவும் பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் சேருங்கள்” என்று கோரிக்கை வைப்பவர்கள் “நாங்கள் ஆண்ட பரம்பரை, அரச பரம்பரை” என்று கூறி சாதி உணர்ச்சியைத் தூண்டி விட்டார்கள்.

தன்னைக் கொல்லவரும் நஞ்சை உணவாக உட்கொண்டு சாதி செழிக்கிறது.

நாம் மேலே பட்டியலிட்ட முதலாளியம், தேர்தல், இட ஒதுக்கீடு ஆகியவை சமூக முன்னேற்றத்திற்கு, எப்பங்கும் ஆற்றவில்லை என்று கூற வரவில்லை. அதே போல், அவை சாதி ஒடுக்குமுறையைக் குறைக்க, பிற்படுத்தப்பட்ட நிலையில் மாற்றம் கொணர எதுவுமே செய்யவில்லை என்று நாம் கூறவில்லை. ஆனால் அவை சாதிக் கட்டமைப்பைத் தகர்க்க உரிய அளவு பங்கு செலுத்தவில்லை. சாதிகள் வெவ்வேறு உத்திகளுடன் தங்களை நிலை நிறுத்திக்கொண்டன. அந்த வெவ்வேறு உத்திகளுள் ஒன்றாக இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்திக் கொண்டு, தன்னைத் தக்க வைத்துக் கொண்டது சாதி.

இதனால் இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்குப் போகக் கூடாது. இட ஒதுக்கீடு தேவை.

தேர்தலானது சாதியைப் பாது காக்கிறது என்பதற்காகத் தேர்தல் வேண்டாம் என்று கருதக் கூடாது. தேர்தல் தேவை. தேர்தலில் பங்கு கொள்வதும் அதைப் புறக்கணிப்பதும் தேச விடுதலைப் புரட்சியுடன் இணைந்தது என்று த.தே.பொ.க பார்க்கிறதே தவிர, இப்போது தேர்தலே வேண்டாம் என்று கருதவில்லை.

சாதி ஒடுக்குமுறையை முற்றாகக் களையவும் தீண்டாமைக் கொடுமையை முற்றாக அகற்றவும், சாதி அடிப்படையிலான ஆதிக்க மனப்பான்மையையும், குழு மனப்பான்மையையும் போக்கவும் புதிய கொள்கைகளையும் புதிய நடை முறைகளையும் வகுக்க வேண்டும்.

சாதியோடு மோதி அதைத் தகர்த்திடப் போரிட்ட ஜோதிபா பூலே, அயோத்தி தாசப் பண்டிதர், நாராயணகுரு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட எத்தனையோ பெரியவர்களின் பணிகள் வரலாற்றில் மைல் கற்களாக நிற்கின்றன. எவ்வளவோ போராளிகள் இப் பணியில் இன்னுயிர் ஈந்துள்ளனர். இவர்களின் பணியால், ஈகத்தால், சாதி ஆதிக்கக் கொடுமைகள் எவ்வளவோ குறைந்துள்ளன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவு சாதி வீழ்ச்சியடையவில்லை. எல்லாத் தாக்குதல்களையும் உள்வாங்கிச் செரித்து கொள்கிறது சாதி.

பழைய காலங்களைப்போல், அதே அளவுக்கு இப்போது சாதி ஆதிக்கமும் சாதிக் கொடுமையும் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்கள் ஊரில் செருப்பணிந்து செல்லுதல், ஊர்திகளில் ஏறிச்செல்லுதல், இரட்டைக்குவளை முறை நீக்கம், பொதுக்குடிநீர், பொது இடங்களில் ஓரளவு சமத்துவம் போன்றவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவராக, இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களுக்குரிய மதிப்புக் கிடைப்பதில்லை. மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் சாதி ஆதிக்க வெறியர்களால் கொலை செய்யப்பட்டார்.

உத்தபுரம் தீண்டாமைச் சுவர் அண்மையில் தான் இடிக்கப்பட்டது. பரமக்குடி அருகே பள்ளப்பச்சேரியில் பன்னீர்ச் செல்வம் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்புப் பள்ளி மாணவனை சாதி ஆதிக்க வெறியர்கள் படுகொலை செய்தனர்.

வெவ்வேறு சாதியில் பிறந்த தமிழ் இன ஆணும் பெண்ணும் காதல் செய்ததற்காக, திருமணம் புரிந்து கொள்ளத் தீர்மானித்ததற்காக கொலை செய்யப்படுகின்றனர். சாதி வெறியர்களால் எத்தனை இளந்தளிர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்! அய்யய்யோ, அடுக்காது, அடுக்காது!

அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த காவல்துறையினர், காட்டுத் துறையினர் ஆகியோர் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றை பறிக்கும் நிகழ்வுகள் எத்தனை! எத்தனை!

செருப்பணிந்து செல்லத் தடை, மிதிவண்டியில் ஏறிச் செல்லத்தடை, இரட்டைக் குவளை முறை. போன்ற தீண்டாமைக் கொடுமைகள் பெருமளவு மாறியுள்ளன. ஆனால் இப்பொழுது ஒவ்வொரு சாதியும் தனித்தனி முகாம்களாக முன்னை விட அதிகமாக இறுக்கம் அடைந்துள்ளன. ஓர் அமைதி நிலவுகிறது என்றால் அது நல்லிணக்க அமைதியன்று. மோதல் மோசமாக இருக்கும் என்ற அச்சத்தினால் ஏற்பட்ட இறுக்கம்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கிடையே தீண்டாமை போன்ற கொடுமைகள் இல்லையே தவிர, சாதி இணக்கம் மிகமிகக் குறைந்து போய்விட்டது. ஒவ்வொரு சாதிக்கும் சாதிச் சங்கம் முன்னெப்போதையும் விட இப்போது தீவிரமாகச் செயல்படுகின்றன. ”நீ வேறு நான் வேறு, ஆனால் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம்" என்ற நிலையில்தான் அவை இருக்கின்றன.

கிராமங்களில் கடந்த காலங்களில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே சாதிவேறுபாடு இருந்தாலும், ஒடுக்குமுறை இருந்தாலும் ஓர் உறவு இருந்தது. ஒருவருக்கொருவர் பாதுகாப்பு என்ற உணர்வு இருந்தது. உறவு முறைகள் சொல்லிப் பாசம் காட்டிக் கொண்டனர். இவர்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருந்தனர். ஒருவர்க்கு ஒரு பாதிப்பென்றால் இன்னொருவர் துணைக்கு வருவார். சாதி வேறுபாடு இந்த "உறவில்" குறுக்கே நிற்பதில்லை. வெவ்வேறு சாதியினர், மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை என்று உறவு சொல்லி அழைத்துக் கொண்டனர்.

இன்று அந்த அளவு ஆழமான உறவில்லை. ஒப்புக்கு உறவாக இருக்கிறார்கள். இந்த விரிசலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. (1). மனித உறவுகளை வெறும் நுகர்வு உறவுகளாக மாற்றிவிட்ட முதலாளிய வளர்ச்சி, உலகமய வளர்ச்சி. (2). தீவிரமடைந்து விட்ட சாதி அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும்.

தங்கள் சாதி மக்கள் தொகையின் அதிகத்தையும் ஒரே மண்டலத்தில் இருக்கும் அடர்த்தியையும் கொண்டு, தாங்கள் ஆதிக்கம் செய்யலாம் என்ற எண்ணம், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிறப்டுத்தப்பட்ட சாதியினரில் உள்ள அரசியல் அமைப்பினர், சாதி அமைப்பினர் ஆகியோர்க்கு ஏற்பட் டுள்ளது.

அவர்கள் தங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். "ஆண்ட பரம்பரையினர்" அதிக எண்ணிக்கையில் உள்ளோர், எப்படி பார்ப்பனர்களுக்குக் கீழே பல நூற்றாண்டுகள் சூத்திரர்களாய், தீண்டத்தகாதவர்களாய் இருந்தார்கள்? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதுவும் மிகமிகச் சிறு எண்ணிக்கையில் மூன்று விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்களுக்குக் கீழே சூத்திரர்களாய் இருந்தோம், இன்றும் அந்த மூன்று விழுக்காட்டினர் தான் தங்களது சமூகத் தகுதியை, கலை _- இலக்கியத்தை, தகவல் தொடர்பை, ஆட்சிமுறையை, தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்களே, அது எப்படி என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

( தொடரும் )

Pin It