கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சென்னையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து 26.02.2012 அன்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.

kudankulam_370சென்னை மெரீனா கடற்கரை அண்ணா அரங்கில் காலை 9 மணிக்கு சமர்ப்பா குழுவினரின் பாடல் களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க நிர்வாகி திரு. மனோ. தங்கராஜ் தலைமை தாங்கினார். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் வரவேற்றார். விடுதலைச் சிறுத்தை கள் கட்சி பொதுச்செயலாளர் திரு தொல் திருமாவளன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மருத்துவர்கள் வீ.புகழேந்தி, இரா.இரமேஷ், பாவலர் தமிழேந்தி (மா.பெ.பொ.க.), மக்கள் சிவில் உரிமைக் கழக வழக்கறிஞர் வி.சுரேஷ், வழக்கறிஞர் த. பானுமதி (மக்கள் உரிமைப் பேரவை) உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், அறிஞர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் அணுஉலையின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினர்.

கருத்தரங்கம் நிறைவுற்றபின் மாலை 4 மணிக்கு எழும்பூர் இராசஇரத்தினம் விளையாட்டுத் திடலிலிருந்து தொடங்கிய பேரணி மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணிக்கு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சுந்தரி தலைமையேற்றார். தாளாண்மை உழவர் இயக்கப் பொறுப்பாளர் தோழர் கோ.திருநாவுக்கரசு பேரணியைத் தொடக்கி வைக்க, பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் கு.இராம கிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினார். காஞ்சி மக்கள் மன்றத்தின் தப்பாட்ட இசை பேரணிக்கு எழுச்சியூட்டியது. ‘கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு இழுத்து மூடு ’ என்ற போர் முழக்கம் விண்ணைப் பிளந்தது.

மாநாட்டின் நிறைவாக, மாலை 6 மணியளவில் தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் முரசுக் கலைக் குழுவினரின் எழுச்சி இசையோடு திறந்தவெளி பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். தோழர் அருண்சோரி (தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை) வரவேற்றார். தோழர் கண.குறிஞ்சி (மக்கள் சிவில் உரிமைக் கழகம்), இயக்குநர் வ.கௌதமன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, தோழர் காஞ்சி அமுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப.உதயக்குமார் தொடக்கவுரையாற்றினார். “கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடும் வரை எந்தச் சூழலிலும் எமது போராட்டம் பின் வாங்காது” என்றார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் திரு. நாஞ்சில் சம்பத், பா.ம.க.பொதுச் செயலாளர் திரு. வடிவேல் இராவணன், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தியாகி இமானுவேல் பேரவை அமைப்பாளர் தோழர் பூ.சந்திரபோசு,தோழர் அரங்க குணசேகரன் தமிழக மக்கள் புரட்சி கழகம், மீ.த.பாண்டியன் இ.க.க( மா.லெ) மக்கள் விடுதலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கருத்துரை வழங்கினர். தோழர் செந்தில் ( சேவ் தமிழ் இயக்கம்) நன்றி நவின்றார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் நடந்த இம்மாநாடு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாய் அமைந்தது.

Pin It