சிங்கள இனவெறி இராணுவம், தமிழீழப் பகுதிகளில் 2001 ஏப்ரல் மாதத்தில் நடத்திய தாக்குதலின் போது, தனது இடது கண்னை இழந்த ஊடகவியலாளர் மேரி கேத்தரின் கொல்வின், சிரியா நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போரில் கொல்லப் பட்டுள்ளார்.

Mary_370அமெரிக்காவைச் சேர்ந்த கொல்வின் அம்மை யார், மானுடவியலில் பட்டப்படிப்பு முடித்த பின், காவல்துறை நிருபராக நியூயார்க் நகரில் பணி யாற்றினார். அதன் பின், 1985இல் தி சன்டே டைம்ஸ் என்ற பிரித்தானிய செய்தி நிறுவனத்தில் இணைந் தார். 1986இல் லிபியா மீது அமெரிக்கா தனது வான்படையைக் கொண்டு கொடும் தாக்குதலை நடத்தி முடித்த பின்னர், முதன் முறையாக லிபிய அதிபர் கடாபியை செவ்வி கண்டவர் இவரே.

உள்நாட்டுக் கலகங்கள் நடக்கும் கொசாவா, சிரே லியோன், சிம்பாவ்வே, கிழக்குத் தைமூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் பணிபுரிந்த கொல்வின் அம்மை யார், போர்முனைகளுக்கு அச்சமின்றி சென்று, பாதிக்கப்படும் மக்களின் நிலை குறித்த செய்திகளை வெளிக் கொண்டு வருவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றினார்.

அவ்வாறே, சிங்கள இனவெறி இராணுவத்தின் கொடூர இனஅழிப்புப் போரின் போது தமிழீழத்தில் ஊடகப் பணியாற்றினார். சிங்கள அரக்கப்படையின் தாக்குதலில் சிக்கி தனது இடது கண்ணை இழந்த போதும், அச்சமின்றி தனது பணியைத் தொடர்ந்தார்.

2009ஆம் ஆண்டு சிங்கள அரசு, நடத்திய முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது, அங்கு நடந்த மனிதப் பேரவலத்திற்கு சாட்சியாகவும் இருந்தவர், மேரி கொல்வின் அம்மையார்.

முள்ளிவாய்க்காலில் புலித்தலைவர்கள் பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக் கொடியோடு சமாதானம் பேச ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கொல்வின் அம்மையார். இந்திய அரசும், ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியாரும் கொல்வின் வழியாகத்தான் விடுதலைப்புலித் தலைமைக்கு உத்தரவாதம் அளித்தனர். அதை நம்பித்தான் நடேசனும் மற்றவர்களும் வந்தனர். கடைசியில் இந்தியா நம்பிக்கைத் துரோகம் செய்தது. இந்த 'வெள்ளைக்கொடி நிகழ்வு' குறித்து வெளி உலகிற்குக் கொணர்ந்தவரும் மேரி கொல்வின் தான்.

2000ஆவது ஆண்டின் சிறந்த செய்தியாளராக மேரி கொல்வின் அம்மையாரைத் தேர்ந்தெடுத்து அறிவித்தது, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் அமைப்பு (Foreign Press Association). 2001ஆம் ஆண்டு, கொசாவா - செசன்யா நாட்டுப் போர்க் களங்களில் பணியாற்றிய கொல்வின் அம்மையாருக்கு, அனைத்துலக மகளிர் ஊடகவியலாளர் நிறுவனம் துணிச்சலான ஊடகவியலாளர் (Courage in Journalism ) என்ற விருதை வழங்கி சிறப்பித்தது. பிரித்தானிய செய்தி நிறுவனம் வழங்கும் சிறந்த அயல்நாட்டு செய்தியாளர் என்ற விருதை 2001 மற்றும் 2012 ஆகிய இரு ஆண்டுகளும் மேரி கொல்வின் அம்மையாரே பெற்றார்.

அண்மையில் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் குறித்த செய்திகளை சேகரிக்க அங்கு முகாமிட்டிருந்த கொல்வின் அம்மையார், 22.02.2012 அன்று நடைபெற்ற வான்படைத் தாக்குதலில் சிக்கி மரணத்தைத் தழுவினார். அவருடன் புகழ்பெற்ற பிரஞ்சு நிழற்பட ஒளிப்பதிவாளர் ரெமி ஓச்லிக் அவர்களும் மரணமடைந்தார்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கைக்கூலி களாகப் பணிபுரியும் ஊடகவி யலாளர்களுக்கு நடுவில், புறக்கணிக்கப்பட்டு போரில் படுகொலையாகும் அப்பாவி மக்களின் துயரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களுக்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது!

Pin It