இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு மிக வேகமாகச் சரிந்து வருகிறது. மே இறுதியில் உலகச் சந்தையில் பெரும் பகுதி நாடுகளில் பொது நாணயமாகப் புழங்கும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 56.43 வரை சரிந்தது. கடந்த ஏப்ரல் 2011லிருந்தே இந்த சரிவுப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த 2011 ஏப்ரலில் ரூபாய் 44.40 கொடுத்தால் ஒரு அமெரிக்க டாலர் நாணயத்தை வாங்கலாம். ஆனால், இன்று குறைந்தது ரூபாய் 56.40 கொடுத்தால் தான் ஒரு டாலர் வாங்க முடியும்.

ரூபாய் நாணயத்தின் மதிப்பு கடுமையாகத் தேய்ந்து விட்டதால் பல்வேறு தொடர் சிக்கல் களை இந்திய, தமிழகப் பொருளாதாரம் சந்தித்து வருகிறது.

இந்தியாவிலும் தமிழகத்திலும் இயங்கும் தொழில் நிறுவனங்கள் பெரிதும் வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்துள்ளன. இத்தொழிற் சாலைகளுக்குத் தேவையான நிலக்கரி, உலோ கங்கள், எந்திர உதிரிபாகங்கள் போன்ற பலவும் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த இறக்குமதி அனைத்தும் அமெரிக்க டாலர் மதிப்பில் நடக்கிறது.

இங்கிருந்து சில பொருட்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. ஆனால் ஏற்றுமதியின் அளவை விட இறக்குமதியாகும் பொருள்களின் அளவே அதிகம். எனவே ஒட்டு மொத்தத்தில் இந்தியா இறக்குமதி சார்ந்த பொருளியலில் இருக்கிறது.

ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பது இறக்கு மதியைப் பெருமளவு பாதிக்கிறது. எடுத்துக் காட்டாக, நிலக்கரி இறக்குமதி உலகச் சந்தையில் இறக்குமதி செய்யப்படுகின்றது. பெரிதும் அவற்றைக் கொண்டுதான் இந்தியாவிலும், தமிழகத்திலும் இயங்கும் அனல் மின்சார நிலையங்களும், உருக்காலைகளும், பிற தொழில் நிறுவனங்களும் செயல்படுகின்றன.

நிலக்கரியில் பல்வேறு வகைகளில் உண்டு. ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி விலை உண்டு. CAFF என்ற ஒருவகை நிலக்கரியை எடுத்துக் கொண்டு இச்சிக்கலை ஆய்வோம். இவ்வகை நிலக்கரியின் சர்வதேசச் சந்தை விலை 2011 சூன் மாதத்தில் 122.80 டாலர். இப்போது அதனுடைய விலை சர்வதேசச் சந்தையில் 110.60 டாலர்.

அதாவது சர்வதேச சந்தையில் இந்த வகை நிலக்கரியின் விலை கடந்த ஏப்ரலை ஒப்பிட இப்போது குறைந்திருக்கிறது. ஆனால், அது டாலர் மதிப்பில். அதையே ரூபாய் மதிப்பில் மாற்றும் போது விலை குறைவதற்கு பதிலாக அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கிறது. 2011 சூன் மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூபாய் 44.40. இதனடிப் படையில் ஒரு டன் நிலக்கரிக்கு அன்றைய இறக்குமதி விலை ரூ. 5452.32. இன்று நிலக்கரி விலை சரிந்திருந்தாலும் ரூபாய் மதிப்பு அதைவிட வீழ்ந்திருக்கிறது.

ஒரு டன் நிலக்கரி 110.60 டாலர் என்றால் அதன் ரூபாய் மதிப்பு, ஒரு டாலருக்கு 55.75 என்ற கடந்த 4 மாத சராசரி மதிப்பை வைத்தப் பார்த்தாலும் ரூபாய் 6165.90. ரூபாயின் மதிப்பு கடுமையாகத் தேய்ந்து போனதால் சர்வதேசச் சந்தையில் நிலக் கரியின் விலை குறைந்திருந்தாலும் இங்கிருந்து அதிக ரூபாய் கொடுத்துத் தான் அதை வாங்க வேண்டியிருக்கிறது. அதே போல் பிற பொருள்களின் இறக்குமதி விலையும் அதி கரித்து விட்டது.

இதுபெரும்பாலான தொழில்களை கடுமையாக பாதிக்கிறது.

இந்திய நிறுவனங்கள் உள் நாட்டில் வட்டி விகிதம் அதிக மாக இருப்பதால், வட்டி குறைவாக உள்ள அயல்நாடுகளில் கடன் வாங்கிக் கொள்கின்றன. இந்தக் கடன்கள் டாலர் கணக்கில்தான் வாங்கப்படுகின்றன. இவ்வாறு இந்திய, தமிழகத் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பெற்றிருக்கிற கடன் தொகை 2900 கோடி டாலர் ஆகும்.

2011 ஏப்ரலில் ஒருவர் 100 கோடி டாலர் கடன் பெற்றிருந்தால், அவருக்கு பண மதிப்ப லான கடன் 4440 கோடி ருபாய். அதே கடனை இப்போது ஒருவர் திருப்பி செலுத்துகிறார் என்றால், 5577 கோடி ரூபாய் தர வேண்டும். அதே போல் வட்டி யின் மதிப்பும் அதிகரித்திருக் கும்.

இவ்வாறு சர்வதேசச் சந்தையில் ரூபாயின் நாணய மதிப்பு குறைந்திருப்பது இங்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணங்கள் யாவை?

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான பொருளியல் மந்தத்தில் சிக்கியுள்ளன. அங்கு தொழில் துறைகளெல்லாம் தேங்கியிருக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் தலைமையிட மாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தாங்கள் போட்டெடுத்த நேரடி முதலீடுகளை வேகமாகத் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி எடுத்துச் செல்கின்றன. திருப்பி எடுத்துச் செல்பவை டாலர் கணக்கில்.

ஒரு மாதத்திற்கு 1600 கோடி டாலர் இந்தியாவிலிருந்து திரும்பப் பெறப்படுகிறது.

இந்தியாவிற்கான டாலர் நாணய ஊற்றுக்கண்ணே அயல் நாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தான். இவை மிக வேகமாக அயல்நாடுகளுக்குப் பறந்து செல்கின்றன.இதனால் இந்தியாவின் அயல்செலாவணி கையிருப்பு படுவேகமாக குறைந்து வருகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இறங்கிய போதெல்லாம் இந்திய அரசின் நடுவண் சேம வங்கி (ரிசர்வ் வங்கி) தன் கையிருப்பில் இருந்த அமெரிக்க டாலர் நாணயத்தை ரூபாய் நாணயச் சந்தையில் வெளியிடும். அதன் மூலம் நாணயச் சந்தையில் டாலரின் வழங்கல் – புழக்கம் அதிகரிக்கும். அதிக டாலர் புழக்கத்தில் வந்த பிறகு அதற்கான கேட்பு (டிமாண்ட்) உயராது. அதனுடைய ரூபாய் மதிப்பும் உயர்வது தடுக்கப்படும்.

இவ்வாறான வகையில் ரூபாய் மதிப்பு சரிந்து விழாமல் இந்தியஅரசு முட்டுக் கொடுத்து வந்தது. இப்போது, அந்த வாய்ப்பு அருகி விட்டது. காரணம் அயல்நாட்டு நிறுவனங்கள் டாலர் முதலீட்டை திருப்பி எடுத்துவிட்டதால் ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு குறைந்துவிட்டது. கையிலுள்ள டாலரை நாணயச் சந்தையில் புழக்கத்தில் விட்டு சமாளிக்கும் அளவிற்கு உபரி இந்திய அரசிடம் இல்லை.

இந்நிலையில், சர்வதேசச் சந்தையில் ஏற்படுகிற பாதிப்பையும் தாண்டி உள்நாட்டில் கடுமையான விலையேற்றம் நிகழ்கிறது. அமெரிக்க டாலரில் வழங்கி இறக்குமதி செய்யும் பொருள்களின் ரூபாய் மதிப்பு உயர்ந்து, உற்பத்தி செலவு கூடிவிட்டதால் தொழில் நிறுவனங்கள் அனைத்துப் பொருட்களின் விலையையும் ஏற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளன.

சிறு, நடுத்தர நிறுவனங்கள் பெற்றகடனின் ரூபாய் மதிப்பு அதிகரித்து இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய செலவும் அதிகரித்து ஓரளவுக்கு மேல் விலையை ஏற்றிச் சந்தையில் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க முடியாத நிலையில், முழுமையாகவோ பகுதியாகவோ உற்பத்தியை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே சிறு தொழில்களை அதிகம் சார்ந்திருக்கிற இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. எனவே, ரூபாய் மதிப்பு சரிவு எல்லா மாநிலங்களையும் பாதித்தாலும் தமிழ்நாட்டைக் கூடுதலாகப் பாதிக்கிறது.

இந்திய அரசு கடைபிடிக்கும் உலகமய, தாராளமயப் பொருளியல் கொள்கையே இச்சிக்கலுக்கு முதன்மையான காரணமாகும். அமெரிக்க - ஐரோப்பியச் சந்தைகளோடு இந்தியத் தொழில்துறையும், இந்தியச் சந்தையும் பிணைக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் மழை பெய்தால் தமிழ்நாட்டில் சளி பிடிக்கிறது.

ரூபாய் மதிப்புக் குறைவது ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்கும் என்பது கோட்பாட்டளவில் சரிதான். ஏனெனில், ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு உயரும் போது, டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதி யாளர்களுக்கு ரூபாய் கணக்கில் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால், இன்றைய நிலையில் அது வெறும் ஏட்டுக்கணக்காகவே இருக்கிறது.

ஏனெனில், அமெரிக்க – ஐரோப்பியச் சந்தைகள் தேங்கிக் கிடக்கின்றன. அங்குள்ள மக்களின் வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்துள்ளது. அங்குள்ள தொழில் நிறுவனங்கள் தொழில் முடக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், திருப்பூர் பின்னலாடையோ, தமிழகத்தின் ஆடைகளோ அமெரிக்க- ஐரோப்பியச் சந்தைகளில் விற்பனையாக முடிவதில்லை. எனவே, ஒரு தற்காலிக நிவாரணமாகக் கூட திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இந்த ரூபாய் மதிப்பின் குறைவால் கிடைக்கக்கூடிய இலாபங்களைப் பெற முடியவில்லை. மாறாக, இறக்கு மதியின் சுமையை மட்டுமே சுமக்க வேண்டியுள்ளது.

பொருளியல் வகையிலும், தொழில்நுட்ப முறையிலும் தற்சார்பைக் கைவிட்டு வல்லரசுகளைச் சார்ந்த பொருளாதாரத்தை இந்திய ஆட்சியாளர்கள் நிறுவியதால் ஏற்பட்ட சிக்கல் இது.

உள்நாட்டுத் தொழில் பெருக்கத்தில், உள்நாட்டுச் சந்தை விரி வாக்கத்தில், உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்குவதில் கவனம் செலுத் தக்கூடிய தற்சார்புப் பொருளியலே இச் சிக்கல் நேராமல் நம்மைக் காக்கும்.

ஆனால், உண்மை நடப்பில் இந்திய அரசிற்குத் தலைமை தாங்கும் பெரு முதலாளிகள், உலகமய முதலாளிகளாக இருப்பதால் அவர்களது மூலதனப் புழக்கம் இந்தியாவிற்குச் சமமாக வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள், இந்தியச் சந்தையின், இந்தியப் பொருளியலின் தற் சார்பை விரும்புவதில்லை.

எனவே, இந்திய வல்லாதிக் கத்திலிருந்து விடுபட்ட தமிழ்த் தேசத்தில்தான் தற்சார்புப் பொருளியலைக் கட்டமைக்க முடியும்.

உடனடியாகக் குறைந்த வட்டியில் உள்நாட்டுத் தொழில்களை, குறிப்பாகச் சிறு நடுத்தரத் தொழில்களைத் தூக்கி நிறுத்த முயன்றால், ரூபாய், ரூபாய் நாணயத்தின் சரிவை ஓரளவுக்குச் சரிகட்ட முடியும்.

Pin It