பண்பாட்டுச் சீரழிவுகளைக் கொலைவெறியோடு பரப்பி பணம் பண்ணுகிற தமிழ்த் திரைப் படங்களுக்கிடையில் இன்றைய மாணவர்களைச் சீரழிக்கும் செயல்பாடுகளை விளக்கி பெற்றோர் களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் வழக்கு எண்: 18/9.

வழக்கமான காதல் கதைதான் என்றாலும் கதைக்கான களமும், கதையின் ஊடாக சொல்லப் படும் கிளைக் கதைகளும், கதையின் எதிர்பாராத முடிவும் இப்படத்தை வேறுபடுத்திக்காட்டுகிறது.

கதாநாயகனுக்காகவும், பாடல் காட்சிகளுக் காகவும் கோடிக்கணக்கில் கொட்டி அழும் திரை உலகில் அறிமுகங்களைக் கையாண்டே ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ள பாலாஜி சக்திவேல் முயற்சி பாராட்டுக்குரியது.

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி (மணிசா)யின் வீட்டு வேலைசெய்யும் ஜோதி (ஊர்மிளா மகிந்தா) அவரது முகத்தில் திராவகம் ஊற்றப்படுகிறது. காவல்துறை ஆய்வாளர் குமாரவேலு (முத்துராமன்) வழக்கை விசாரணை செய்கிறார். ஜோதியை விரும்பும் வேலு (ஸ்ரீ) சாலையோர சிற்றுண்டிக் கடையில் வேலை செய்பவர் காவல்துறை ஆய்வாளர் வேலுவை விசாரணை செய்கிறார்.

வேலு குற்றமற்றவன் என்பதையும் ஆர்த்தி மீது ஆசைப்படும் பணக்கார இளைஞன் தினேஷ் (மிதுன் முரளி) தான் குற்றவாளி என்பதையும் அந்த அதிகாரி கண்டுபிடித்து விடுகிறார். தான் ஆர்த்தியைக் காதலிப்பதாகக்கூறி, அவளை ஆபாசப் படமெடுக்கிறான் தினேஷ். இதனை அறிந்த ஆர்த்தி, அவனிடமிருந்து விலகுகிறாள். ஆத்திரமடைந்த தினேஷ் ஆர்த்தியைப் பழிவாங்க திராவகம் ஊற்றியதில் அது ஜோதியின் மேல் விழுந்து படுகாயம் ஏற்படுத்துகிறது.

தனியார்பள்ளி நடத்தும் தினேசின் அம்மா ஜெயலெட்சுமி தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். காவல்துறை ஆய்வாளர் ஜெயலெட்சுமியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு குற்றமற்ற வேலுவைக் குற்றவாளியாக்கித்தண்டனை பெற்றுத்தருகிறார். உண்மையை உணர்ந்த ஜோதி என்னசெய்தார் என்பதுதான் படத்தின் உச்சக் காட்சி.

சிற்றுண்டிக் கடையில் வேலை பார்க்கும் கதாபாத்திரமாகவே ஸ்ரீ மாறி இருக்கிறார். வீட்டுக்கடனை அடைக்க கொத்தடிமையாக வேலை செய்வது பெற்றோர் இறந்ததை மறைக்கும் முதலாளியிடம் கொந்தளித்து எழுவது ஏக்கத்துடன் ஜோதியைக் காதலிப்பது, பாலியல் தொழில் செய்யும் ரோசியிடம் அன்பு காட்டுவது, ஜோதி மீது கொண்ட காதலுக்காக குற்றத் தை ஒப்புக் கொள்வது போன்ற காட்சிகளில் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

அதிகம் பேசாமல் கண்களால் பேசியே கவனத்தை ஈர்க்கிறார் ஊர்மிளாமகிந்தா. குறிப்பாகக் கடைசிக் காட்சியில் சிறைக் கம்பிகளின் ஊடாக ஸ்ரீயைப் பார்க்கும் பார்வையில் ஊர்மிளா வெளிப்படுத்தும் உணர்வுகளை எழுத்தில் எழுத இயலாது.

மாணவர் பருவத்தில் உணர்வுகளை, மிதுன் முரளி, மணிசா இருவரும் நன்றாகவே வெளிப்படுத்துகிறார்கள். கூத்துக் கலைஞன் சின்னச்சாமி நன்றாக நடித்துள்ளார்.

காவல்துறையினர் எத்தகையக் கொடூரமானவர்கள் என்பதற்கு முத்துராமின் நடிப்பே போதும். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அரசியல்வாதியிடம் குழையும் போதும், ஜெயலட்சுமியை மிரட்டும் போதும், வேலுவைக் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி நயவஞ்சக மாகப் பேசும்போதும் மாணவர்களை எகத்தாளமாக மிரட்டும் போதும் முத்துராமின் நடிப்பு காவல்துறையைத் தோலுரித்துக் காட்டுகிறது.

கந்துவட்டிக் கொடுமை, கொத்தடிமை தொழிலாளர் நிலை கல்விச் சீர்கேடு, அரசியல் வாதி காவல்துறை கூட்டணி மூலம் நடைபெறும் சமூகச் சீர்கேடு போன்றவைகளை பிரச்சார நெடியில்லாமல் கதையின் போக்கில் இயல்பாகப் பதிவு செய்துள்ளார் பாலாஜி சக்திவேல்.

கைபேசி ஒரு தகவல் பறி மாற்றக் கருவி என்ற நிலையைக் கடந்துவிட்டது. மனதை சீரழிக்கிற பாலியல் காட்சிகளைக் கை பேசியிலேயே பார்க்க முடிகிறது. நித்தியானந்தா ரஞ்சிதா பாலியல் தொடர்பான காட்சிகள் கருவறை காமுகன் தேவ நாதன் லீலைகள் கைபேசி மூலமாக பரப்பப்படுகின்றன. கர்நாடகச் சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பாலியல் காட்சிகளைக் கைபேசியில் பார்த்து நடவடிக்கைக்கு உள்ளாகின்றார்கள். கைபேசியில் பேசி கொண்டேவாகனம் ஓட்டியதால் வேதாரண்யத்தில் வேன் கவிழ்ந்து 9 மாணவர்கள் ஒரு ஆசிரியர் உட்பட 10 பேர் பலியான சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.

கைபேசி மூலமாகப் பெண்களை கவர்ச்சியாகப் படம் எடுத்து பரவசமடைகிற மாணவர்களின் ரசனையைச் சுட்டிக்காட்டி, இந்தச் செய்திகளைக் கொஞ்சமும் ஆபாசம் இன்றி கலை உணர்வோடு படமாக எடுத்து இதன் மூலம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை உணர்வைக் கொடுத்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். குழந்தைகள் களிமண் உருண்டைகள் அல்லர். நாம் விரும்பிய வண்ணம் உருவாக்கிக் கொள்ள. ஆனால் கண்காணிப்பும் கண்டிப்பும் இல்லாத குழந்தைகள் குற்றவாளிகளாகத்தான் மாறுவார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

பணக்கார இளைஞர்களின் உடல் வேட்கை சார்ந்த உணர்வுகளை, ஏழைகளின் அன்பை, கருணையை, காதல் உணர்வுகளை இயக்குநர் வேறுபடுத்திக் காட்டியிருப்பது சிறப்பு. உழைக்கும் மக்களின் ஆவேச உணர்வுகளை மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளார். பாலியல் தொழில் செய்யும் ரோசியின் பாத்திரப்படைப்பு அருமை. மனவளர்ச்சி குன்றிய சிறுவனின் மீது அன்பைச் செலுத்தும் ஜோதியின் மீது வேலு காதல் கொள்வதும், தாய்க்கு அடுத்த நிலையில் அன்பு செலுத்தும் பெண்ணாக நினைத்து உருகும் நிலையில் திராவகம் ஊற்றி முகம் அருவருப்பான நிலையிலும் அந்தப் பெண் சிறையிலிருந்து வரும் வரை காத்திருப் பேன் என்று சொல்லுவதும் மனதை உருக்க வைக்கிறது.

அரசியல், பணம், அதிகாரம் இவற்றின் செல்வாக்குக் கொண்ட, உண்மை தெரிந்தும் சட்டத்தின் படி நடந்துக் கொள்ளாதக் காவல்துறை அதி காரிக்கு வீட்டுவேலை செய்யும் ஏழைப்பெண் ஜோதி கொடுக்கும் எதிர்பாராத தண்டனை, அதிகாரம் படைத்தவர்களையே எதிர்க்கும் துணிச்சல் கொண்ட ஜோதி வீட்டில் மாமேதை லெனின் புத்தகங்களைக் காட்டுவது ஜோதியின் தந்தை பெயர் பாலன் என்பது போன்ற காட்சிகள் இயக்குநரை அடையாளம் காட்டுகின்றன.

“எங்க அப்பா வயித்துக்கு வெறும் சோறு மட்டும் போட்டு வளர்க்கல” என்று சொல்லி ஜோதி நயவஞ்சகக் காவல்துறை அதிகாரிக்குத்தண்டனை கொடுக்கும் போது திரையங்கில் கை தட்டல் ஒலி காதை பிளக்கிறது.

எய்தவர்கள் பெரும்பாலும் தப்பித்து விடுகிறார்கள். வெறும் அம்புகள் மட்டுமே தண்டிக்கப் படுகின்றன. இந்தப் படத்திலும், இதைத்தான் சொல்கிறார்கள்.

கைபேசியை இப்படியும் பயன்படுத்தலாமா? என்று மாணவர்கள், இளைஞர்கள் பேசிக்கொண்டே திரையரங்கை விட்டு வெளியேறும் போது நமக்குக் கவலையே மேலோங்குகிறது.

Pin It