இந்தியா உள்நாட்டு அளவிலோ உலக அளவிலோ மனித உரிமைப் பாதுகாப்பில் உறுதியாகச் செயல்பட தவறிவிட்டது என சர்வதேச மன்னிப்பு அவை (Amnesty international) குற்றஞ் சாட்டியுள்ளது. உலக அளவில் செயல்படும் இந்த மனித உரிமை பேரமைப்பு “மனித உரிமைப் பேணலில் உலகின் இன்றைய நிலை- 2012” என்ற அறிக்கையை 23.5.2012 அன்று வெளியிட்டது.

இதேபோல் மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights Watch) என்ற பன்னாட்டு மனித உரிமை அமைப்பும் இந்தியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அவை கீழ்வருமாறு கூறுகின்றன.

• இந்தியா தனது பொருளாதர வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறதே தவிர உள்நாட்டு அளவிலும், உலக அளவிலும் மனித உரிமைகளைப் பாதுகாக்க செயல் முனைப்புக் காட்டவில்லை.

• மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மியன்மரிலும் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான மனித உரிமைச் சிக்கல்களில் இந்தியா கண்ணை மூடிக்கொண்டு இருந்தது.

• 2009 இல் இலங்கையில் உள்நாட்டின் போரின் போது அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கையைக் கூட இந்தியா ஆதரிக்கவில்லை.

• மனித உரிமைப் போராளிகள் இந்திய அரசின் தாக்குதல்களுக்கும் அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்பு களின் தாக்குதலுக்கும் பெருமளவில் ஆளாக்கப்பட்டனர். அவர்கள் மீது அரசுகவிழ்ப்பு சதிக் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

• மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்புகள் இந்தியாவில் பலவீன மாக உள்ளன. இந்தியாவின் நீதித்துறை மனித உரிமை மீறலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதிப்பெற்றுதருவதில் மிக மெதுவாகவே செயல்புரிகிறது.

• சிறு உழவர்கள் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய ஒதுக்கப்பட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள் மீது மிகையான அடக்கு முறைகள் ஏவப்படுகின்றன.

• தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பழங்குடியினர் நலனுக்கும், ஒதுக்கப்பட்டோர் உரிமைக்கும் பாடுபடுவர்கள் அரசால் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள்.

• ஆயுதப்படை சிறப்பதி காரச் சட்டம் பழங்குடியினர் மற்றும் மத சிறுபான்மையினர் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது.

• பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை கள், வகுப்புவாத வன்முறைகள், மோதல் பகுதிகளில் காணாமலடிக்கப்படுதல், நீதித்துறை சாராத முறையில் நடக்கும் கொலைகள், தொடர்ந்து பயன்படுத்தப்படும் சித்திரவதை முறைகள், மனித உரிமைப் போராளிகள் மீது அடுக் கடுக்கான தாக்குதல்கள் போன்றவை குறைந்த பாடில்லை.

• ஐ.நா. சார்பிலும், பிற பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் சார்பிலும் இந்தியாவில் என்ன நடக்கிறது என அறிந்து கொள்வதற்கான உரிமையை இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

Pin It