பெங்களூரூவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இலட்சங்களில் ஊதியம் வாங்கும் என் கல்லூரி நண்பன் பேசினான். கடுமையான முதுகுவலியில் அவஸ்தைப்படுவதாகக் கூறிய அவன் “அதற்கு என்ன வைத்தியம் பார்க்கலாம்” என்று கேட்டான். சொன்னேன். கோவையில் உள்ள மற்றொரு நண்பர் பிரபு மிகப்பெரிய எழுது பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்கிறார். ஆண்டுக்கு பத்துகோடி வரை விற்பனை இலக்கு வைத்து வேலை செய்பவர். நாலைந்து நாட்களுக்கு முன்பு பேசினார். அவருக்கும் கடுமையான முதுகு வலியாம். “தாங்க முடியவில்லை; தூங்க முடியவில்லை” என்று பெங்களூரூ நண்பரைப் போலவே வலிதரும் வேதனையோடு புலம்பினார்.

முதுகு வலி என்றால், இவர்களுக்கு ஏன் என்னுடைய நினைவு வருகிறது என்று, நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடுமையான முதுகுவலியால் துடித்துக் கொண்டிருந்தேன். ஆம்! முதுகுவலியில் நான் மூத்தவன்! இப்போது முற்றிலும் இல்லா விட்டாலும் ஓரளவுக்கு முதுகுவலியிலிருந்து மீண்டிருக்கிறேன். என்னிடம் முதலில் பேசிய பெங்களூரூ நண்பன் தினமும் சில மைல் தூரம் கார் ஓட்டிக் கொண்டு அலுவலகம் போய் வருகிறான். அலுவலகத்தில் கணிப்பொறி முன் அமர்ந்து பல மணி நேரங்கள் வேலை செய்கிறான். கோவை நண்பர் பிரபு, பணி நிமித்தமாக, தினமும் பல மைல் தூரம் இரு சக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டிருப்பவர்.

இன்றைக்கு முதுகுவலி என்பது பெட்ரோல் விலை உயர்வைப் போல சகஜமாகி விட்ட ஒன்று. நகரங்களில் தெருவுக்குத் தெரு அதிகரித்து வரும் பிசியோ தெரபி மருத்துவ மையங்கள் முதுகுவலியின் வீரியத்துக்குச் சாட்சி!!

வேலைப் பளுவால் முதுகுவலி ஏற்படுகிறது என்கிறார்கள். அப்படியானால், இன்றைய தலை முறையினரை விட வயல்களில், காடுகளில் கடுமையாக உழைத்த நம் தாத்தன் முப்பாட்டன் களும் முதுகு வலியால் முனங்கியிருக்க வேண்டும். என் தாத்தாவோ, உங்கள் தாத்தாவோ முதுகு வலியால் அவதிப்பட்டதாக அறிந்தது உண்டா? நிச்சயம் இருக்காது!!

மண் வெட்டி, கடப்பாரை, கலப்பைப் பிடித்து உழைத்தவர் களுக்கு எல்லாம் வராத முதுகு வலி குளுகுளு அறையில் கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்யும் என்னைப் போன்ற இளைஞர் களுக்கு வரக் காரணம் என்ன? “தொடர்ந்து நாற்காலி அல்லது கார், இரு சக்கர வாகனங்களில் உட் காருந்த நிலையில், இருப்பவர்களுக்கு நிச்சயம் முதுகு வலி வரும்” என்றார், இயற்கை மருத்துவம் பார்க்கும் நண்பர் ஒருவர்!

உண்மைதான். வீட்டில் நாற்காலி அல்லது மெத்தையில் (ஷோஃபா) அமர்ந்து தொலைக் காட்சி பார்க்கிறோம். சாப்பிடுவது கூட பெரும்பாலும் சாப்பாட்டு மேசையில் என்றாகி விட்டது. அலுவலகம் போனால் கேட்கவே வேண்டியதில்லை நாற்காலிதான்!! (‘முதுகுவலி வராத ரோலிங் சேர்கள்’ என்று விளம்பர வாசகங்களுடன் கல்லாக் கட்டுகிறார்கள்!).

காலை மடக்கி சம்மண மிட்டு அமரும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் இரு சக்கரவாகனங்களிலோ, கார்களிலோ பயணம் செய்கிறோம். நடப்பது என்பது அரிதாகிப் போனது. நடையோடு ஆறஅமர உட்காரும் பழக்கமும் நம்மைவிட்டுப் போய் விட்டது. இதனால் தான் இன்றைய தலைமுறையின் முதுகெலும்புகள் தேய்ந்து கொண்டிருக்கின்றன. முதுகுவலி பிரச்சனைக்கு தீர்வு அறுவை சிகிச்சையே சரி என்கிறது அலோபதி (ஆங்கில) மருத்துவம். சென்னையில் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் என் நண்பன் முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்பும். பிரச்சனை தீர்ந்த பாடில்லை. முன்பை விட மோசமாகிப் போனது தான் வேதனை!

இப்போதெல்லாம், சேர்ந்தாற்போல் பதி னைந்து நிமிடங் கள் கூட நாற்காலியில் அமர முடியாத அளவுக்கு வலியால் துடித்துக் கொண்டி ருக்கிறான். தன் மூன்றரை வயது மகளைக் கூட தூக்கி வைத்து கொஞ்ச முடியாத அளவுக்கு உடல் நிலை மோசமாகிவிட்டது. பாவம், அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரிய வில்லை?!

பூங்கா மாதிரியான திறந்தவெளி பொழுது போக்கு இடங்களில் கூட இப்போதெல்லாம் சிமெண்ட் பெஞ்சில் தான் அமர முடிகிறது. (புல் தரையில் அமராதீங்கள் என்ற வாசகம் உதகை உயிரியல் பூங்கா முதல் உள்ளூர் செம்மொழி பூங்கா வரை வைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் காலடிபடாமல் வளர்ந்த புல்லை இயந்திரங்கள் கொண்டு வெட்டுகிறார்கள். அடப்போங்கப்பா!!)

வீட்டுக்கு வெளியே ஆற அமர உட்கார்ந்து தெருவை வேடிக்கைப் பார்க்கக் கட்டப் பட்ட திண்ணைகள் இன்று நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூட வழக்கொழிந்து விட்டன. சிறு பிள்ளைகள் கூட தரையில் அமர்வது கிடையாது. நாற்காலியில்அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கி றார்கள். காணொளி விளையாட்டுகள் (வீடியோ கேம்கள்) விளையாடுகிறார்கள். பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை தரையில் அமர்ந்து (எழுதப் படிப்பதற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்படும்) முக்காலியில் புத்தகத்தை வைத்துத்தான் படிப்பேன். இன்றைக்கு எந்த வீட்டிலும் இதைப் பார்க்க முடிவதில்லை. சிறு பிள்ளைகள் கூட ஆயத்த (ரெடிமேட்) மேசை நாற்காலிகளில் அமர்ந்து வீட்டுப் பாடம் எழுதுகிறார்கள்.

வீட்டு விழாக்களில் தரையில் இலைவிரித்து விருந்து பரிமாறப்படும் பழக்கம் மறக்கடிக் கப்பட்டு, வாடகை மேசைகளில் காகிதங்களைப் பரப்பி அதன் மீது இலையிட்டு உணவு பரி மாறப்படுகிறது. பாரம்பரியமாக இருந்த ஒரு சிறு சிறு பழக்கங்கள், நாகரீகம் என்கிற மாயையில் மாறிவருவதால் உடல் சார்ந்து நாம் அனுப விக்கும் நோய்களும் வலிகளும் அதிகம்.

முதுகு வலியில் அவதிப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக் கிறது. அலுவலகத் தில் எப்படி அமர வேண்டும்? எந்த மாதிரியான நவீன நாற்காலிகளை பயன்படுத்த வேண்டும்? எந்த பிசியோதெரபி மருத்துவரைப் பார்க்க வேண்டும்? என்கிற ஆலோசனைகள் நாலாப்பக்கமும் உலவுகின்றன.

மனிதர்களின் நோய்கள் யாருக்கோ பணமாகிக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது வீடுகளில், விழாக்களில், நண்பர்களுடன் ஆற அமர சம்மணமிட்டு அமர்ந்து கூடிக்களித்து முதுகுவலிக்கு "முற்றும்" சொல்வோம்.

 (இன்னும் சொல்வேன்)

Pin It