கல்வி என்பது முற்றிலும் வணிகம் ஆகி விட்ட இந்த நாட்களில் சரியான, முறையான கல்வியைப் பெறுவது என்பது சற்றே கவலைக் குரிய செய்தி யாகவே உள்ளது.

குறிப்பாகக் கணினிக் கல்வி என்பது பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் ஏதேனும் ஒரு கணினிப் பயிற்சி பற்றிய வண்ணமயமான விளம்பரச் சுவரொட்டி களைக் காணமுடிகிறது.

இங்கு கொடுக்கப்படும் பயிற்சியின் தன்மை மனதை நெருடச் செய்கிறது. பெரிய விளம்பரம் செய்து, அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் பல கணினிப் பயிற்சி மையங்களில் படித்து வெளியே வரும் மாணவர்களின் நிலை மிகவும் பரிதா பத்திற்கு உரியதாகவே உள்ளது. குறிப்பாக ஞிசிகி., றிநிஞிசிகி.,போன்ற படிப்புகளை முடித்து வருப வர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவ ழித்துக் கடைசியில் ஒரு வெள்ளை அட்டையில் சான்றிதழ் என்ற ஒன்றினைக் கொடுத்து வெளியே அனுப்பப்படுகின்றனர். ஆனால் பயிற்சியை முடித் துள்ளவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

இதுபோன்ற பயிற்சியைப் பெறுவதற்கு அடிப்படைக் கல்வி என்ற ஒன்று பார்க்கப் படுவதே இல்லை. கட்டணம் செலுத்தும் எவருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆனால் மேலே குறிப்பிட்ட கணினிப் பயிற்சியினை முடித்து வரும் பெரும்பாலானவர்களுக்கு, கணினிப் பயிற்சிக்கு அடிப்படை தகுதியான தட்டச்சு பயிற்சியே இல்லை என்பது வியப்பிற் குரியதாகும்.

எதற்காக தட்டச்சு அறிந்திருக்க வேண்டும்?

கணினியில் வேலை செய்யும்போது,தரவு களைப் பதிவு செய்ய விசைப்பலகையை பயன் படுத்துகின்றோம். இதற்குத் தட்டச்சுப் பயிற்சி அடிப்படையாகும். தட்டச்சுப் பயிற்சி முறையாகப் பெற்றிருக்கவில்லையென்றால் இந்த விசைப் பலகையை பயன்படுத்த முடியாது. இரண்டு ஆட் காட்டி விரல்களால் மட்டுமே தட்டச்சு செய்ய முடியும்.

கணினியின் அடிப்படை பற்றிய பயிற்சி மட்டுமல்லாது DCA., PGDCA.,போன்ற படிப்பு களிலும் எம்.எஸ். ஆபீஸ் பற்றிய வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் உள்ள ஒரு பகுதியான எம்.எஸ்.வேர்டு போன்ற மென்பொருளில் வேலை செய்யும்போது விசைப் பலகையைப் பார்க்காமல் விரைவாகத் தட்டச்சு செய்யவேண்டியது அவசியம். குறிப்பாகப் பயிற்சிக்குப் பிறகு ஏதேனும் அலுவலகத்தில் வேலைக்குச் சேரும் போது அங்கு இந்த எம்.எஸ்.ஆபீஸில் தான் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் சிறப்பாகவும், முழுமையாகவும், விரை வாகவும் வேலை செய்ய, தட்டச்சு மிகவும் அவசிய மாகும். கணினிப்பயிற்சிக்கு முன்பாகவே தட்டச்சை பயின்றிருந்தால் நல்லது. அல்லது குறைந்த பட்சம், கணினிப் பயிற்சி எடுக்கும் கால கட்டத்திலேயே தட்டச்சையும் பயின்று - அடிப்படை வேகம் கிடைக்கும் வரையிலாவது பயின்று- முடிப்பதும் நல்லது.

ஆனால் கணினியில் வேலை பார்க்கத் தட்டச்சுப் பயிற்சி அவசியம் என்பதை எந்தக் கணினிப் பயிற்சி மையமும் வலியுறுத்துவது இல்லை. பயிற்சியின்போது தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை என்று வைத்துக்கொண்டாலும், கணினிப் பயிற்சியை முடிக்கும் போது தட்டச்சுப் பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும் என்ப தைக்கூட எவரும் எடுத்துக் கூறுவது இல்லை.

கணினி ஆசிரியர் பயிற்சி வகுப்புகள்

தற்போது மிகவும் பிரபல மாகத் தரப்படும் பயிற்சி, கம்ப் யூட்டர் டீச்சர் டிரெயினிங் எனப்படும் கணினி ஆசிரியர் பயிற்சி என்பதாகும். அதாவது கணினிப் பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஆசிரியர் வேலைக்கான பயிற்சி நிலையங்கள்நிறைய தொடங்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால், இந்தக் கணினி ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு - அடிப்படைத் தகுதி 10வது வகுப்பு படித்திருந்தால் போதும் என்று இவர்கள் விளம்பரம் செய்திருப்பதுதான்.

அதையும் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாகச் சொல்லித் தருகின்றோம் என்றும் கூறுகின்றனர். கட்டணத்துடனோ கட்டணம் இல்லாமலோ, பயிற்சி முடித்த பிறகு இவர்களுக்கு எங்கு வேலை கிடைக்கும் என்று கேட்டால், மற்ற கணினி மையங்களில் வேலை கிடைக்கலாம் என்றே விடை தருகின்றனர்.

ஏற்கெனவே கல்லூரிகளில் முறையாக பி.எஸ்சி, எம்.எஸ்சி கணினி அறிவியல் பட்டங்களைப் பெற்றுள்ளவர்களே வேலையில்லாமல் காத்திருக்கும் நிலையில் - அவர்கள் எந்த வேலை கிடைத்தாலும் சேர்ந்து விடும் நிலையில் உள்ள போது, வெறும் 10வது படித்து விட்டுக் கணினி ஆசிரியர் பயிற்சி முடிப்பவர்களுக்கு எங்கு என்ன சம்பளத்தில் வேலை கிடைக்கப் போகிறது?

இப்படிப்பட்ட சிறப்பான பயிற்சியை முடித்தவர்கள் நடத்தும் வகுப்புகள் எப்படி இருக்கும்? அவர்களிடம் பயிற்சி முடிக்கப்போகின்றவர்களின் நிலை என்ன?

தறிகெட்டு ஓடும் இந்தக் குதிரைக்கு யார் கடிவாளம் போட்டுக்கட்டுப்படுத்தப் போகின்றார்கள்?

கணினி வரைகலைப் பகுதியின் நிலை

மிக அதிகமான ஆட்கள் தேவைப்படும் நிலையில் உள்ளது இப்போது, சிஜிடி எனப்படும் கணினி வரைகலை வடிவமைப்புப் (கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனிங்) பகுதியாகும். இது இரண்டு பெரும் பகுதிகளாக உள்ளது. முதலாவதாக உள்ள பகுதி, அச்சு, விளம்பரம், புகைப்படம், பதாகைகள் வடிவமைப்பு மற்றும் புத்தகப் பதிப்பு ஆகிய துறைகளின் அடிப்படையாக உள்ள கிராபிக் டிசைனிங் பகுதியாகும்.

போட்டோஷாப், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் கோரல்டிரா போன்ற மென் பொருள்களைப் பயன்படுத்தி வடிவமைப்பு வேலை களைச் செய்கின்ற பகுதியாகும் இது.

இந்தப் பகுதிக்கான பயிற்சியை முடித்தவர்களுக்கு மேலே குறிப்பிட்ட ஐந்து துறைகளிலும் உறுதியாக வேலை வாய்ப்புள்ளது. பெரிய, சிறிய நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் வேலைவாய்ப்பைத் தருகின்ற ஒரு பயிற்சியாக உள்ளது.

இரண்டாவதாக உள்ளது பெரிய எதிர்காலத்தைக் கொண்டுள்ள, அனிமேஷன் துறையாகும். விளம்பரம், இணையம் மற்றும் திரைப்படத் துறைகளின் துணைத் தொழிலாகத் திகழும் இந்த அனிமேஷனை பயன் படுத்தாமல் எதுவும் தயாரிக்கப்படுவது இல்லை என்பது உண்மையாகும்.

பயிற்சி மையங்கள்

தற்போது இந்த இரண்டு பகுதிகளையும் மையமாக வைத்தே பெருமளவு பயிற்சி மையங்கள் தொடங்கப் படுகின்றன. இம்மையங்கள் பெறுகின்ற கட்டணம் மிக மிக அதிகம்.இறுதியில் மாணவர்கள் நம்பிக்கை மோசம் செய்யப்படும் நிலையே இன்று உள்ளது.

இந்தப் பயிற்சிகளை அளிப்பவர்கள்(உதவித்தொகை), இலவசம் என்பன போன்றவற்றை முன்னிறுத்தி மிகப் பெரிய விளம்பரங்கள் மூலம் பொதுமக்களைக் கவருகின்றனர். இவற்றில் மயங்கி மாணவர்கள் விட்டில் பூச்சிகளாக சிக்கிப் பணத்தையும், பணத்தை விட மதிப்பு வாய்ந்த நேரத் தையும் இழக்கின்றனர்.

 இங்கு அப்படி என்னதான் நடக்கின்றது?

முதன்மையானது, இங்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் பட்டறிவு பற்றியதாகும். கணினி வரை கலைப் பயிற்சியளிக்கும் இவர்கள் பெரும்பாலும், +2 அல்லது பி.எஸ்சி கணினி அறிவியல் படித்தவர்களாக இருக்கலாம். அல்லது தற்போது அவர்கள் பாடம் நடத்தும் குழுவிற்கு முந்தைய குழுவில் அதே பயிலகத்தில் பயிற்சி முடித்தவர்களாக இருக்கலாம். (இது இன்றைய நிலை. விரைவில், நாம் முன்பு கூறிய கணினி டீச்சர் டிரெய்னிங் முடித்த ஆசிரியர்களும் வரப்போகின்றார்கள். அப்போது நிலைமை மேலும் மோசமாகப் போகின்றது)

இவர்களுக்கும் வரைகலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இதில் நமது நேரடியான அனுபவம் ஒன்றினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். ஒரு பயிலகத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு, இணையதள பக்க வடிவமைப்புப் பயிற்சிக்குச் சென்றிருந்தோம். நமக்கு பயிற்சியளித்தவர் சுமார் 22 அகவையுள்ள இளைஞர். அவரை நாம் ஆசிரியராகவே மதித்து, அவர் கொடுத்த பயிற்சியை மட்டுமே கடை பிடித்து வந்தோம். எம்முடன் சேர்ந்து 8 மாணவர்கள் அந்தப் பிரிவில் படித்தார்கள்.

பாடவகுப்பின்போது யாருக்காவது ஐயம் வந்து ஆசிரியரிடம் விளக்கம் கேட்பார். அதற்கு அவர் கொடுத்த விடை ”அமைதியாகப் பாடத்தைக் கவனியுங்கள்;இடையில் கேள்வி கேட்டால் குழப்பமடைவீர்கள்”, என்பது மட்டுமே. அந்த நாள் வகுப்பில் மட்டுமல்லாது எந்த நாளிலும் அவர் விளக்கம் தந்த தில்லை. பாடவகுப்பில் அமைதியாக இருந்துவிட்டு செயல்முறை வகுப்பில் சந்தேகம் கேட்டால் அவரது பதில் மேலும் வித்தியாசமாக இருந்தது. ”பாட வகுப்பில் ஒழுங்காகக் கவனிக்காததால் இப்போது சந்தேகம் வருகிறது; சரியாக செயல் முறையை செய்துபாருங்கள்”, என்பதே அவர் கூறிய பதிலாகும். என்ன ஒரு வேடிக்கையான பதில்!

இறுதியில்இரகசியம் புரிந்தது; அவர் எங்களுக்கு முந்தைய குழுவில் அதே பயிற்சி மையத்தில் தனது பயிற்சியை முடித்தவர்; ஏராளமான ஐயங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பது.

கணினி வரைகலை பயிற்சி முடித்தவர்களிடம் ஒரு விஸிட்டிங் கார்டு தயாரிக்கச் சொல்லிப் பாருங்கள்; அவர்கள் பெற்றுள்ள பயிற்சியின் தன்மை புரிந்துவிடும். நேரடியாக ஒரு ஏ4 பக்கத்தை அகல வசத்தில் தொடங்கி, அதில் எழுத்துகளை சென்டர் அலைன்மென்டில் தட்டச்சு (விசைப்பலகையைப் பார்த்துப்பார்த்து மட்டுமே) செய்து முடிப்பர். ஒரு சிலர் மட்டும், நிறுவனத்தின் பெயரை சற்றே பெரிய எழுத்திற்கு மாற்றிக் கொடுப்பர். அவ்வளவு தான்; ஒரு விஸிட்டிங் கார்டு என்பதை ஏ4 தாளில் சென்டர் அலைன்மென்டில் கொடுப்பது மட்டும்தானா என்று கேட்டால், ”எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது அப்படித்தான்” என்று மிக எளிமையாக விடையளிப்பர். இதுவே இன்றைய நிலை. மற்ற வேலைகள்?

யார் காரணம்?

இதுபோன்ற தவறுகளுக்கு யார்காரணம்? பயிற்சி அளிக்கும் நிறுவனம், அதன் உரிமையாளர், அங்குள்ள ஆசிரியர்கள், பயிற்சிக்கு செல்லும் மாணவர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் பெற்றோர், இவர்கள் செய்யும் தவறுகளைக்கண்டும் காணாதது போல உள்ள ஊடகங்கள், அரசு - என்று இது தொடர்பாக எத்தனையோ நபர்கள் காரணமாக உள்ளார்கள். ஆனால் நேரடியாகக் குறிப்பிட்டு இவர் தான் என்று சுட்டிக் காட்ட முடியாத நிலையே உள்ளது.

என்றாலும் பொதுவாக இதனை ஆராய்ந்து பார்த்தால் முதல் காரணம், பயிற்சிக்குச் செல்லும் மாணவர்களும் அவர்களது நண்பர்கள் மற்றும் பெற்றோர்தான் என்பது தெரியவருகிறது. மனித மனத்தில் உள்ள ஆசை மற்றும் பேராசை என்ற இச்சைகளின் காரணமாகவே பல தவறுகள் நடை பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இவையே இந்தக் கணினிப் பயிற்சியைத் தெரிவு செய்வதிலும் நடக்கின்றது.

தாங்கள் செலுத்தும் பயிற்சிக் கட்டணத்தைவிட அதிகமான பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற பேராசையே இதற்கு அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம். 5000 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு லேப்டாப் இலவசமாகக் கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர்.

தங்களுக்கு ஒரு கணினி பயிற்சி தேவை என்று விரும்பும் இவர்கள், பயிற்சி மையங்களில் தரப்படும் பயிற்சியின் தரம், அங்குள்ள வசதிகள், பயிற்றுவிப் பாளரின் தகுதி போன்றவற்றைப் பற்றி எந்த ஒரு நிலையிலும் விசாரிப்பதோ அல்லது அறிந்து கொள்ளவேண்டும் என்றோ விரும்புவது இல்லை;மாறாக அங்கு எவ்வளவு உதவித் தொகை கிடைக்கும்; என்ன இலவசமாகத் தரப்படுகிறது; நாம் கொடுக்கும் பணத்தைவிட அதிகமாக அங்கிருந்து கறக்க முடியுமா என்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கின்றனர்; அதைப்பற்றி மட்டுமே விசாரிக்கவும் செய்கின்றனர்; இதற்குத் தான் முக்கியத்துவம் தருகின்றனர்.

இதன் காரணமாகவே அடிப்படை கணினிப் பயிற்சிக்கு மட்டுமல்லாது, உயர்ந்த தரத்தைக் கொடுக்க வேண்டிய வரைகலைப் பகுதிக்கான பயிற்சியை வழங்கும் பயிற்சி மையங்களும் தங்களது விளம்பரங்களில், இலவசங்களையும், உதவித் தொகைகளையும் பற்றிய வாசகங்களைத் தவறாது கொடுக்கின்றனரேயன்றி, தாங்கள் தரும் பயிற்சியின் தரம் பற்றியோ, தங்களது ஆசிரியர்களின் தகுதி பற்றியோ எதுவுமே பேசுவது கிடையாது.

 (தொடரும்)

Pin It