உண்மை ஒன்று சொல்வேன் - 11 

சிறப்பு முகாம். தமிழுணர்வாளர்களால் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி உச்சரிக் கப்படும் வார்த்தை. சிறப்பு என்பதற்கான பொருள், அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

சிறப்பு என்பது மேலானது என்ற வார்தையை குறிக்க பயன்படும் சொல்லாடல். உதாரணமாக விருந்து என்பதற்கும் சிறப்பு விருந்து என்பதற்குமான வேறுபாட்டைச் சொல்லலாம். வெறும் ‘முகாம்’ என்பதற்கும், ‘சிறப்பு’ முகாம் என்பதற்குமான வேறு பாடு தெரியுமா உங்களுக்கு?

தகுந்த ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினர் தங்க (அடைத்து) வைக்கப்படும் இடம் திறந்தவெளி முகாம். சிலவகை குற்றங்கள் புரிந்ததாகக் குற்றஞ் சாட்டப்படும் வெளிநாட்டினர் வழக்கு நடைபெறும் காலங்களில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஏனைகமாக அனைத்து மாநிலங்களிலும் திபெத், மியான்ர், வங்களாதேசம் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த எதிலிகள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் சிறப்பு முகாம்கள் இல்லை. இந்தியத் திருநாட்டில் தமிழன் என்றைக்குமே குற்றப் பரம்பரை தானே?

தமிழ்நாட்டிலும் ஈழத் தமிழர்களைத் தவிர வேறு நாட்டினர் யாரும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவதில்லை. (விதிவிலக்காக எப்போதாவது ஓரிருவர் அடைத்து வைக்கப்படுவதுண்டு)

ஈழ அகதிகள் மீது மட்டும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது நடைமுறையாக இருக்கிறது.

சென்னை அருகே உள்ள பூந்தமல்லி சிறப்பு முகாமில் எட்டுப் பேரும், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 38 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சாதாரண கை கலப்பு வழக்கு தொடங்கி விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம், மருந்து பொருட்கள் கடத்தியதாகவும் வழக்குகள் உள்ளன. இங்கு அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் மீதான வழக்கு புனையப்பட்டவை; ஜோடிக்கப்பட்டவை.

பெரும்பாலானோர் மீதான வழக்குகள் ஆண்டு கணக்கில் ஆகியும் இன்னும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டவே இல்லை. இதுவே இந்த வழக்கின் உண்மை தன்மைக்கு சாட்சி! குற்றப்பத்திரிகை கூட வழங்கப்படுவதில்லை. இத்தனைக்கும் இவர்கள் மீது க்யூ பிரிவு காவலர்கள் புதிந்துள்ள வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டால், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை தான் கிடைக்கும்!

அப்படி தண்டனை வழங்கப்பட்டாலும் சிறப்பு முகாம் காலத்தை தண்டனைக் காலமாகக் கருதமுடியாது. சிறப்பு முகாமில் இருப்பவர்கள் தங்கள் நாட்டை இழந்து அடைக்கலம் தேடி வந்தவர்கள். இங்கேயும் தங்கள் குடும்பத்தை விட்டுவிலகி, சிறப்பு முகாமில் அல்லல்படுவது வேதனைக்குரியது. இதனால், முகாம்களில் உள்ள இவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி நிர்க்கதியாக நிற்கின்றன.

குடும்பத்தைவிட்டுப் பிரிந்து அநியாயமாக சிறப்பு முகாமில் வாடும் சிலர் மனநலம் பாதிக்கப்படுகின்றனர். சிறப்பு முகாமில் உள்ள பலரும் அடிக்கடி தற்கொலை முயற்சி செய்வதை கவனிக்க வேண்டும். ஐந்து இருப்புக் கதவுகள் கொண்ட நுழைவாயில், கான்கிரீட் தரைப்பகுதி, மேல்பகுதி இரும்புக்கம்பி வலை, தனித்தனி சிறை அறை, உயர்ந்த பாதுகாப்புக் கோபுரங்கள், ஆயுதம் தாங்கிய காவலர்கள் என கொடுங் குற்றவாளிகள் போல் நடத்தப்படும் இவர்களால் அப்படி என்ன சட்டம் ஒழுங்கு, இந்திய இறையாண்மை கெட்டுவிட்டது என்று தெரியவில்லை!

மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்துக்கு சிறப்பு முகாமில் கொடூரங்கள் சென்றடையாமல் இருப்பதற்கு இங்கே கொடுமைகளை அனுபவிப்பவர்கள் தமிழர்கள் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கு முடியும்?

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் சுமார் 126 முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இவற்றை திறந்த வெளி முகாம் என்கிறார்கள். அங்குள்ளவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது. அதைவிட சிறப்பான கொடுமைகள் ஈழத்தமிழர்களுக்கு சிறப்பு முகாமில் எந்நேரமும் காத்திருக்கின்றன.

செந்தூரனின் காலவரையற்ற பட்டினிப் போராட்டமும், செந்தூரனை சந்திக்க வந்த அவரது அத்தை மாரடைப்பால் காலமான செய்தியும் துயரம் மிகுந்தவை. 21 நாட்கள் உணவருந்தாலும், ஒரு வார காலத்துக்கு மேலாக சொட்டு தண்ணீர் கூட அருந்தாமலும் உண்ணாநோம்பிருக்கும் செந்தூரன் உள்ளிட்ட சிறப்பு முகாம் வாசிகள் கேட்பதெல்லாம் இவைதான்:

 “சிறப்பு முகாம் வாசிகள் எல்லோரும் திறந்த வெளி முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும். தவறிழைத்தவர்களை சிறையில் அடையுங்கள். வழக்குகள் நடத்துங்கள். தண்டனை வழங்குங்கள். உடனடியாக இந்தியாவில் எங்குமே நடைமுறையில் இல்லாத இந்த ‘சிறப்பான’ சிறப்பு முகாமை இழுத்து மூடுங்கள்!!”

(இன்னும் சொல்வேன்)

Pin It