ஒன்றை விஞ்சி இன்னொன்றாக காங்கிரசு கூட்டணியின் அடுக்கடுக்கான இமாலய ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலப்பட்டு வருகின்றன. இம்முறை இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக சிக்கியிருக்கிறார். இந்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் பெருமுதலாளி நிறுவனங்களுக்கு வழங்கியதில் அரசுக்கு 1 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை வெளியிட்டார்.

ஏறத்தாழ 2இலட்சம் கோடி ரூபாய் தனியார் நிறுவன கொள்ளையில் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசியல் புள்ளிகளுக்கு கைமாறி இருக்கிறது. வரலாறு காணாத இந்த ஊழல் கொள்ளையின் தலைமைப் புள்ளி மன்மோகன்சிங் தான். 2004க்கும் 2009க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் நிலக்கரித் துறைக்கு பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன் சிங் கையெழுத்திட்டு நிலக்கரிச் சுரங்கங்களை அடிமாட்டு விலைக்கு நேரடியாக வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு வாரி வழங்கியதில் இந்த முறைகேடு நடந்துள்ளது என தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியது.

அலைக்கற்றை ஊழலையும் தாண்டிய இந்த கரிக்கொள்ளையில் பங்கு பெற்ற கொள்ளை முதலாளிகள் டாடா, ஜிண்டால், அம்பானி, பிர்லா, உள்ளிட்டோர் ஆவர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததைப் போலவே இதிலும் நடந்துள்ளது. வெளிப்படையான ஏல முறை இல்லாமல் முதலில் வந்தோருக்கு முதலில் என கோயில் சுண்டல் வழங்குவது போல் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நிலக்கரியின் உலகச்சந்தை விலை டன்னுக்கு ரூபாய் 14,000 இருந்த போது, கோல் இந்தியா நிறுவனத்தின் மானிய விற்பனை விலை ரூபாய் 2500ஆக இருந்த போது 100ரூபாய்க்கும் 200ரூபாய்க்கும் நிலக்கரிக்கு விலை நிர்ணயித்து பெருமுதலாளி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பம் அளித்து அனுமதிக்கப்பட்ட 1442 நிறுவனங்களில் பெரும்பாலானவை போலி நிறுவனங்கள் என தணிக்கை நிறுவனம் கண்டறிந்து கூறியுள்ளது. இந்த முகவரித் தாள் நிறுவனங்கள் ஒதுக்கீடு பெற்ற உடனேயே பெரிய நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை கைமாற்றிவிட்டு பல்லாயிரம் கோடி பெற்றுள்ளன. உண்மையில் இவை பினாமி ஏற்பாடுகள்.

தெரிந்தே மன்மோகன் சிங் இவ்வொதுக்கீடு ஆணைகளில் கையொப்பமிட்டுள்ளார். இதன்மூலம் அவருக்கும் அவரது கட்சிக்கும் கையூட்டுகள் கைமாறியிருக்கின்றன.

தணிக்கை அறிக்கை இந்த 1இலட்சத்து 86ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க, சிவசேனை ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கி வருகின்றனர். இக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாள்தோறும் நாடாளுமன்றம் செல்வதும் அவைத் தலைவர் முன்பு கும்பலாகக் கூடி கூச்சல் எழுப்பி அவையை ஒத்திவைக்கச் செய்வதுமாக ’தங்களது சனநாயக கடமைகளை’ நிறைவேற்றி வருகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. இச்சிக்கல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்பது காங்கிரசு கட்சியின் நிலை. மன்மோகன் சிங் விலகிய பிறகு விவாதிக்கலாம். என்று பாரதிய ஜனதா வலியுறுத்துகிறது.

பாரதிய சனதாவின் இந்த நாடாளுமன்ற காலித்தனத்திற்கு உண்மையான காரணம் ஊழலை எதிர்த்த ஆவேசம் அல்ல. இந்த இமாலய ஊழலில் தாங்களும் பங்குபெற்றிருப்பதை மறைப்பதே ஆகும்.

நாடாளுமன்ற மக்களைவையில் 27.08.2012 அன்று கூச்சல் குழப்பத்திற்கு இடையே மன்மோகன் சிங் முன்வைத்த விளக்க அறிக்கை ‘நான் மட்டுமா குற்றவாளி நீங்களும் தானே’ என எதிர்க்கட்சிகளைக் கேட்பதாக இருந்தது. இந்த நிலக்கரி ஒதுக்கீட்டிற்குத் தான் பொறுப்பேற்பதாகக் கூறிக்கொண்ட மன்மோகன் சிங், அறிக்கையின் அடுத்தடுத்த பத்திகளில் எல்லோரும் சேர்ந்து செய்தது தானே இந்த ஒதுக்கீடு என வினவினார். பாரதிய சனதா, பிஜு சனதா, மார்சிஸ்ட் கூட்டணி ஆகிய எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த இராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளும், ஒதுக்கீடு குறித்த குழுவில் இடம்பெற்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும், நிலக்கரி முதலாளிகளும் சேர்ந்தெடுத்த முடிவுதான் இந்த ஒதுக்கீட்டு முறை. என அவரது அறிக்கை விளக்கமளித்தது.

“எங்கள் கட்சி முதலமைச்சர்கள் என்ன கூறியிருந்தாலும் முடிவெடுத்திருக்க வேண்டியது நிலக்கரித் துறைக்கு அன்றைக்குப் பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன் சிங் தானே” என்பது பா.ச.க வின் அருண் ஜெட்லி முன்வைத்த விதண்டாவாதமாகும்.

ஜெட்லியோடு போட்டிப் போட்டுக்கொண்டு நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். ” தனியாருக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அவ்வளவு தானே. இன்னும் அவற்றிலிருந்து ஒரு டன் நிலக்கரி கூட அவர்கள் எடுத்து விற்கவில்லையே. அதுவரை இழப்பு என்பதெல்லாம் ஊகக் கணக்கு தானே” என்றார் ப.சி.

அரசுக் கணக்கில் உள்ள பணத்தை இன்னொருவர் கணக்கிற்கு வங்கியில் மாற்றிக்கொடுத்துவிட்டால் அது அவரது பணம் தானே. அவ்ர் இன்னும் வங்கியிலிருந்து பணத்தை வெளியில் எடுத்து செலவு செய்யவில்லையே என்று கேட்பதில் பொருள் உண்டா? இல்லையே. ப.சிதம்பரம் வாதமும் அத்தகையதே.

ஒதுக்கீடு செய்து கொடுத்த பிறகு சுரங்கத்தில் உள்ள நிலக்கரி அதைப் பெற்ற முதலாளிக்குத் தானே சொந்தம். சாமர்த்தியமாக பேசுவதாக நினைக்கிறார் சிவகங்கை சிதம்பரம்.

ஆக மன்மோகன் சிங், பா.ச.க ஆகிய இரண்டு தரப்புமே இந்த நிலக்கரி ஊழல் ஒதுக்கீட்டில் பங்குபெற்றிருப்பதை வெவ்வேறு வகையில் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் மக்களை ஏய்க்க இரண்டு தரப்பினருமே உத்தமர் வேடம் போடுகின்றனர். ஊழலை ஒழிப்பதற்காக உரத்துக் குரல் எழுப்புவது போல் பாசாங்கு செய்கிறது பா.ச.க. இதற்காக காலித்தனமாக கூச்சல் எழுப்பி நாடாளுமன்றத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மடியில் கனம் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து அங்கேயே மன்மோகன் சிங் பதவி விலகலை பா.ச.க கோர முடியும். தனது ஊழலை மறைக்கவே அக்கட்சி கூச்சல் குழப்பம் உண்டாக்குகிறது.

ஊழல் கொள்ளையில் காங்கிரசும், பா.ச.க வும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. என்பதை அடுத்தடுத்து அம்பலப்பட்டுவரும் வகை வகையான ஊழல்களே எடுத்துக்காட்டுகின்றன.

காங்கிரசு, பா.ச.க மட்டுமின்றி தேர்தல் கட்சிகள் அனைத்தும் பெருமுதலாளிகளின் மடியில் தவழ்பவை; அவர்கள் கொள்ளையில் பங்குபெறும் ஒட்டுண்ணி அமைப்புகள் என்பது நிலக்கரி ஊழல் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணி வேட்டையில் அனைத்து தேர்தல் கட்சிகளும் ஒரே அணியில் நிற்பவை. எதிரணியில் மக்கள் தாம்!

Pin It