தனியார் பள்ளிகளின் இலாபவெறி இன்னொரு உயிரைக் காவு வாங்கியுள்ளது. சென்னை கே.கே. நகர் பத்மா சேசாத்திரி மெட்ரிக்குலேசன் பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கிய இரஞ்சன் என்ற மாணவர் இம்முறை பலியாகியுள்ளார். கடந்த மாதம் தாம்பரம் சியோன் மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் பயின்ற மாணவிச் சிறுமி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் கவனிப்பாராற்றுக் கிடந்த ஓட்டை வழியே விழுந்து பலியாகியிருந்த நிலையில், இப்போது இன்னொரு மரணம்.

மாணவி சுருதியின் மரணத்திற்குப் பின், சில நாட்கள் தமிழகமெங்கும் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளம் அதன் ஆவணங்களும் சோதனை செய்யப்பட்டன. அதே போல, மாணவர் இரஞ்சன் மரணத்தையொட்டி பள்ளியில் நீச்சல் குளம் கட்டுவதற்கான ஆவணங்களையும், உரிமங்களையும் அரசு அதிகாரிகள் சில நாட்கள் சரி பார்ப்பார்கள். அதன் பின், அனைத்தையும் மறந்துவிட்டு கையூட்டுப் பணம் பெற்றுக் கொண்டு தன் பணியைத் தொடர்வார்கள்.

மாணவர்கள் சுருதி – இரஞ்சன் ஆகியோரைப் போலவே தனியார் பள்ளிகளால் அவ்வப்போது அலட்சியத்தின் பெயரால் நிகழும் மரணங்கள் பெரும்பாலும் விபத்தாகவே கூறப்பட்டாலும், இவை நேரடியான விபத்துகள் அல்ல. தனியார்மய இலாபவெறித்தனம் செய்த நேரடி படுகொலைகள் இவை. வெறும் அலட்சியம் மட்டுமே இதன் காரணமுமல்ல. இதன் பின்னணியில், முதலாளிய இலாபவெறி இயங்கிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

தண்ணீர் முதல் காற்று வரை காசாக்கிக் கொண்டுள்ள உலகமயப் பொருளியல் கொள்கை கோலோச்சும் இக்காலகட்டத்தில், தனியார்மயமாக்கலை அனைத்துத் துறைகளிலும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது, அரசு. இதன் விளைவாகத் தான், மனித ஆளுமையைச் சிதைக்கும் மதுவை அரசாங்கம் நேரடியாக விற்பனை செய்து கொண்டிருக்க, மனித ஆளுமைகளை உருவாக்கும் பள்ளிக் கூடங்களோ தனியார் முதலாளிகளின் இலாபவெறிக் கூடங்களாக நடக்கின்றன.

இத்தனியார் முதலாளிகள், அரசுப் பள்ளிகளை விட இங்கு தரமான கல்வி சொல்லித் தரப்படுகின்றது என்பதைக் காட்டுவதற்காக சில சிறப்புப் பயிற்சிகளை நடத்துகிறார்கள். மக்களுக்கு ஆங்கில வழிக் கல்வியின் மீதுள்ள மோகத்தை தனது முதலீடாகக் கொண்டும், நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம் என விதிமுறைகள் மீறிய அளவில் அவசர அவசரமானக் கட்டுமானங்களை எழுப்பியும் பள்ளி நிர்வாகங்களால் பெற்றோர்களிடம் ‘நன்கொடை’கள் வசூலிக்கப்படுகின்றன.

நடுவண் அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் தங்கள் பகுதியைச் சோந்த 25 விழுக்காட்டு ஏழைக் குழந்தைகளை தங்களது பள்ளியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் இதன்படி, பெங்களுரின் தனியார் பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்ட ஏழைக் குழந்தைகளை, மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக தலைமுடியை வெட்டியிருக்கிறது அப்பள்ளி நிர்வாகம். ஏழைக் குழந்தைகள் மீதான பார்ப்பன வன்மம் தெறிக்கும் இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

ஏதோ நாட்டிலுள்ள இந்தப் பள்ளியில் தான் இதே போல என நினைத்தால் அது தவறு. இங்கு இயங்கும் பெரும்பாலான தனியார் பள்ளிகள், இலாபவெறியை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்குவதன் காரணமாகத் தான் மாணவர்கள் பயிற்சி கட்டணம் கட்டாவிட்டால் கடுமையாகத் தண்டிப்பது, மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்துவது என பல்வேறு குற்றங்கள் அரங்கேறுகின்றன. தேர்ச்சி விகிதம் அதிகமாகக் காட்டினால் தான் அடுத்த கல்வியாண்டில் நன்கொடைகள் அதிகமாக வசூலிக்க முடியும் என்பதால் மாணவர்களை கசக்கிப் பிழிந்து இயந்திரங்களாக்குவதும், கடுமையான தண்டனைகள் தரப்படுவதும் ஆசிரியர் – மாணவர் வன்முறையை பரவலாக்குகின்றது. மன அழுத்தத்துடன் பணிபுரியும் ஆசிரியர்கள் சீர்கேடுகளுக்கும் ஆளாகின்றனர்.

ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து, அதிக வேலை வாங்குவது, சிறப்புப் பயிற்சி என்ற சொல்லி பணம் பிடுங்குவது, ஓராண்டு முழுவதும் நடத்த வேண்டிய பாடங்களை காலாண்டிலேயே முடித்து, மாணவர்களை மன அழுத்தத்தில் ஆழுத்துவது, பள்ளிப் பேருந்துகளை இலாபத்தில் இயக்குவதற்காக பராமரிப்பு செலவுகளைக் குறைத்து பேருந்துகளை விதிமுறைகள் மீறி இயக்குவது எனத் தொடர்கின்ற தனியார் பள்ளிகளின் இலாபவெறி நடவடிக்கைகள் தான் இன்றைக்கு சுருதி – இரஞ்சன் போன்றக் குழந்தைகளைக் காவு வாங்கிக் கொண்டிக்கின்றது.

அதானல் தான், ஸ்ருதி – இரஞ்சன் மரணங்கள் வெறும் விபத்துகள் அல்ல, இலாவெறியுடன் செயல்படுகின்ற தனியார் பள்ளிகள் செய்த படுகொலைகள் இவை என்கிறோம்.

தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி ஸ்ருதி இறந்த போது அப்பள்ளி முதலாளி விஜயன் கைது செய்யப்பட்டார். சத்யபாமா பல்கலைக்கழக வேந்தரும், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளியுமான ஜேப்பியார், காஞ்சிபுரத்தில் தமது கல்லூரிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 10 பேர் பலியானதற்காக கைது செய்யப்பட்டார். அதே போல், மாணவன் இரஞ்சன் இறந்ததற்கு பத்மா சேசாத்திரி பள்ளி முதலாளி திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதி அல்லவா கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் அது தான் நடக்கவில்லை.

தன்னை ஆரியப் பாப்பாத்தி என சட்டப்பேரவையில் திமிருடன் பிரகடனம் செய்து கொண்ட தமிழக முதல்வர் செயலலிதா, சூத்திர சாதி முதலாளிகளை வேண்டுமானால் கைது செய்வாரேத் தவிர, பாப்பாத்தி பார்த்தசாரதியை கைது செய்யமாட்டார் என்பதையே தமிழக அரசின் செயல்பாடுகள் உணர்த்தின. மேலும், அம்மையார் பார்த்தசாரதி, செயலலிதா பதவி ஏற்ற போது முதல்வரிசையில் அமர்ந்து வாழ்த்தியவர். செயலலிதா, திருமதி. பார்த்தசாரதி நடத்தி வருவதைப் போன்ற மேட்டுக்குடி ஆங்கிலவழி மெட்ரிக்குலேசன் பள்ளியான சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்தவர். இந்தப் பாசமெல்லாம் மாணவர் இரஞ்சனின் மரணத்தை விட பெரிதல்லவா? அதனால் தான், திருமதி பார்த்தசாரதி கைது செய்யப்படவில்லை.

திருமதி பார்த்தசாரதி கைதை தவிர்ப்பதற்காக பள்ளி முதல்வர் ஷீலா இராசேந்திரன் மற்றும், 5 பேரை கைது செய்த காவல்துறை, அவர்கள் அனைவரையும் உடனடியாக பிணையிலும் விடுவித்தது. மாணவன் இரஞ்சன் இறந்த நீச்சல் குளத்தை சுத்தம் செய்த ஏழைத் தொழிலாளியான இரவி என்பவரும் இதில் அடக்கம்.

அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்று தனியார் மோகமும், ஆங்கில மோகமும் கொண்ட நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் கருத்தியல், முதலாளிகளுக்கு மறைமுகமான மூலதனமாக விளங்குவதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். இதில் மாற்றம் வர வேண்டும். தாய் மொழி வழிக் கல்வி தான் அறிவியல் வழியில் சிறந்தக் கல்விமுறையாக விளங்குகின்றது என உணர்ந்த உலகின் முன்னணி நாடுகள் பலவும், அவரவர் நாடுகளில் தாய்மொழியில் கல்வியை வழங்கிக் கொண்டிருக்க, இந்நாடுகளில் அடிமைச் சேவகம் புரிவதற்காக நம் நாட்டுப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியகங்களாக மாற்றப்பட்டு வருவது வேதனை. அண்மையில், சென்னையில் ஆங்கிலவழி மாநகராட்சித் தொடக்கப் பள்ளிகளை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை இத்துடன் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் இலாபவெறியைக் கண்டிக்கும் அதே வேளையில், அரசுப் பள்ளிகளைத் தரமாக நடத்த வேண்டுமென அரசை நிர்பந்தித்துப் போராட வேண்டும். தத்தமது வீடுகளுக்கு அருகிலேயே அமையப்பெற்ற அருகமைப் பள்ளிகளுக்காகவும், பொதுக் கல்வி முறைக்காகவும் மக்கள் பெருந்திரளாகத் திரண்டுப் போராட வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்று நடத்த மக்கள் எழுச்சி ஏற்படுத்த வேண்டும். இதை செய்வோம்!

Pin It