சூன் மாதம் 12 ஆம் நாள் திறக்க வேண்டிய மேட்டூர் அணை செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் திறக்கப்பட உள்ளது. 97 நாள்கள் காலதாமதமாகத் திறக்கப்பட உள்ளது. இந்த 97 நாள்கள் 5 இலட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடியை விழுங்கிவிட்டது. ஒரு போகச் சம்பா சாகுபடிக்கு உரிய காலத்தையும் வெட்டிக் குறைத்து ஊனப்படுத்தி விட்டது. ஒரு போகச் சம்பாச் சாகுபடி 12 இலட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டும்.

இன்றுள்ள நிலை தொடர்ந்தால், மேட்டூர் அணையில் செப்டம்பர் 17ல் தண்ணீர் இருப்பு மேலும் குறைந்து 72 அடியாகிவிடும். மேட்டூர் அணையின் மொத்த நீர்த் தேக்க உயரம் 120 அடி. இது முழுவதும் நிரம்பினால் 93.4 ஆ.மி.க. (டி.எம்.சி) தண்ணீர் இருக்கும். 72 அடி என்பது 34 ஆ.மி.க. வுக்குள் இருக்கும்.

செப்டம்பர் 17இல் புரட்டாசி மாதம் பிறக்கிறது. வடகிழக்குப் பருவ மழையின் தொடக்க காலம். அதை நம்பித்தான் அணை திறக்கத் திட்டமிடுகிறார்களே அன்றி, கர்நாடகத்திலிருந்து அப்போது தமிழகத்திற்குரிய தண்ணீரை வாங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் மேட்டூர் அணையைத் திறக்கவில்லை. மேட்டூர் அணை திறப்பது குறித்த முதலமைச்சர் செயலலிதா அறிவிப்பிலேயே இது உணர்த்தப் பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பித் ததும்பிக் கொண்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி, ஏரங்கி அணைகள் நிரம்பியுள்ளன. இவ்வணைகளின் மொத்தக் கொள்ளளவு 114 ஆ.மி.க. இப்போது 100 ஆ.மி.க. தண்ணீர் உள்ளது.

இவ்வாண்டுக் காலதாமதமாகக் கர்நாடக அணைகள் நிரம்பினவே தவிர, அங்கு போதிய தண்ணீர் இல்லை என்ற நிலை இல்லை. கபினி கடந்த ஆகஸ்ட் 11 ஆம் நாள் நிரம்பி வழிந்தது. அந்த மிகை வெள்ளநீர் திறந்து விடப்பட்டுக் கொஞ்சம் தமிழ்நாட்டிற்கு வந்தது. சில நாள்களில் அதுவும் நின்றுவிட்டது.

100 ஆ.மி.க. அளவுத் தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் திறந்துவிடக் கர்நாடகம் மறுக்கிறது. கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான காவிரி நீர்ச் சிக்கலில், தீர்வு காணச் சட்ட ஏற்பாடு எதுவுமில்லையா? இருக்கிறது. காவிரித் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது 1990 ஆம் ஆண்டு சூன் 2 ஆம் நாள் அமைக்கப்பட்டது. 1990 சூலை 28ஆம் நாள் தீர்ப்பாயம் தனது முதல் கூட்டத்தை நடத்தியது.

1991 சூன் 25 அன்று காவிரித் தீர்ப்பாயம் தனது இடைக்கால ஆணையை வழங்கியது. அதன்படி கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு ஓர் ஆண்டிற்கு 205 ஆ.மி.க. தண்ணீர் திறந்துவிட வேண்டும். தண்ணீர் ஆண்டு சூன் மாதம் தொடங்கி மே மாதம் முடிவடைகிறது. பின்வரும் அளவில் மாதவாரியாகக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்த அளவு மேட்டூரில் எடுக்கப்பட வேண்டும்.

சூன் – 10.16 ஆ.மி.க.
சூலை – 42.76 ஆ.மி.க.
ஆகஸ்ட் – 54.72 ஆ.மி.க.
செப்டம்பர் – 29.36 ஆ.மி.க.
அக்டோபர் – 30.17 ஆ.மி.க.
நவம்பர் – 16.05 ஆ.மி.க.
டிசம்பர் – 10.37 ஆ.மி.க.
சனவரி – 2.51 ஆ.மி.க.
பிப்ரவரி – 2.17 ஆ.மி.க.
மார்ச்சு – 2.40 ஆ.மி.க.
ஏப்ரல் – 2.32 ஆ.மி.க.
மே – 2.01 ஆ.மி.க.

இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகம் அவசரச் சட்டம் போட்டது. கர்நாடக காவிரிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 1991 என்ற அச்சட்டம் 1991 சூலை 25 வெளியிடப்பட்டது. அத்துடன் கர்நாடக சட்டப் பேரவையிலும் சட்ட மேலவையிலும் இடைக்காலத் தீர்ப்புத் தங்களைக் கட்டுப்படுத்தாது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை தனது அரசிதழில் வெளியிட்டு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் இந்திய அரசிடம் இருக்கிறது. ஆனால் இந்திய அரச அதைக் கண்டு கொள்ளவே இல்லை. தமிழக அரசின் வற்புறுத்தலின் பேரில், இந்திய அரசு, இடைக்காலத் தீர்ப்பின் படி கருத்துக் கூறும்படி குடியரசுத் தலைவர் வழியாக அரசமைப்புச் சட்டவிதி 143ன் கீழ் உச்ச நீதி மன்றத்தைக் கேட்டுக் கொண்டது. உச்ச நீதி மன்றம் 1991 நவம்பர் 22 ஆம் நாள் தனது கருத்தை வெளியிட்டது.

1. கர்நாடகம் போட்ட அவசரச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது; எனவே அது செல்லாது.
2. தீர்ப்பாயம் இடைக்காலத் தீர்ப்புக் கொடுக்க அதிகாரம் இருக்கிறது. அத்தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.

உச்சநீதி மன்றம் மேற்கண்ட முடிவுகளை அறிவித்தபின் 1991 டிசம்பர் 11 அன்று இந்திய அரசு தனது அரசிதழில் காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை வெளியிட்டது. டிசம்பர் 12 ஆம் நாள் இந்திய அரசின் செயலைக் கண்டித்தும் தமிழகத்தை எதிர்த்தும் பெங்களூரில் பெரும் பேரணி நடந்தது.

ஊர்வலம் போன வழிகளில் தமிழர்களைத் தாக்கினார்கள். கர்நாடக அரசுதான் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது. அத்துடன் 13.12.1991 அன்று முழு அடைப்பு என்ற கர்நாடக அரசு அறிவித்தது. பள்ளி கல்லூரிகளுக்கு 10 நாள் விடுமுறை என்றும் அறிவித்தது. டிசம்பர் 13லிருந்து தமிழர்கள் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை கன்னடர்கள் தாக்கினர், தீ வைத்துக் கொளுத்தினர், தமிழர் சொத்துகளைக் கொள்ளையிட்டனர், பலரைக் கொன்றனர்.

இத்தனையும் கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சர் பங்காரப்பாவின் தூண்டுதலோடும் துணையோடும் நடந்தன. கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீதான இந்த இனவெறிக் கொலையும் சூறையாடலும் தீவைப்பும் பல நாட்கள் தொடர்ந்தன.

பெங்களூரில் தொடங்கப்பட்டு கன்னடர்களால் நடத்தப்பட்ட இந்த இனக்கலவரம் மைசூர் மாண்டியா மாவட்டங்களுக்கும் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இரண்டு இலட்சம் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்திற்கு ஓடி வந்தனர்.

தமிழகம் ஏற்கெனவே கர்நாடகத்திலிருந்து பெற்றுவந்த தண்ணீரை விட மிக மிகக் குறைவாகவே இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 1934இல் மேட்டூர் அணை திறந்ததிலிருந்து 1972 வரை எடுத்த சராசரியில் ஓர் ஆண்டிற்கு 340 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் இடைக்காலத் தீர்ப்பு 205 ஆ.மி.க.தான் வழங்கியது. அதையும் ஏற்காமல் விளக்கம் கோரும் மனுப் போட்டு தீர்ப்பாயத்தில் கர்நாடகம் விவாதித்தது. அதன்பிறகு தீர்ப்பாயம் கர்நாடகம் 180 ஆ.மி.க. கொடுத்தால் போதும், 25 ஆ.மி.க.

தண்ணீரை பில்லி குண்டுவிலிருந்து மேட்டூர் அணை வரை உள்ள இடைப்பகுதியில் வரும் தண்ணீரைத் தமிழகம் கணக்கில் சேர்த்துக் கொள்ளட்டும் என்று 3.4.1992 இல் விளக்கம் கூறியது. இதன்பிறகும் கர்நாடகம் இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்துவருகிறது. உச்சநீதி மன்றம் விளக்கமளித்து வழிகாட்டிய பிறகும் இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தி வைக்க இந்திய அரசு எதுவும் செய்யவில்லை.

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் விதி 6, 6A ஆகியவற்றின் படி, ஒரு தீர்ப்பாயத்தின் முடிவை அரசிதழில் வெளியிட்டு அதற்கு செயல் அதிகாரம் அளிக்க வேண்டிய பொறுப்பு நடுவண் அரசுக்கு இருக்கிறது. அது மட்டுமின்றி 6A இன் படி தீர்பைச் செயல்படுத்த ஒரு பொறியமைவை – ஓர் அதிகார அமைப்பை உருவாக்க வேண்டியதும் இந்திய அரசின் பொறுப்புதான்.

1991 அரசிதழில் வெளியிட்ட பிறகும் தீர்ப்பாய முடிவுகளைச் செயல்படுத்த ஒரு பொறியமைவை இந்திய அரசு உருவாக்க முனையவில்லை. கடைசியாக 1998 ஆகஸ்ட்டில் ஓர் ஆணையத்தை இநதிய அரசு அமைத்தது . அப்போது இந்தியாவின் பிரதமர் வாஜ்பாயி. தமிழக முதல்வர் கருணாநிதி.

அந்த ஆணையம் ஒப்புக்குப் போடப்பட்ட ஆணையம். அதிகாரிகளைக் கொண்டதாக இல்லாமல் அரசியல் தலைவர்களைக் கொண்ட ஆணையம். உறுதியாகச் செயல்படமுடியாது. வாக்குகள் பாதிக்கப்படக் கூடாது என்ற கணக்கில் அரசியல் தலைவர்கள் பார்ப்பார்கள். அதிலும் மோசமாக (1) நான்கு மாநில முதலமைச்சர்களில் ஒருவர் ஆணையக் கூட்டத்திற்கு வராவிட்டாலும் ஆணையக் கூட்டத்தைக் கூட்ட முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது அதில்.

அதற்கும் மேலே அனைத்து முதலமைச்சர்களும் ஒத்துக் கொண்டால்தான் அதில் ஒரு முடிவு எடுக்க முடியும் என்று நிபந்தனை போடப்பட்டது. கர்நாடக முதல்வர் ஒப்புதல் தரவில்லை என்றால் ஆணையத்தில் ஒரு முடிவும் எடுக்க முடியாது. இதன்பொருள் கர்நாடக முதல்வருக்கு இரத்து அதிகாரம் ( Veto Power) கொடுக்கப்பட்டது என்பதாகும். எனவே செயல்படாத ஆணையமாக பிறக்கும் போதே முடக்கப்பட்டதாக அது உருவாக்கப்பட்டது.

த.தே.பொ.க. இந்த ஆணையத்தை ஏற்றுக் கொண்ட அன்றைய முதல்வர் கருணாநிதியின் செயலைக் கண்டித்தது. பூனை என்றால் எலியைப் பிடிக்க வேண்டும். ஆணையம் என்றால் அதற்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று கூறிக் கண்டித்தது. ஆனால் தி.மு.க. வோ “வெற்றி வெற்றி“ என்று கூறி இனிப்பு வழங்கிக் கொண்டாடியது.

அதே போல் அந்த ஆணையம் ஒரு தடவை கூட எந்த முடிவையும் எடுத்து நிறைவேற்றும்படி ஆணையிடவில்லை. இந்த ஆணையத்தின் இந்த ஊனங்களைப் போக்க உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. 2003 பிப்ரவரி மாதம் உச்சநீதி மன்றம், இந்த இரு ஊனங்களையும் சிறிது நீக்கியது. பெரும்பான்மை முதலமைச்சர்கள் கலந்து கொண்டால் ஆணையம் ஒரு முடிவெடுக்கலாம் என்றும் ஆணையத்தில் ஒருமித்த கருத்து வரவில்லையெனில் பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் 2003 க்குப் பிறகு 9 ஆண்டுகளாக ஆணையம் கூட்டப்படவே இல்லை. ஆணையத்தின் தலைவராகிய பிரதமர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணையத்தைக் கூட்ட முன் வரவில்லை. பாதிக்கப்படுவது தமிழ்நாடுதானே தமிழ் நாட்டிற்காக நாம் அக்கறை காட்ட வேண்டியதில்லை என்பதே இந்தியப் பிரதமரின் கருத்தாகும். அதிலும் குறிப்பாக 2004லிருந்து பதவியில் இருக்கும் காங்கிரசுப் பிரதமர் தமிழ் நாட்டைப் புறக்கணிப்பதில் மிகவும் தீவிரம் காட்டக்கூடியவர்.

தமிழக முதல்வர் செயலலிதா உடனடியாக ஆணையத்தைக் கூட்டித் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் திறந்துவிட ஆணையிடுமாறு 2012 மே 18 ஆம் நாள் பிரதமர் மன்மோகனுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பலனில்லை. கடைசியாக 24.08.2012 அன்று ஆணையத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதற்கு அமைச்சர் நாராயணசாமி மூலம் ஊடகங்களுக்கு விடையளிக்கச் சொன்னார். கூடங்குளம் அணு உலை புகழ் நாராயணசாமி மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்தில் தமிழகச் செய்தியாளர்களிடம் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்காக உள்ளதால் இப்போது காவிரி ஆணையத்தைக் கூட்ட முடியாது என்று கூறினார்.

இறுதித் தீர்ப்ப பற்றிதான் வழக்கு இருக்கிறதே தவிர இடைக்காலத் தீர்ப்பு வழக்கில் இல்லை. இறுதித் தீர்ப்பு செயலுக்கு வரும் வரை இடைக்காலத் தீர்ப்புதான் நடை முறைப்படுத்தப்படவேண்டும்.

உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல் படி, இடைக்காலத் தீர்ப்பின் படி நடுவண் அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதைச் செயல்படுத்த ஆணையம் கூட்டப்படவேண்டும். ஆனால் இந்திய அரசு ஆணையத்தைக் கூட்ட மறுக்கிறது. எப்பொழுதும் எதிலும் தமிழர்களைத் தமிழகத்தை வஞ்சிக்கும் நஞ்சைக் கொடும்பில் அடக்கிக் கொண்டுதான் இந்திய அரசு செயல்படும்.

தமிழக மக்களும், காவிரிப் பாசன உழவர்களும் குழம்பிப் போயுள்ளார்கள். இப்பொழுது நடைமுறையில் உள்ளது இடைக்காலத் தீர்ப்பா இறுதித் தீர்ப்பா என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்கள்.

இந்திய அரசின் நயவஞ்சகம் ஒரு புறமிருக்க தமிழர்களின் இந்தக் குழப்பத்திற்கு முகாமையான காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்நாள் முதல்வர் செயல லிதாவுமே ஆவர்.

இறுதித் தீர்ப்பை அரசிதழில்வெளியிட வேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதி கோரிக்கை எழுப்பி வந்தார். அவர்க்குப் பின் முதல்வரான செயல்லிதாவும் அதே பல்லவியைப் பாடினார். இவர்களின் இந்நிலைபாடு கர்நாடகப் பகைவர்களுக்கும் நடுவணரசு நயவஞ்சகர்களுக்கும் வசதியாகப் போய்விட்டது. கர்நாடக அரசும், இந்திய அரசும் இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அரசிதழில் போட முடியாது என்ற நிலைபாடு எடுத்தனர்.

மாநிலங்களுக்கிடையிலான ஆற்று நீர்த் தகராறுச் சட்டம் 1956 இன்படி ஒரு தீர்ப்பாயம், தனது முடிவைத் தான் (decision) அறிவிக்க முடியும். அது தீர்ப்பு (Judgement) வழங்க முடியாது. தீர்ப்பாயத்தின் முடிவை இந்திய அரசு ஏற்று தனது அரசிதழில் வெளியிடும்போதுதான் அது உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு இணையாக அதிகாரம் பெறுகிறது.

மேற்படிச் சட்டவிதி 6(2) பின்வருமாறு கூறுகிறது.

“தீர்ப்பாயத்தின் முடிவு, இச்சட்டவிதி 6(1) இன்படி நடுவணரசால் அரசிதழில் வெளியிடப் பட்ட பிறகே அது உச்ச நீதி மன்றத்தின் ஆணை அல்லது தீர்ப்புக்குச் சமமான அதிகாரம் பெறுகிறது.“

இந்த விதியைப் பற்றி அன்றைய முதல்வர் கருணாநிதி அரசு அறிந்திருக்கவில்லையா? இன்றைய முதல்வர் செயல லிதா அரசு அறிந்திருக்கவில்லையா? காவிரி வல்லுநர் குழு வைத்திருக்கிறவர்களே அக்குழு அரசுக்கு எடுத்துச் சொல்லவில்லையா? அரசுத் தலைமை வழக்குரைஞர் இதிலெல்லாம் அக்கறை காட்டமாட்டாரா?

கருணாநிதியும் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும். என்று தொடர்ந்து கோரிவந்தார். பின்னர் பதவியின் கடைசிக் கட்டத்தில் இடைக் காலத் தீர்ப்புப் படி தண்ணீர் வேண்டும் என்றுகேட்டார். அதே பாணியில்தான் செயலலிதாவும் கோரிக்கை வைத்து வந்தார். அண்மையில் 23.08.2012 இல் பிரதமருக்கு எழுதிய மடலில்தான் தெளிவாக “இடைக்காலத் தீர்ப்புதான் இப்பொழுது செயல்பாட்டில் உள்ளது“ என்று கூறியுள்ளார்.

காவிரிச் சிக்கலில் உள்ள விவரங்களை மக்களுக்குக் கூறி அவர்களை ஒருமுகப்படுத்தி கட்சி வேறுபாடின்றி ஒரே வகைக் கோரிக்கையை எழுப்புமாறுச் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழக முதலமைச்சர்களே முன்னுக்குப் பின் மாற்றிப் பேசினாலோ சட்ட வரம்பைப் புரிந்து கொள்ளாமல் பேசினாலோ மக்கள் என்ன செய்வார்கள்?

தமிழக ஆட்சியாளர்களின் குழப்பத்தை கர்நாடக ஆட்சியாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கர்நாடகத்தில் கட்சிகளுக்கிடையே நடக்கும் சண்டையும் ஒரு கட்சிக்குள்ளேயே நடக்கும் குழுச் சண்டையும் அதிகம். ஆனால் காவிரிச் சிக்கல் என்றால் நூல் பிடித்தாற்போல் ஒரு கோட்டில் நிற்கிறார்கள்.

Pin It