ஊர் உலகம்

ஆஸ்திரேலியா நாட்டில் தொடர்ந்து குவிந்து வரும் அயல்நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக, ஆஸ்திரேலியத் மொழிலாளிகளும், அவர்களது தொழிற் சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

உலகமயப் பொருளியல் மந்தநிலையில் திளைக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள கட்டுமான நிறுவனங்களும் மற்ற தொழில் நிறுவனங்களும் உள்ளுர் பணியாளர்களைத் தவிர்த்து விட்டு, அயல் நாடுகளிலிருந்து குறைந்த கூலியில் தொழிலாளர்களை அழைத்து வந்தன. இவ்வாறு குறைந்த கூலியில் அமர்த்தப்படும் தொழிலாளர்களால், தமது வேலைவாய்ப்புகள் பறிபோவதை உணர்ந்த ஆஸ்திரேலியத் தொழிலாளர்கள் இதைக் கண்டித்தனர். 

இந்நிலையில், அயல்நாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் வகையில், வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் 'தொழில் நிறுவன குடியமர்வு(Enterprise migration agreement - EMA) ஒப்பந்த'த்தை ஆஸ்திரேலிய அரசு இயற்றியது. இச்சட்டத்தை நீக்க வேண்டுமென தற்போது, ஆஸ்திரேலியாவின் மண்ணின் மக்களான தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

 ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் பணக்காரராக விளங்கும் ஜினா ரைன்ஹர்ட்(Gina rinehart)க்கு, சொந்தமான Hancock Prospecting Pty Ltd (HPPL) சுரங்க நிறுவனம், ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள பில்பரா(Pilpara) மாகாணத்தின் ராய் ஹில்(Roy hill) பகுதியில், போஸ்கோ(POSCO) நிறுவனத்துடன் இணைந்து இரும்புத் தாதுத் தொழிற்சாலை ஒன்றை அமைக்கிறது. இதில் பணிபுரிய 1715 வெளிநாட்டுத் தொழிலாளர்களை அந்நிறுவனம் பணியமர்த்தியது.

 இச்செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பில்பாரா மாகாணத்தின், பெர்த்(Perth) மற்றும் மெல்போர்ன்(Melbourne) நகரங்களில் தொழிலாளர் கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. இரண்டு வாரங்களுக்குப் பின், பில்பாராவின் மிகப்பெரும் தொழில் நகரமான ஹெட்லேந்(Port Hedland) துறைமுகம் மற்றும் கராத்தா(Karratha) ஆகிய நகரங்களில், 16.07.2012 அன்று மிகப்பெரும் தொழிலாளர் பேரணிகள் நடைபெற்றன. 

ஆஸ்திரேலியாவின் கட்டுமானம், வனம், சுரங்கம், எரிசக்தித் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட மிகப்பெரும் தொழிற்சங்கமான CFMEU (CFMEU - Construction, Forestry, Mining and Energy Union) தொழிற்சங்கம் மற்றும், Maritime Union of Australia (MUA) ஆகிய தொழிலாளர் அமைப்புகள் இப்போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தன. 

CFMEU அமைப்பின் செயலாளர் மிக் பக்கன்(Mick Buckan) கூறுகையில், “ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் பணியின்றி உள்ள நிலையில், அயல்நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள தொழிலாளர்களுக்கு இன்றைய சுரங்கங்களில் பணிபுரியும் வகையில் முறையான பயிற்சிகள் வழங்கப்படாத நிலையில், அயல்நாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு அப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எனவே, ஆஸ்திரேலியத் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். எங்கள் தொழில் வாய்ப்புகளைப் பறித்துவிட்டு, எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழ்வில்லாமல் செய்துவிடுவர். இதை எப்பாடுபட்டாவது நாம் தடுப்போம்” என ஆவேசமாகப் பேசினார். (தகவல்: பில்பாரா எக்கோ(Pilbara Echo) நாளேடு, 21.07.2012> இணையம்: http://pilbaraecho.com.au/2012/07/21/unions-rally-for-local-jobs/).

MUA தொழிற்சங்கத்தின் மேற்கு ஆஸ்திரேலியக் கிளைச் செயலாளர் வில் டிரேசி(Will tracey), ”தற்போது பணியில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து அப்பணி தொடர்ந்து கிடைக்குமா என்பதும் கேள்விக்குறி” என்கிறார்(தகவல்: தி வெஸ்ட் நாளேடு, 16.07.2012). ஆஸ்திரேலியர் தொழிலாளர் கட்சி(ALP) யைச் சேர்ந்த அப்பகுதி தலைவர் ஸ்டீவ் கோட்ஸ்(Steve Coates)என்பவர், ஆஸ்திரேலிய அரசு ஆஸ்திரேலியர் களுக்கு முன்னுரிமை 'Australian first' கொடுக்கும் சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்கிறார்.

ஆஸ்திரேலியாவில் இவ்வாறு வெளியாரை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, தமிழ்நாட்டிலோ தமிழகத் தொழிலாளர்களின் வாழ்வைப் பறித்துக் கொண்டிருக்கும் அயலாருக்கு ஆதரவாக இந்தியத் தேசிய வெறியர்கள் கூச்சலிட்டுக் கொண்டுள்ளனர். நாம் என்ன செய்யப் போகிறோம்?

அசாஞ்சேவைக் கண்டு அஞ்சும் அமெரிக்கா

உலகின் பல்வேறு நாடுகளில் தாம் அமைத்திருந்த தூதரங்களின் மூலம் அந்நாடுகளை உளவு பார்த்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளையும், அமெரிக்க இராணுவத்தின் குற்ற நடவடிக்கைகளையும், தனது 'விக்கிலீக்ஸ்' இணையத்தின் மூலம் உலகிற்கு அம்பலப்படுத்தியவர், ஜூலியன் அசாஞ்சே.

தூதரகம் என்ற பெயரில் அலுவலகங்கள் அமைத்து பல்வேறு நாடுகளையும் உளவு பார்த்த அமெரிக்காவின் போலி முகத்திரையைக் கிழித்த அசாஞ்சேவை எப்படியாவது கைது செய்து தண்டித்துவிட வேண்டும் என அமெரிக்க துடிதுடித்தது. இந்நிலையில், 2010 ஆகஸ்ட்டில் அசாஞ்சே மீது திடீரென 2 பெண்களை பாலியல் வல்லுறவு செய்துவிட்டார் என சுவீடனில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அசாஞ்சேயை கைது செய்ய ஐரோப்பிய கைது அனுமதி பிறப்பிக்கப்பட்டது.

அப்போது பிரிட்டனிலிருந்த அசாஞ்சே, இது குறித்து விளக்கமளிக்க தானே நேரடியாக 07.12.2012 அன்று இலண்டனில் உள்ள ஒர் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவர் கைதும் செய்யப்பட்டார். சுவீடன் நாட்டின் கைது முயற்சியை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.

அசாஞ்சேவின் வழக்கறிஞர் மார்க் ஸ்டீபன்ஸ், “அமெரிக்க அரசின் கோபப் பார்வையில் உள்ள அசாஞ்சேவை சுவீடனிடம் ஒப்படைக்கப்பட்ட பின், அசாஞ்சேவை அமெரிக்கா எளிதில் கொண்டு சென்று விடும். அவரை இரகசிய சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, இராணுவ இரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு இராணுவ இரகசியங்கள் (Esionage Act) சட்டப்படி மரண தண்டனையும் விதிக்கப்படலாம்” என அச்சம் வெளியிட்டார்.

வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசாஞ்சே, 10 நாட்கள் கழித்து பிணையில் வெளிவந்தார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும், அவரை உடனிருந்து கண்காணிக்க உதவும் மின்னணு அட்டையை எப்போதும் தாங்கியிருக்க வேண்டும் எனவும் அவருக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

 சுவீடன் அரசின் கைது முயற்சியை எதிர்த்து அசாஞ்சே தொடுத்திருந்த மேல்முறையீட்டு மனுக்களை பிரிட்டன் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்த நிலையில், இலண்டனில் தங்கியிருக்கும் அசாஞ்சேயை மீண்டும் கைது செய்யும் முயற்சியில் சுவீடன் அரசு இறங்கியது.

 இந்நிலையில், ஈக்வதார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரிக்கார்டியோ பட்டினோ 19.06.2012-லிருந்து, இலண்டனில் உள்ள ஈக்வதார் நாட்டுத் தூதரகத்தில் தான் அசாஞ்சே இருப்பதாகவும், அவர் ஈக்வதார் நாட்டு அரசிடம் அரசியல் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் அளித்திருப்பதாகவும் அறிவித்தார். 28.06.2012 அன்று ஈக்வதார் நாட்டு அதிபது ரபீல் கார்னியா, தனது தூதரை இலண்டனிற்கு அனுப்பி வைத்தார். தம்மை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என சுவீடன் வெளிப்படையாக உறுதியளித்தால் தான் சரணடைவதாக அசாஞ்சே அறிவித்தார். அதற்கு சுவீடன் ஒப்புக் கொள்ளவில்லை. 

இருப்பினும் அவரை, தூதரகத்திற்குள் நுழைந்து பலவந்தமாக கைது செய்ய இலண்டன் மாநகரக் காவல்துறை முடிவு செய்து வெளியேக் காத்திருந்தது.

 இது, அரசியல் தஞ்சமடைந்தவர்களுக்கு உரிமைகளை வழங்கும் வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கை என பிரிட்டன அரசை, ஈக்வதார் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரிக்கார்டியோ கண்டித்தார். இதனையிடையே, 16 ஆகத்து 2012 அன்று அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் அளிக்க ஈக்வதார் நாடு ஒப்புக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பைக் கண்டு கொதித்த பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலாளர் வில்லியம் ஹேக், அசாஞ்சேவை பிரிட்டனைவிட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய ஈக்வதார் அதிகார் ரபீல் கார்னியா, அசாஞ்சே காலவரையற்ற வரையில் இலண்டன் ஈக்வதார் தூதரகத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்தார்.

 அசாஞ்சேவிற்கு அரசியல் 0தஞ்சம் அளித்தது ஏன் என விளக்கிப் பேசிய ஈக்வதார் வெளியுறவுத் துறை அமைச்சர் ரிக்கார்டியோ, “இலண்டனிலிருந்த எங்கள் நாட்டுத் தூதரகத்தைத் தாக்குவோம் என எப்போது பிரிட்டன் மிரட்டியதோ, அப்போதிருந்து நாங்கள் அசாஞ்சேவுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கி விட்டோம். நாங்கள் இப்போது தான் அனைத்துலகத்தின் முன் எங்கள் தன்மானத்தை மீட்டிருக்கிறோம். கெடு வாய்ப்பாக எமக்கு முந்தைய ஈக்வதார் நாட்டு அரசுகள், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் சொன்னவற்றையே செய்து வந்தன. சில நேரங்களில், அவர்கள் விரும்பியவற்றைக் கூட செய்துத் தந்தன. ஆனால், 2007ஆம் ஆண்டு ரபீல் கார்னியோ ஈக்வதார் நாட்டு அதிபரான பின், நாங்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளோம். சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியுள்ளோம். எங்களுக்கு தன்மானமும் இறையாண்மையும் உண்டு” என ஆவேசமாகபப் பேசினார்.

ஏகாதிபத்தியங்களை அம்பலப்படுத்தி, உண்மைகளைச் சொன்னதற்காக ஒரு தனி மனிதனை எப்படியெல்லாம் இந்த அரசுகள் துரத்துகின்றன என்பதை உலகம் உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

Pin It