அண்மையில் கர்நாடகத்தில் வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவார்கள் என்ற வதந்தி குறுந்தகவல்கள் மற்றும் இணையதளங்கள் வழியாக பரவியதைத் தொடர்ந்து பெங்களூரிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் மிசோரம், நாகாலாந்து, அசாம் மாநிலத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.

எந்த வகை வதந்தியும் கண்டிக்கப்பட வேண்டியது, தண்டிக்கப்படவேண்டியது என்றாலும், இச்சிக்கல் தொடர்பான இந்திய அரசின் எதிர்வினையும் வெளியார் சிக்கல் குறித்து எழுந்துள்ள விவாதங்களும் தமிழர்கள் கவனம் கொள்ளத்தக்கன ஆகும்.

அச்சம் மேலிட ஒரே நேரத்தில் பல்லாயிரம் வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள் கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலிருந்து வெளியேறத் தொடங்கியதும் இந்தியப் பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறை செயலாளர் அனைவரும் பதறித் துடித்து அறிக்கை வெளியிட்டனர். வதந்தியைக் கண்டித்தனர். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் உறுதி மேல் உறுதி அளித்தனர். சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் தென்மாநிலப் பணியிடங்களுக்கு உடனே திரும்பி வர இலவச தொடர்வண்டிகளை அனுப்பி வைத்தது இந்திய அரசு.

இதே இந்திய அரசு, இந்திய பிரதமர், உள்துறை அமைச்சகம் ஆகியவை தமிழர்களுக்கு இதே போன்ற பிரச்சினை எழுந்த போது எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது எழுந்தது வெறும் வதந்திதான். எந்த வெளியாரும் தாக்கப்படவில்லை. ஆனால் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் எழுந்ததையொட்டி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மலையாளிகளின் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளான போது, செருப்பு மாலை போட்டு இழிவுபடுத்தப்பட்ட போது தமிழ்நாட்டு உழைக்கும் பெண்கள் தாக்கி இழிவுப்படுத்தப்பட்ட போது, இடுக்கி மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக மண்ணின் மக்களாக வாழ்ந்து வந்த தமிழர்கள் மலையாள வெறியர்களால் தாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கில் தேவாரத்திற்கும், தேனி மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் அகதிகளாக வந்த போது இந்தியப் பிரதமரும், உள்துறை அமைச்சகமும் கண்டித்து ஒரு சொல் சொல்லியதுண்டா? தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி கூறியதுண்டா? பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் வார்த்தையாவது சொல்லியதுண்டா? இல்லவே இல்லை.

ஏனெனில் தமிழர்கள் இந்தியாவிற்கு வேண்டாதவர்கள். வடகிழக்கு மாநிலத்தவர் அச்சத்தோடு அவர்கள் மாநிலத்திற்குத் திரும்பினால் அம்மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு உண்டு. தமிழ்நாட்டை பற்றி எந்த அச்சமும் இந்திய அரசுக்கு இல்லை. கங்காணிக்கட்சிகளைக் கொண்டு சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு இருக்கிறது. இச்சிக்கலை ஒட்டி வெளிமாநிலத்தவருக்காக கண்ணீர் விட்ட ஏடுகளும், இடதுசாரி அறிவாளர்களும் உண்டு. வடமாநிலத்தவர், மலையாளிகள் உள்ளிட்ட வெளியார் அனைவரும் நம் சகோதரர்கள், நம் சக இந்திய தொழிலாளர்கள், இவர்களை வெளியார் என்று அழைப்பது இனவாதம். என “வர்க்க ஒற்றுமை” பேசினார்கள் இவர்களில் சிலர்.

தமிழ்நாட்டில் குறிப்பாக தொழில் வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டங்களில் மிகை எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர்கள் குவிந்து வருவதையும், அதனால் தமிழர் தாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறோம். சென்ற இதழிலும் இச்சிக்கல் குறித்து விவாதித்திருக்கிறோம். (காண்க: அசாம் கலவரமும் தமிழர்கள் அறிய வேண்டியதும் – தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்டு 16-31,2012).

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உற்பத்தித் துறை நிறுவனங்கள், மனைத் தொழில் நிறுவனங்கள் முதலியவற்றில் உயர், நடுத்தர ஊதிய வேலை வாய்ப்புகளை வெளிமாநிலத்தவர் தட்டிச் செல்கின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்பை பறிக்கின்றனர்.

குறைந்த கூலிக்கு, உரிய பணிப்பாதுகாப்பு இன்றி வேலை செய்ய அணியமாக உள்ள ஒருபிரிவு வெளிமாநிலத்தவரை இங்குள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களுக்காக பணியில் சேர்த்துக் கொள்கின்றன என்பதும் உண்மையே.

ஒப்பந்தமயம்( Contractisation), நாள்கூலிமயம் (casualisation), வெளி உற்பத்திமயம் (Out sourcing) ஆகியவை போல வெளியார்மயமும் கேள்விமுறையற்ற முதலாளியச் சுரண்டலுக்கு உற்ற வழியாகச் செயல்படுகிறது. அதுமட்டுமின்றி அந்நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்புக்கும் உண்மை ஊதியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. தொழிற்சங்கங்களின் பேரம் பேசும் ஆற்றலைக் குலைக்கிறது. வேலை நிறுத்த போராட்டத்தையே சக்தியற்ற போராட்டமாக மாற்றிவிட்டது.

எனவே தொழிலாளர் வர்க்கத்தின் மீது அக்கறையுள்ளோர் இம்முறைகளை எதிர்த்து முறியடிக்க முயல வேண்டும்.

வெளியார் மயமானது உள்ளூர்த் தொழிலாளர்களின் ஊதியத்தை வெகுவாக பாதிக்கிறது. அவர்கள் மீது பணிப்பாதுகாப்பின்மையைத் திணிக்கிறது. சென்னையில் கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்படாத தொழில்களின் தொழிலாளர்களை சங்கமாக்கிப் போராடிவரும் தோழர் கீதா “இங்குள்ள நிறுவனங்கள் தங்கள் பணிக்கு முழுவதும் வெளிமாநிலத்தவரையே வைத்துக் கொள்ளாமல் குறைந்தது பாதி அளவாவது உள்ளூர் தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்” எனக் கோருகிறார். வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது கரிசனம் கொண்டுதான் அவர் அக்கோரிக்கையை முன்வைத்தாலும் நடைமுறையில் உள்ள சிக்கல் இதில் வெளிப்படுகிறது.

பெரும்பான்மையாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாலம் கட்டும் தொழில்களிலும் பிற கட்டிட வேலைகளிலும் அமர்த்தப்படும் போது அதில் பணியாற்றும் சிறும்பான்மையாக உள்ள தமிழ்நாட்டு தொழிலாளர்களின் ஊதியமும், பணிப்பாதுகாப்பும் கேள்விக் குறியாக்கப்படுவதைதான் மேற்கண்ட தொழிற்சங்கத் தலைவரின் கூற்று வெளிப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் சந்தித்து வரும் சிக்கல் இது. மிகை எண்ணிக்கையில் அயல் இனத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படும் போது அந்தந்த மண்ணின் தொழிலாளர்களின் பணிநிலைமை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த அயல் இன தொழிலாளர்கள் கீழ்நிலை ஆக்கிகளாக செயல்படுகின்றனர். மண்ணின் தொழிலாளர்களின் ஊதியத்தையும் பணிநிலைகளையும் கீழிறக்கும் காரணிகளாக வந்தேறி தொழிலாளர்கள் நடைமுறையில் செயல்படுகிறார்கள்.

ஒப்பந்தமயம், நாள்கூலிமயம் ஆகிய மிகைச் சுரண்டல் முறைகளை ஒழிப்பதென்றால் அத்தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளராக்குவது என்று பொருள். உரிய பணிப்பாதுகாப்பும், ஊதியப்பாதுகாப்பும் பெற்று தருவது என்று பொருள். வெளியார் மயம் என்ற மிகைச்சுரண்டல் முறையை ஒழிப்பது எப்படி? அவர்களை நிரந்தரப்படுத்துவது அல்ல. அவர்களை வெளியேற்றுவது அல்லது அவர்களது எண்ணிக்கையை குறுக்கி கட்டுக்குள் வைப்பது. என்பதே வெளியார்மய ஒழிப்பாகும்.

தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர், அவர்கள் உழைப்பாளர்களே ஆனாலும் மிகை எண்ணிக்கையில் நுழைந்தால் அது தமிழகத்தின் இனச்சமநிலையை பாதிக்கும். காலப்போக்கில் தமிழர்களை தமிழ்நாட்டிற்குள்ளேயே சிறும்பான்மை இனத்தவராக்கிவிடும். தாயகம் இழந்த உதிரிகளாக தமிழர்களை மாற்றிவிடும். தாயக உரிமை என்பது அனைத்து வகை மனித உரிமைகளுக்கும் அடிப்படையாக அமைவதால் தொழிலாளர் உரிமை உள்ளிட்ட எந்த மனித உரிமையையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியாத ஏதிலிகளாக தமிழர்களை மாற்றிவிடும். வெளியார் மயம் என்பது அடிப்படையில் ஒரு தேசிய இனப்பிரச்சினை ஆகும். தேசிய இனமாக நிலை பெறாத சமூகத்தின் தொழிலாளர்கள் தங்களின் தொழிலாளி வர்க்க உரிமையை நிலை நாட்டிக் கொள்ள முடியாது. “தூய” தொழிற்சங்கப் பார்வையில் நோக்கினாலும் வெளியார்மயம் என்பது உண்மையில் தொழிலாளர்களின் கூட்டு பேர சக்திக்கு எதிரான கருங்காலிமயம்தான். அதற்குரிய முறையில் தான் இச்சிக்கலை அணுக வேண்டும்.

முதலாளிய மிகைச்சுரண்டல் வடிவமான உலகமயமும், வெளியார்மயமும் தனித்தனியானவை அல்ல. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அவை. வெளியார்மயத்தோடு மோதாமல் உலகமயத்தை ஒழிக்க முடியாது. உலகமயத்தின் குறிப்பான இருப்புநிலைகளில் ஒன்று வெளியார்மயமாகும். குறிப்பானதன் வழியாகவே பொதுவானது உயிர்வாழ்கிறது. என்பது இயங்கியல் உண்மை. குறிப்பானதோடு மோதாமல் பொதுவானதை வீழ்த்தமுடியாது. வெளியார் மயத்தோடு மோதாமல் உலகமயத்தை ஒழித்துவிட முடியாது.

உலகமயத்தின் எதிர்நிலை தேசிய இனமயம்தான். வெளிமாநில முதலாளிகள் மட்டுமின்றி மிகை எண்ணிக்கையில் நுழைந்த வெளிமாநிலத் தொழிலாளர்களும் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் தான். தாயகப்பாதுக்காப்பும், உலகமய எதிர்ப்பும் ஒன்றிணைந்து செல்ல வேண்டியவை. வெளியார்மய எதிர்ப்பில் இவை ஒன்றிணைகின்றன. எனவே வெளியாரை வெளியேற்றுவோம்.

Pin It