பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர் சாவுத் தண்டனையை நீக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 28.8.2011 அன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து உயிர் ஈகம் செய்தார். காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி.

மூன்று தமிழர் உயிர்க் காப்புப் பிரச்சினையில் தமது மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது என முதல் நாள் கைவிரித்த தமிழக முதல்வர் செயலலிதா செங்கொடியின் ஈகத்தை தொடர்ந்து ஏற்பட்ட தமிழின எழுச்சியைக் கண்டு அதிர்ந்தார்.

அடுத்த நாள் அவரே முன் மொழிந்து தமிழக சட்டமன்றத்தில் மூவர் தூக்குத் தண்டனையை கைவிடக் கோரி இந்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறை வேறியது.

தழல்ஈகி செங்கொடியின் முதலாமாண்டு நினைவு நாளை யொட்டி காஞ்சி - மேல் கதிர்ப் பூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் வீர வணக்க நிகழ்வு 28.8.2012 அன்று மாலை நடைபெற்றது.

அன்று காலையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு வைகோ ஈகி செங்கொடி சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

மாலையில், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி தோழர் திருமலை த.ஓ.வி.இ.வழக்குரைஞர் பாவேந்தன், பேராசிரியர் சரசுவதி, திருமதி அற்புதம் குயில்தாசன் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழரைக் காப்போம் இயக்க தோழர் செந்தில் தமிழக இளைஞர் பாசறை தோழர் அருண்சோரி, மக்கள் மன்ற பொறுப்பாளர் மகா,ஜெசி, உள்ளிட்டஏராளமானோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செய்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.

தழல்ஈகி செங்கொடியின் நினைவுச்சுடரை உணர்ச்சிப் பொங்கும் முழக்கங்களுக்கிடைய தமிழர்வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு த.வேல்முருகன் ஏற்றினார்.

மழைத்தூரல்களுக்கிடையில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களும், சிறுவர், சிறுமியரும் அவர்களோடு இணைந்து சமர்ப்பா குழுவினரும் இன உணர்ச்சிததும்பும் எழுச்சிப் பாடல்களையும் ஆடல்களையும் வழங்கினர்.

ஈகி செங்கொடியின் நினைவை நெஞ்சில் ஏந்தி மூன்றுதமிழர் சாவுத் தண்டனையை நீக்குவதற்கும், மரண தண்டனையே இல்லாமல் செய்வதற்கும் அனைவரும் உறுதி ஏற்றனர்.

Pin It