வீட்டிலிருந்தே சாப்பாடு எடுத்துச் செல்பவரா நீங்கள்? சிறு மற்றும் நடுத்தர உணவகங்களில் உணவுண்டு சிக்கனமாகயிருந்து சேமிக்க விரும்புகிறீர்களா? உங்களையும், உங்களின் இந்த மோசமான சேமிப்பு பழக்கத்தையும் உலகமயம் விரும்பவில்லை.

பெருவாரியான தனியார் நிறுவனங்களும் சில அரசு நிறுவனங்களும் தனது ஊழியர்களை ஊக்கப்படுத்த இந்த Sodexo மற்றும் Ticket Restaurant உணவுக் கூப்பன்களையும் மற்றும் பரிசுக் கூப்பன்களையும் வழங்குகின்றன.

பணமற்ற பணம் அது. உணவுக் கூப்பன் என்ற பெயரில் வரும். இதை வைத்து ஆப்பக்கடை ஆயாவிடம் இட்லி வாங்க முடியுமா? அண்ணாச்சிகளிடம் உப்பு, புளி, மிளகாயாவது வாங்க முடியுமா? முடியாது.

பிசா கார்னர்களில், மெக்டொனால்ட், கே.எப்.சி. விலை அதிகமுள்ள பெரு உணவகங் களில் உண்ணலாம். உணவை தவிர்த்த மளிகை வாங்க நினைத்தால் பிர்லா வின் மோர் சூப்பர் மார்க்கெட், ரிலையன்ஸ் பிரெஷ், டாட்டாவின் ஸ்டார் பஸார் அல்லது உள்ளூரிலுள்ள பெரிய சூப்பர் மார்கெட்களில் மட்டுமே இவ்வசதி.

ஆல்கஹால் தவிர்த்த உணவுப் பொருள்கள் என்றாலும் சில பெரிய துணிக் கடைகளிலும் பாத்திரக்கடைகளிலும் வாங்கிக் கொள்வது தனிக்கதை.

சேமிப்பை, பொருளாதார பாதுகாப்பை வலியுறுத்தக்கூடிய அரசு நிறுவனமான எல்.ஐ.சியும் தன் ஊழியர்களுக்கு இந்த சொடக்சோ உணவுக் கூப்பனை வழங்கி யுள்ளது. அதன்படி வேதாரண்யம் எல்.ஐ.சி.யில் வேலை பார்க்கும் ஒருவருக்கு பசி யெடுத்தால் தஞ்சாவூருக்கோ அல்லது திருச்சிக்கோ போனால்தான் பசியாற முடியும். பெருநகரங்களில் மட்டுமே அப்படியான உணவகங்கள் உண்டு.
 
ஐம்பது ரூபாய் கூப்பனில் நான் பத்து ரூபாய்க்கு தேநீர்தான் அருந்தினேன். சாதாரணமாக கழித்தாலும் கடன் வாங்கி கழித்தாலும் மீதி நாற்பது தர வேண்டும். தரக்கூடாதென்கிறது சொடக்சோ விதி. வேண்டுமானால் சாப்பிட்டுத் தீர்க்கலாம். மிச்சம், மீதி, சேமிப்பு என்பதெல்லாம் தாராளமயத்தில் புழக்கத்தில் இல்லாத வார்த்தை.

மீதி கிடைக்காதென்பதால் வேண்டாத பொருளையும் விருப்பமில்லாமல் வாங்கி நூறு ரூபாய்க்கான கூப்பனை கொடுத்தால் ஐந்து சதம் சேவை வரியாம். பையில் உள்ள ஐந்து ரூபாயை பார்த்திருப்பார்கள் போல...

ஊர்ல பள்ளிக்கூடம் கட்றாங்கன்னு பணம் கொடுத்தா வரி விலக்கு இல்லை. ஆனா சொடக்சோ மூலமா செலவழிச்சா வருமான வரியில் விலக்கு உண்டாம்.

இவ்வளவு சிரமப்பட்டு நான் ஏன் வாங்க வேண்டும்? இந்திய நாணயச் சட்டத்தின் கீழ் கவர்னர் கையொப்பமுடன் எங்கும் ஏற்கக்கூடிய, நன்கு புழக்கத்தில் உள்ள பணத்தையே உணவுப்படியென கொடுக்கலாமே?

கொடுத்தால் அக்கம்பக்கத்திலுள்ள அண்ணாச்சிகளிடம் பெட்டிக்கடை அக்காக்களிடம் நான் வாங்கி விடுவேன்.

கூருகட்டி பழம் விற்பதையோ, தட்டுக் கடைசியில் ஆவி பறக்க இட்லி விற்பதையோ உலகமயம் விரும்பவில்லை. சிறுவணிகர்களையும் சில்லரை விற்பனைகளையும் நசுக்கும் ஓர் ஆபத்தான ஆயுதம் இந்த சொடக்சோ, டிக்கட் ரெஸ்டாரெண்ட் போன்றவை.

 வணிகர்களும், வணிகர் சங்கங்களும், பொதுமக்களும் இந்த உணவுக் கூப்பன்களையும் அதை பயன்படுத்தும் நிறுவனங்களையும் எதிர்த்து போராட வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்திற்கு வலு சேர்க்க வேண்டும்.

Pin It