தமிழக அரசின் பெரும்பாலான உரிமைகளைப் பறித்து ஒரு மாநாகராட்சி போல் அதிகாரத்தை குறுக்கிய நடுவணரசு தற்பொழுது ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் மீதி உரிமையையும் தனது ஆக்டோபஸ் கரம் கொண்டு பறித்துள்ளது.

இதுவரை பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிபடையிலேயே பல ஆயிரம் பேர் பணி நியமானம் செய்யப்பட்டு வந்தனர். இதனால் நமது படித்த தமிழ் சமூகம் சமூக நீதித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கேற்ப வேலைவாய்ப்பு பெற்றுவந்தனர். இந்த உரிமையை மறுத்த நடுவண்அரசின் “தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்” இனி “ஆசிரியர் தகுதி தேர்வு” மூலமே பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசின் வேலை வாய்ப்பு வழங்கும் உரிமையையும் கேளிவிக்குறியாக்கியுள்ளது.

நமது இளைஞர்கள் பட்டப் படிப்பையும் முடித்து குறிப்பிட்ட துறையில் ஆசிரியர் கல்விக்கான பட்டமும் (B.Ed) பெற்று தமக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் பொழுது இச்செய்தி இடியாக வந்திறங்கியது.

இதை எதிர்க்க முடியாத முதுகெலும்பற்ற தமிழகஅரசு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் ஆணைப்படி தேர்வை நடத்தியுள்ளது. தேர்வு நேரத்தை குறைவாக கொடுத்து, வினாக்களை கடுமையாக்கி 6.70 இலட்சம் மாணவர் களில் வெறும் ஆயிரத்து அறநூற்று ஐம்பது பேரை மட்டும் தேர்ந்தெடுத்து தமது கங்காணி விசுவாசத்தை காட்டியுள்ளது இதில் சமூக நீதியும் மறுக்கப் பட்டுள்ளது.

சமீபத்திய நடுவண் அரசின் சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி மூலதனம் பற்றிய சட்டம் அமுல்படுத்தும் போது “தமிழக அரசு இதை ஒருபோதும் தனது மாநிலத்தில் ஏற்காது” என்று அரை கூவல் விடுத்தது செயலலிதாஅரசு. இதே போல் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் தகுதித் தேர்வையும் மறுத்து தனது கண்டனத்தை பதிவு செய்ய மறந்தது ஏன்?

இதன் மூலம் 7 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத் தரவேண்டும் என்ற அரசுகளின் பொறுப்பை மடைமாற்றி இனி வேலைவாய்ப்பை பெறும் பொறுப்பு மாணவனை சார்ந்ததே என்று கைகழுவப் பார்க்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடி வரும் முதுநிலை ஆசிரியர் சங்கத்திற்கு தமது ஆதரவை தெரிவிப்பதோடு, மாநில அரசின் உரிமையில் தலையிடும் நடுவண் அரசின் ஆக்டோபஸ் கரத்தை முறியடிக்க படித்த இளைஞர்கள் அணி திரளவேண்டும்.

Pin It