“கூபாக் குடியரசுத் தலைவர் ராவுல் காஸ்த்ரோ அழைத்ததன் பேரில் இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே நான்குநாள் அரசுப் பயணமாக கூபா சென்று வந்துள்ளார்” எனும் செய்தி எம்மை மிகுந்த அதிர்ச்சிக்கும் வெறுப்புக்கும் ஆளாக் குகிறது.

இவ்வுலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் அரை நூற்றாண்டுக் காலமாக ஓசைப்படாமல் பணியாற்றியதோடு, அநீதியை எதிர்த்து எப்போதும் குரல் கொடுத்து வந்த கூபா, ஈழத்தமிழர் படு கொலையைக் கண்டனம் செய்யாததைக் கூட மன்னிக் கலாம். ஆனால், இந்த இனப்படு கொலையை ஆதரித்து, இலங்கை அரசுக்கு வாழ்த்துக் கூறி, மகிந்த இராசபக்சேவை கூபாவுக்கு வரவேற்று உபசரிப்பது கூபாவின் கொள்கைச் சீரழிவையே வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இந்த ஞாயத்திற்குப் புறம்பான, கொள்கைக்கு முரணான கூபாவின் இழிசெயலை இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்தகை யோடு ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் கூபா இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த போது, அதிர்ச்சியடைந்து இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் தனது கண்டனத்தை கூபா அரசுக்குத் தெரிவித்தது. அதன் விளைவாக பல கட்டுரைகள் எழுதப்பட்டு பிரபல இணையதளங்களில் வெளியாயின. சில கட்டுரைகள் மொழிப் பெயாக்கப்பட்டு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழிலும் வெளியிடப்பட்டன.

கூபா நாட்டின் ஆதரவாளரும் எழுத்தா ளரு மான தோழர் ரான் ரைடனவர் இந்த விடயத்தில் தனிப்பட்ட அக்கறை கொண்டு, “Tamil Nation in Sri Lanka” என்ற நூலை எழுதியதோடு, அதன் வெளியீட்டிற்காக சென்ற நவம்பரில் தமிழகம் வந்திருந்தார். சென்னை, புதுதில்லி, ஐதராபாத் நகரங்களில் பல கூட்டங்களில் அவர் ஈழத் தமிழர் படுகொலை குறித்து உரையாற்றினார்.

‘பயங்கரவாத் தடுப்பு’ என்ற பெயரில், நிகழ்த்தப்பட்ட ஈழத்தமிழர் படுகொலைக்காக இலங்கை அரசைக் கண்டித்து இலண்டன் நகரின் பல பகுதிகளிலும், நார்வே நாட்டிலும் தோழர் ரான் பல கூட்டங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். தற்போது இலங்கை அதிபரின் கூபாப் பயணத்தைக் கண்டித்து அவர் எழுதியக் கட்டுரை இங்கு மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

- அமரந்த்தா, இலத்தின் அமெரிக்க நட்புறவுக் கழகம்.

“கூபா குடியரசுத் தலைவர் இலங்கையிலுள்ள தனது எதிரிணையை வரவேற்றார்” என்று சூன் 17, 2012 நாளிட்ட பிரென்ஸா லத்தீனா ஏடு தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. குடியரசுத் தலைவர் ராவுல் காஸ்த் ரோவின் அழைப்பின் பேரில் மகிந்த இராசபக்சே நான்கு நாள் பயணமாக கூபா வந்திருப்பதாக அச்செய்தி கூறு கிறது.

உலகிலேயே அதிகொடூரமான அரசியல் தலைவரென்றும், சொந்த நாட்டின் தமிழ் மக்களை இலட்சக் கணக்கில் கொன்று குவித்தவர் என்றும், நாட்டின் பெரும் பகுதியை அந்நிய பெருமுதலாளிகளுக்கு விற் பவர் என்றும், வட அமெரிக்காவோடு நெருக்கமான வர்த்தக உறவு கொண்டவர் என்றும் அறியப்படும் இந்த ‘மதிப்பிற்குரிய விருந்தாளி’ எவ் வகையில் கூபக் குடியரசுத் தலை வருக்கு ‘எதிரிணை’ ஆவார்?

“இவ்வுலகின் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுடன் நெடுங்காலம் ஒருமைப்பாட்டு உணர்வுடன் செயலாற்றிய கூபா, இன்று அக்கொள்கைக்கு முரணாக ஒழுக்கங்கெட்ட முறையில் நடந்து கொள்கிறது” என்று நான் ‘ஹவானா டைம்ஸ்’ இதழில் எழுதினேன். “ஐ.நா. மனித உரிமைக் கழகத்தில் இலங்கை அரசை ஆதரித்து கூபா தோல்வி கண்டது” என்ற தலைப்பிலும், ”தமிழர்கள் குறித்த பிரச்சினையில் கூபாவின் முரணான நிலைபாடு” என்ற தலைப்பிலும் கட்டு ரைகள் எழுதினேன். (http://havanatimes.org/?p-65303&p-56447)

நீண்ட நெடுங்காலமாக இலங்கை அரசுகள் தமிழர்களைப் பாரபட்சமாக நடத்தி, ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி, படு கொலை செய்ததற்குப் போது மான சான்றுகள் உள்ளன. உடல் ரீதியில் சித்திரவதை செய்ததோடு தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக ஆக்க இலங்கை அரசுகள் பல சட்டங்களை இயற்றியுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, மதம், மொழி என தமிழர்களின் அனைத்து அடையாளங்களும் சிங்கள மக்களுக்கும், அவர் களது பயங்கரவாத பௌத்த மத்ததிற்கும் கீழானவையாக மதிக்கப்பட்டு வந்துள்ளன. “இலங்கையில் தமிழ்த் தேசம் ”( Tamil Nation in Sri Lanka) என்ற எனது அண்மைய நூல் இந்தக் கொடுமையான வரலாற்றைப் பதிவு செய்கிறது (NCBH வெளியீடு, நவம்பர் 2011).

உண்மை இவ்வாறிருக்க, கூப அரசு எதற்காக மகிந்த இராசபக்சே என்ற மிருகத்தையும், இவருக்கு முந்தைய சிங்களப் பேரினவாத அரசுகளையும் ஆதரிக்கிறது? “ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்குமா?” என்ற தலைப்பில், ஹாவானா டைம்ஸ் இதழில் வந்த கட்டுரை இக் கேள்விக்கான சில விடைகளை முன்வைக்கிறது.

வட அமெரிக்கா தனது ஆதிக்கத்திற்குப் பயந்து அடி பணியாத மக்களின், அரசுகளின் விவகாரங்களில் - குறிப்பாக கூபாவின் விவகாரங்களில் எப்போதும் தலையிட்டு வருகிறது.

இதனால் உண்டான காழ்ப் புணர்வின் அடிப்படையில் அமைந்தது தான் கூபாவின் அயலுறவுக் கொள்கை. அண்மையில் கெரில்லா அமைப்பினரான தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி விட்டு, அத்துமீறி குண்டுவீசி இலங்கை அரசு பொது மக்களைக் கொன்றுவிட்டதாக வட அமெரிக்கா இலங்கை அரசு மீது குற்றம்சாட்டியது. ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் 47 உறுப்பு நாடுகளில் பெரும் பாலானவை (6இலத்தீன் அமெரிக்க நாடுகள் உள்பட) இதை வழிமொழிந்தன.

உலகின் ஆகக்கொடிய பயங்கரவாத அரசான வட அமெரிக்கா தனது சொந்த புவிசார் அரசியல் நோக்கத்திற்காகத் தான் இந்த ‘மனித உரிமை மீறல்’ குறித்துப் பேசுகிறது என்பதைப் புரிந்து கொள்வோ மானால் (பார்க்க: மேற்கூறிய 2 கட்டுரைகள்), இதற்காக வட அமெரிக்காவை நாம் பாராட்டி விட முடியாது என்பது தெளிவானது.

இந்த விவகாரத்தில் வட அமெரிக்காவும், பிரிட்டனும் உப்புச் சப்பில்லாத புகாரொன்றைக் கொடுத்ததாலேயே கூபா அரசு அலறி அடித்துக் கொண்டு, தமிழர்களை இனப் படுகொலை செய்து திட்டமிட்டு அழித்தொழித்து வரும் இலங்கை அரசுடன் செல்லமாக உறவு கொண்டாட முனைகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்கு ஆதரவாகத் திகழ்வ தென்னும் கொள்கைக்கு முரணாக நடந்து கொள்கிறது கூபா. (பார்க்க: “காஸ்த்ரோவின் கூபா, கூபாவின் ஃபிதெல்” என்ற தலைப்பில் காஸ்த்ரோ லீலாக் வுட் என்பாருக்கு அளித்த பேட்டியில்,“இவ்வுலகின் ஒடுக் கப்படுவோர் அனைவரும் எமது தோழர்கள்;ஒடுக்குவோர் அனைவரும் எமது எதிரிகள்” என்று கூறியுள்ளார்).

நான் கூப அரசின் நீண்ட கால ஆதரவாளன். 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பன்றிகள் வளைகுடாவில் வட அமெரிக்கா ஊடுருவியபோது வட அமெரிக்க அரசுக் கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதில் தொடங்கி, பின்னர் 80-90களில் பிரென்சா லத்தீனாவிலும், ஹொசே மார்த்தி எடிட் டோரியலிலும் பாணியாற்றிய காலத்திலும் நான் கூபா குறித்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் ஆறு நூல்களும் எழுதியிருக்கிறேன்.

குடும்ப ஆட்சி நடத்தும் இராசபக்சேவை இன்று கூப அரசு ஆதரிப்பதும், சிறுபான்மைத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்யும் அவரை நெறி பிறழ்ந்துகபடமாக ஆதரிப்பதும் எனக்கு சொல்லொண்ணாத வெறுப்பை ஏற்படுத்துகின்றன. சேகுவேரா இன்று உயிரோடிருந்திருந்தால், இதைப் பார்த்துப் பதைத்து பெரிதாக கண்டனக் குரல் எழுப்பியிருப்பார். கூப ஆதரவாளர்கள் அனைவரும் இப்போது அதைத் தான் செய்ய வெண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Pin It