உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு சட்டப்படியான தலைமைப் பீடம் ஒன்று இல்லாமையால் தன்னை அதுவாகக் கற்பனை செய்து கொள்ளும் தமிழக அரசும் அதன் முதல்வர்களும் தொடர்ந்து பல தவறுகளைச் செய்து வருகிறார்கள். அவற்றுள் தமிழக அரசுக்குத் தலைமைக் செயலகம் கட்டும் முயற்சியும், தமிழர் களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு கட்டும் முயற்சியும் குறிப்பிடத்தக்கன. 

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்கு தமிழர் கட்டடக்கலை அடையாளம் தேவையில்லை என்று முடிவெடுத்தார் முன்னாள் முதல்வர். மாநில அடையாளங்கள் இனியும் பேணப்பட வேண்டியதில்லை என்ற கருத்துடைய இன்றைய முதல்வர் தமிழர் கட்டடக்கலை பற்றி பேசுவதே இல்லை. வெளி நாட்டினரைக் கொண்டுதான் கட்ட வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய இந்த இருவரின் குறுக்குச் சண்டையில் தலைமைச் செயலகத்தை வடிவமைத்த செருமானி யனுக்குக் கிடைத்தது செருப்படி. இதில் இரண்டு முதல்வர்களும் தோற்றுப் போயினர். ஆயினும் தமிழினம் தனது ஆளுமையை எடுத்து நிறுத்தவில்லை. 

தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்துப் பட்டுடுத்தித் தன் குடும்பத்தாரோடு 2009ல் முன்னாள் முதல்வர் கொண்டாடியபோது உலகத் தமிழினம் குலை நடுக்குற்று ஈழத் தமிழர் துயரில் தோய்ந்திருந்தது. 

அந்த அரசாணையைப் புறந்தள்ளி சித்திரைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்துத் தன் அமைச்சர்களோடும், அரசு உயர் அலுவலர்களோடும் இந்நாள் முதல்வர் 2012ல் கொண்டாடிய போது தமிழினம் தள்ளியிருந்து உணர்ச்சியற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. 

உழவர்களுக்கு அரசாங்கம் அளித்த அறுசுவை உணவு, தமிழ்ப் பண்பாட்டின் உச்சக் கட்ட இழிவு. திருநாள் எனில் ஓர் ஏழை உழவன் வீட்டில் கூட இன்னொருவர் உணவு அருந்தலாம். அந்த உழவனே உணவு அருந்த வெளியே சென்றால் அது வெட்கக் கேடு. அதை விடவும் தலைக் குனிவான செயல், 30 ஆண்டுகள் தமிழில் உயராய்வு செய்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தார் முந்திக்கொண்டு தப்படித்துக் கொண்டாடியது. புலிக்கதை கேட்ட தமிழர்களுக்கு புளிக்கதை சொல்லிய முதல்வர் தமிழனத்தின் ஒட்டு மொத்த அறிஞர்களையும் இழிவுபடுத்தியிருக்கிறார். 

தமிழர்களுக்குத் தெரியும் 

சித்திரைத் திங்கள் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவது என்பது பஞ்சாங்கப் பார்ப்பனரின் கண்டுபிடிப்பு என்பதும், ஆரியவைதிகக் கருத்தாளர்களின் கடைப்பிடிப்பு என்பதும் தமிழர்களுக்குத் தெரியும். சித்திரையில் முதற்குழந்தை பிறப்பதை விரும்பாமல் புதுமணம் புரிந்தோரை ஆடியில் பிரித்து வைக்கும் தமிழர்கள், ஆட்டின் பெயரால் ஆண்டு பிறந்ததைக் கொண்டாடிய அரிய வரலாற்றுப் பதிவுகள் ஏதும் எங்கும் இல்லை. மேட்டுக் குடிகளின் நடுவீட்டு நிகழ்வுகள் எல்லாம் உலக வழக்காறு ஆகா. மன்னர்களின் ஆட்சியாண்டே ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்பட்டும், புராண இதிகாச ஆரிய வைதிகச் சுழல் ஆண்டு முறை திணிக்கப்பட்டும், தமிழர் விழாக்கள் சார்ந்த வரலாற்றுத் தடயங்கள் அழிக்கப்பட்டும் தமிழர்கள் கருத்தழிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். “கண்ணைக் கெடுத்திடினும் உய்வோம்; கருத்தைக் கெடுத்தனர் அடடா!” என்று கலங்குகிறார் பாவலர் ஏறு (கனிச்சாறு). 

ஆரியப் புத்தாண்டு 

அச்ச உணர்வினால் தனித்து இயங்க விரும்பும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு மன நேர்மையும் அவர் தம் இன நேர்மையும் துணிச்சலும் இருந்தால் ஆரியப் புத்தாண்டு கொண்டாடலாம். தமிழர்களைத் துணைக்கு அழைக்க வேண்டாம். 

திராவிடப் புத்தாண்டு 

விலகிச் சென்ற இந்நாள் முதல்வரைப் போல முன்னாள் முதல்வரும் தைத்திங்கள் முதல் நாளை விடுத்து வேறொரு நாளில் திராவிடப் புத்தாண்டு கொண்டாடலாம். தமிழர்களைத் துணைக்கு அழைக்க வேண்டாம். 

தமிழ்ப் புத்தாண்டு 

தைத் திங்கள் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதில் உண்மைத் தமிழர்களுக்கு ஐயப்பாடோ, மறுப்போ, கசப்போ, அச்சமோ இல்லை. வரலாற்றுத் தடயங்களை மீட்டு எடுக்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்களை இனந்திரட்டி எடுத்து நிறுத்தவும் இவ்விழா பயன்படுமாயின் அஃது ஏறு சாலையேயாகும். 

கோட்பாட்டு அடிப்படை 

இயற்கையின் இயல்புகளும் இயங்குமுறையும், வானவியல் நிகழ்வுகளும் ஒழுங்கு களும் பழந்தமிழரால் நன்கு கண்டறியப்பட்டு ஆடுபண்புகள் விளங்கிக் கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆடுவது அழியும் என்று அறிந்திருந்தனர். 

ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் (தொல்காப்பியம் – 1068 – 5) கூத்தாடுதலின் ஆடல் தொழிலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆடுதலின் எதிர்வினை இயல்புகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

ஆடு இயல் 

யானை தன்தலையை இயல்பாக ஆட்டுவதைப் போல, பெருநாவாய் இயல்பாக அசைந்தாடுவதைப் போல, வண்டின் சிறகுகள் ஒத்த அளவில் அதிர்வது போல, புதிதாகப் பிறந்த ஆட்டுக் குட்டியின் தலை நடுங்குவதைப் போல, கொழு கொம்பு தேடிக் கொடி ஆடுவதைப் போல, வயிற்றில் பசி ஆடுவதைப்போல, பாணன் தூது ஆடுவதைப் போல, தலைவனும் தலைவியும் சொல் ஆடுவதைப் போல, கதிரவனின் வடசெலவும் தென் செலவும் இயல் என வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. 

ஆடியல் யானை, ஆடியல் பெருநாவாய், ஆடுசிறை வண்டு, ஆடுதலைத் துரு, ஆடுகொடி,ஆடுபசி, பெரும்பாணன் தூது ஆட, சொல்லாட்டி, ஆடியல் அழல் என்று முறையே ஒரு வினையின் இயல்பான எதிர் வினை கணக்கிடப்படுகிறது. 

ஆடு இயல் விழவு 

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் (நற்றிணை -90). 

குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருந்து பயணங்களைத் தவிர்த்து வளமான சூழலில் கதிரவனின் தென்செலவுத் திருப்பத்தை எதிர்நேக்கிக் கொண்டாடப் பட்ட விழாவாக கருத இடம் இருக்கிறது. 

ஆடு துவன்று விழவு

கழூநீர் கொண்ட எழுநாள் அந்தி

ஆடு துருண்டு விழவின் நாடு ஆர்த்தன்றே

மாடம் பிறங்கிய மலிப்புகழ்க் கூடல்

(மதுரைக் காஞ்சி – 427-429)

துவன்று நிறைவு ஆகும்

தொல் : 815 

மேற்குறிப்பிட்ட விழாவானது போர் நிறைவு விழா இல்லை. போரின் வெற்றி தோல்வி நிறைவு என்று கருதப்படாது. கூத்தாடு விழாவும் இல்லை. சாறுஅயர்கள்மே கூத்தாடுதலோடு பெரிதும் தொடர்புப் படுத்தப்படுகிறது. இவ்விழாவும் கதிரவனின் தென் செலவுத்திருப்பத்திற்காகக் காத்திருந்து கொண்டாடப்பட்ட விழாவாக தெரி கிறது. 

தெற்கிலிருந்து கதிரவனின் செலவு இயல்பாகத் திரும்பவில்லையென்றால் பேரிடர் நேரும் என்றும், வறன் ஆகும் என்றும் மன்னரும் மக்களும் அஞ்சினர் என்று தெரிகிறது.

Pin It