பன்னாட்டுக் குழுமங்களின் பேயாட்சி தில்லியில் நடக்கிறது என்பதற்கான சான்று தான் அண்மையில் வெளியான போபால் வழக்குத் தீர்ப்பு. இருபதாயிரம் பேர் சாவு, இரண்டு இலட்சம் பேர் நடைப்பிணம், அடுத்தடுத்தத் தலைமுறையும் ஊனப் பிறவிகள்... என்ற கொடுங்குற்றத்தைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை; அதுவும் 26 ஆண்டுகளுக்குப் பிறகு! தண்டனையை அறிவித்த போபால் நீதிமன்றம், தண்டிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சொந்தப் பிணை வழங்கி விடுதலை செய்தது.

          போபால் நச்சு வாயுப் பேரழிவுக்கு முதன்மைப் பொறுப்பாளியான வெள்ளைக்கார குற்றவாளிக்கு எந்த தண்டனையும் இல்லை.

          உழைப்பாளிகள், பொதுமக்கள் உயிர்களை விட கம்பெனிகளின் இலாபம் காக்கப்பட வேண்டியது என்பதே இந்தியாவின் எழுதப்படாத சட்டம் என்ற உண்மையை போபால் வழக்கு தெளிவுபடுத்திவிட்டது.

          நடந்தது என்ன?

          மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலை யிலிருந்து 1984 திசம்பர் 2-3 நள்ளிரவில் வெளியான நச்சு வாயுவுக்கு இருபதாயிரம் பேர் பலியானார்கள். இரண்டு இலட்சம் பேர் உழைக்க முடியாத அளவுக்கு உடல் ஊனமுற்றவர்களாக உருக்குலைந்தார்கள். இவர்களது நுரையீரல்கள் குலைந்தன. எலும்புகள் வலுவிழந்தன. கண்பார்வை முற்றிலுமோ பெருமளவிலோ பறிபோனது. பலருக்கு புற்றுநோய் உருவானது. இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் எலும்பு வலு இல்லாமல், மூச்சுத்திணறல் நோயுடன் பிறந்தன. இவர்களுக்கு நினைவாற்றால் குறைந்து காணப்படுகிறது.

          இது வெறும் விபத்தா? முதலாளியின் இலாப வேட்டைக்காக தெரிந்தே இந்த மரணப்படுகுழி வெட்டப்பட்டதா என்பதே இச்சிக்கலின் மையப் பொருளாக விவாதிக்கப்படுகிறது. விபத்து என்ற அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது சரியா என்பதே விடைகாண வேண்டிய வினா.

          யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் தொழிற்சாலை போபாலில் 1969-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 51% பங்குகளை அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனே உரிமையாகக் கொண்டுள்ளது. மீதிப்பங்குகள் சில இந்திய நிதி நிறுவனங்களுடையவை.

          இந்த வகையில் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனின் உரிமையாளரான வாரன் ஆண்டர்சன்தான் முதலாளி.

          போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் கார்பரில் என்ற பூச்சிக் கொல்லி நச்சு தயாரிக்கப்பட்டது. ‘செவின்’ (Sevin) என்ற பெயரால் இது விற்கப்பட்டது.

          கார்பரில் தயாரிப்புக்கு மீத்தைல் ஐசோ சயனேட் என்ற நச்சுத் திரவமே அடிப்படைப் பொருளாகும். 1979ஆம் ஆண்டு வரை இது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், 1979ல் போபால் தொழிற்சாலை வளாகத்திலேயே மீத்தைல் ஐசோ சயனேட் தயாரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.

          இந்த மீத்தைல் ஐசோ சயனேட் ஆட்கொல்லி நஞ்சு என்பதால் இந்த நிலையம் நிறுவப்படுவதற்கு தொடக்கத் திலிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது. போபால் மாநகராட்சி ஆணையர் எம்.என்.புக். என்பவர் 1975ஆம் ஆண்டிலேயே இந்த நச்சு நிலையம் நிறுவப்படுவதற்கு மாநகராட்சியின் அனுமதி கோரப்பட்டபோதே, எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத பகுதியில் இந்த நிலையம் நிறுவப் பட்டால் மட்டுமே அனு மதிக்க முடியும் என்று உறுதிபடக் கூறினார்.

          மத்தியப் பிரதேசத்தின் அன்றைய முதலமைச்சர் பி.சி.சேத்தி தலையிட்டு போபால் மாநகராட்சி ஆணையர் பதவியிலிருந்து புக்கை மாற்றல் செய்தார்.

          மீத்தைல் ஐசோ சயனேட் வழியாக கார்பரில் தயாரிக்கும் வழிமுறை ஆபத்து நிறைந்தது என்பதால், இந்த வழிமுறையையே அனுமதிக்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்தனர். மாற்று வழிமுறையில் கார்பரில் தயாரிக்க முடியும் என்று எடுத்துக் கூறினர்.

          ஆனால் மீத்தைல் ஐசோ சயனேட் வழிமுறையில் தான் செலவு குறைவு என்பதால் யூனியன் கார்பைடு நிறுவனம், பாதுகாப்புக்கு ஆபத்தான அந்த வழிமுறையையே தேர்ந்தெடுத்தது. மக்கள் உயிரைவிட தங்களது இலாபமே அதற்கு முக்கியம்.

          1975இல் மீத்தைல் ஐசோ சயனேட் மாதிரி உற்பத்தித் தொடங்கிய போது அங்கு ஆய்வு மேற்கொண்ட போபால் மாவட்டத் தொழிற் சாலை ஆய்வாளர் அதனைத் தொடரக்கூடாது என உத்தரவிட்டார். அதற்காக அந்த ஆய்வாளரும் மாற்றப்பட்டார்.

          அந்த அளவுக்கு மேல்மட்ட அரசியல் செல்வாக்கு யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சனுக்கு இருந்தது. அன்றைக்கு பிரதமர் இந்திராகாந்திக்கு நெருக்கமாக இருந்து, சட்டப் புறம்பான அதிகார மையமாக செயல்பட்ட, திரேந்திர பிரம்மச்சாரி என்ற ‘சாமியார்’ வாரன் ஆண்டர்சனுக்கு மிகவும் நெருக்கமானவர். யூனியன் கார்பைடு விருந்தினர் மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்து சீடர்களுக்கு யோகாக வகுப்பு நடத்தி வந்தார். ஆண்டர்சன் - திரேந்திர பிரம்மச்சாரி - பி.சி.சேத்தி கூட்டணி அன்று வலுவாக செயல்பட்டது.

          1979இல் ஐசோ சயனேட் உற்பத்தி தொடங்கியதிலிருந்தே யூனியன் கார்பைடு ஆலையில் விபத்துகளும் தொடங்கின. 1981லிருந்து மீத்தைல் ஐசோ சயனேட் சேகரிப்புக் கலத்திலிருந்து நச்சுவாயுக் கசிவு விபத்துகள் ஆலையில் அடிக்கடி நிகழத் தொடங்கின. 1981 மார்ச்சில் ஒரு தொழிலாளி மரணம், ஏப்ரலில் ஒரு பொறியாளருக்கு நச்சுவாயுக் காயங்கள், ஆகஸ்ட்டில் வாயுக் கசிவால் 20 தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதி, திசம்பரில் நச்சுவாயுக் கசிவால் ஆலைக்கு அருகில் வசித்த நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு என்று பாதிப்புகள் அதிகரித்தன.

          இந்திப் பத்திரிக்கையாளர் ராஜ்குமார் கேசவானி, 1981, 1982 இரு ஆண்டுகளும் “எந்த நேரமும் யூனியன் கார்பைடில் விபத்து நேரலாம்” என கட்டுரை எழுதி எச்சரித்தார். “எரிமலை மீது போபால்”, “காத்துக் கொண்டிருக்கும் பேராபத்து” போன்றவை அவரது கட்டுரைத் தலைப்புகள்.

          கார்பைடு தொழிலாளர் சங்கம் ஆலையில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி ம.பி. முதலமைச்சருக்கும், இந்திய உள்துறைக்கும், தொழிலாளர் துறைக்கும் புகார் மனு அளித்தது. “கொல்லும் கார்பைடு ஆலை” என்று விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொண்டது.

          எதிர்க்கட்சிகள் இச்சிக்கல் குறித்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் விவாதம் எழுப்பின.

          இந்நிலையில் யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சன் ஆணைப்படி பாதுகாப்புத் தணிக் கைக் குழு அமெரிக்காவிலிருந்து போபாலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. சி.எஸ்.டைசன் என்பவர் தலைமையிலான அக்குழு ஆலையை ஆய்வு செய்து தனது அறிக்கை யை 1982 மார்ச்சில் வாரன் ஆண்டர்சனிடம் அளித்தது.

          ஆலையில் 61 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றுள் 30 குறைபாடுகள் மிக அவசரமாகக் கவனித்துக் களையப் பட வேண்டியவை என்றும், அவ்வாறு உடனே செய்யாம லிருந்தால், எந்த நேரத்திலும் மனிதப் பேரழிவு நிகழக்கூடும் எனவும் டைசன் அறிக்கை எச்சரித்தது.

          இதற்கு ஆகும் செலவு 20 இலட்சம் டாலர் (அன்றைய மதிப்பில் 48 கோடி ரூபாய்) எனவும் டைசன் குழு மதிப்பிட்டது.

          இந்தச் செலவை மேற் கொள்ள ஆண்டர்சன் மறுத்தார். மேலும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைக்கத் தொடங்கினார். பாது காப்புக் குறைபாடுகள் குறித்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து மொத்தமாக போபால் ஆலையை இந்தோனேசியா அல்லது பிலிப் பைன்சுக்கு மாற்றுவதற்கான பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்.

          இவையெல்லாம் ஆண்டர் சன் நேரடியாக ஈடுபட்டு நடந்த செயல்பாடுகள் என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.

          இந்த நிலையில் நச்சுவாயுக் கசிவு ஏற்படுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மீத்தைல் ஐசோ சயனேட் சேமிப்புத் தொட்டிக்கு இருந்த குளிரூட்டிகள் நிறுத்தப்பட்டு விட்டன. வெளி யாகும் ஹைட்ரஜன் சயனைடு நச்சுவாயுவைத் தூய்மைப் படுத்தி நச்சில்லா வேறுவாயுவாக மாற்றும் கருவி நிறுத்தப்பட்டுவிட்டது. வெப்பநிலையைக் காட்டும் கருவிகள், கசிவைக்காட்டும் கருவிகள் போன்றவை நிறுத்தப் பட்டுவிட்டன. கண்காணிப்புப் பணிக்கான ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது.

          இவ்வாறான சூழலில்தான் 1984 திசம்பர் 2ஆம் நாள் இரவு கழிவுத் தண்ணீர் மீத்தைல் ஐசோ சயனேட் தொட்டிக்குள் சென்றது. தண்ணீர் கலந்தவுடன் வெப்ப உமிழ்வினை தொடங்கியது. (சுண்ணாம்பு நிரப்பிய வாளியில் தண்ணீர் ஊற்றினால் வெப்பம் வெளிப் படுவதைப் போன்ற வேதிவினை இது) சில நிமிடங்களில் 200 சென்டிகிரேடு என்ற அளவுக்கு வெப்பநிலை உயர்ந்தது. நாற் பதாயிரம் கிலோ மீத்தைல் ஐசோ சயனேட் ஒரே நேரத்தில் வெளி யேறியது.

          வெளிக்காற்றோடும், தண் ணீரோடும், ஐசோ சயனேட்டுக்கு நிகழ்ந்த வேதிவினையில் ஹைட் ரஜன் சயனைடு என்ற ஆட்கொல்லி நச்சுவாயு தோன்றி போபாலையே பிணக்காடாகியது. இருபது ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். நீதிமன்ற கணக்குப்படி இது 15 ஆயிரத்து 500 பேர். ஏறத்தாழ இரண்டு இலட்சம்பேர் நடைப்பிணமாக மாற்றப்பட்டார்கள்.

          பேரழிவுச் செய்தியறிந்து அமெரிக்காவிலிருந்து போபால் வந்த யூனியன் கார்பைடு முதலாளி வாரன் ஆண்டர்சனை போபால் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார். செய்தியறிந்த அன்றைய ம.பி. முதலமைச்சர் அர்ஜூன் சிங் ஆண்டர்சனை யூனியன் கார்பைடு விருந்தினர் மாளிகையிலேயே “சிறை” வைக்கும்படி ஆணை யிட்டார்.

          நான்கு நாள்களில் சொந்தப் பிணையில் வெளிவந்த ஆண்டர் சனை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை அதிகாரியும் பாதுகாப்பாக போபால் விமான நிலையம் அழைத்துச் சென்றனர்.

          ம.பி. மாநில அரசின் தனி விமானத்தில், திசம்பர் 7ஆம் நாள் தில்லி சென்ற ஆண்டர்சன், அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கின் விருந்தினராகத் தங்கிவிட்டு அடுத்தநாள் அமெரிக்கா பறந்தார். ராஜீவ்காந்தி அமைச்சரவை யில் மூத்த அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் அவரை வழியனுப்பி வைத்தார்.

          இவையெல்லாம் 2005வரை கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு நடந்து இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டதால் கமுக்கம் நீக்கப் பட்ட ஆவணங்களாக இவை வெளியாயின. ஆண்டர்சன் அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்பே ராஜீவ் காந்தியிடம் வாக்குறுதி பெற்றே போபால் வந்தார் என்பது இப்போது தெளிவாக வெளிப்பட்டு விட்டது. ஆனால் அன்றைக்கு அது இந்த அளவு வெளியாகவில்லை.

          போபால் நச்சுவாயு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நீதியும், நிவாரணமும், பெற்றுத் தரும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாக ராஜீவ்காந்தி அரசு அறிவித்தது. “போபால் நச்சுவாயுக் கசிவுப் பேரழிவு இழப்பீடுக் கோரிப் பெறும் சட்டம் - 1985” என்ற சட்டத்தை 1985 மார்ச்சில் பிறப்பித்து பொறுப்பைத் தான் எடுத்துக் கொண்டது.

          பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்திய அரசு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 330 கோடி டாலர் அதாவது அன்றைய மதிப்பில் 7920 கோடி ரூபாய் இழப்பீடு கோரியது.

          இதனை இந்திய நீதி மன்றத்தில் விசாரித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

          எனினும் விசாரணைக்கு யூனியன் கார்பைடு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஒத்துழைப்பதாக ஆண்டர்சன் சார்பில் உறுதிப்பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.

          போபால் நடுவர் நீதி மன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் யூனியன் கார்பைடு ஆலை செய்த மேல் முறையீடு 1989ல் உச்சநீதி மன்றம் சென்ற போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அகமதி கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டார்.

          மொத்தமாக 4.7 கோடி டாலர், அதாவது அன்றைய மதிப்பில் 723 கோடி ரூபாய் இறுதி இழப்பீடு என்று பஞ்சாயத்து கூறினார். இந்திய அரசு ஏற்றது. பிரச்சினையை அத்தோடு விடுவ தென்றும், யூனியன் கார்பைடு மீதோ, ஆண்டர்சன் மீதோ உள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறு வதாகவும் உறுதிப் பத்திரம் அளித்தது.

          இதன்படி ஆளுக்கு ரூ.12,000 வீதம் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிக்கப்பட்டது.

          தாங்கள் வஞ்சிக்கப்பட்ட தாக தெளிவுபடுத்தி ரசீதாபீவி, சம்பாதேவி சுக்ளா ஆகிய இரண்டு பெண்மணிகள் பாதிக்கப்பட்டோர் சார்பில் 1991ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆண்டர்சன் உள்ளிட்ட பொறுப் பாளிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும் என்றும், இழப்பீடு ஏற்கெனவே இந்திய அரசு கோரிய வகையில் வழங்க வேண்டும் எனவும் கோரினர்.

          இதனைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், குற்றவியல் வழக்குத் தொடர அனுமதித்தது. ஆயினும் அது தண்டனைச் சட்டப்பிரிவு 304-A படியான வழக்காக மாற்றப்பட வேண்டும் என அகமதி ஆணையிட்டார்.

          ஏற்கெனவே, 304ஆம் பிரிவின் கீழ், அதாவது மனிதச் சாவுக்குத் தெரிந்தே காரணமாக அமைந்தவர்கள் என்ற வகையில் வழக்கு நடந்து வந்தது. இதன் கீழ் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கலாம். ஆனால் 304--A என்பது கவனக்குறைவாக நடந்து கொண்டு விபத்து ஏற்படுத்துவது என்ற பிரிவாகும். இதன் கீழ் அதிக அளவு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம் அவ்வளவுதான்! அதுதான் இப்போது நடந்துள்ளது.

          நீதிபதி அகமதி கூறியது போல் இது கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்து அல்ல. தனது கொள்ளை இலாபத்தைப் பாது காத்துக் கொள்வதற்காக திட்ட மிட்டே செய்யப்பட்ட பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுத்திய மனிதக் கொலை.

          இதனை மேலே விளக்கி யிருக்கிறோம்.

          வாரன் ஆண்டர்சனுக்கு போபால் யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகப் பணியில் நேரடிப் பங்கு இல்லை; அன்றாடப் பணிகளுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனவே அவரைக் குற்றவாளியாக சேர்க்க முடியாது என்ற வாதம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. ஆண்டர்சனுக்கு போபால் ஆலை யின் கடுமையான பாது காப்புக் குறைபாடுகள் தொடக்கத் திலிருந்தே தெரியும் என்பதை விளக்கி உள் ளோம். குறிப்பாக அவர் அனுப்பிய டைசன் குழு 61 குறைபாடுகளைக் குறித்து அவருக்கு அறிக்கை அளித்ததும் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை.

          எனவே இந்தப் பேரழிவுக்கு முதன்மைப் பொறுப்பாளி வாரன் ஆண்டர்சன் ஆவார்.

          இப்போது யூனியன் கார் பைடு ஆலை கைமாறிவிட்டது. அமெரிக்காவின் டவ் கெமிக்கல்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள யூனியன் கார்பைடு ஆலைகளை 2001ஆம் ஆண்டு வாங்கிவிட்டது. போபால் ஆலைக்கும் டவ் கெமிக்கலே உரிமையாளர். எனவே இன்றைக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு டவ் கெமிக்கல்சுக்கே உள்ளது.

எனவே,

- இந்திய அரசு அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் தான் ஏற்கெனவே கோரியபடி 330 கோடி டாலர். அதாவது இன்றைய மதிப்பில் 21450 கோடி ரூபாய் டவ் கெமிக்கல்சிடம் இழப்பீடு கோரிப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.

- வாரன் ஆண்டர்சனை இந்தியா விற்கு வரவழைத்து, கைது செய்து 304 பிரிவின்படி வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

- ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்த அரசியல் பிரமுகர்களைக் கண்டறிந்து கூண்டில் ஏற்ற வேண்டும். இதில் ராஜீவ்காந்தியின் பங்கை வெளிப் படுத்த வேண்டும்.

- போபால் நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அணு ஆலை விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவை நிறைவேற்றாமல் கைவிட வேண்டும். 

- கி.வெங்கட்ராமன்

Pin It