தலித்துகள் கிறித்துவர்களாகவோ, முஸ்லிம்களாகவோ இருப்பதால் ஒரு விதமாகவும் இந்துக்களாகவோ, சீக்கியர்களாகவோ, பவுத்தர்களாகவோ இருப்பதால் வேறு விதமாகவும் அரசு அவர்களை நடத்த வேண்டுமா? ஆம் என்கிறது இன்றைய அரசியல் சட்டம். ஆனால் அது தொடக்கத்திலிருந்து அவ்வாறு சொல்லவில்லை. 1950ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் அது இந்து தலித்துகளை மட்டுமே அங்கீகரித்தது (கூடுதலாக நான்கு சீக்கிய தலித் சாதிகளையும்). ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் சட்டத்தின் அந்த ஆணை, அனைத்து சீக்கிய தலித் சாதிகளையும் சேர்த்துக் கொள்ளும் வகையில் திருத்தப்பட்டது. அதே ஆண்டு 1956இல் பாபாசாகேப் அம்பேத்கர் தனது தொண்டர்களை இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்தத்திற்கு மாறுமாறு தூண்டினார். அதன் மூலம் பட்டியல் சாதியினர் என்ற சட்டப்படியான நிலையை அவர்கள் கைவிட நேர்ந்தது.

பவுத்தர்களாக மாறிய தலித்துகளையும் அந்த அரசியல் சட்ட ஆணையின் கீழ் கொண்டு வருவதற்கு 34 ஆண்டுகளாகியது. 1990இல்தான் அந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டம் என்பது மாற்றத்திற்குரியது என்றால் (இது வரை 94 திருத்தங்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது), பட்டியல் சாதி ஆணை இரண்டு முறை மாற்றப்பட்டிருக்கிறது என்றால், தலித் முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் அதில் இணைப்பதற்காக மீண்டும் ஏன் ஒரு மாற்றம் செய்யக் கூடாது? எந்த அடிப்படையில் அதிகாரப்பூர்வ பிரிவில் அவர்கள் விடுபட்டிருக்கிறார்கள், இவர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்?

அரசியல் சட்டம் இது போன்ற கேள்விகளுக்கு மவுனம் சாதிக்கிறது. ஏனெனில் பெரும்பாலான சட்டங்களைப் போல, அரசியல் சர்ச்சைகளின் விளைவுகளைப் பதிவு செய்கின்றனவே அன்றி, அவற்றின் உள்ளடக்கங்களை அல்ல. அதனால்தான் நியாயங்களையும் விளக்கங்களையும் வேறிடத்தில் தேட வேண்டியுள்ளது. அரசியல், கொள்கை, சட்டம் மற்றும் மதம் ஆகியவற்றின் வரம்புக்குள் தேட வேண்டியுள்ளது.

இருப்பதிலேயே மதம் சார்ந்த விளக்கங்கள்தான் ஏற்றுக் கொள்வதற்கு எளிதானவை. கிறித்துவமும் இஸ்லாமும் சாதிகளை அங்கீகரிக்கவில்லை என்றால், சீக்கியமும் பவுத்தமும் கூடத்தான் அங்கீகரிக்கவில்லை. சொல்லப்போனால் சாதி அமைப்பிற்கு எதிராகத் தோன்றிய இயக்கங்களுள் பழமையானது என்ற பெருமை பவுத்தத்திற்கு உண்டு. மத நூல்களின் அனுமதி தேவையெனில் இந்து மதமும், அதை சார்ந்திருப்பதால் இந்து தலித்துகள் மட்டுமே தகுதி பெறுவர். சாதியற்ற மதங்களையே ஒன்றிலிருந்து ஒன்றை வேறாக பார்ப்பது ஏற்புடையதல்ல. அதோடு மதநூல்களின் அடிப்படையில் மட்டும் முடிவுகள் எடுப்பது அறிவுடையதும் அல்ல. மாறாக, உண்மையான நடைமுறையே கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்.

இதுதான் நீதிமன்றங்கள் எடுத்த நிலையாகும். 1985இல் சூசை வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, "மதமாற்றத்திற்குப் பிறகும் சாதி வாழ்கிறது' என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது மதம் மாறுவதால், மதம் மாறியவர் இதற்கு முன் சார்ந்திருந்த சாதியின் அடையாளம் அழிவதில்லை. சாதி அடையாளத்தினால் திணிக்கப்பட்ட சிக்கல்கள் தொடர்வதற்கான ஆதாரங்களைத்தான் அவை கேட்கின்றன.

தலித் முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இருக்கக் கூடிய சாதி சிக்கல்களை வெளிப்படுத்தக் கூடிய தரவுகள் இல்லாதது ஒரு வேளை காரணமாக இருக்கலாமோ? இந்த கேள்வியைத்தான் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அண்மையில் நடத்திய ஆய்வில் கையாண்டுள்ளது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த தலித்துகளுக்கிடையேயான பொருளாதார வேறுபாடுகள், உயர் நிலையிலிருக்கும் 25 சதவிகிதத்தினரிடையே மட்டும்தான் வெளிப்படையாகப் புலப்படுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

முக்கால் பங்கு தலித்துகள் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித வேறுபாடுமின்றியே இருக்கின்றனர். மேலும், தலித் முஸ்லிம்கள்தான் தலித்துகளிலேயே மிக மோசமான வாழ்வியல் நிலைகளில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை. தலித் கிறித்துவர்கள் மிக மோசமான நிலையில் இல்லையெனினும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சீக்கிய தலித்துகளை விட மோசமான நிலையிலேயே இருக்கின்றனர். ஒப்பீட்டளவிலான ஒதுக்குதலே தகுதிக்கான அடிப்படையெனில், முஸ்லிம் அல்லது கிறித்துவ தலித்துகளை விடுவதில் எவ்வித நியாயமும் இல்லை.

பாகுபாடு என்பது இதைவிட சிக்கலான ஒன்றாகும். ஏனெனில், அது ஆவணப்படுத்துவதற்கு கடினமான ஒன்று. ஆனால் இதிலும் கூட இருக்கக்கூடிய ஆதாரங்கள் தெளிவாகவும் போதுமான அளவும் இருக்கின்றன. ஒவ்வொரு மத சமூகத்திலும் தலித்துகள் தனியாகவும் கீழானவர்களாகவுமே நடத்தப்படுகின்றனர். தனியான மத வழிபாட்டு தலங்கள் வைத்துக் கொள்ளவும், தனியான சுடுகாடுகள் வைத்துக் கொள்ளவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்து தலித்துகளைப் போலவே இவர்கள் பணிவை காட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

சமூகக் கலப்பில், முக்கியமாக திருமண உறவுகளில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். எந்த மதமாக இருந்தாலும் தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கிடையிலான பாகுபாடே ஒவ்வொரு சமூகத்திலும் மிகக் கடினமான எல்லையாக இருக்கிறது. இந்த எல்லையை மீறுபவர்கள் இருப்பதிலேயே மோசமான தண்டனைக்குள்ளாகிறார்கள்.

தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளின் தன்மையும் முறையும் பல்வேறு வகுப்புகள், நிலப் பகுதிகள், தொழில் ஆகியவற்றிற்கு ஏற்றாற் போல் வேறுபட்டு இருக்கின்றன என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது அனைத்து தலித்துகளுக்கும் பொருந்தும் என்பதால், தலித் முஸ்லிம்களையும் தலித் கிறித்துவர்களையும் வேறாக நடத்துவதை நியாயப்படுத்த முடியாது. இறுதியாக ஆதாரங்கள் இன்மை காரணமாக அங்கீகரிக்கப்படாத நிலையை ஆய்வு வலிமையாக வெளிப்படுத்துகிறது. அதோடு அதிகாரப்பூர்வமான அங்கீகரிப்பின் வழியாகவே தரவுகளைத் திரட்ட இயலுமே அன்றி மாறி அல்ல என்பதையும் வலியுறுத்துகிறது.

ஒரு தலித்தையோ அல்லது வேறு பிரிவினைச் சேர்ந்தவரையோ வேறாக நடத்துவதற்கான ஒரே சரியான காரணம், அவர்கள் மீது எவ்விதப் பாகுபாடும் உரிமை மறுப்பும் இல்லை என்பதே. இந்த காரணம் இல்லையெனில் வேறு என்ன கொள்கை காரணங்கள் இருக்கக்கூடும்? 'உயிர்காக்கும் படகு' வாதம் போன்ற ஒன்றை வைக்க இயலுமா அதாவது முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் இணைப்பது என்பது, தற்பொழுது நிலவும் சூழலை சிக்கலாக்கி, தலித்துகளின் வாழ்வை காக்கும் படகாக இருக்கும் இட ஒதுக்கீட்டை மூழ்கடித்து விடுமோ?

அங்கீகாரம் இல்லாததன் காரணமாக தலித் கிறித்துவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். அதனால் அவர்களால் படகுக்கு எவ்வித சேதமும் நேராது. மொத்த தலித் மக்களில் அவர்கள் 1.6 சதவிகிதத்தினராக மட்டுமே இருக்கின்றனர். 90 சதவிகிதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்களே. இந்த கணக்கு 3 அல்லது 4 மடங்கு அதிகரிப்பினும் வெறும் 56 விழுக்காட்டினை மட்டுமே எட்டும். இது மிகக் குறைவான எண்ணிக்கையே.

கிறித்துவ மற்றும் முஸ்லிம் தலித்துகளை அடையாளம் காண்பது கடினம் என அதிகார வர்க்கம் அடிக்கடி வாதிடுகிறது. அதிகார வர்க்கம் செய்யக்கூடிய பல சிக்கலான செயல்களை விட இது ஒன்றும் அத்தனை கடினமானது அல்ல. இறுதியாக, இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பொதுவாக வைக்கப்படும் வாதங்களான அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை தலித் நலன்களை மேம்படுத்த அது சரியான வழிமுறை அல்ல போன்றவை முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் வேறாக நடத்துவதற்குப் பொருந்தாது.

மதம், சட்டம், கொள்கை தொடர்பான சிக்கல்களுக்கு பதில் உரைத்தாகி விட்டது. இப்போது இருப்பதிலேயே சிக்கலான துறையான அரசியலுக்கு வரலாம். வதந்திகளை நம்ப வேண்டுமெனில், அங்கீகரிக்கப்பட்ட தலித் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலித் தலைவர்கள், கிறித்துவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. மறுபுறத்தில் அவர்களை சேர்க்க வேண்டும் என்று பல அரசியல் குழுக்களும், தொண்டு நிறுவனங்களும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது போன்ற உள் வேறுபாடுகள் அரசியல் ரீதியான அணுகுமுறையின் வழியாக கையாளப்பட வேண்டும். அதே நேரம் எதிர்ப்பவர்களின் முக்கியமான அச்சம் ஒன்றிற்கும் நாம் பதிலுரைக்க வேண்டியுள்ளது. அது என்னவெனில், தலித் கிறித்துவர்கள் குறிப்பாக கல்வி சலுகைகளைப் பெறக்கூடியவர்கள், அதிகமான பலன்களை எடுத்துக் கொள்வார்கள் என்ற அச்சமே அது.

நகரப் பகுதிகளில் வாழும் தலித் கிறித்துவர்களில் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகளும் பட்டய தேர்ச்சிப் பெற்றவர்களும் இருக்கும் அதே வேளையில், நகரப் பகுதிகளில் வாழும் தலித் பவுத்தர்களில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில் கிராமப்புறங்களில் தலித் கிறித்துவர்களைக் காட்டிலும் தலித் பவுத்தர்களில் மும்மடங்கு அதிகமான பட்டதாரிகள் உள்ளனர். இந்த புள்ளிவிவரமானது மேலும் ஆராயத்தக்கதுதான். என்றாலும் இட ஒதுக்கீட்டின் பலன்களை குறிப்பிட்டவர்கள் ஆக்கிரமிப்பது என்பது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரிடையே ஏற்கனவே நிலவும் சிக்கலே (பிற பிரிவினரைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அது வெளிப்படையானது). இத்தகைய சிக்கல்களை சரியான வகையில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும். தலித் கிறித்துவர்கள் ஆதிக்கம் செலுத்திவிடக்கூடும் என்ற அடிப்படையில் இல்லாமல், சரியான தீர்வுகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இறுதியாக விடுபட்டுள்ள சிக்கல் 'மத அரசியல்' தலித் கிறித்துவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்களை அங்கீகரிப்பதற்கு எதிரான வாதங்கள், மத உள்நோக்கம் கொண்டவர்களாலேயே கிளப்பப்படுகின்றன என்ற தோற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. தலித் சீக்கியர்களையும் தலித் பவுத்தர்களையும் இணைப்பதற்கான சட்டத்திருத்தம் மிக எளிதாக நிறைவேற்றப்பட்ட போது, தலித் கிறித்துவர்களையும் தலித் முஸ்லிம்களையும் இணைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு மட்டும் இந்த அளவிற்கு எதிர்ப்பு கிளம்புவதை வேறு எப்படி விளக்குவது? இந்த சிக்கலையும் நாம் சரியான வகையில் அணுகி தீர்க்க வேண்டியுள்ளது. இதை ஒதுக்க முடியாது.

இறுதியாக, முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் தலித்துகளாக அங்கீகரிக்க மறுக்கும் வாதங்கள் எதையும் ஏற்க இயலாது. அனைத்து இட ஒதுக்கீடும் அனைத்து தலித்துகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்ப்பது நியாயமற்றதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. அதுபோலவே, அனைத்து தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆதரிப்பது நியாயமானதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது.

ஆனால் ஒரு சில தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டினை அளிப்பதும், பிறர் வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு அதை மறுப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, நியாயமற்றதும் கூட. இதை விளக்குவதற்கு ஒரு எளிய சொல் இருக்கிறது அது ‘போலித்தனம்’.

- சதீஷ் தேஷ்பாண்டே
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு: பூங்குழலி

(சதீஷ் தேஷ்பாண்டே தில்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர். இவர் தேசிய சிறுபான்மை ஆணையத்திற்காக 'முஸ்லீம் மற்றும் கிறித்துவ சமூகத்தில் உள்ள தலித்துகள் பற்றி ஆய்வறிக்கை'யை தயாரித்துள்ளார். இக்கட்டுரை 'தெகல்கா' இதழில் வெளிவந்துள்ளது.)

Pin It