பழைய பெருமிதங்களை மறுப்பதும் தவறு; பழைய பெருமிதங்களின் முதுகுக்குப் பின்னால் பதுங்கிக் கொள்வதும் தவறு. 

                நேற்று என்பது இன்றையின் தாய்; நாளையின் பாட்டி. நேற்றில்லாமல் இன்றில்லை. இன்றில்லாமல் நேற்றுக்கு வாழ்வில்லை. 

                தமிழர்களுக்கிருப்பதைப் போல் உலகில் வேறெந்த இனத்திற்கும் தொன்மை முதன்மையும், அறிவெழுச்சியும் கொண்ட கடந்த காலம் அமைந்திடவில்லை. இவ்வாறு நாம் சொல்வது மற்ற இனங்களை சிறுமைப் படுத்துவதற்காக அன்று. வரலாற்றை மறந்து வாழும் நம்மினத்திற்கு வரலாற்றுப் பெருமிதத்தை நினைவுபடுத்தவே. தாழ்ந்து கிடக்கும் தமிழினத்தைத் தட்டி எழுப்பவே. 

                உலகின் முதல் மொழி தமிழ்; உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம். இது பிற நாட்டு அறிஞர்கள் ஆராய்ந்து நமக்குச் சொன்ன உண்மை; நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் தம்பட்டமன்று. 

                சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டுக்காரர் ஒருவர் தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்க்க வந்தார். நம் நண்பர் ஒருவர் அவருக்குச் சுற்றிக் காட்டிப் பெரிய கோயிலின் சிறப்புக் கூறுகள் ஒவ்வொன்றையும் விளக்கினார். எல்லாவற்றையும் பார்த்து முடித்த பின் அந்த வெளிநாட்டுக்காரர் கேட்டார், “நான் தெருவில் பார்த்த அந்த இனமா, இந்தக் கலைப் பெட்டகத்தைக் கட்டியது? இதைக் கட்டிய அந்த இனமா இப்படி வீழ்ந்து கிடக்கிறது?” 

                அந்த வெளிநாட்டுக்காரர் சில மணித்துளிகளில் தமிழினத்தின் பண்டைய எழுச்சியையும் இன்றைய வீழ்ச்சியையும் நம் செவியில் அறைந்தது போல் சொல்லிவிட்டார். 

                தஞ்சைப் பெரிய கோயில் என்பது நம்நாட்டுப் பகுத்தறிவுவாதிகளின் பார்வையில் மூடநம்பிக்கையின் சின்னம்; பார்ப்பனியத்தின் பாசறை! நம் நாட்டுக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அது நிலக்கிழமையின் அடையாளம்! எனவே அவர்களின் பார்வையில் அது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று. 

                தமிழகப் பகுத்தறிவு வாதம், தமிழக மார்க்சிய வாதம் - இரண்டும்தான் நம்மண்ணின் முற்போக்கு நீரோட்டங்கள். அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பை நாம் மதிக்கிறோம். அதே வேளை அவற்றின் பலவீனங்களைக் கணக்கில் கொள்கிறோம். இதுதான் இன்றையத் தமிழ்த் தேசியப் பார்வை. 

                வரலாற்றுக் கதாநாயகன் பழைய அழுக்கு மூட்டைகள் சிலவற்றை ஒரு பக்கத் தோளில் சுமந்து கொண்டுதான் சிகரங்களில் ஏறி முன்னேறுகிறான். 

                பேரரசன் இராசரான் பெருமைகள் அவன் வேற்று நாடுகளை வென்றதில் மட்டுமில்லை; அவன் செய்த ஆட்சி முறையில் அடங்கியிருக்கின்றன. அக்காலத்தில் அவன் வேற்று நாடுகளை வெல்லவில்லை என்றால் வேற்று நாடுகள் தமிழ் நாட்டை வென்றிருக்கும். 

                பிற்காலச் சோழர் வீழ்ச்சிக்குப் பின் நவாபுகள், விசயநகர நாயக்கர்கள், மாராத்தியர்கள் என வேற்று இனத்தார்தாம் தமிழ் நாட்டை ஆக்கிரமித்துக் கூறு போட்டுக் கொண்டனர். வேற்று மொழிகளையும், வேற்றுப் பண்பாடுகளையும் இங்கு திணித்தனர். 

                இன்றைக்கு நகர்த்திட்டமிடல் குறித்துக் கற்பவர்கள் தெரிந்து கொள்வதற்குச் சோழர் காலத் தஞ்சை நகர் உருவாக்கம் பல செய்திகளைத் தன்னுள் வைத்திருக்கிறது. வீதி அமைப்பு, நகருக்குள் குளங்கள், அவற்றுக்கு ஆற்று நீர் வரும் நிலத்தடி வாய்க்கால்கள், அக்குளங்களிலிருந்து கழிவு நீர் வெளியேறும் நிலத்தடி வழிகள், நகரின் கழிவு நீர் (சாக்கடை நீர்) வெளியேறும் வழிகள், நகருக்குள் பூங்காக்கள், வணிக வீதிகள் என அத்தனையும் அன்று திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டன. நான்காயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் சிந்து வெளியில் திட்டமிட்ட நகரங்களை உருவாக்கிய அதே இனம்தான் மதுரை, பூம்புகார், காஞ்சி, தஞ்சை போன்ற நகரங்களை உருவாக்கியது. 

                கட்டடப் பொறியியலின் உச்சம் பெரிய கோயில் கட்டுமானம். அது அக்கால ஆன்மீகச் சின்னம்! 

                நீர்ப்பாசனப் பொறியியல் துறையில் உலகின் முதற்பெரும் சாதனை கரிகால் சோழன் கட்டிய கல்லணையும், வெட்டிய வெண்ணாறும்! பிற்காலச் சோழர்கள் எத்தனை புதிய ஆறுகள் வெட்டினர்! எத்தனை வகையான வாய்க்கால்கள் வெட்டினர்! அக் காலத்தில் அப்படிப்பட்ட பாசன வளர்ச்சி உலகில் வேறெங்கும் இல்லை. 

                உலகிலேயே முதல் முதலாக நில அளவை செய்தவன் இராசராசனே! உள்ளாட்சியின் முதல்நிலை வடிவமாக குடவோலை முறையைக் கொண்டு வந்தவர்கள் சோழர்கள். 

                தஞ்சைப் பெரிய கோயில் குடிமக்களின் பொருளியல் நடுவமாகவும் இருந்தது. அங்கு வங்கி முறையும் இருந்தது. 

                அப்பெரிய கோயில் எழுப்பப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 

                வீழ்ந்து கிடக்கும் தமிழினமே, நிமிர்ந்து பார் பெரிய கோயிலை! 

                நீ வாழ்ந்த வரலாறு தெரியும்! 

                அடிமைத் தளையை அறுத்தெறி! நீ மீண்டும் ஆள வேண்டும்! 

                பழைய அழுக்கு மூட்டைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, 

                புதிய சிகரம் நோக்கிப் புறப்படு! 

Pin It