‘சட்டி சடக்குன்னுச்சாம்; சாடை எனக்குன்னுச்சாம்’

குடும்பங்களில் ஆணாதிக்கம் மிக்கதும் உண்டு. பெண் கையோங்கியதும் உண்டு. சில குடும்பங்களில் பெண்கள் வாயில்லாப் பூச்சிகளாக எதிர்த் துப் பேசாத நிலையும் உண்டு. இப்பெண்களுக்குச் சினம் வராதா? வரும். வெளிப்படுத்த இயலாத சூழல். அந்நிலையில் புழங்கும் பாத்திரங்களில் காட்டுதல் வழக்கம். வேகமாக ஒலி எழ வைத்தல், போடுதல் நிகழும்; பிள்ளைகள் மீது காட்டுவதும் அடித்தலும் உண்டு. வெறுப்பைக் கணவரிடத்து மட்டுமின்றி, மாமியார்-நாத்தனார் முதலியவர்களிடத்து காட்டப்படுவதும் உண்டு.

முற்காலத்தில் மண்சட்டி, பானை, உலைமூடிகளை இனித் தொல்லியல் அகழாய்வுப் பொருள்களாய்க் காணலாம். உலோகப் பாத்திரங்கள் போல மண் கலங்களைக் கையாள இயலாது. தன் வேகத்தை அதில் காட்டினால் உடைந்துவிடும்.

ஆனாலும் தன் கோபத்தை எதில் காட்டுவது? பெண்களில் சாடை சொல்வதும், காட்டுவதும் மிகுதி. வீட்டில் உள்ளார் மீது கொண்ட வெறுப்பைச் சட்டி, பானைகளில் காட்டி ஆற்றிக் கொள்வார்கள். இதனை உணர்த்தும் பழமொழி: ‘சட்டி சடக்குன்னுச்சாம்; சாடை எனக்குன்னுச்சாம்’

அவசரமா உழுவப் போகிறேன்,

சோற்றோடு கொழுவைக் கொண்டுவா

உழத் தெரியாதவனுக்கு உழவுக்குடியில் இடமில்லா திருந்த காலம் ஒன்றிருந்தது. இன்று கலப்பை இல்லாத உழவுக்குடியே மிகுதி. உழவுக்குரிய ஏர், கலப்பை, நுகம், சோடுப்பு (உழுகயிறுகள்) முதலிய சொற்களும் வழக்கில் மறைந்து வருகின்றன. காலையில் எழுந்து கலப்பை தூக்கி உழப்போனது அந்தக் காலம்.

காலையில் எழுந்து காப்பிக் கடை தேடுவது இந்தக் காலம். காலையிலேயே உழப்போவான் கணவன். சில மணிநேரம் கழித்து உழப்போன மச்சானுக்கு ஒரு கூடையில் கஞ்சிக் கலயம் சுமந்து செல்வாள் மனைவி. உழப்போகும்போது கொழுவிணைத்த கலப்பை, சோடுப்பு (உழு கயிறுகள்) எடுத்து மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். கலப்பையில் கொழுவின்றி உழ இயலாது. ஓர் உழவாளியின் விரைவைக் கிண்டல் செய்கிறது ஒரு பழமொழி : ‘அவசரமா உழுவப் போகிறேன். சோற்றோடு கொழுவைக் கொண்டுவா’ என்றானாம்!’ போகிற அவசரத்தில் மறந்துவிட்டுத் திண்டாடுவதைப் பார்க்கலாமே!

உடம்பிளைத்து உடன்பிறந்தாள் வீட்டுக்கும் போகக் கூடாது

சிறு காய்ச்சல், தலைவலி என்றாலும் இன்று மருத்துவமனைக்கு ஓடுகிறோம். பல சோதனைகள் செய்து முழுத்தாளில் மருந்துகள் எழுதப்பட்ட சீட்டை மருந்துக்கடையில் தந்து கடை மருந்தை அள்ளிக் கொட்டுகிறோம் வயிற்றில். முந்தைய காலங்களில் கசாயத்தைக் குடித்துவிட்டு ஓய்வெடுத்தனர். உற்றார், உறவினர் இல்லத்திற்குப் போவதற்கும் காலவரையறை இருந்தது. ‘போகவர இருந்தால்தானே உறவு நீடிக்கும்’. உடன்பிறந்தார் வீட்டுக்குப் போக ஒருவரையும் கேட்க வேண்டாம். ஆனால் உடலுக்கு முடியாத போது அங்கும் போகக் கூடாதாம். ஏன்? விருந்தும் மருந்தும் மூன்று வேளைதானே! உடன்பிறந்தார் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாரா? உடல் நன்றாய் இருக்கும்போது உபசரிப்பும், உடல் நலக்கேட்டின் போது வெறுப்புக் காட்டுவதும், முகஞ்சுளிப்பதும் மனித இயல்புதானே! உடன்பிறந்தாள் இல்லமாயினும் மாதக் கணக்கில் தங்கி மருத்துவம் பார்க்கும்போது அவர்களும் உண்ணா மலும் உறங்காமலும் பார்ப்பது தொல்லையாய் விடுமே! அதனால், ‘உடம்பிளைத்து உடன்பிறந்தாள் வீட்டுக்கும் போகக் கூடாது’ என்பது நல்லுரைதானே!

வீட்டுக்கு வீடு வாசற்படி

சண்டை சச்சரவு இல்லா வீடுகள் உண்டா? வாய்க்கலப்பும் கைக்கலப்பும் நிகழ்வது சண்டை; வெறும் வாய்ச் சொல்லோடு அடங்குவது சச்சரவு. ஒத்துப் போகாமலும், விட்டுக் கொடுக்காமலும், எதிர் பார்த்தது கிட்டாமலும், வீம்பினாலும், மிதப்பாலும், மட்டந்தட்டுவதாலும், இளக்காரத்தாலும், இல்லாக் குறையாலும் இவை நிகழ்தலைக் காண்கிறோம்.

சண்டையில்லாமைக்கு ஒரே வழி அமைதி. அது வருவதற்குப் பல வழி. இவை இல்லாக் குடும்பம் இருக்குமா? ஊடலும் கூடலை மிகுக்கும் என்றனரே! அதுவும் உப்புப் போல அளவாய் இருக்க வேண்டும் என்றவரும் நம் வள்ளுவர் தானே! சண்டையும் சச்சரவும் எழுந்தால் உடனே அடங்க வேண்டும். திறந்த கதவு மூடப்படுவது போல. கதவு திறந்தே கிடந்தா... அல்லது மூடியே கிடந்தா... ஊரார் என்ன நினைப்பர்? போராடிய வீடு நீறாடிப் போகுமே! சிறு சிறு சண்டை சச்சரவு வந்த சுவடு தெரியாமல் வந்த வழியே போய்விட வேண்டும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’யல்லவா?

சல்லடை கேலி செய்ததாம்

ஊசியில் ஓட்டையென்று

பிறர் குற்றங்களைக் காண்பதுபோல் தம் குற்றத்தைக் காண்பார்க்குத் தீங்கு வருமோ, என வினவுகிறார் திருவள்ளுவர் (190). பிறர்க்குள்ள சிறு குற்றத்தை ஊரெங்கும் தூற்றுவார்க்கு (அரசியலாளர் போல்) தம் குற்றம் காண இயலாது. தன் குற்றத்தைக் கண்டவனே பிறர்க்கு வழிகாட்டி. இது எத்தனை பேரால் இயலும்? தன் முதுகு தனக்குத் தெரியாது தானே! ‘ஊரைத் திருத்துமுன் உன்னைத் திருத்து’ என்பது முன்னோர் மொழி. தன்னை உணர்ந்தவனே தலைவன். குற்றமில்லா மாந்தன் இல்லை. அதற்காகக் குற்றங்களைத் தெரிந்தே செய்யலாமா? தன்னிடம் உள்ள சிறு குற்றங்களையும் நீக்க வேண்டுமே! சிறு ஓட்டை பேரழிவைத் தந்துவிடுமே! குற்றமே உருவானவர் பலர், பண்பாள ராய்ப் பறைசாற்றும் செயல்களைச் செய்வதைப் பார்க்கிறோமே. பிறர் குற்றத்தைக் காணுமுன் தன் குற்றத்தை அறிதலே நன்று. பிறரிடம் உள்ள சிறு குற்றத்தைப் பெரிதாய்க் காண்பார்க்குத் தன்னிடம் உள்ள பெருங்குற்றங்களும் தோன்றாது. இப்பழ மொழியைப் பாருங்கள் : ‘சல்லடை கேலி செய்ததாம் ஊசியில் ஓட்டையென்று’

பேயோடாயினும் பிரிதல் அரிது

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது எல்லார்க்கும் தெரியும். பழகும் போதே நற்பழக்கமாய்ப் பழகி அதுவே வழக்கமாகிப் பின் ஒழுக்கமாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்துவது இது. நல்ல பழக்கத்தை எளிதில் விட்டாலும் தீய பழக்கத்தைக் கைவிடுதல் அரிதினும் அரிதே. அந்த அளவு அது நம்மோடு ஒட்டியிருக்குமாம். திருட்டுக் கைக்கு இருட்டிலும் கண் தெரியும் என்பர். ‘சென்ம வாசனை செருப்பால் அடித்தாலும் போகாது’ தீய பழக்கங்களைக் கைவிடல் இயலாது என்பதற்கு எத்தனையோ பழமொழிகள் உண்டு. ‘பேயோடாயினும் பிரிதல் அரிது’ அல்லவா?

சூரியனைப் பகைக்காதே; சோம்பி மடியாதே

சோம்பலை மடி என்றார் வள்ளுவர். சோம்பல் கொண்டவரையே மடியச் செய்துவிடும். சிலர் மடியை மடியாகவே (சோம்பலாகவே) கொண்டு ஒழுகுவாராம். அவரைப் பேதை என்கிறது ஒரு திருக்குறள்.  சூரியன் புறப்படும் முன் இரை தேட பறவைகள் எழுகின்றனவே. பகல் முழுதும் சிறு இரைக்கு அலைந்து பறந்தாலும் காலையில் எழுகின்றனவே.

இதனைப் பார்த்தும் எட்டு மணிக்கு மேலும் எழாத இளைஞர் உள்ளனர். பகல் முழுதும் கணினியில் பார்வை. இரவு உணவுக்குப் பின் தொலைக் காட்சி யிலும் கணினியிலும் அகலத்திரைக் கைப்பேசியிலும் திரைப்படம் முதலியன பார்வை. அதன் மூலம் ஓய்வு (ஸிமீறீணீஜ்) கொண்டு(?) கடைச் சாமத்தில் உறங்கத் தொடங்கினால் எப்படி வைகறை எழ இயலும்? இதனால் கண், மூளை, நரம்புகள், மனம், உடல் பாதிப்படையாவா? ஓய்வு என்பது வேலையை மாற்றிச் செய்தல் என்பவரும் உளர். சூரியன் எழுமுன் எழு. அது விழுமுன் வேலையை முடி என்பது இயல்பான வாழ்வு. அறிவியலால் முன்னேறிய நாட்டில் நள்ளிரவில் விழிப்புடன் வேலை செய்யும் நிலை உள்ளதே. ‘வைகறை துயிலெழப் பயிலுதல்’ வேண்டும் என்றார் திரு.வி.க. அதன் நன்மையை தருவதே இப்பழமொழி. ‘சூரியனைப் பகைக்காதே; சோம்பி மடியாதே’.