எகிப்திலும் ஹாங்காங்கிலும் இணைய தளத்தைப் பயன்படுத்தி இளையோர் திரண்டு போராடும் முயற்சிகள் வெற்றிகரமாக நடந்தேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசுகள் இணையதள பரப்புரைகள் மீது பாய்ந்தன.

இந்தியாவிலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008இன்படி, முகநூல்கள் வழியாகவும், பிற மாற்று ஊடகங்கள் வழியாகவும் அரசுக்கு எதிராகத் தகவல் பரிமாற்றம் செய்வோர் மீது அடக்குமுறைகள் பாய்ந்தன.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66-A அரசுக்கு எதிரான கருத்துப் பரப்புவோரை “எதிர்ப்புக் குரிய” ((Objectionable)) செய்திகளைப் பரப்புவதாக குற்றம்சாட்டி கைது செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்தது. மும்பை, புதுவை, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல இடங்களில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் [2013(12) SCC  73], இப்பிரிவு 66-A-வை சகட்டு மேனிக்குப் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடையாணை பிறப்பித்தது.

இச்சூழலில் ஈராக்கிலும், சிரியாவிலும் போர் நடத்திக் கொண்டிருக்கிற ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், பெங்களூரில் மேதி மசூர் பிஸ்வாஸ் என்ற வங்காள இளைஞர் கைது செய்யப் பட்டது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

பன்னாட்டு பயங்கரவாத அமைப்பான இசுலாமிய அரசு (ஐ.எஸ்.) அமைப்பு குறித்து, ஷாமி விட்னஸ் (Shammi Witness) என்ற ட்விட்டர் கணக்கின் மூலம், புகழ்ந்து எழுதியதாகவும், ஐ.எஸ். அமைப்பின் வெற்றிகள் குறித்தும் அவ்வமைப்பின் அரசியல் நோக்கங்கள் குறித்தும் பரப்புரை பாணியில் தகவல் வெளியிட்டதாக வும் அதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிரிவினைத் தடைச் சட்டப் பிரிவு - 39, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு - 125, தகவல் தொழில்நுட்பச் சட்டம் - 66-F ஆகியவற்றின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வழக்கை விசாரித்துவரும் பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் ஹேமநாத் நிம்பல்கர், “இவரையும் இவர் பற்றியும் விசாரித்த வகையில் இவர் மதரசா சென்றவரோ அரபி மொழிப் பயின்றவரோ அல்ல. நேரடியாக ஐ.எஸ். இயக்கத்தின் தலைமையோடு எந்தத் தொடர்பும் இவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நேரடியாக யாரிடமும் ஐ.எஸ். அமைப்பில் சேருமாறு சொன்னதாகவும் செய்தியில்லை. ஆயினும் இவரது ட்விட்டர் பரப்புரையில் ஈர்க்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் படித்த இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்திருக் கிறார்கள். அந்த வகையில்தான் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்கிறார்.

மேதி கைதுக்குப் பிறகு தான், இந்தியாவிலேயே ஐ.எஸ். அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப் பட்டு, தடை செய்யப்பட்டது. அவர் கைதாகும்போது, ஐ.எஸ். அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு அன்று.

வைகோ வழக்கில் உச்ச நீதிமன்றம், “ஓர் தடை செய் யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகப் பரப்புரை செய்வது, பயங்கரவாதச் செயல் அல்ல” என்று தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது.

மேதி இந்திய அரசுக்கு எதிராக கருத்துக் கூறி யதாகவோ, பரப்புரை செய்ததாகவோ ஐ.எஸ். அமைப்பு இந்தியாவில் செயல்பட வேண்டும் என கருத்துக் கூறியதாகவோ குற்றச்சாட்டு ஏதுமில்லை. பிரிவினைத் தடைச் சட்ட விதி -39ன்படி இவர் இந்தியாவின் ஆசிய நட்பு நாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டார் என்றே குற்றம் சாட்டப்படுகிறது.

இச்சூழலில், மேதி மசூர் பிஸ்வாஸ் மீதான வழக்கு ஒருதலைச்சார்பான பழிவாங்கும் நடவடிக்கை என்றே தெரிகிறது.

அமெரிக்க வல்லாதிக்க எதிர்ப்பு என்ற பெயரால் கிளம்பியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பிற மதத்தி னரையும், இசுலாமியர்களிலேயே பிற பிரிவினரையும் பச்சைப்படுகொலை செய்யும் அமைப்பாக இருக்கிறது என்பதையும், அது வளர்ந்த பின்புலத்தையும் ஏற் கெனவே பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம். அது வேறு.

ஆனால், தகவல் தொழிலநுட்பச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் போன்றவை எவ்வாறு அரசுக்கு எதிராக கருத்து உள்ளோர் மீது பாய வாய்ப்புண்டு என்பதற்கு இந்த வழக்கும் ஓர் சான்றாக அமைகிறது.

இது பற்றி வேறொரு வாய்ப்பில் விரிவாகப் பார்ப்போம்.