"ஓரினப் பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல" என்று தில்லி மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதித்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்கத் தீர்ப்பாகும் இது. ‘நாஸ் அறக்கட்டளை - எதிர்- தில்லி தேசியத் தலைநகர் ஆட்சிப்பகுதி அரசு மற்றும் பிறர்’ என்ற வழக்கில் அஜிஸ் பிரகாஷ்  எஸ் முரளிதர் ஆகியோர் கொண்ட தில்லி உயர்நீதிமன்ற ஆயம் 2009, சூலை 2 அன்று இத்தீர்ப்பை வழங்கியது. ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குரியக் குற்றச்செயலாக வரையறுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377 அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என விளக்கம் அளித்த நீதிபதிகள் அப்பிரிவு செல்லாது என ஆணை பிறப்பித்தனர்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 "இயற்கைக்கு மாறானக் குற்றங்கள்" என்ற வகையினத்தின் கீழ் ஓரினச் சேர்க்கையை வகைப்படுத்தி உள்ளது. ஆண் -ஆண் (Gay) பெண்- பெண் (Lesbian) பால் உறவுகள் பத்தாண்டுவரை தண்டனை பெறும் குற்றங்களாக இப்பிரிவில் குறிக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் (அரவாணிகள்) பாலுறவும் இவ்வாறு குற்றமாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றின் எல்லா காலத்திலும், எல்லா சமூகங்களிலும் ஓரினப் பாலுறவாளர்கள் சிறு எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் சனநாயகக் காலகட்டத்தில் சட்டங்கள் எழுதப்பட்டபோது இவர்களது பாலுறவு நடவடிக்கைகள் குற்றச் செயலாக வரையறுக்கப்பட்டன. எழுதப்பட்டச் சட்டம் கோலோச்சும் முதன்மையான சனநாயக நாடான அமெரிக்காவிலும் ஓரினப் பாலுறவு தண்டனைக்குரிய குற்றமாகவே வரையறுக்கப்பட்டது இதனை எதிர்த்து நியூயார்க்குக்கு அருகில் கிரீன்வீச் கிராமம் (Greenwich Village) எனும் ஊரில் 1969, ஜுன் 28 அன்று ஓரினச் சேர்க்கையாளர்களின் போராட்டம் நடைபெற்றது. ஓரினப் பாலுறவாளர்கள் சட்டத்தாலும், சமூகத்தாலும் விரட்டப்பட்டவர்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான கமுக்கப் புகலிடமாக கிரீன்விச் கிராமத்திலிருந்த ஸ்டோன்வால் என்ற விடுதி திகழ்ந்தது. ஆயினும் 1969, ஜுன் 28 அன்று இரவு அந்த விடுதியில் காவல்துறை தேடுதல்வேட்டை நடத்தி, ஓரினப் பாலுறவாளர்களைத் தாக்கிக் கைது செய்ய முயன்றது.

அதனை எதிர்த்து ஓரினப் பாலுறவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எதிர்தாக்குதல் நடத்தினர். அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் இதனை "ஸ்டோன்வால் எழுச்சி" என்று குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின பல்வேறு மாகாணங்களில் ஓரினச் சேர்க்கையைத் தண்டிக்கும் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. உலகம் முழுதும் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. பாலின ஒடுக்குமுறையில் இதுவும் ஒன்று என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பின. இதன் ஒரு வளர்ச்சிப் போக்காக 2007, மார்ச்சு 26 அன்று "பாலுறவு விருப்பங்கள் மற்றும் பாலின அடையாளங்கள் குறித்த சட்டங்கள் மீதான யோக்கியகர்த்தா கோட்பாடுகள் (Yogyakarta Principles on application to laws in relation to sexual orientation and Gender identity) என்ற பெயரில் 22 நாட்டு  வல்லுனர்கள்அறிக்கை வெளியானது.பாலுறவு விருப்பங்கள் , பாலின அடையாளங்கள் ஆகியவற்றில் உள்ள சில வேறுபட்ட தன்மைகளுக்காக யாருக்கும் மனித உரிமைகளை மறுக்கக் கூடாது என்பதே யோக்கியகர்த்தா கோட்பாட்டின் சாரம்.

இக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட 66 நாடுகளின் முன்மொழிவு ஐ.நா.பொதுப் பேரவையில் 2008, டிசம்பர் 26 அன்று வைக்கப்பட்டது.  அது விவாதத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் திருநங்கைகள், ஓரினப் பாலுறவாளர்களிடையே பணியாற்றி வரும் சில தொண்டு நிறுவனங்கள் இச்சிக்கலை விவாதத்திற்குக் கொணர்ந்தன. ஓரினப் பாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகள் (அரவாணிகள்) ஆகியோர்தான் எய்ட்ஸ் நோய்க்கு அதிகம் உள்ளாகிறார்கள். ஆயினும் இவர்கள் தண்டனைக்குப் பயந்து தங்கள் நோய் பற்றி வெளிப்படுத்தாமலும், மருத்துவம் செய்து கொள்ளாமலும் இருந்து விடுகிறார்கள் என இத்தொண்டு  நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. இவர்கள் காவல்துறையின் மோசமான அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பது கண்கூடு. இ.த.ச.377 இதற்கு வாய்ப்பளிக்கிறது.

நாஸ் அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு 2004- ஆம் ஆண்டு 377-க்கு எதிராக தில்லி மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் தான் 2009 ஜுலை 2 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. "வயது வந்த இருவர் எந்த நிர்ப்பந்தமும் இன்றி, தனிப்பட்ட இடத்தில், சொந்த விருப்பத்தின்பேரில் ஓரினப் பாலுறவில் ஈடுபட்டால் அது குற்றச் செயல் ஆகாது. இவ்வாறான உறவு தண்டனைக்குரிய குற்றம் என வரையறுக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்திய அரசமைப்பு விதி 21 வழங்கும் உயிர் வாழும் உரிமை, விதி 15 குறிக்கும்பாலினம் காரணமாக புறக்கணிக்கக்கூடாது என்ற கொள்கை, விதி 14 வழங்கும் சம உரிமை ஆகியவற்றை இ.த.ச.377 மீறுகிறது" என்று தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இ.த.ச.பிரிவு 377 பிற்போக்கானது. மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற திறனாய்வு சரியானது. இப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மதத்தின் பெயராலோ, மரபின் பெயராலோ இத்தீர்ப்பை எதிர்த்துக் குரலெழுப்புவது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் இவ்வழக்கு இப்போது உள்ளது. இந்திய அரசு இதில் தடுமாற்றம் ஏதுமின்றி 377 நீக்கத்திற்கு முன்வரவேண்டும்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு திருநங்கைகள் இப்போதுதான் சில உரிமைகளை பெறத் தொடங்கியிருக்கிறார்கள். கடவுச் சீட்டுகளில் "ஆண்/பெண்/பிறர்" என்று இப்போது குறிக்கப்படுகிறது. ‘பிறர்’ என்ற வகையினத்தில் அவர்கள் தங்களைக் குறிப்பிட்டுக்கொள்ள முடியும். தமிழக அரசு திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்துள்ளது. ஆயினும் திருநங்கைகள் மூன்றாம் பாலினம் என்பதோ, ஓரினச் சேர்க்கையும் இயல்பான பாலுறவுதான் என்பதோ ஏற்க முடியாதது. இவை உடலியல், உளவியல் பிறழ்ச்சிகள்தாம். இந்த பிறழ்ச்சிகள் காரணமாக இவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாவதோ, தண்டனைக்குள்ளாவதோ கூடாது என்பதே நம் கருத்து. அந்த வகையில் இ.த.ச. 377 நீக்கப்படுவது  சரியானது.

Pin It