முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்ட கேரள அரசு நில அளவை செய்ய நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் 24.09.09 அன்று பிற்பகல் தமிழக அரசு சார்பில் ஓர் அதிகாரி மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு கேரள அரசுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சு ஜெயராம் ரமேஷ் உறுதி அளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவ்வாறு நடுவண் அமைச்சர் கூறவில்லை என்ற செய்தி ஆங்கில நாளேடான இந்துவில்(25.09.09) வந்துள்ளது. “தொழில்நுட்பக் காரணங்களுக்காக நில அளவை செய்ய கேரள அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டப்படுவது பற்றி எங்கள் துறை எதுவும் சொல்வதற்கில்லை” என்று நடுவண் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். உண்மைக்கு மாறான செய்தியைத் தமிழக அரசு உலவவிட்டது ஏன்?

கேரள அரசு புதிய அணை கட்ட மறைமுக ஆதரவு தருவது போல் தமிழக அரசின் தவறான செய்திப் பரப்பல் அமைந்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் நடுவண் அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கு எழுதிய கடிதத்தில், “புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு செய்வது தொடர்பாக கேரள அரசுக்கு அனுமதி அளிப்பதற்கு முன், தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டும்” என்று பொத்தாம் பொதுவில் கூறியுள்ளார். அனுமதி கொடுக்கக் கூடாது என்று கோரவில்லை. குறிப்பான கோரிக்கை எதையும் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் “தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டும்” என்று பட்டும் படாமல் கடிதம் எழுதிய முதலமைச்சர் கருணாநிதி, அதிகாரியை விட்டு, பொய்த்தகவல் தரச்சொன்னது முல்லைப் பெரியாற்றில் தமிழகத்திற்குள்ள சட்டப்படியான உரிமையைக் கைக்கழுவ முதலமைச்சர் அணியமாக உள்ளார் என்ற அவர் மனநிலையை அம்பலப்படுத்திவிட்டது.

கேரள அரசு புதிய அணை கட்டுவதாகச் சொல்வது ஒரு சூழ்ச்சி வலை தவிர வேறல்ல. புதிய அணை என்று போக்குக் காட்டி, பழைய அணையை இடிப்பதே அதன் திட்டம். பழைய அணை இடிக்கப்பட்டு விட்டால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு 999 ஆண்டுகளுக்கு அனுபோக உரிமை வழங்கியுள்ள ஒப்பந்தம் பழைய அணைக்குத் தானே தவிர புதிய அணைக்கு இல்லை என்று கேரளம் வல்லடி வழக்கு பேசும். பிறகு புதிய அணை கட்டும் என்பதற்கும் உறுதி கிடையாது. இந்திய அரசு மறைமுகமாகக் கேரள அரசின் புதிய அணைத் திட்டத்திற்கு உதவுகிறது.

ஆனால் தமிழக அரசு “கேரளத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” என்று ஜெய்ராம் ரமேஷ் சொன்னதாகப் பொய்ச் செய்தியைப் பரப்புவது, இந்திய அரசையும் கேரள அரசையும் கண்டித்துத் தமிழ்நாட்டில் போராட்டங்கள் திசை திருப்புவதற்குச் செய்யும் தந்திரம் ஆகும். அது மட்டுமின்றி, கேரள அரசுக்கு மறைமுகமாக உதவி செய்வதும் ஆகும்; இனத்துரோகமும் ஆகும்.

இந்தியக் கொடி ஏற்ற மறுப்பு: தமிழரசன் – பாரதி ஆறுமாதங்களாக கோவைச் சிறையில்

ஈழத்தமிழர்களைக் கொன்று குருதிக் குளியல் நடத்திய இந்திய அரசின் கொடியையும் சிங்கள அரசின் கொடியையும் எரிக்கும் போராட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரண்டும் 25.04.2009 அன்று நடத்தின. பல்வேறு இடங்களில் இப்போராட்டம் நடந்தது.

தஞ்சை, ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இப்போராட்டம் நடத்தியவர்களைத் தளைப்படுத்தி சிறையிலடைத்தனர் காவல்துறையினர். தஞ்சை, ஈரோடு ஆகிய இடங்களில் சிறைப்பட்டோர்வழக்கமான நிபந்தனைப் பிணையில் வெளியில் வந்தனர். ஆனால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களுக்குப் பிணைகொடுக்க, இந்திய அரசுக் கொடியை ஒருவாரத்திற்கு அவரவர் வீட்டு வாசலில் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி நிபந்தனை விதித்தார்.

சட்டத்திற்கும், பொது அறிவிற்கும் புறம்பான இந்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். கோவையில் சிறைப்பட்ட எட்டு தோழர்களில் இரண்டுபேர் மட்டும் - உச்சநீதிமன்றம் வரை செல்வது என்றும் மற்றவர்களைப் பிணையில் எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த இரு தோழர்கள் பா. தமிழரசன் (த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர்), வே.பாரதி (த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர்) ஆகியோர்ஆவர்.

அவ்விரு தோழர்களின் கொள்கைப்பற்றையும் மன உறுதியையும் தமிழகமெங்குமுள்ள தமிழ் இன உணர்வாளர்கள் வியந்து பாராட்டுகிறார்கள். அவர்களின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் 29.09.2009 அன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞர்கள் ராஜீவ் ரூபஸ், பாரிவேந்தன், பிரபு சுப்ரமணியம், சந்தன் இராமமூர்த்தி , லத்திகா ஆகியோர்சிறப்பு விடுப்பு மனுவிற்கான வாதுரையை அணியம் செய்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத் மலானி இவ்வழக்கில் இலவயமாக வாதிட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு வைகோ ஏற்பாடு செய்துள்ளார். வழக்கறிஞர்களுக்கும் திரு வைகோ அவர்களுக்கும் நம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

கொள்கை உரத்திற்கும், மனத் துணிவிற்கும் எடுத்துக்காட்டாய் சிறையில் வதியும் தமிழரசன் - பாரதி இருவர்க்கும் நம் வாழ்த்துகள்! 

Pin It