’இனம்’ என்பது ஒரு மக்களின் மரபுக் கூறு சார்ந்ததோ அல்லது பண்பாடு சார்ந்ததோ மட்டும் அல்ல; அது ஒரு மக்கள் கூட்டம் மற்றொரு மக்கள் கூட்டத்தை ஒடுக்கி மேலாண்மை செய்யும் ஒரு ஒடுக்குமுறைக்கான கருத்தியலாகவும்பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே இன ஒடுக்குமுறையும் இருந்து வந்திருக்கிறது.

அது போன்றே, ஒரு மக்கள் கூட்டத்தை அணைத்து ஓர்மை உணர்வூட்ட உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் சக்தியாகவும் இன உணர்வு இருந்து வந்திருக்கிறது. இன்றுவரை வரலாற்றின் உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது. மனிதகுலம் மரபினங்களாகத் தோற்றம் பெற்று இன்று தேசிய இனங்களாகப் படிமலர்ச்சி பெற்றுள்ளது. உடல்சார் பண்புகளால் இனி ஓரினத்தை அடையாளம் காண முடியாது. தவிர்க்கவியலாதபடி மரபினக் கலப்புகளுடன் உருவாகிவிட்ட தேசிய இனங்களை மொழிகளே அடையாளப்படுத்துகின்றன.

ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுடைய தேசத்தைப் படைத்துக் கொள்ள உரிமை படைத்தது. அவ்வாறு தனக்கான தேசத்தைப் படைத்த தேசிய இனங்கள் உரிமையோடு வாழ்கின்றன. சில தேசிய இனங்கள் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன.

உலகெங்கும் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டங்கள் உலகின் உளச் சான்றை உலுக்காமல் இல்லை. 1980களுக்குப் பின் தேசிய இனப் போராட்டங்களுக்கு ஆதரவான தீர்மானங்கள் ஐ.நா அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1980-ல் ஐ.நா நியமித்த வல்லுநர் குழுவின் அறிக்கை இப்படிக் கூறுகிறது;

‘தெளிவான வரையறுக்கப் பட்ட பகுதியில் தன்னாட்சி நடத்திய வரலாறும், தனித்த பண்பாடும், இழந்த தன்னாட்சியை மீண்டும் பெறுவதற்கான பொது விருப்பமும் ஆற்றலும் உள்ள (தேசிய இன) மக்களே தன்னுரிமை பெறத் தகுதி பெற்றோர் ஆவர்’

இந்த அறிக்கையை ஐ.நா அங்கீகரித்துள்ளது.இன்று ஈழ விடுதலைப் போர் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், எதிர்காலத்தில் ஈழ விடுதலைக்கு ஏற்பளிப்பு கிடைக்கும். ஏனெனில், ஈழ தேசிய இனம் தன் அடையாளத்தை உண்ர்ந்திருக்கிறது; கோரிக்கையை வைத்துப் போராடுகிறது. தமிழகத்தில் வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் நிலை என்ன?

தமிழர்கள் இன்னும் தமிழ்த் தேச உரிமை மீட்பின் தேவையை உரிய அளவில் உணரவில்லை. தான் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தைக் கூட தமிழ்த் தேசிய இனம் இன்னும் உரியவாறு உணர்ந்து கொள்ளவில்லை.

’தமிழினம்’ என்று தம்மை அமைத்துக் கொண்டாலும் அதன் பொருள் பற்றிய புரிதல் இல்லை. சிலர் தம் சாதிகளை ‘இனம்’ என்று அழைக்கிறார்கள்.சிலர் தாம் பெரு வாரியான மக்களைக் கொண்ட சாதிகளைச் சேர்ந்தவராக இருந்தால் ‘துணை தேசியம்’ என்று அழைத்துக் கொள்வதில் பெருமை பாராட்டு கிறார்கள்.

மரபினத்துக்கும், பண்பாட்டு இனத்துக்கும், தேசிய இனத்துக்கும் வேறுபாடு அறியா நிலையில் தமிழர்கள் கிடக்கையில், தமிழினம் தனது தேசிய இன அடையாளத்தை அறிந்து தன்னுரிமைக் கோரிக்கையோ அல்லது தமிழ்த் தேச விடுதலைக் கோரிக்கையோ முன்வைத்துப் போராடப்போவது எப்போது?

இந்திய அரசியலில் செயற்படு சக்திகளாக விளங்கிவரும் ‘ஆரியர், திராவிடர், தமிழர்’ குறித்த கோட்பாடுகள் மற்றும் வரையறை களை வரலாற்றியல் துணையுடன் அளிக்கும் முயற்சியே இக்கட்டுரை.

* * * * * * * *

பதினெட்டாம் நூற்றாண்டும், பத்தொன்பதாம் நூற்றாண்டும் மாந்தவியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமானவை. உலக மானிட இனத்தைப் பெரும் பிரிவுகளாக, தனித் தனி இனங்களாகப் (Race) பிரித்தறிந்து, மாந்தவியல் (Anthropology) என்ற துறையை உருவாக்கியவர் ஜொஹான் பிரெடரிக் ப்ளூமென்பாக் (Johann Ferederich Blumenach கி.பி.1752- 1840) என்ற ஜெர்மானிய மருத்துவர் மற்றும் அறிவியலாளர்.

அவருக்கு முன்னமே சிலர் இனம் பற்றி ஆய்வு செய்திருந்தாலும், அவர் எழுதிய ’de genesis humani varities native (the natural varities of mankind) - மனித வர்க்கத்தின் இயற்கையான வகைகள் என்ற நூல்தான் (1776) உடல் சார்மாந்தவியலின் (Physical Anthropology) முதல் நூல் ஆகும்.இந்நூல் ஐரோப்பாவில் பெரும் ஆர்வத்தைக் கிளறிவிட்டது. இதுவே 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட ‘இனங்கள்’ பற்றிய பிற ஆய்வுகளுக்கு வழி வகுத்தது.

புளூமென்பாக் 60 மண்டை யோடுகளைச் சேகரித்து அவற்றை ஆய்வு செய்தார். பல இனங்களுக்கிடையில் மண்டை யோட்டின் அளவிலும் அமைப்பிலும் வேறுபாடுகள் இருப்பதாகக் கருதினார்.அவருடைய மண்டை யோட்டுத் தகவல்கள் தொகுக்கப்பெற்று Collectio Craniorum Diversarum Gentium’ என்ற பெயரில் (1790-1828) நூலாக வெளிவந்தது.

இதுவே ‘craniometric study’ எனும் மண்டையோட்டு அளவின்படியான ஆய்வுமுறையை உருவாக்கித்தந்தது. தமது ஆய்வின் அடிப் படையில் ப்ளூமென்பாக்உலகில் ஐந்து மனித இனங்கள் இருப்பதாகக் கருதினார். அவை;

1. காகசியன் அல்லது வெள்ளை இனம் (The Caucasian)

2. மங்கோலியன் (The Mangolian) அல்லது மஞ்சள் இனம்

3. மலேயன் (The Malayan) அல்லது பழுப்பு இனம்

4. எத்தியோப்பியன் (The Ethiopian) அல்லது கருப்பு இனம்

5. அமெரிக்கன் (The American) அல்லது சிவப்பு இனம்

புளூமென்பாக் ’மங்கோலியர்’ என்ற பிரிவில் கிழக்கு ஆசியர்களையும், மத்திய ஆசிய மக்கள் பிரிவுகளையும் கூட சேர்த்திருந்தார். அமெரிக்கப் பூர்வ குடியினரான செவ்விந்தியர்கள் ஒரு தனித்த இனம் என்றே கருதினார். ஆனால் அவர்கள் வெள்ளை இனத்துக்குக் கீழ்மையானவர்கள் என்று அவர் கருதவில்லை.

புளூமென்பாக்கின் ஆய்வில் ஒரு மனிதத் தொகுப்பின் தோலின் நிறம், மண்டையோட்டின் அளவு ஆகியவை அந்த இனத்தின் பண்புகளுடன் தொடர்பு படுத்தப்பட்டது. இவ்வாறு உடல்சார் கூறுகளின் அடிப்படையில் இனங்கள் பிரிக்கப்பட்டன. புளூமென் பாகுக்கு முன்பும் இனம் சார் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. பிரெஞ்சு மருத்துவரான பிராங்காய் பெர்னியர் (Francois Bernier) 1684 ஆம் ஆண்டு தமது நூலை ( (A New Division Of The Earth, According To The Different Species Or Races Of Man Who Inhabit It -- பிரெஞ்சு மொழி நூலின் பெயர் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது) வெளியிட்டார்.

இந்த நூலில்தான் முதல் முதலாக Race எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. பெர்னியர் மனித இனத்தை வகை பிரிக்க தோலின் நிறம் போன்றவற்றையே எடுத்துக்கொண்டார்.

’உயிரியல்சார் மாந்தவியல் (Biological anthropology) ஆய்வு களில் தோலின் நிறம் எலும்பு அமைப்புகள், உடல் உயர்வளவு, தலை அமைப்பு, இரத்தப் பண்புகள், உடல்சார் கூறுகள் முதலிய அனைத்துக் கூறுகளும் பயன்படுத்தப் படுகின்றன’. (வாழ்வியற் களஞ்சியம் தொகுதி -4, தஞ்சை பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991, பக்.579)

பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகள், உலக மக்களை மூன்று மரபினங்களாகப் பிரித்தன. பின்னர் நான்காவதான பிரிவும் சேர்க்கப்பட்டது. அவை;

1. காக்கேசியர் (Caucasoid)

2. நீக்ராய்டு (Negroid)

3. மங்கோலாய்டு (Mangoloid)

4. ஆஸ்ட்ரலாய்டு (Australoid)

இவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. உதாரணமாக காக்கேசியர் பிரிவுக்குள் நார்டிக் (Nordic), ஆல்பைன் (Alpine), மத்தியத் தரைக் கடல் வகையினர் (Mediterranean Type) ஆகியவை அடங்கும். ‘குருதித் தூய்மையுள்ள ஆரியர்கள்’ எனத் தங்களை அழைத்துக்கொண்ட ஜெர்மானியர் தங்களை ‘நார்டிக்’ பிரிவினராக அடையாளப்படுத்திக் கொண்டனர். வட இந்தியாவில் உள்ள மக்கள் மத்திய தரைக்கடல் பகுதி வகையினர் என அடையாளப் படுத்தப்பட்டனர்.

தொன்மைக் காலம் தொட்டு மனித இனம் தோன்றியது முதல் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த மனிதத் தொகுப்புகளை அந்தந்த பகுதியின் இயற்கையமைப்பு, தட்பவெப்ப நிலை ஆகியவையே வடிவமைத்தன. தொடக்க நிலையில் அந்தந்த நிலப் பகுதியில் இனக் கலப்பில்லாமல் குருதித் தூய்மை உடையனவாக இந்த இனங்கள் இயற்கையால் வடிவமைக்கப்பட்டன. இந்த இனங்களை நாம் ’மானிட மரபினங்கள்’ ( Anthropological Race) என்று வழங்கலாம்.

குருதித் துய்மையுள்ள மானிட மரபினங்களை இப்போது காணவியலாது. ‘மரபினம்’ என்பதே இனக் கலப்பினால் இல்லாதொழிந்தது. ’இனம்’ (Race) குறித்து பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் கூறும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது:

‘பவுதிக மானுடவியலில், ஒரு காலத்தில் பரவாலகப் பயன் படுத்தப்பட்ட சொல் வம்சாவளியாக, ஒரு தலைமுறை யிலிருந்து அடுத்த தலைமுறைக்குத் தொடரப்படக் கூடிய தன்மைகளைக் கொண்ட குழு அல்லது கூட்டம் என்று மனிதர்களைப் பகுக்கக் கூடிய வகை அல்லது வகைகள். அந்தந்த வகையில் (அதாவது இனத்தில்) இருக்கக் கூடிய தன்மைகளின் தொகுப்பு, அந்தந்த வகையைத் தனியாக அடையாளம் காட்டும் விதத்திலும், இந்தத் தன்மைகள் அமைய வேண்டும் (எ.கா.காகஸாய்ட், மங்கோலாய்ட், நீக்ராய்ட்)’

‘இன்றைய காலக் கட்டத்தில் இந்தச் சொல்லுக்கு விஞ்ஞானப்பூர்வ பண்பு எதுவும் இல்லை. ஏனெனில் தலைமுடியின் அமைப்பு, உடலமைப்பின் அளவுகள் போன்றவை உள்ளிட்ட பழையவகை வேறுபாட்டு முறைகள், இப்போது மாற்றப்பட்டு விட்டன. அவற்றுக்குப் பதிலாக டி.என்.ஏ ஒப்பீடு, ரத்த வகைகள், அமினோ அமில வெளியேற்றம், என்ஸைம் குறைபாடுகள் ஆகியவை குறித்த ஜீன் அமைப்பு மற்றும் நிகழ்வு ஒப்பீடு போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. அனேகமாக, அனைத்து மக்கள் சமூகங்களும் ஒரே மாதிரி இருப்பதனால் இனம் என்ற கோட்பட்டை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை...’

‘தற்போது நிலவி வரும் சமூகங்கள் யாவுமே மரபணு ரீதியாக (ஜீன் ரீதியாக) கலப்புச் சமூகங்களே ஆகும். இவற்றுக்குள் ஏதேனும் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை அந்த இனத்தைத் தனிமைப்படுத்திக் காட்டக்கூடிய அளவுக்குப் பெரியவையும் இல்லை. ‘இனம்’ என்பது இன்றைய நிலையில் ஒரு சமுதாயக் குறியீடு மட்டுமே ஆகும்’

(பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், தொகுதி-1, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சென்னை, 2007, பக்;345)

18ஆம் நூற்றாண்டில் உயிரினங்கள் முதல் முதலாக வகைபாடு செய்யப்பட்டபோது, மனித இனப் பிரிவுகளையும் வகைபாடு செய்ய முயற்சிக்கப்பட்டது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் லின்னேயஸ் (Linnaeus, 1707 - 1778) உயிரின வகைப்பாட்டியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். அவரே தாவர வர்க்கத்தையும், விலங்கினத்தையும் வகைப்பாடு செய்தவர். ஒத்த தன்மைகளையுடைய விலங்கினங்களைத் ‘தொகுதி’ (Phylum) என்றும் அதனுள் வேறுபாடுகள் அடிப்படையில் மேலும் பிரித்து ‘வகுப்பு’(Class) என்றும், அதன் உட்பிரிவுகளை ’இனம்’ (Genus) என்றும், மேலும் வேறுபாடுகள் அடிப்படையில் இறுதி பிரிவாக ’சிறப்பினம்’ (Species) என்றும் பெயரிட்டார்.

இதுநாள்வரை, மனிதனும் அவனது முழு உருவற்ற மூதாதையும் ‘Homo’ என்னும் இனத்திலும், மனிதனை ‘Sapiens’ என்ற சிறப்பினத்திலும் “Species’ சேர்த்தார். இன்றைய மனிதன் ‘Homo Sapiens’ என்று அறியப்படுகிறான். லின்னேயஸ் வகைப்பாட்டின்படி ’குரங்கு, வாலில்லா குரங்கு, மனிதன்’ ஆகியன ஓரினத்தில் வைக்கப்படுகின்றன.

மனிதன் வரை உயிரினங்களை வகைப்பாடு செய்த லின்னேயசால் மனிதர்களுக்குள் உள்ள பிரிவுகளை வகைப்பாடு செய்ய இயலவில்லை. அவர் பல கண்டங்களில் வாழும் மக்களிடையே உள்ள வேறுபாடுகளை வெளிப்படுத்தினார். லின்னேயஸ், 1758 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘Systeme Naturae’ என்ற தமது நூலின் பத்தாவது பதிப்பில் ’ஹோமோ சேப்பியன்’ என்ற மனிதனுக்குள் அடங்கும் உட்பிரிவுகளாக அமெரிக்கானஸ் (Americanus), ஏசியாடிக்ஸ் (Asiatics), ஆப்ரிகானஸ் (Aficanus) மற்றும் யூரோப்பியானஸ் (Europinaus) - ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இயற்கையாகக் கடலால் பிரிக்கப்படிருந்தமையால் இக்கண்டங்களில் வாழும் மாந்தர்களுள் மாறுதல்கள் அமைந்தன என்பது தெளிவாகும்.

இயற்கைச் சூழலில் மனிதத் தொகுப்பு ஒவ்வொன்றும் தான் வாழும் நிலப்பரப்பின் தன்மைக்கேற்ப உடற்கூறுகளையும் பண்புகளையும் பெற்றுவிடுகின்றன. இந்த அடிப்படையில் மாந்த இனம் புவிசார் இனங்கள் (Geographical Races) எனப் பிரிக்கப்பட்டனர். அத்தகு புவிசார் இனங்கள் ஒன்பது என மானிடவியாலாளர் வகை செய்தனர். அவை;

1. ஆப்பிரிக்கர்
2. அமெரிக்க இந்தியர்
3. ஆசியர்
4. ஆஸ்திரேலியர்
5. ஐரோப்பியர்
6. இந்தியர்
7. மெலனீசியர்
8. மைக்ரோனீசியர்
9. பாலினீசியர்

மேலும் பத்தாவது இனமாக Hottentot மற்றும் Bushmen ஆகியோரை சில மாந்தவியலாளர் சேர்த்துள்ளனர். (இனங்கள் - மனிதர்’ வாழ்வியற் களஞ்சியம், தொகுதி -1, தஞ்சைப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991, பக் 568)

ஆனால், மாந்த இனத்தின் முறையான, நிறைவான மரபின வகைப்பாடாக இதை ஏற்கவியலாது. மரபினக் கலப்பு நிகழ்ந்து கொண்டேயிருக்கும் நிலையில் இனங்களைப் பண்பாடுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்துவது சரியானதாக இருக்கும். அத்தகைய போக்கு 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.

இன வகைபாட்டுக்குள் ஒளிந்திருந்த இனப்பாகுபாட்டு வெறி

‘மாந்த இனத்தை வகைபாடு செய்தல்’ என்பதே ஐரோப்பியர் பல பகுதிகளைத் தம் காலனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தபோது நிகழத் தொடங்கியது. ஐரோப்பியரின் குடியேற்றப் பகுதிகளில் உள்ள மனிதர்களைப் படிப்பது என்பதில் இந்த ஆய்வு தொடங்கியது. தம் ஆளுகைக்குக் கீழ் வந்த புதிய நிலப்பரப்பின் தாவர வர்க்கத்தையும், விலங்கினங்களையும் படிப்பது போன்றே அங்குள்ள மனிதர்கள், மொழி, பண்பாடு, அம்மக்களின் கைக்கருவிகள், கைவினைப் பொருட்கள் ஆகியனவும் படிக்கப்பட்டன. அருங்காட்சி யகங்களில் குடியேற்றப்பகுதி மக்களின் கலைப்பொருட்கள் டினோசர் எலும்புகளுடனேயே வைக்கப்பட்டன. அவை கலைப் பொருட்களாகக் கூட கருதப்படவில்லை.

பிரெஞ்சு இயற்கையியல் அறிவியலாளரான ஜியார்ஜ் பப்பன் (George Buffon) தமது ஆய்வுகளை ‘Histoire Naturalle’ என்னும் பெயருடன் 44 தொகுதிகளாக (1749- 1804) வெளியிட்டார். அதில் மனிதனுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருந்தார். அதில் மனிதனை ஒரு விலங்கினமாகச் (Zoological Species) சேர்த்திருந்தார். பப்பன் மொத்த மனிதரையும் விலங்கினமாகச் சேர்த்தார். மனிதர்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகளுக்கு இயற்கை காரணமானதை விவரித்தார். ஆனால் பல ஆய்வாளர்கள் குடியேற்றப்பகுதி மக்களை விலங்குகளாகவே கருதினார்.

அமெரிக்கக் கண்டம் கண்டு பிடிக்கப்பட்ட போது செவ்விந்திய மக்களை விலங்கினமாகவே ஐரோப்பியர் கருதினர். 1537 ஆம் ஆண்டு போப் மூன்றாம் பால் ‘எல்லை கடந்த கடவுள்’ (The Transcendent God) என்ற பெயரில் தம் ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி செவ்விந்தியர்கள் மனிதர்கள் என்றும் அவர்களுக்கு உயிர் உண்டு என்றும் அவர்கள் கிறித்துவத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்றும் அறிவித்தார்.

(Encyclopaedia Britannica – Macropaedia, Vol-1, Encyclo paedia Britannica Inc., Chicago 1977, பக்கஎண் 980)

19ஆம் நூற்றாண்டில் இனவியல் (Ethnology) வலுப்பெறும் போதே, இன ஒடுக்குமுறையும் நிகழந்துகொண்டிருந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரு ஜாக்சன் (1829-1837) ஒரு ஜனநாயகவாதியாகக் கருதப்பட்டவர். மிக அதிக எண்ணிக்கையில் செவ்விந்தியர்களைப் படுகொலை செய்தவரும் அவரே. செவ்விந்தியர்களைக் கொல்வது அல்லது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குள் அவர்களை விரட்டி விடுவது என்ற போக்கு நிலவியது. அப்போது வெளியான நீதிமன்றத் தீர்ப்புகளும் கருப்பர்களுக்கு உரிமையை சட்டப்பூர்வமாகவே மறுத்தன.

இக்காலக் கட்டத்தில் வளர்ச்சியடைந்த மாந்தவியல் பற்றிய அமெரிக்க ஆய்வுப் போக்கு (American School of Anthropology) மாந்தர்களின் பல் இனத்தோற்றம் (Polygenism on the doctrine of multiple origin) என்ற கருத்தை ஆதரித்தது. அதாவது கிறித்தவம் கூறிய ‘கடவுள் படைப்பு’ என்ற மனிதனின் தோற்றத்தின் ஒற்றைத் தன்மையை மறுக்கும் வகையில் மக்கள் பல இடங்களில் தோற்றம் கண்டனர் என்று கூறியது. ஆனால் இதன் மூலம் கருப்பினத்தவரின் அடிமை நிலையை நியாயப்படுத்தியது.

அமெரிக்கர்கள் ஜொசையா நாட் (Josiah Nott) மற்றும் கிளைடன் (Glidden) எழுதிய 800 பக்கங்களைக் கொண்ட நூலான மனிதவர்க்கத்தின் வகைகள்’ (Types of Mankind) 1854ல் வெளியானது. இது மனித இனத்துக்குள் வேறுபாடுகளைப் பேசி வெறுப்புணர்வை வளர்த்தெடுத்தது. அந்த நூற்றாண்டுக்குள் எட்டு பதிப்புகள் வெளிவந்தன.1860 முதல் 1865 வரை நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டுப் போருக்கான விதைகள் இவ்வகை ஆய்வுகளிலும் இருந்தன.

1774 ல் இங்கிலாந்தில் எட்வர்ட் லாங் (Edward Long) தமது ‘ஜமாய்க்கா வரலாறு’ என்ற நூலை வெளியிட்டார். இதில் கருப்பினத்தவரை ஐரோப்பியர் களுக்கும் மனிதக் குரங்குக்கும் இடையில் வைத்தார். குரங்குகளுக்கும் ஐரோப்பியருக்கும் இடையிலான இணைப்பாகக் கருப்பினத்தை கருதினார். இது இனப்பாகுபாட்டு உணர்வின் வெளிப்பாடாகும். ஒருபுறம் மாந்தவியல் ஆய்வு என்ற பெயரில் இன ஒடுக்குமுறைக் கருத்தியல் வளர்த்தெடுக்கப் பட்டபோது, மறுபுறம் இன அடிமைத்தனத்திற்கு எதிரான கருத்துகளும் வளர்ந்து கொண்டிருந்தன. அவை இனவியல் ஆய்வுகளில் வெளிப்பட்டன.

அறிவொளிக் காலமும் இனவியல் ஆய்வின் திசை மாற்றமும்:

வரலாற்றில் 18 ஆம் நூற்றாண்டை அறிவொளிக் காலம் (Age of Enlightment) என்று குறிப்பிடுவோம். ஏனெனில் இக்காலக்கட்டத்தில் அறிஞர்களும் அறிவியலாளர்களும் ‘சமயம், மரபு ஆகியவற்றை விட அறிவியலும் பகுத்தறிவுமே முக்கியமானவை’ என்ற கருத்தை முன்வைத்தனர். இது பல்வேறு தளங்களிலும் பார்வை மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதுவரை பேசப்படாத கருப்பொருட்கள் இப்போது பேசப்பட்டன.

மனித சமூகங்களின் வளர்ச்சி எவ்விதம் ‘எளிய’ அமைப்புகளா யிருந்தவை பன்மைத்துவத்தன்மை பெற்ற சமூகமாக (Complex Societies) மாறியது என்பதை அறியும் போக்கு எழுந்தது. 16 ஆம் நூற்றாண்டில் ஜீன் போதின் (Jean Bodin) மிஷ்ல் மாண்டெய்னே (Michel de Mantaigne) 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes), மற்றும் ஜான் லாக் (John Locke) ஆகியோரும் 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சிஸ் மான்டெஸ்கியூ (Francis Montesquieu) ரூசோ (Rousseau) மற்றும் வால்டேர் (Voltaire) ஆகியோரும் விதைத்த சிந்தனைகள் மனிதகுலம் பற்றிய ஆய்வுகளுக்கான புதிய சூழலை உருவாக்கியிருந்தது.

இச்சூழலில் வெளிவந்த சார்லஸ் டார்வின், லெவிஸ் ஹென்றி மார்கன் ஆகியோரின் ஆய்வுகள் மாந்தவியல் ஆய்வுப் போக்கைப் புரட்டிப் போட்டன. தொடர்ந்து வந்த காரல் மார்க்சின் ஆய்வு மானுட சமத்துவத்தை உள்ளீடாகக் கொண்டது.

(தொடரும்...)

- முனைவர் த.செயராமன்

Pin It