அறிவியல் வளர்ச்சியின் வீரியத்தை, முழுவதுமாக அபகரித்துக் கொண்ட முதலாளியம், அவ்வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டதன் மூலம் இலாப வெறியுடன் கூத்தாடுகின்றது. இதன் உச்சகட்டமாகத் தான், சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3ஜி அலைவரிசைப் பயன்பாடு.

வடநாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே நடுவண் அரசின் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்புத் துறை நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அலைவரிசை சேவை, சென்னையில் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1860களில் உலகெங்கும் உள்ள தந்திச் சேவைகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டு தொலைத் தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union- ITU) எனப்படுகின்ற அமைப்பு, தற்பொழுது, உலகளவில் மின்காந்த அலைவரிசைகளை தொலைத் தொடர்புப் பணிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கும் அவற்றை ஒதுக்கீடு செய்து வருகின்றது.

இவ்வமைப்பு, அலைவரிசைகளை அதன் தன்மையையும், பயன்பாட்டையும் வைத்து, அவற்றை ஒன்றாம் தலைமுறை, இரண்டாம் தலைமுறை என பிரிக்கின்றது. முதல் தலைமுறை என்பது கம்பியில்லாத் தொலைத் தொடர்புக் கருவிகளான வாக்கி - டாக்கி போன்ற கருவிகளின் செயல்பாட்டை உள்ளடக்கியது. இரண்டாம் தலைமுறை என்பது, நாம் இன்றைக்கு பெரும்பான்மையாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் கம்பியில்லாக் கைபேசிக் கருவிகளைக் கொண்டது.

அவ்வகையில் “மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம்” எனப்படுகின்ற Third Generation – 3G என்ற அலைவரிசைப் பயன்பாடு, நவீன வசதிகளைக் கொண்டதாகும். குரலொலிகளையும், குறுந்தகவல்களையும், படங்களையும் வெவ்வேறு நேரங்களில் தனித்தனியே பரிமாறிக் கொள்ளும் வகையில் இருக்கின்ற, தற்போதைய இரண்டாம் தலைமுறை கைபேசி அலைவரிசைக்கு பதிலாக, இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வலிமை கொண்ட 3ஜி மூன்றாம் தலைமுறை அலைவரிசைக்கு மாற்றப்படும்.

இதன் மூலம் இனி இணையம், தொலைக்காட்சி, பேசுபவரை பார்த்துக் கொண்டே பேச வழிவகுக்கும் ‘ஒளிப்படக் கலந்துரையாடல்’ (வீடியோ கான்பிரன்சிங்) வசதி, போன்ற பல சேவைகளை நாம் கைபேசியிலேயே பெறலாம்.

இரண்டாம் தலைமுறை கைபேசிகள் பரிமாறிக் கொள்ளும் தகவலுக்கான இடத்தை(Space) இந்த 3ஜி அலைவரிசையின் மூலம், அதிகரிப்பதால், அதிகமானத் தகவல்களை நாம் பறிமாறிக் கொள்ள முடிகின்றது. எனவே தான், இந்த அலைசரிசையை வைத்து நன்கு சம்பாதிக்க இயலும் என்பதால் இவற்றை வாங்குவதில், பன்னாட்டு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இவ்வகை புதிய அலை வரிசையை, உலகமய பன்னாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் விலை பேசவும், இதற்கான அனுமதி உள்ளிட்டவற்றை பேரம் பேசித் தரகு வேலை புரிவதற்கும், அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத்பவார், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 10 பேரைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை கடந்த மார்ச் மாதம் நடுவண் அரசு நியமித்திருந்தது நினைவிருக்கலாம். இதில், திட்டக்குழுத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் அடக்கம்.

நாட்டின் உணவு தானியக் கையிருப்பு குறைந்து வருவது குறித்தோ, விவசாயிகள் தற்கொலை குறித்து விசாரிக்கவோ எந்த சிறப்பு அமைச்சர்க் குழுவையும் அமைக்காத இந்த அரசு, முதலாளிகளுடன் பேரம் பேச மட்டும் சிறப்பு அமைச்சர் குழுக்களை அமைக்கிறது.

இவ்வாறான, கைபேசி களுக்கான இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்வதில் தான், நடுவண் தகவல் தொடர்புத் துறை அமைச்சரான இராசா, சுமார் 60,000 கோடி ரூபாய் பணத்தை ஊழல் செய்து சுருட்டியிருக்கிறார். ‘சுதந்திர’ இந்தியாவின் வரலாற்றில் இவ்வளவுப் பெரியத் தொகை சுருட்டப்பட்டது, இதுவே முதல் முறை என்ற போதும், தொலைத் தொடர்புத் துறையில் நடைபெறும் ஊழல்கள் இது ஒன்றும் புதிதல்ல.

கலாநிதி மாறன் குடும்பத்தினருக்கும், கருணாநிதிக்கும் இடையே தகராறு நிலவிய போது, மாறன் சகோதரர்களின் சன் தொலைக்காட்சி, தினகரன் இதழ் ஆகியவை இந்த ஊழல் குறித்து பெருமளவில் பெரிதாக செய்தி வெளியிட்டன. அமைச்சர் இராசாவும், தயாநிதி மாறன் பதவியில் இருந்த போது அரசுக்கு சுமார் 10, 000 கோடி நட்டம் ஏற்பட்டதை அம்பலப்படுத்தினார்.

முதலாளிகள் எப்பொழுதும், அவர்களைப் பாதுகாக்கும் முதலாளிய அரசு இயந்திரத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை. இதன் பின்னணியில் தான் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் சமரசம் ‘பேசி’க் கொண்டது, மாறன் குடும்பம். அமைச்சர் இராசாவின் அலைக்கற்றை ஊழலை, மாறன் குடும்பமும், ஊடகங்களும் அத்தோடு மறந்தன.

1980களில் பெரும்பாலும் கம்பிகளைக் கொண்டே இயங்கி வந்த தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இன்று கம்பியில்லா தொழில்நட்பமாக(Wireless Technology) முன்னேறி இருக்கிறது. இந்த முன்னேற்றம் வெறும் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமல்ல, உலகமய முதலாளிகளின் பணச் சுரண்டலுக்கான தேடலின் வளர்ச்சியும் கூட.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 52.56 கோடி மக்கள் தொலைபேசி, கைபேசி இணைப்புகளை பெற்றிருக்கின்றனர். மேலும், மாதத்திற்கு சுமார் 1 கோடிய 30 இலட்சம் புதிய கைபேசி இணைப்புகளை பெற்றுத் தரும் பெரும் சந்தையாக, இந்திய தொலைத் தொடர்புத் துறை சந்தை விளங்குகின்றது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால், உலகமய நிறுவனங்களுக்கு இத்துறையில் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகின்றன என்பது எளிதில் விளங்கும்.

1990களில் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில், இலாபத்தில் இயங்கிய அரசுத்துறை நிறுவனங்களை வெளிப்படையாக, முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது எப்படி என கண்டறிந்து, நடைமுறைப் படுத்துவதை, நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. தொடங்கி வைத்தது. அப்பொழுது தான்,பெருமளவில் அரசே ஆதிக்கம் செலுத்தி வந்த தொலைத் தொடர்புத் துறையை தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் முறைகளைக் சட்டரீதியாகக் கண்டறிந்து, தொலைத் தொடர்புத் துறை ஊழல் முறைகேடுகளுக்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது.

உலகமயத்தின் வரவால், உலக வங்கி, பன்னாட்டுத் தொலைத் தொடர்பு ஒன்றியம்(ITU), இந்திய முதலாளிகளின் அமைப்பு (CII) போன்ற பல்வேறு முதலாளிய அமைப்புகள் தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய முதலீடு என்ற பெயரில், தனியார்மயத்தை ஏற்படுத்த நடுவண் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தன. இதன் பின்னணியில் தான், இன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய நிறுவனங்களின் முதலீட்டு வரம்பு 74 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதை நாம்
காண்கிறோம்.

நரசிம்மராவ், தனியார் தொலைத் தொடர்புத் துறையை முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிடுவதற்கு உதவியாக, 1994இல் ‘தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை’ (National Telecommunications Policy [NTP]) என்ற கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அப்போது நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம், வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை(சி.பி.ஐ) 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 3.61 கோடி ரூபாயை கட்டுக்கட்டாகக் கைப்பற்றியது.

விசாரித்ததில், இதனை அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் சீத்தாராம் கேசரி தான் தம்மிடம் கொடுத்ததாக அப்பாவித்தனமாகக் கூறினார், சுக்ராம். இது குறித்து, சி.பி.ஐ. நடத்திய தொடர் விசாரணையின் விளைவாக தொலைத் தொடர்புத் துறையில் நடந்த முறைகேடுகள் அம்பலமாயின. ஹைதராபாத் நகரைச் சேர்ந்த, அட்வான்ஸ்டு ரேடியோ மாஸ்ட்ஸ்(Advanced Radio Masts - ARM) என்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு முறைகேடாக தொலைத் தொடர்புக் கருவிகள் வழங்கியதில் ஊழல் நடந்தது தெரியவந்தது. இந்த மோசடி நிறுவனத்தை நடத்துபவர் ஏற்கெனவே அமைச்சர் சுக்ராமுடன் இணைந்து ரேடியோ ரிலே சிஸ்டம்ஸ் Radio Relay Systems எனப்படும் தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் நடந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு தனியார் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, தரகு வேலை பார்த்து வரும், தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு ஆணையம் (Telecom Regulatory Authority of India -TRAI) என்ற அமைப்பு, இதன் பின்னர் தான் 1997 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் அரசின் இந்த ஊழல்களில், ‘பாடம்’ படித்த பா.ச.க., தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமய பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தவும், சுரண்டவும் சட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அப்பொழுது நடுவண் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், இந்தத் தரகு வேலைகளின் மூலம் பெருமளவு முதலாளிகளை வசப்படுத்தி, கட்சிக்கு நிதித் திரட்டினார். ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இன்டிகாம் என தொடர்ந்து வடநாட்டு பன்னாட்டுத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சந்தை மட்டுமே இங்கு விரிவுபட வேண்டும் என்ற உள்நோக்குடன், அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியை வேண்டுமென்றே மட்டுப்படுத்தியப் ‘பெருமை’, இவரையே சேரும்.

இக் காலகட்டத்தில் தான், அயல்நாட்டுத் தொலைபேசி அழைப்பு களை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் றுவனம் மோசடி செய்தது அம்பலமானது. இது கண்டுபிடிக்கப்பட்டு அந்நிறு வனத்திற்கு விதிக்கப்பட்ட சிறு அபராதத் தொகையும் கூட இரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு ஊழல்களைக் கடந்து தான், அதன் உச்சகட்டமாக அமைச்சர் இராசா நடத்திய சட்டப்பூர்வமான ஊழலும் நடந்தேறியிருக்கிறது. அமைச்சர் இராசா, திரும்பத் திரும்ப கூறி வருவது, நடந்தவை அனைத்தும் சட்டரீதியாகத் தான் நடந்தேறியுள்ளது, இவை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும் என்பதைத் தான். சட்டரீதியாகவே நடத்தப்பட்டுள்ள இந்த ஊழலில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பங்குள்ளது என்ற அளவில் தான் அவரதுக் கூற்றை புரிந்து கொள்ள முடிகிறது. தி.மு.க.விற்கும், காங்கிரசிற்குமான அந்த புரிந்துணர்வு அண்மையில் கூட அம்பலப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை சிக்கலில் நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக கருணாநிதி கண்டனக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்த சில நாட்களிலேயே, அமைச்சர் இராசாவின் அலுவலகம் மத்திய புலனாய்வுத் துறையினரால்(சி.பி.ஐ.) சோதனையிடப்பட்டது. அதன் பின்னர், நிலைமையை புரிந்து கொண்ட கருணாநிதி அக்கூட்டத்தை இரத்து செய்தார். ஆக, தி.மு.க.வின் இந்த அலைக்கற்றை ஊழல் குறித்து காங்கிரஸ் பேசாது. காங்கிரசின் அடாவடித்தனங்கள் குறித்து தி.மு.க.வும் பேசாது. இது தான் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ராசா கூறும் ‘சட்டப்படியான’ இவ்ஊழல், நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள முறை நாம் அறிந்தது தான். பொதுப்படையான ஏலம் விடப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அலைவரிசைகளை, முதலில் வரும் நிறுவனத்திற்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், தனக்கென அலுவலகம் கூட இல்லாத போலி நிறுவனங்களுக்கான ஸ்வான், யுனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றது, அமைச்சர் இராசாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.

இந்த அலைவரிசையை 2001ஆம் ஆண்டு என்ன விலைக்கு ஏலம் விட்டார்களோ அதே விலையில் தான் இப்பொழுதும் ஏலம் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சுமார் 60,000கோடி மதிப்புள்ள அலைவரிசைகளை வெறும் 3000 கோடிக்கு விற்றனர். தனக்கென சொந்தத் தொலைத் தொடர்புக் கருவிக் கூட இல்லாத நிறுவனங்களுக்கு தான் இதுவும் விற்கப்பட்டது. அலைவரிசையை பெற்றுக் கொண்டதைக் காரணம் காட்டி, அந்த போலி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தங்களது பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை மட்டும் விற்று சுமார் 5500 கோடிக்கும் மேல் சம்பாதித்தன.

இந்த நிறுவனங்களின் பங்குகள் பலவும் கருணாநிதி குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலின் போது மக்களுக்கு வாரி இரைக்கப்பட்ட பணம், இவை போன்ற ஊழல் கொள்ளையிலிருந்து செலவு செய்யப்பட்டது தான் என்று நாம் ஊகித்தால் அது தவறல்ல.

தற்பொழுது, அரசுத்தறையின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள 3ஜி எனப்படுகின்ற இந்த புதிய அலைவரிசைப் பயன்பாட்டை வைத்து பெருமளவில் இலாபம் பார்க்க, பன்னாட்டு தகவல் தொடர்பு நிறுவனங்கள் அனுமதி வேண்டிக் காத்துக் கிடக்கின்றன. இந்த அனுமதிக்கான ஏலங்களிலும் நிச்சயம் ஊழல் நிறைந்திருக்கும் என்று நாம் சந்தேகமின்றி நம்பலாம்.

முதலாளிகளின் இலாப வேட்கை மக்களைக் குதறுகின்ற இந்நேரத்தில், மண்ணுக்கேற்ற மாற்றுப் பொருளாதாரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியும், மாற்றுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

- க.அருணபாரதி

Pin It