நூல் மதிப்புரை

வெளியிடாதவரை வெறும் கருத்து; வெளியிட்ட பின் அது ஒரு பௌதீக சக்தி. இது கலைவடிவாக இருந்தால் வலிமைமிக்கதாகிவிடுகிறது. அதுவே திரைக்கலை - சினிமா - எனும் போது ஆட்கொள்ளும் - ஆட்டுவிக்கும் ஆற்றல் நிறைந்ததாகிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் சினிமா பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கண்டுகொண்டிருக்கிறது. ஆனால் அதன் துவக்கக் காலத்தில் - இந்தியாவில் எப்படி கால் வைத்தது - மக்கள் மனங்களில் நுழைந்தது - இன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெறும் வரலாறாகச் சொல்லாமல் - தனித்தனியான, வெவ்வேறு சாதனை மனிதர்கள் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றிய கட்டுரைகள் மூலம் கூறுகிற வித்தியாசமான முயற்சி - சினிமா - சில மனிதர்களும் சில சர்ச்சைகளும்!

நாடகத்தில் நடிப்பதற்கே பெண் நடிகை கிடைக்காத காலத்தில் தமிழ்த்திரைக்கு முதல் கதாநாயகி எப்படிக் கிடைத்தார். என்னென்ன சாதித்தார் என்ற துவக்கமே ஒரு மாறுதலான அணுகுமுறைதான்.

பேசாப்படங்களில் நடித்து தன் படங்களை பேச வைத்தவர் சார்லி சாப்ளின். தென்னகத்தின் சாப்ளின் என்று புகழ்பெற்று விளங்கும் கலைவாணரோ பேசியும் பாடியும் பகுத்தறிவுச் சிந்தனையையும் விஞ்ஞானக் கருத்துக்களையும் பரப்பி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

நாடகத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவுக்குப் போய் மீண்டும் 12 ஆண்டுகாலம் சுமார் ஒரு வனவாச காலம் நாடகத்துக்கே வந்து அதன் பிறகும் திரைக்குச் சென்று பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிய நடிகவேள் எம்.ஆர்.ராதா.

சினிமா தனது களம் என்று கருதியதால் பரம்பரை புரோகிதத் தொழிலை விட்டு மும்பை சென்று புதிய காமிரா இறக்குமதி செய்து, எப்படி படம் எடுப்பது என்று கற்றுக் கொள்வதற்காக பட்டாணி விதையை ஊன்றி அது முளைத்து வளர வளர பயம் பிடித்து இயக்கத்தை கற்று முதல் இந்திய பேசும் படம் எடுத்த தாதாசாகேப் பால்கே. படத்துடன் முதல் ஆவணப்படம் எடுத்தது மற்றொரு சாதனை.

நிலப்பிரபுத்துவக் கொடுமையை தன்னுடைய ஆங்கூர் (நாற்று) திரைப்படத்தின் மூலம் சித்தரித்துக் காட்டி 'இணைச் சினிமா' எனும் புதிய பாணியை கலைப்படமும் ஜனரஞ்சகமும் கலந்து பாணியை புகுத்திய இயக்குநர் சியாம் பெனகல்.

தமிழ்த் திரை உலகின் பார்முலா படங்களின் கதாநாயகன் எம்ஜிஆரின் ஆளுமை - அவரது கதை காட்டும் நற்செய்திகள் என்று மாறுதலான அணுகல்.

நடிப்பில் புதிய பரிமாணத்தை இன்றும் காண்பித்துக் கொண்டிருக்கும் கலைஞானி கமல்ஹாசன்.

நமது நடிகவேள் நாடகத்தை உயர்வாகக் கருதியது போல ஹாலிவுட்டிலும் கருதியவர் டக்ளஸ் ஃபேர் பாங்க்ஸ். "இது (ஒரு லட்சத்து 4 ஆயிரம் டாலர்) மிகப்பெரிய தொகைதான் என்று எனக்கும் தெரிகிறது. ஆனாலும் என்னை சினிமாவில் அல்லவா நடிக்க அழைக்கிறீர்கள்" என்று கூறியதாலேயே அவரது கருத்தோட்டம் எப்படியிருந்தது என்பது புரியும் அதன்பின் சினிமா ராஜாவாக விளங்கியது தனிக்கதை.

பிஸ்மில்லாகான் - செனாய் இசை மேதை - மறைந்த போது பத்திரிகை ஊடகங்கள் அவர் இந்து கோவில்களில் இசைநிகழ்ச்சி நடத்தினார் என்று புகழ்ந்து கூறியது அவரை  - அவரது கலைத்திறனை பாராட்டாமல் மதக் கண்ணோட்டத்தோடு அணுகியது பற்றிய விமர்சனம்.

நாடகமே உலகம் என்றிருந்த தாய்மொழியாம் சத்திஸ்கரில் கதை எழுதிய இடதுசாரிச் சிந்தனையாளர் - இப்டாவின் தனகர்த்தர். நடிகர் மதவெறியர்களால் தாக்குதலுக்குள்ளான ஹபீப் தன்வீர்.

இவர்களைப் பற்றி எல்லாம் சிறப்பாக அறியத் தந்திருக்கிறார் சோழ.நாகராஜன் தனது நூலில். அத்துடன் நடிகை பத்மபிரியாவை இயக்குநர் சாமி கண்ணத்தில் அறைந்ததை ஆணாதிக்க வெளிப்பாடாகப் பார்த்திருப்பதும் படபூஜைகளின்போது திரைத்துறையினர் பின்பற்றும் மூடப்பழக்கங்களும், கதைக்காக இல்லாமல் வெளிநாட்டு லொகேஷன் தேடும் போக்கையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகி அந்த சர்ச்சைகளை ஆக்கப்பூர்வமாக விவாதித்திருக்கிறார்.

"வழக்கமாக, தமிழில் சினிமா பற்றிய புத்தகங்கள் ஒற்றை நோக்கோடு வரும். ஆனால் இப்புத்தகம் பல கோணங்களைப் பதிவு செய்திருக்கிறது" என்பது இந்த நூல் பற்றிய அணிந்துரை. இது நடிகர் கமல்ஹாசனால் பாராட்டப்பட்ட, முற்போக்கு எண்ணங்களைக் கொண்ட திரைக்கலைஞர் நாசர் அவர்கள் வழங்கிய மிக நுணுக்கமான, நேர்த்தியான விமர்சனம். அவரது அணிந்துரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கண்ணியத்துடனும் உண்மையுடனும் அமைந்தவை.

சிறந்த சிறுபத்திரிகைளில் ஒன்றான புதிய ஆசிரியன் இதழில்வெளிவந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பான இந்த நூலை வெளியிட்டிருக்கும் தழல் பதிப்பகம் பாராட்டுக்குரியது. அட்டையும் அச்சும் அழகாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. இந்நூலில் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாய் உள்ளன. தாராளமாய் வாங்கிப் படிக்கலாம்.

- ப.முருகன்

வெளியீடு :
தழல் பதிப்பகம்
25, பாண்டியன் நகர் 3வது தெரு,
கரிசல்குளம்,
மதுரை - 625 018.
விலை : ரூ.30.