நாற்பது ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திடும் செம்மலர் இதழுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில், இலக்கியத் துறையில் மக்களின் நலன்களை உறுதியாக உயர்த்திப்பிடிப்பதில் செம்மலர், மகத்தான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. இன்றைய தினம் பெருமுதலாளித்துவ ஊடகங்கள் பணம் கொடுத்து செய்திகளைப் போட வைத்திட வும், இடதுசாரிகளுக்கு எதிராக விஷமத்தனமான தாக்குதலை மூர்க்கமாகத் தொடுத்திருக்கக்கூடிய சூழலில், செம்மலர் போன்ற ஆக்கபூர்வமான இதழ்களின் பங்களிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

அதன் தொடர்ந்த வளர்ச்சிக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

பிரகாஷ் காரத்

பொதுச் செயலாளர் – சிபிஎம்

 நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட செம்மலர் இலக்கிய இதழ் தமிழக இலக்கிய வரலாற்றில் தனது முத்திரையைப் பதித்துள்ளது. முற்போக்கு இலக்கியத்தை மக்களுக்கு முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பாத்திரத்தை அது வகித்து வருகிறது. உலகமய, தாராளமயக் கொள்கை வேகமாக அமல்படுத்தப்பட்டு வரும் இன்றையச் சூழலில் நமது தேசத்தின் மீது படையெடுத்திருப்பது அந்நிய மூலதனம் மட்டுமல்ல, அதோடு இணைந்து வருவது அந்நிய ஏகாதிபத்திய கலாச்சாரமும்கூட.

இலக்கியம் என்பது பண்பாட்டின் ஓர் அங்கமே. எனவே, தேசத்தினுடைய, தமிழகத்தினுடைய பாரம்பர்யமான பண்பாட்டைப் பாதுகாப்பதோடு சமூக மாற்றத்திற்கு ஏற்றவகையில் புதிய பண்பாட்டை உருவாக்குவதிலும் செம்மலர் இதழுக்கு முக்கியப் பங்கு உள்ளது. 40 ஆண்டு பங்களிப்பை முடித்து 41ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறபோது, முன்னைக் காட்டிலும் அதிகமான அளவில், தமிழ் இலக்கியத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் மகத்தான பங்களிப்பைச் செம்மலர் அளித்திட வாழ்த்துகிறேன்.

ஜி. ராமகிருஷ்ணன்

தமிழ்நாடு மாநிலச் செயலாளர் – சிபிஎம்

பண்பாடு என்பது மனிதகுல வரலாற்றில் முக்கியமானதோர் அங்கம். இலக்கியம் என்பது பண்பாட்டின் முக்கியமானதோர் அங்கம். இது வரலாற் றில் உயிர்த்துடிப்பான பங்கினை ஆற்றுகிறது. அனைத்து சமூகங்களிலுமே ஆதிக்கப் பண்பாடு எப் போதும் ஆளும் வர்க்கங்களின் நலன்களையே பிரதிபலிக்கின்றன. சுரண்டும் வர்க்கங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் சுரண்டப்படும் வர்க்கத்தாரை வென்றெடுப்பதற்கும் இத்தகைய ஆதிக்கப் பண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, பண்பாட்டுத்துறையும் வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டிய முக்கியமானதோர் அரங்கமாகும். தொழிலாளர் வர்க்கம் சமூக மாற்றத் திற்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது பண்பாட்டுத் துறையிலும் முற்போக்கான மாற்றம் வேண்டும் என்பதைத் தனியே கூற வேண்டிய தேவையில்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட செம்மலர் தமிழ் இலக்கிய மாத இதழ், இப்போராட்டத் தில் முக்கியமானதோர் பங்களிப்பினை ஆற்றி இப்போது 41 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக் கிறது. அது தன்னுடைய உள்ளடக்கத்தின் மூலமாக முற்போக்கு மற்றும் தொழிலாளர் வர்க்கப் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என்றும் அதன் மூலமாக தற்போதைய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அடக்கப் பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திடும் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்திடும் என்றும் நான் எதிர்பார்க் கிறேன்.

41ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திடும் செம்மலர் இதழை என் மனதின் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன். செம்மலர் தொடர்ந்து மக்களின் நலன் களுக்கு பணியாற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சீத்தாராம் யெச்சூரி

அரசியல் தலைமைக்குழு – சிபிஎம்

தமிழ்க் கலை இலக்கிய உலகில், செம்மலர் மாத இதழ் 40 ஆண்டுகள் நிறைவு செய்து 41 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. மறைந்த முதுபெரும் தோழர் கே. முத்தையா அவர்கள் செம்மலர் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை இந்நல்ல நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

கலை இலக்கியத்தின் நோக்கமும் பயனும் மனிதகுல முன்னேற்றத்திற்குத் தொண்டு செய்வதே யாகும். அந்த அடிப்படையில் கடந்த 40 ஆண்டுகளில் செம்மலர் எழுத்தாளர்கள் மக்கள்இயக்கங்களோடு இணைந்து நின்று, இலக்கியங்களைப் படைத்தார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்ற மக்கள் நடத்துகின்ற இயக்கங்களில் வெறும் பார்வையாளர் களாக இல்லாமல் பங்காளிகளாக இருந்து இலக்கியத்தைப் படைத்தார்கள். தமிழ்ச் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டிற்காகவும் மட்டுமல்ல, ஏகாதிபத்தியம், ஏகபோகம், சுரண்டல், மதவெறி ஆகியவற்றிற்கு எதிராகவும் செம்மலர் எழுத்தாளர்கள் இலக்கியம் படைத்தார்கள்.

ஜனரஞ்சகமாக வெளிவருவதாகச் சொல்லப்படும் பத்திரிகைகள் அழகுப் போட்டியைப் பற்றிய செய்தி களையும், மாடல் அழகிகளின் பேட்டிகளையும், சிவப்பு விளக்குப் பிரதேசங்களை இந்திரபுரியாகக் காட்டும் போக்கையும் கணிசமான அளவுக்குப் பெருக்கி இருக்கின்றன. பெண்களை வெறும் படுக்கையறைப் பாவைகளாக்க முயலும் பிற்போக்கு சக்திகளின் சுயநலப் போக்கிற்குப் பெண்கள் இரையாகாது இச்சமுதாயத்தை அடியோடு மாற்றியமைப்பதில், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாக நிற்கச் செய்வதில், செம்மலர் தனக்குரிய பங்கை இனிதே ஆற்றி வந்திருக்கிறது.

வர்க்க பேதமுள்ள சமுதாயத்தில், வர்க்க பேதமற்ற கலை இலக்கியம் இருக்க முடியாதென்பதை மனத்தில் நிறுத்தி, செம்மலர் கடந்த நாற்பதாண்டுகளாக செவ்வனே இயங்கி வந்திருக்கிறது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில், கல்கி, ஆனந்த விகடன் ஆகியவை தரமான இதழ்கள் என்றும், குமுதம் போன்றவை பொழுதுபோக்கு இதழ்கள் என்றும் சராசரி வாசகர்கள் பேசக் கேட்டதுண்டு. இன்றோ அனைத்து இதழ்களுமே வெறும் வியாபார நோக்கத்தோடு சினிமா செய்திகளை மையமாகக் கொண்டு நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கைகளைப் பரப்பி வாசகர்களின் மூளையை மழுங்கச் செய்வது என்ற நோக்கோடு பவனி வருவதைப் பார்க்கிறோம்.

இத்தகு சூழலில் செம்மலர் 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் நிமிர்ந்து நின்று வீரநடை போடுகிறது, இத்தகு சாதனைகள் மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.

கே. வரதராசன்

அரசியல் தலைமைக்குழு – சிபிஎம்

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென அமைத்துக் கொண்ட பாதையில் முற்போக்கு லட்சியங்களை மக்களிடையே விளக்குவதற்காகவும், பரப்புவதற் காகவும் தன் பயணத்தைத் தொடங்கிய செம்மலர் நாற்பதாண்டுகளாக அந்தப் பணியை நிறைவேற்றி இன்று தனது 41 வது ஆண்டில் காலடி எடுத்துவைப்பது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மனித நேயம், ஜனநாயகம், சமுதாயச் சீர்திருத்தம் ஆகிய குறிக் கோள்களை ஏந்தியபடி தமிழகத்தின் கலை-இலக்கியக் களத்தில் ஒரு புதிய வெளிச்சத்தையே செம்மலர் பாய்ச்சியது என்றால் மிகையில்லை.

விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் வாழ்க்கையிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை செம்மலர் படைப்புகள் சித்தரித்து வந்துள்ளன. சித்தரிப்புடன் நில்லாமல் அவற்றுக்கு ஒரு சரியான தீர்வைச் சுட்டிக்காட்டும் திசைவழியில் செம்மலர் பெருமளவுக்கு முன்னேறியுள்ளது. பல்வேறு அரசியல் - சமுதாய நிலைமைகளை எதிர்கொண்ட செம்மலர் ஏடு, சிறுகதைகள், புதினங்கள், பாடல்கள், கவிதைகள் என பல வகைகளிலும் தமிழ் இலக்கிய உலகத்திற்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் அரும்பணியாற்றியிருக்கிறது; இவற்றில் பல வெற்றி களை நிலைநாட்டியுள்ளது.

தீண்டாமைக் கொடுமை, சாதிப்பாகுபாடு, மதவெறி, பெண்ணடிமைத்தனம் ஆகிய நாட்டின் மிகப்பெரும் அவமானங்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவதி லும், பெண்ணுரிமை, மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை ஆகிய லட்சியங்களை முன்னிறுத்துவதிலும் செம்மலர் பெரும் சேவை செய்துவந்துள்ளது. பல புதிய முற்போக்குப் படைப்பாளிகளை தமிழ் கலை-இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டி யிருப்பதும், தொடர்ந்து அடையாளம் காட்டிவருவதும் செம்மலர் ஏட்டின் தனிப்பெருமை.

வருங்காலத்தில் அனைத்துப் பகுதி மக்களின் வாழ்க்கையிலும் ஆழமாக ஊடுறுவிச் சென்று, அவர் களது போராட்டங்களைச் சித்தரிப்பதோடு, உளவியல் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் எதிர்மறை தாக்கங் களை முறியடிப்பதிலும் முற்போக்கு - ஜனநாயக இயக்கங்களுக்கு செம்மலர் தொடர்ந்து துணை நிற்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. இன்றைய சமூக யதார்த்தங்களை வெளிப்படுத்தி, அதன் மூலம் சரியான மாற்றுப் பாதைக்கான நம்பிக்கை உணர்வை விதைப்பதில் செம்மலர் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று விழைகிறேன்.

செம்மலர் முன்னேற்றத்தில் உளமார்ந்த ஈடுபாட்டு டன் பங்களித்து வரும் ஆசிரியர் குழுவினர், ஊழியர் கள், படைப்பாளிகள், பங்கேற்பாளர்கள், வாசகர்கள் ஆகியோருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு என் விருப்பம் ஒன்றையும் முன்வைக்கி றேன்: தமிழ் கலை-இலக்கிய உலகில் செம்மலர் ஒரு முதல்தர ஏடாக மேலும் மேலும் வளர்ந்து செழித்திடச் செய்யுங்கள் என்பதே அந்த விருப்பம்.

என். சங்கரய்யா

தலைவர்

மத்திய கட்டுப்பாட்டுக் குழு – சிபிஎம்

செம்மலர் மாதஇதழ் துவங்கி 41 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையே ஒரு பெரும் சாதனையாக நான் கருதுகிறேன். வாசகர்களுக்கு மார்க்சிய சித்தாந்தத்தை எளிய முறையில் புரியவைப் பதற்கும், இன்றைய நிலையில் அதை பொருத்திப் பார்ப்பதற்கும் அதன் சேவை விலை மதிக்க முடியாததாகும். இந்த நேரத்தில் அதன் செய்திப் பிரிவிற்கும், நிருபர்களுக்கும், கட்டுரையாளர்களுக்கும், அச்சக தொழிலாளர்களுக்கும் அதை ஊக்குவித்த வாசகர் களுக்கும் எனது புரட்சி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 41 வது ஆண்டில் அதன் விற்பனை மேலும் பெருக வேண்டுமென விரும்புகிறேன்.

ஆர். உமாநாத்

மத்தியக் குழு - சிபிஎம்

உழைக்கும் மக்கள் தங்களது உழைப்புக்குரிய ஊதியம் ஒன்றுக்கு மட்டுமே நிற்பார்கள் என்ற கருத்து ஆழமாக ஊன்றப்பட்ட தமிழகத்தில், சமூக - பண்பாட்டுத் துறையில் முற்போக்குக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்ல 40 ஆண்டுகளுக்கு முன் உதித்ததே செம்மலர். நமது அரசியல் வாழ்வில் மதவெறி வளர்க்கப் பட்டது. தீண்டாமைக் கொடுமைத் தீயோ எரிந்தது. பாரதி பிறந்த மண்ணில் பெண்ணடிமைத்தனம் நர்த்தனம் ஆடியது. தாய்மொழி தமிழ், கல்வியில், அரசுத் தொடர் பில், நீதிமன்றத்தில் தாழ்நிலையில் தள்ளப்பட்டது.

இத்தகைய சமூகப் பிற்போக்கிற்கு எதிராகச் செம்மலர் கடந்த 40 ஆண்டுகளில் அரும்பணி ஆற்றியுள்ளது. சோசலிசத்தின் பின்னடைவு கம்யூனிசத்தின் வீழ்ச்சியல்ல என்று செம்மலர் முரசு கொட்டியது. சமூகப் பண்பாட்டுத் துறையில் அரும் பணி யாற்றி வரும் செம்மலரின் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்!

என். வரதராஜன்

மத்தியக் குழு – சிபிஎம்

இப்பத்தான் தொடங்கியது போலிருக்கு, நாற்பது ஆண்டுகள் ஓடிப்போய்விட்டதே! ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கிறது; நாம் அதே இடத்தில்தான் இருக்கிறோம்.

“கத்து கடல் நாகை

காத்தானின் சத்திரத்தில்

அத்தமிக்கும்போது அரிசி வரும்

குத்தி

உலையில் இட ஊர் அடங்கும்

ஓர் அகப்பை அன்னம்

இலையில் இட

வெள்ளி எழும்”

பசி பொறுக்கமுடியாமல், காத்துச் சலித்த ஒரு கவியாளன் பாடிய பாட்டு இது.

காலம் போகிறது; ஓடுகிறது; நம்மால் ஓட முடியவில்லையே தோழர்களே.

மே தின வாழ்த்துக்களுடன்,

கி.ராஜநாராயணன்

செம்மலரின் முதல் இதழிலிருந்து, 2010 ஏப்ரல் வரை வாசித்து வரும் எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன். இந்த நாற்பதாண்டு காலத்தில், செம்மலரின் சாதனைகளை விளக்க, ஓர் ஆய்வுக் கட்டுரைதான் எழுத வேண்டும்! அதற்கு இங்கு இடமில்லை! எனினும், நடுநிலையில் நின்று இதுவரையில் செம்மலரின் வளர்ச்சிப் போக்கையும், சாதனைகளையும் ஆராயும் போது, தமிழ்க் கலை இலக்கியத் துறையிலும், பண்பாட்டுத் தளத்திலும், தமிழர் வாழ்விலும், செம்மலர் எனும் முற்போக்கு மாத இதழ், ஓர் இன்றியமையாத அங்கமாகிவிட்டது; எவரும் மறுக்க முடியாத - மறக்க முடியாத - சாதனைகளைச் செம்மலர் கலை இலக்கியப் படைப்பாளிகள் நிகழ்த்தியுள்ளனர்; இது ஒரு வரலாற்று உண்மையாகும்.

இத்தகைய சீரிய சாதனைகளுக்குக் காரணம், மகாகவி பாரதி, புரட்சிக் கவி பாரதிதாசன், மக்கள் கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்ஒளி மற்றும் உலக மாகவி பாப்லோ நெரூடா, ருஷ்ய முற்போக்கு இலக்கியத்தின் தந்தை மாக்சிம் கார்க்கி ஆகியோரின் கொள்கை வழியில், செம்மலரும், அதன் படைப்பாளிகளும் உறுதியாகச் செல்வதுதான். “கலை இலக்கியம் யாவும், மக்களுக்கே! மக்களின் நலவாழ்வுக்கே! மனிதகுல முன்னேற்றத்திற்கே!” எனும் தத்துவத்தின் அடிப்படையில், சிறந்த கலைப் படைப்புக்களைச் செம்மலர் படைப்பாளிகள் தொடக்க காலம் தொட்டே வழங்கியுள்ளனர்.

நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, மொழி பெயர்ப்பு, சமூக இயல், மானுட இயல், வரலாற்று இயல் மற்றும் பற்பல துறைகளில் செம்மலர் எழுத்தாளர்கள் பரந்த அளவில் - அகில இந்திய அளவில் - அங்கீகாரம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளி, மராத்தி, இந்தி, ஆங்கிலம் முதலிய பல மொழிகளில் செம்மலரின் முன்னாள் ஆசிரியர் கு.சின்னப்ப பாரதி யின் நாவல்கள், படைப்புகள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இது ஓர் உதாரணம் மட்டுமே! இன்னும் பல சிறந்த செம்மலர் எழுத்தாளர்களின் படைப்புகளும், பிறமொழிகளில் பாராட்டப் பெறுகின்றன என்பதும் மனம் கொளத்தக்கது.

சுருங்கக் கூறின், “செம்மலரில் வருவதெல்லாம் பிரச்சார இலக்கியம்; தட்டையான படைப்புகள்” எனும் ஓரவஞ்சனையுள்ள குற்றச்சாட்டைக் காலமும், கலை இலக்கிய ரசிகர்களும், வரலாறும் புறம்தள்ளி விட்டனர். கடந்த 40 ஆண்டு காலத்தில், பொதுவாக நோக்கு மிடத்து செம்மலரில் குறைகள் குறைந்துள்ளன. நிறைகள் மேன்மேலும் அதிகரித்துள்ளன. கருத்து நயத்தில் மட்டுமின்றி, கலை நயத்திலும் செம்மலரின் பன்முக வளர்ச்சிப் போக்கு, எனக்கு மிகுந்த மனநிறைவு அளிக்கிறது; எனவே, செம்மலர் ஆசிரியர் குழுவுக்கும், படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

தமிழியம், பெண்ணியம், தலித்தியம், சூழலியம், மார்க்சியம் எனும் தத்துவ ஒளியின் வெளிச்சத்தில், நமது மண்ணும், மக்களும், மொழியும், இனமும், பண்பாடும் உலக அளவில் ஏற்றம் பெற, செம்மலரின் நற்பணிகள் இடையறாது வளர்க; வெல்க! தமிழகத்திலும், நாடெங்கிலும், அனைத்துத் துறைகளிலும் சீரிய புரட்சிகர மாற்றங்களை விளைவிக்கச் செம்மலர் வீறுடன் பணியாற்றுவோமாக! பரந்த அளவில் மக்களின் மனங்களை வெல்லுவோமாக!

என்றும் தோழமையுடன்,

தி.க.சி.

நெல்லை – 6