மாவோயிஸ்ட்டுகளும் சிதம்பர ரகசியமும்

தாண்டேவாடாவில் மாவோயிஸ்ட்டுகள் 76 படை வீரர்களைக் கொன்றதில் நாடே கலங்கிவிட்டது. இது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆனால் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மேற்குவங்கம் மற்றும் மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டிவிட்டு ராஜினாமா நாடகமாடி அதையும் முடித்துவிட்டார். ஆனால் மாவோயிஸ்ட்டுகளின் கொலைவெறித்தாக்குதலுக்கு எதிராக எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் காங்கிரசின் கூட்டாளியான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சிதம்பரத்திற்குக் கடிவாளம் போடுவதுதான். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கடந்த சில ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியை அழிக்க மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளார். 2011ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டணி தொட வேண்டுமென்று விரும்புகிறார். இப்போது பிரதமருக்கும் சோனியாவுக்கும் மம்தாவின் கூட்டணி தேவை. இதுதான் சிதம்பரத்தின் ஏடாகூட பேச்சின் ரகசியமாகும். அதனால்தான் நாடாளுமன்றத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்குப் பதிலளிக்கும் போது "இன்னும் 12 மாதங்களில் புரிந்துவிடும்" என்ற சிதம்பரம் கூறினார். வரும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இப்படிப்பேசினார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில்-வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட சிதம்பரம் உள்துறை அமைச்சரான பின்னும் சந்தேகத்திற்கிடமான முறையிலேயே நடந்து வருகிறார்.

தமிழ்த் திரையுலகம் - முதன்மை வகிக்கும் முதல்வரின் குடும்பம் 

ஆண்டுக்கு 200 திரைப்படங்களைத் தயாரிக்கும் தமிழ்த் திரையுலகம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அதனால் கோலிவுட் என்று அழைக்கப்படுகிறது. இதில் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் தற்போது முதலிடம் வகிக்கிறது. கருணாநிதியின் பேரன்கள் கலாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி அழகிரி ஆகியோர் திரைப்படத் தயாரிப்பில் ஏ.வி.எம்., ஜெமினி போன்ற நிறுவனங்களைவிட மிஞ்சி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட் மூவீஸ், க்லௌட் நைன் பிலிம்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் இவர்கள் லாபம் தரும் இத்தொழிலில் மும்முரமாய் இறங்கிவிட்டனர்.

இவர்கள் எடுக்கும் திரைப்படங்களை சன்குரூப், கலைஞர் குரூப் தொலைக்காட்சிகளில் பெரும் விளம்பரம் செய்து மக்களைப் பார்க்க வைக்கிறார்கள். புதுமுக நடிகர்கள் முதல் சூப்பர் ஸ்டார்கள் வரை நடிக்க வைக்கப்படுகிறார்கள். சன்பிக்சர்ஸ் 2009ல் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராயை வைத்து எந்திரன் படம் எடுக்கப்போவதாய் அறிவித்தது. படம் வெளிவந்தால் பலநூறு கோடிகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், சூர்யாவை வைத்து அடுத்த படம் தயாரிக்கவுள்ளனர். அஜித்தை வைத்து துரை தயாநிதியும், கமல்ஹாசனின் "யாவரும் கேளீர்" படத்தை உதயநிதியும் தயாரிக்கிறார்கள்.

இவர்களின் பெரிய பட்ஜெட் படங்களால் தமிழ்த் திரையுலகம் நடுங்கிப்போய் உள்ளது. இயக்குநர் செல்வராகவன், வடிவேலு, சூர்யா வீடுகளில் வருமான வரித்துறையினரின் ரெய்டுக்குப்பிறகு அனைவரும் பயத்தோடு பணிந்து கிடைப்பதாய்க் கூறப்படுகிறது.  சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிப்போரும் மிரண்டு போயுள்ளனர். பேரன்களது திரைப்பட நிறுவனங்களின் வளர்ச்சிக்காக திரையுலகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பல வழிகளில் கருணாநிதி அரவணைத்துச் செல்கிறார்.

முதல்வரின் தயவோடு இம்மூன்று நிறுவனங்களும் காலூன்றியிருப்பதால் சிறிய முதலீட்டில் படமெடுப்பதற்குச் சாவுமணி அடிக்கப்பட்டுவிடும் என்று சினிமாத்துறையினர் நம்புகின்றனர். ஏற்கெனவே அரசு பீடத்திலுள்ள ஐந்து தலைகள் திரையுலகில் ஊடுருவியுள்ள நிலையில் இன்னும் பலர் நுழைய வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க அரசியலாக மாறி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் பயன்படுத்துவார்கள் என்றும் தெரிகிறது.

கிரிக்கெட் பைத்தியம் தெளியுமா?

நம்நாட்டில் சினிமாப் பைத்தியம், ஷேர் மார்க்கெட் பைத்தியம், டாஸ்மாக் பைத்தியம் போல கிரிக்கெட் பைத்தியமும் வீட்டுக்கு வீடு தலைவிரித்தாடுகிறது. ஏற்கெனவே சூதாட்டம் மூலம் கிரிக்கெட் ரசிகர்களைக் கொள்ளையடித்தவர்கள் இப்போது ஐ.பி.எல் கிரிக்கெட் என்ற பூதத்தைக் கிளப்பியுள்ளனர். ஒவ்வொரு மாநிலக் கிரிக்கெட் குழுவும் ஏலம் விடப்பட்டு சுமார் முப்பதாயிரம் கோடிவரை ஏலம் போயுள்ளது. இதில் முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா போன்ற பெரு முதலாளிகள் முதல் ஷாருக்கான், ஷில்பா ஷெட்டி போன்ற நடிகர்கள் வரை ஏலம் எடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் இதைப்பற்றி மத்திய அரசும், வருமான வரித்துறையும் கண்டுகொள்ளவே இல்லை. இதற்குக் காரணம் சில மத்திய அமைச்சர்களின் கள்ளப் பணமும் இதற்கு உள்ளே கிடப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சாதாரணக் குடிமகன் ஒரு லட்ச ரூபாயை வங்கியில் போட்டு மாதம் ரூ.600 வட்டி வாங்கிச் சாப்பிட்டால் வருடத்திற்கு 20 சதம் வரிகட்ட வேண்டுமென்று உத்தரவிட்ட வருமான வரித்துறைக்கு இந்தப் பல்லாயிரம் கோடி கணக்கு தெரியவில்லை.

மத்திய அரசில் ஊழல் செய்து பல்லாயிரம்கோடி சுருட்டிப் பிடிபட்ட ஆ.ராசா போன்ற அமைச்சர்கள் நீடிக்கிறார்கள்-அன்னை சோனியாவின் பங்காளிகளாக. ஆனால் அவர்களால் கூட மத்திய அமைச்சர் சசி தரூரைக் காப்பாற்ற முடியவில்லை. ராஜினாமா வாங்கிவிட்டனர். தனது காதலி சுனந்தாவுக்காக 70 கோடி ரூபாய் பங்குகளை அவர் இலவசமாகப் பெற்றது மட்டுமல்ல, ரகசியமாக அதில் ரூ.2000 கோடியை சுற்றவிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

கிரிக்கெட் போட்டிகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு ரசிகர்களிடம் கொள்ளையிடத்திட்டமிட்டுள்ளனர். ஒரு போட்டிக்கு டிக்கெட்டின் விலை ரூ.35000 (உண்மையில் 50,000) என்று கூறப்படுகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,27,000 யாம். முதல் போட்டி முதல் இறுதிப்போட்டி வரைக்கான டிக்கெட் ரூபாய் ஐந்தரை லட்சமாம். கிரிக்கெட் பைத்தியங்கள் அள்ளிக்கொடுக்க, ஊடகங்கள் வாயைப்பிளக்கின்றன. பணம் இல்லாத பைத்தியங்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"11 முட்டாள்கள் விளையாடுகிறார்கள். அதை 11 ஆயிரம் முட்டாள்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்"

என்று அறிஞர் பெர்னாட்சா கேலிசெய்தது நினைவுக்கு வருகிறது.