(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சென்னையில் மே 22 அன்று நடத்திய "செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன?" என்பது பற்றிய மாநிலக் கருத்தரங்கில் இச்சங்கத்தின் தலைவர் அருணன் ஆற்றிய தலைமை உரை)

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23-27 தேதிகளில் நடக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருவதாக நாளும் செய்திகள் வருகின்றன. நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. தமிழுக்கு மாநாடு எனும் போது தமிழ் உள்ளங்கள் எல்லாம் மகிழத்தான் செய்யும்.

உண்மை. கடந்த ஆண்டு இதே மே மாதத்தில்தான் இலங்கையில் யுத்தம் தனது உச்சமான கோரமுகத்தைக் காட்டியது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால்  தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். நமது இதயங்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன. யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அரசு குதூகலத்தோடு அறிவித்தது. ஆனால் யுத்தம் முடிந்து ஓராண்டான பிறகும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை. பலாத்காரத்தால் எட்டப்படும் வெற்றி தற்காலிகமானதே என்பதையும், நியாயமான அரசியல் தீர்வே நிரந்தர வெற்றியைக் கொண்டு வரும் என்பதையும் அந்த நாட்டு அரசு உணர வேண்டும். தற்காலிக வெற்றி மதர்ப்பில் இருக்கும் அந்த அரசு இந்த உண்மையை உணருவதாகத் தெரியவில்லை.

“இப்போதைய தேவை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுதானே தவிர அதிகாரப் பகிர்வு இல்லை'' என்று அந்த நாட்டின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆணவத்தோடு கூறியுள்ளார். அங்கு தற்போது இருந்து வரும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை நீக்கி விட்டு, தொகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றி பெறுகிற முறையைக் கொண்டு வரப் போவதாக இலங்கை அமைச்சர்கள் சுசீல் பிரேமஜயந்தவும், மைத்ரிபால சிறிசேனவும் அறிவித்திருக்கிறார்கள். இத்தகைய மாற்றங்கள், இருக்கிற தமிழர் உரிமைகளையும் பறிக்கிற வேலை என்று அந்நாட்டுத் தமிழர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, இலங்கைத் தமிழரின் உரிமைகளுக்காகத்தான் உலகத் தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கமும், அப்படிக் குரல் கொடுக்கும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் உண்மையான மாநில சுயாட்சி என்பதே தமிழர் பிரச்சனைக்கான சரியான தீர்வாக - நடைமுறை சாத்தியமான தீர்வாக இருக்கும் என்று தமுஎகச திடமாக நம்புகிறது. வாழ்க்கை நடப்பும் அதையே உணர்த்தி நிற்பதாக அது நினைக்கிறது. அதற்காக எமது அமைப்பு தொடர்ந்து போர்க்குரல் கொடுக்கும். அத்தகைய குரல் எங்கிருந்து வந்தாலும் உத்வேகத்தோடு ஆதரிக்கும்.

அதே நேரத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சனை இன்னும் தீராமலிருப்பதால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசு நடத்தக்கூடாது என்று சில தமிழன்பர்கள் வைக்கிற வாதத்தை தமுஎகச ஏற்கவில்லை. இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிர்எதிராக நிறுத்துவது நியாயமற்றது என்று கூறுகிறது. மாறாக, இந்த இரண்டையும் ஏக காலத்தில் செய்வதில் எந்த முரணும் இல்லை என்கிறது. சொல்லப்போனால், உலகத் தமிழ் மாநாடு எனும் போது உலக அளவில் தமிழின் இன்றைய நிலை குறித்துச் சிந்திக்க செயல்பட அது துணை செய்யும் என்கிறது. ஏற்கெனவே தமிழ் பற்றிய சிந்தனை இந்த மாநாட்டின் காரணமாக பல தளங்களில் எழுந்திருப்பதை அது சுட்டிக் காட்டுகிறது.

அதிலும் இது செம்மொழி மாநாடு. தமிழ் இப்போதுதான் செம்மொழியானது என்பதில்லை. அது தொன்மையாலும், வளத்தாலும், தனித்தியங்கும் திறத்தாலும், ஏற்கெனவே செம்மொழிதான். இந்த  உண்மையை, உண்மை என்று இந்திய அரசை ஒப்புக் கொள்ள வைக்க இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. பரிதிமாற் கலைஞர் காலத்தில் எழுந்த கோரிக்கை முதல்வர் கலைஞர் காலத்தில்தான் நிறைவேறியது.

இது நிறைவேறியதில் தான் ஆற்றிய பங்கை தமுஎகச பெருமையோடு நினைவு கூர்கிறது. இந்தக் கோரிக்கையின் நியாயத்தையும் முக்கியத்துவத்தையும் பல கூட்டங்களின் மூலமாக அது தமிழர்கள் மத்தியில் கொண்டு சென்றது. அதன் முத்தாய்ப்பாய் டில்லிக்கு பல நூறு பேரைத் திரட்டிச் சென்று நாடாளுமன்றம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களையும், மனிதவள மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி அவர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைத்தது.

அமைப்பின் பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் அந்த மனுவைப் பிரதமரிடமும், அமைச்சரிடமும் கொடுத்த போது அவர்கள் இது விஷயத்தில் அக்கறையாக இல்லை என்பது துல்லியமாக வெளிப்பட்டது. இந்துத்துவா ஆட்சியில் இது நடக்காது என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த சமஸ்கிருத பக்தர்கள் எப்படி அதற்கு இணையாகத் தமிழுக்கு உரிய அங்கீகாரம் தருவார்கள்? தரவில்லை. ஆனால் சமஸ்கிருதத்துக்கு இணையான ஒரு மொழி இந்தியாவில் இருக்கிறது. அதிலும் அது உயிர்த்துடிப்புள்ள மக்கள் மொழியாக இருக்கிறது. அது தனது நியாயமான உரிமைக்கு குரல் கொடுக்கிறது என்கிற பேச்சு தலைநகர் டில்லியில் அன்று வலுவாக அடிபட்டது. அதன் கோரிக்கையின் நியாயம் அழுத்தமாக எழ ஆரம்பித்தது. இப்படிப் பல அமைப்புகளும் போராடின. அதனதன் தாக்கத்தை ஏற்படுத்தின.

முடிவில் அரசியல் சூழலும் மாற முழு இந்தியாவின் ஒப்புதலோடு நமது தமிழ் செம்மொழியாக மைய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்திற்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்திய மொழிகளில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் எனும் நான்கு மொழிகள் செம்மொழிகளாக இந்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் முன்பு சமஸ்கிருதத்திற்கு கிடைத்த மத்திய அரசின் நிதி உதவியும், இன்ன பிற வாய்ப்புகளும் இந்த மூன்று மொழிகளுக்கும் கிடைத்துள்ளன.

இந்த வெற்றிப் பெருமிதச் சூழலில் செம்மொழி மாநாடு கூட்டுவது பொருத்தமே. அதனால்தான் தமுஎகச இதை வரவேற்கிறது. ஆனால், மாநாடானது ஏதோ திருவிழா போல நடந்து முடிந்து விடக்கூடாது, அரசு நடத்தும் மாநாடு என்பதை மறந்து ஆளுங்கட்சியின் கொண்டாட்ட மேடையாக ஆகிவிடக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது எமது அமைப்பு. காரணம், அனுபவம் பேசுகிறது. இப்படித்தான் அண்ணா நூற்றாண்டு விழா என்றார்கள். கடைசியாகக் கணக்குப் பார்த்தால் சென்னையில் அவர் நினைவாக ஒரு பெரிய நூலகம் அமைவதைத் தவிர வேறு ஏதும் உருப்படியாக நடந்ததாகத் தெரியவில்லை. வருணாசிரம எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, மாநில சுயாட்சி கோரல், தமிழ் வளர்ச்சி நாடல் எனும் அண்ணாவின் அருமையான கொள்கைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல அரசு என்ன செய்தது எனும் கேள்வியே மிஞ்சியது. அப்படி இந்த மாநாடு ஆகிவிடக்கூடாது என்பது தமுஎகசவின் கவலை.

இந்த மாநாடு செம்மொழித் தமிழின் அருமை பெருமைகளை அங்கே நடக்கவிருக்கிற ஆய்வரங்கத்தின் மூலமாக மீண்டும் ஒரு முறை உலகிற்கு எடுத்துக் காட்டும் என நம்புவோம். அதைச் செம்மையாக நடத்தி முடித்து ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வழங்கும் பணியை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் செய்வார்கள் என எதிர்பார்ப்போம். ஆனால் அது மட்டும் போதாது, இந்த மாநாடு தமிழின் இன்றைய நிலை குறித்துச் சிந்திக்க வேண்டும், அதன் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய திட்டவட்டமான நடவடிக்கைகளை வகுக்க வேண்டும்.

தமுஎகசவைப் பொறுத்தவரை பல ஆண்டு காலமாக இத்தகையக் குறிப்பான செயல்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி வருகிறது. 1994-ல் இதே சென்னையில் நாம் நடத்திய  “தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு'' துவங்கி எத்தனையோ பல இயக்கங்களை நடத்தியிருக்கிறோம். செம்மொழி ஆய்வு மையத்தோடு இணைந்து எழுத்தாளர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கம் நடத்தியது நாம்தான். பண்டிதர்கள் வீட்டு உள்ளறையிலும், பல்கலைக்கழக வகுப்பறையிலும் இருந்த பத்துப்பாட்டையும், எட்டுத் தொகையையும் பட்டித் தொட்டிகள் வரைக்கும் கொண்டு சென்ற ஒரு மகத்தான மக்கள் இயக்கத்தை நடத்தியதும் நாம்தான். நாம் வெறும் வாய்ச்சொல் வீரரல்ல, செயல் மறவர்கள்.

மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக மனிதன் கண்ட கருவியே. ஆனால் தாய்மொழியானது பிறந்த நாள் முதல் நமது செவியில் பட்டு மூளையில் தங்கிய உணர்வு நிலையும் கூட. மூளையின் செயல்பாட்டுத் திறன் மடிப்புகள் தாய்மொழியின் ஊடாட்டத்தில் நெய்யப்படுகின்றன. ஆகவேதான், வளர்ந்த பிறகு எத்தனை மொழிகள் கற்றாலும் எந்தச் சிந்தனையும் முடிவில் அவனுக்குத் தாய்மொழியிலேயே உள்ளே எழுகிறது.

பின்னர் இன்னொரு மொழியாக மாற்றம் பெற்று வெளியே வருகிறது. சிந்திக்கிற மொழியிலேயே பேசவும், எழுதவும், வேறு வகையாக வெளிப்படுத்தவும் செய்வது இயற்கையானது, இயல்பானது, எளிதானது. அந்தப் பொருளில்தான். தாய்மொழி தாய்ப்பால் என்றால், பிறமொழி புட்டிப்பால் என்கிறோம். தாய்மொழி கண்கள் என்றால், பிறமொழி கண் ஆடிகள் என்கிறோம். அந்தப் பொருளில்தான் தமிழ் நமது ஊனோடும், உதிரத்தோடும், உயிரோடும் கலந்தது என்கிறோம்.

தமிழை வளர்க்கத் தவறிய தமிழன் எதிர்காலத்தில் நாதியற்றுப் போவான். அதிலும் எழுத்தாளர்கள், கலைஞர்களாகிய நமக்கு தமிழே அடித்தளம். ஒரு கணம் தமிழைக் கழித்து விட்டு நம்மை யோசித்துப் பாருங்கள், அந்த ஒரு கணத்திலும், நாம் ஒன்றுமில்லாமல் போவோம். அதனால்தான் தமுஎகச தனது வரலாற்றில் தமிழுக்காக விடாது இயக்கம் கண்டு வந்தது... இனியும் காணும்.

அந்த உரிமையோடுதான் செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசைப் பார்த்துக் கேட்கிறது, தமிழின் மெய்யான வளர்ச்சிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று. அதற்குத் தமிழின் இன்றைய நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். மே 19-ம்தேதி “தினமணி'' ஏட்டில் ஓர் அருமையான தலையங்கம் வந்திருக்கிறது. சிங்கப்பூரில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு பற்றியது அது. சீன அதிபர் ஜிண்டாவோவும், பிரதமர் வென் ஜியா போவும் நன்கு ஆங்கிலம் கற்றவர்கள். ஆயினும் பிற நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் போது-மொழி பெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு- சீன மொழியில்தான் பேசுவார்கள் என்கிறது அந்த ஏடு. நமது நாட்டிலோ தமிழனுக்குத் தமிழன் பேசும்போதே ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

“என்னுடைய தலைவர் அல்லது தலைவி பிரமாதமாக இங்கிலீஷ் பேசுவாரே'' என்று மார்தட்டிக் கொள்கிற கட்சித் தொண்டர்களைத்தான் தமிழ்நாடு உருவாக்கி வைத்திருக்கிறது! சீனத்திலே உள்ள சீனர்கள் மட்டுமல்ல, சிங்கப்பூரிலே உள்ள சீனர்களும் தாய்மொழிப் பற்றோடு இருக்கிறார்கள் என்பதை அங்கு நடந்த ஒரு நிகழ்வை உதாரணம் காட்டி மேலும் எடுத்துச் சொல்லியுள்ளது அந்த ஏடு! தமிழர்களில் பலர் இப்போதும் சீனர்களைக் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் இவர்கள் தாய்மொழிப்பற்றைத் துறந்து கொண்டிருக்க, அவர்கள் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்த பிறகாவது நமக்கு புத்தி வர வேண்டாமா?

ஏன் இப்படிக் கேட்கிறேன் என்றால் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழறிஞர்கள் பலரும் நொந்து போயிருக்கிறார்கள். “பெருவாரியான தமிழறிஞர்களின் மனவேதனை, தமிழ் படிப்பதே பயனற்ற ஒன்று என்கிற எண்ணப் போக்கு பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதாக இருந்தது'' என்கிறது அந்த ஏடு. இன்றுள்ள அடிப்படையான பிரச்சனை இதுதான். இதை எப்படித் தீர்க்கப் போகிறோம் என்பது பற்றி இந்த வேளையில் தமிழக அரசும், தமிழன்பர்களும் யோசிக்க வேண்டும்.

பிற மொழியின் பயன்பாடு பற்றிக் கேள்வி கேட்டால் புரிந்து கொள்ளலாம். தனது சொந்தத் தாய்மொழியின் பயன்பாடு பற்றிக் கேள்வி கேட்டால் என்ன செய்வது? இதற்கு கேட்கிற பெற்றோர்களையும் மாணவர்களையும் கோபித்துக் கொள்வதை விட, இப்படிக் கேள்வி கேட்கிற நிலைமை ஏன் வந்தது என்று யோசிக்க வேண்டும். தமிழனுக்கு ஏனிந்த ஆங்கில மோகம்? தமிழ் நமது தாய்மொழி. ஆங்கிலம் என்ன நமது மாமியார் மொழியா? சுத்தமான அந்நிய மொழி. பிறகு ஏன் அதைப் படிக்க மட்டுமல்லாது, அதிலேயே அனைத்துப் பாடங்களையும் படிக்கிற மோகம் வளர்ந்திருக்கிறது? போகிற போக்கைப் பார்த்தால் தமிழைக் கூட ஆங்கிலம் மூலம்தான் படிப்பான் போலும் தமிழன்!

ஆங்கில மோகத்திற்கான காரணம் மிக எளிமையானது. நமது மைய அரசு தனது நாடாளுமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக, நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாக இந்தியோடு சேர்த்து ஆங்கிலத்தை மட்டுமே வைத்துள்ளது. அதிலும் உச்சநீதிமன்றம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துள்ளது. எனவே தமிழர்கள் போன்ற பிறமொழி பேசுவோர் ஆங்கிலம் வசம் அகப்பட்டு விட்டார்கள். ஆம். தமிழனுக்கு மட்டும் நேர்ந்துள்ள நிலையல்ல இது. தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், வங்காளிகள் என்று பலருக்கும் இன்று இந்த கதிதான்.

அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதாவது, இவையே அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். இதில் இந்தி பேசுவோர் 40 சதவீதத்தவரே. இன்னும் தமிழ் உள்ளிட்ட 11 மொழிகள் கோடிக்கணக்கில் பேசுவோரைக் கொண்டவை. அவர்கள் மட்டும் இந்திய மக்கள் தொகையில் சுமார் 57 விழுக்காட்டினர். ஆனாலும் இவற்றில் எல்லாம் நினைத்தவுடன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசிவிட முடியாது. இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச முடியும். அதிலும் மந்திரிமார்கள் இந்த இரண்டில் ஒன்றில்தான் பேச வேண்டும்; உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்கிறார்கள்.

மாண்புமிகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அவர்களுக்கு வந்திருக்கிற பிரச்சனை இதுதான். தமிழில்தான் பேசுவேன் என்று அவர் கூறுகிறார். அனுமதி தர மறுக்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வரச் சொல்லுகிறார் சபாநாயகர். தாய்மொழியில் பேச, பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது! செம்மொழி மாநாடு நடத்தும் தமிழக அரசு இது குறித்து மவுனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளது.

இது விந்தை இல்லையா? எனது நாட்டு நாடாளுமன்றத்தில் எனது மொழியில் பேச முடியாது! இது சுயமரியாதைக்கு இழுக்கு, வாக்களித்து அங்கே அனுப்பிய மக்களுக்கு அவமரியாதை. அவர்தம் மொழிக்கு பெருத்த அவமானம். இத்தகைய அவமானத்தை தேசத்தந்தை காந்திஜி சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார். வைஸ்ராய் கூட்டிய ஒரு கூட்டத்தில் இந்துஸ்தானியில் பேச இவர் அனுமதி பெற வேண்டியிருந்தது. அந்த மொழியில் ஒற்றை வாக்கியம் பேசினார். அதற்கே இந்தியர்கள் மத்தியில் பாராட்டு! தனது “சத்திய சோதனை''யில் காந்திஜி எழுதியிருக்கிறார். – “வைஸ்ராய் கூட்டிய கூட்டத்தில் இந்துஸ்தானியில் பேசிய முதல் மனிதன் நான்தான் என்கிற கண்டுபிடிப்பும், அதற்கான பாராட்டும் எனது தேசிய பெருமையைக் குத்திக் கிழித்தது. நான் கூனிக் குறுகிப் போனேன். இந்த நாட்டில் நடக்கும் கூட்டங்களில் இந்த நாட்டின் மொழிக்கு அனுமதி இல்லை என்பது எவ்வளவு பரிதாபம்!"

இதைத்தான் நாமும் கேட்கிறோம். இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய மொழியில் ஒன்றாகியத் தமிழில் பேச முடியவில்லை என்பது, அதுவும் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் முடியவில்லை என்பது - எவ்வளவு பரிதாபம்? பரிதாபத்திலும் பரிதாபம் அல்லவா? தமிழுக்கு வந்துள்ள இந்த சோதனையைப் போக்க மத்திய ஆட்சியாளர்கள் மீண்டும் சத்திய சோதனையைப் படிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியில் பேசவும், அதை உடனுக்குடன் மொழி பெயர்க்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த விஞ்ஞான யுகத்தில் இது எளிதான விஷயமே. எவ்வளவு செலவாகிப் போகும்? ஆகட்டுமே. கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகிற பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தோடு ஒப்பிடும் போது இது வெறும் கொசுறு!

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த எளிமையான தீர்வை நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது அயோத்திதாசர் - தலித் மக்களிடமிருந்து தோன்றிய அந்த அறிவுச்சுடர் - அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தார். தனது “`தமிழன்'' பத்திரிகையில் 1912-ல் அவர் இப்படி எழுதினார் – “சட்டசபையில் தமிழையும் தெலுகையும் மொழி பெயர்க்கும் ஓர் டிரான்ஸ்லேடரும், கன்னடத்தையும் மலையாளத்தையும் மொழி பெயர்க்கும் ஓர் டிரான்ஸ்லேடரும், துலுக்கையும் மராஷ்டகத்தையும் மொழி பெயர்க்கும் ஓர் டிரான்ஸ்லேடரும் இருப்பார்களாயின் சகல பாஷைக் குடிகளின் கஷ்ட நஷ்டங்கள் யாவும் இராஜாங்கத்திற்கு விளங்கிப்போம். மக்கள் சுகமடைவார்கள். “அன்றைய சென்னை ராஜதானியில் இத்தனை மொழி பேசும் மக்களும் இருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன ஏற்பாடு இது. இது இன்றைய நாடாளுமன்றத்திற்கும் பொருந்தும். அதுவும் இந்தக் கணினி யுகத்தில் அதிகம் பொருந்தும்.

இத்தகைய ஏற்பாடு கூட இல்லாத நிலையில்தான் தமிழர்களுக்கு ஆங்கில மோகம் வந்திருக்கிறது என்கிறேன். இதுவோர் உதாரணம். இப்படியே ஒவ்வொரு துறையிலும் இந்த நாட்டின் தேசிய மொழிகள் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலத்திற்கு மட்டும் ஆலவட்டம் சுற்றுவதால்தான் தமிழ் போன்ற மொழிகளின் பயன்பாட்டைத் தமிழர்களே கேள்விக்குறியாக்குகிறார்கள். விஷயம் மேலேயிருந்து, மத்திய ஆட்சியாளர்களிடமிருந்து துவங்க வேண்டியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இதற்காக மத்திய அரசோடு மாநில அரசு போராட வேண்டியுள்ளது. போராட வேண்டும். அந்தப் போராட்டம் நடத்துவதற்கான தார்மீக உரிமையைப் பெற தமிழக அரசு தனது அதிகாரத்திலுள்ள துறைகளில் எல்லாம் தமிழுக்கு உரிய இடம் தர வேண்டும். அதுபற்றி அது தன்னைத்தானே ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொள்ள வேண்டும் - எங்கும் தமிழ், எதிலும் தமிழ் - என்பது நடைமுறையில் இருக்கிறதா என்று.

இப்படிப் பேசுவதன் பொருள் ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கச் சொல்வதல்ல. ஒரு மொழி என்ற வகையில் அதைத் தமிழர்கள் படிக்கட்டும். இன்னொரு மொழியைத் தெரிந்து கொள்வது வாழ்க்கைப் போராட்டத்திற்கு உதவும் ஓர் ஆயுதமாக இருக்கும். ஆனால் அது தாய்மொழியின் இடத்தில் உட்கார்ந்து விடக்கூடாது என்பதுதான் நாம் செய்யும் எச்சரிக்கை. கண்களை இழந்து விட்டு கண்ணாடி போட்டுப் பயனிருக்காது. கால்களை விற்று சக்கர நாற்காலி வாங்குகிற அபத்தம் கூடாது.

இன்றைய உலகமயமாக்கல் சூழல் அதை நோக்கித்தான் நம்மைத் தள்ளப் பார்க்கிறது. மனிதர்களை எல்லாம் வெறும் சந்தையாகப் பார்க்கிற முதலாளித்துவத்திற்கு பன்முகக் கலாச்சாரம் என்பது பகைமையாகத் தெரிகிறது. அதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஏக ஆட்சியைப் பரவலாக்கும் வெறியில் ஏக மொழியைக் கொண்டு வரவும் முயலுகிறது. ஏற்கெனவே ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கோலோச்சிய நாடுகளில் இருக்கும் ஆங்கில வாசனையை இதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது. குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் ஒற்றைக் கலாச்சாரத்தை ஒற்றை மொழி மூலம் விரைவாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசுகிற மொழி என்னவென்று தெரிந்து கொள்ள அரசாங்கம் ஒரு விசாரணைக்குழு போடுவது நல்லது. கொலைகாரர்களுக்குத் தூக்குத் தண்டனை தருகிறார்கள். தமிழைக் கொலை செய்கிறவர்களுக்கு என்ன தண்டனை தரப் போகிறோம்? வேண்டுமென்றே பேசுவது போலத் தெரிகிறது. ஆங்காங்கே ஓரிரு தமிழ்ச் சொற்கள் வந்து விழுகின்றன. அவற்றின் உச்சரிப்பும், ஆங்கிலச் சாடையில் உள்ளது. “தமிங்கலம்'' என்கிற திமிங்கலம் நமது தமிழைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. செம்மொழித் தமிழ் என்கிறோம். தொலைக்காட்சியில் வருவது எம்மொழி என்பதைத் தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு புறம் படித்த வெகுமக்களே நல்ல தமிழ் பேசுவது இல்லை. நாம் தனித் தமிழ் பேசச் சொல்லவில்லை. பழகு தமிழ் பேசச் சொல்லுகிறோம். அதுவே அரிதாகிப் போனது. தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் முன்மாதிரி ஒருபுறம், தமிழகத்தில் கிடைக்கிற ஆங்கிலக் கல்வி மறுபுறம், இரண்டும் சேர்ந்து வெகுமக்களின் தமிழைப் பாழ்படுத்தி வருகிறது. “நீயா? நானா?'' போன்ற தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறுகிற மத்திய தர மக்கள் பேசுகிற பேச்சைக் கேட்கும் போது, “மெல்லத் தமிழினிச் சாகும்'' என ஒரு பேதை உரைத்ததாகப் பாரதி பாடியதுதான் நினைவுக்கு வருகிறது. மெல்ல அல்ல, வேகமாகச் சாகுமோ என்று பயமாக இருக்கிறது. உலகமயமாக்கச் சூழலில் உலகம் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் செத்துக் கொண்டிருக்கின்றன என ஓர் ஆய்வு சொல்வது நம்மை உலுக்குகிறது.

இது மிகவும் வேதனையான வினோதம். தமிழகத்தில் கல்வி பெருகப் பெருக தமிழ் சிறுகச் சிறுக சாகிறது. இங்கே தமிழர்களுக்கு கிடைப்பது ஆங்கிலமயமான கல்வி. அதனால் தமிழன் வீட்டுப் பிள்ளை ஒன்று படித்தால் அவன் தமிழைச் சிதைக்கிறான். படிக்காத தாத்தா பாட்டியின் தமிழையும் சிதைக்கிறான். அவர்களும் “சால்ட் கொண்டா, சுகர் போடு'' என்றுதான் பேசுகிறார்கள். தமிழ்மயமான கல்வி கிடைக்காதவரைத் தமிழை வளர்ப்பது மட்டுமல்ல, அதைக் காப்பதே கடினமாக இருக்கும் போலத் தெரிகிறது.

இந்த லட்சணத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வேறு இந்தியாவுக்குள் கடை போட வருகின்றனவாம். அவையும் வந்து விட்டால் கல்வி முழுமையாக ஆங்கிலமயமாகி போகும். அதற்குப் பிறகு எத்தனை தமிழ் மாநாடுகள் நடத்தினாலும் பயனிருக்குமா என்பது சந்தேகமே. இப்போதே விழித்துக் கொண்டால்தான் உண்டு.  ஆனால் தமிழக அரசும் தமிழக மத்திய மந்திரிகளும் விழித்துக் கொண்டார்கள் என்பதுதான் கேள்வி.”மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை, தோப்பில் நிழலா இல்லை, தமிழகத்தில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை'' என்று பாவேந்தர் பாரதிதாசன் வருத்தப்பட்டாரே, அந்த வருத்தம் போக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஏதேனும் உருப்படியான செயல் திட்டத்தை வகுத்தளிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.