தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் ஏற முன்பதிவு செய்து கொள்ள முடியாத பயணிகளின் நீளம் பெரும் எண்ணிக்கையில் நின்று கொண்டிருந்தது. ரயிலின் முன்புறம் இரண்டும், பின்புறம் இரண்டுமாக மொத்தம் நான்கு பொதுப் பெட்டிகள் வழக்கமாக இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், தீபாவளி கூட்டத்தின் காரணமாக நிர்வாகத்திற்கு வருமானத்தை பெருக்குகிறேன் பேர்வழி என்று யோசித்த ஒரு அதிகாரி இரண்டு பெட்டிகளை முன்பதிவுப் பெட்டியாக மாற்றி மீதமிருந்த இரண்டு பெட்டியை மட்டும் பொதுப் பயணிகளுக்கு ஒதுக்கி இருந்தார். அலைமோதிய கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் நசுங்கிக் கொண்டிருந்தனர். உள்ளே ஏறவே முடியாத மக்கள் திரள் நடைமேடையில் நின்று பெரும் சத்தங்கொடுத்துக் கொண்டிருந்தது.

அந்நேரம் ஸ்டேசன் வாசலில் ஆட்டோவில் வந்து தோழர் மோகனும், நானும் இறங்கினோம். "இந்தக் கொடுமையை நீங்களாவது கேட்கக் கூடாதா சார்?" என்று நடைமேடையில் நாலு எட்டு வைக்கும் முன் மக்களின் குரல் அவரை நோக்கி வந்தது. நடைமேடையின் எல்லையில் இருந்தவர்கள் எல்லாம் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களை "கொஞ்சம் பொறுங்கள்" என்று சமாதானப்படுத்தியபடி நிலைய மேலாளர் அறைக்குப் போனார். அங்கு அவர் இல்லை. அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரிகள் தான் இருந்தார்கள். தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்தனர்.

சிலருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர்கள் எல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்கள். ரயில் புறப்பட ஐந்து நிமிடம்தான் இருந்தது. பயணிகளின் வேகமும், கோபமும் கூடியபடியே இருந்தது. அதில் அதிக கோபமும் வேகமும்கொண்ட பயணியாக அவர்தான் இருந்தார்.

நேராக இன்ஜின் பெட்டியை நோக்கி நடந்தார். கூட்டம் ஒழுங்குபடுத்தப்படாத பெரும் பேரணி போல் அவர் பின்னே சென்றது. ரயில் ஓட்டுநரிடம் போய் "பொதுப் பெட்டி இரண்டு இணைக்கப்பட வேண்டும். நீங்கள் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு சொல்லுங்கள்" என்று சொன்னார். "ரயில் கிளம்ப இரண்டு நிமிடத்துக்கு முன்னால் இதெல்லாம் செய்ய முடியாது சார்" என்று சொன்ன ஓட்டுநர் "நீங்க போயி வேகமா வண்டியில ஏறுங்க சார்" என்று சொல்லியபடி தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்.

ரயில் கிளம்ப ஒரு நிமிடமே இருந்தது. உள்ளே தலையை இழுத்துக் கொண்ட ஓட்டுநர், சிறுகணப் பொழுதில் தலையை வெளியே நீட்டிப் பார்த்தார். இன்ஜின்னுக்கு முன்னே தண்டவாளத்தில் முதல் நபராக தோழர் மோகனும், அவரைச் சுற்றி பெருங்கூட்டமும் உட்கார்ந்திருந்தது. கடிகார முள்ளைவிட வேகமாகச் சுழல ஆரம்பித்தது ரயில்வே நிர்வாகம். அறையில் இல்லாத அதிகாரிகள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தவர்கள் தொடர்பே இல்லாமல் இருந்தவர்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.

45 நிமிட காலதாமதத்தில் நான்கு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்ட பொழுது தண்டவாளத்தின் மேல் ரயில் செல்லுவது போல பயணிகளின் தோள்களின் மேல் மோகன் சென்று கொண்டிருந்தார். நடைமேடையில் கால்பதிக்காமலே அவரது பெட்டியில் கொண்டு வந்து பயணிகள் இறக்கினர்.

தோழர் மோகனின் வாழ்வில் இப்படிப்பட்ட ஓராயிரம் சம்பவங்களை எழுத முடியும். திட்டமிடப்படாத, முன்தயாரிப்புகள் அந்த நிகழ்வுகளைக் கையாளுவதில் அவரின் திறமை அளப்பெரியது. தற்செயல்களை அசாத்தியமாக மாற்றத் தெரிந்தவர்.

மாணவர் பருவத்தில் அரசியல் வாழ்வுக்கு வந்து வாலிபர் இயக்கத்தின் வழியே வளர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்ச் செயலாளராகத் திறம்படச் செயலாற்றி மதுரை மக்களின் தலைவராக உயர்ந்தவர்.

ஒரு மனிதனின் மீது சாதீய அடையாளம், மத அடை.யாளம் பதவி அடையாளமென எத்தனையோ அடையாளங்கள் அப்பிக் கிடக்கிறது. ஆனால் தன்மீது இருக்கும் அடையாளங்களை எல்லாம் உதிர்த்துவிட்டு தானே ஒன்றின் அடையாளமாக மாறுவது சாதாரணக் காரியமல்ல. தோழர் மோகன் அப்படித்தான் தனது செயல்களின் மூலமும், சேவையின் மூலமும் கொஞ்சம் கொஞ்சமாக மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அடையாளமாக மாறியவர்.

1999 ஆம் ஆண்டு மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பொழுது மதுரை மக்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, சொந்த வீடும், காரும் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்தனர். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மதுரை மக்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தேர்தல்இல்லாத நேரத்தில் கூட நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்தனர்.

பார்க்க மட்டுமே முடிந்த பதவியை மக்களின் பழகும் தூரத்திற்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியவர் மோகன். தோழர் ஒரு டீ சாப்பிட்டு போங்க' என்று பெயர் சொல்லி அழைத்து டீ போட்டுத் தரும் டீக்கடைக்காரர்களாவது இருப்பார்கள். பதவியையும் அதிகாரத்தையும் அதற்கும் கீழே வைத்து அவரால் வாழ முடிந்தது என்பதற்கான சாட்சியங்களே அவர்கள். அவர் வகித்தப் பதவியில் அவருக்கு முன்னும், பின்னும் இருந்த இருக்கிறவர்கள் அவரின் மகத்துவத்தை அதிகப்படுத்திய படியே தான் இருப்பார்கள்.

ஒவ் வொரு மனிதனும் பெற்றுத் தர முடியாத கோரிக்கையுடனும், இறக்கி வைக்க முடியாத வேதனையுடனும் அலையும் இக்காலத்தில் திறந்தே இருக்கும் அலுவலகத்தில் எளிதில் அவரை அணுகலாம். எனும்பொழுது அவரை நோக்கி குறைகளும், தேவைகளும் சொல்லப்பட்டவாறே இருந்தன. காது கொடுத்துக் கேட்பது என்பது எவ்வளவு பெரிய அரசியல் பணி என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியவர் அவர். சொல்லுபவனுக்குக் கிடைக்கும் முதல் நிவாரணமாக அது இருந்தது.

அவரின் சாததனைகள் அவரைப்போலவே எளிமையானது. எளிய மக்களுக்கானது. எளிமையை வலிமையின் எதிர்நிலையாகப் பார்ப்பவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் எளிமையைப் போல் ஒரு வலிமை எதுவும் இல்லை.

1991ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியால் முதன்முறையாக நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்றிலிருந்து தொடர்ந்து 6 முறை கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியது. 1991 முதல் 2009 வரை பத்தொன்பது ஆண்டுகள் மதுரையில் அனைவராலும் எந்நேரமும் கவனிக்கப்படுகிற மனிதராகவும், பல நேரங்களில் அரசாங்கத்தாலும், எதிர்க்கட்சியினராலும் கண்காணிக்கப்படுகிற மனிதராகவும் இருந்த பொழுதும் யாராலும் விரல் நீட்டிக் குற்றம் சுமத்த, வதந்தியாகக் கூட வாய்ப்பளிக்காமல் வாழ்ந்தது மோகனுடைய சாதனையின் மகுடம் எனலாம்.

தோழர் லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் கொலை, தினகரன் எரிப்பு என மதுரை கொலைகளின் நகரமாக மாறிய பொழுது தீரத்துடன் அதனை எதிர்கொண்டதில் அவர் வகித்த பங்கும், பாப்பாபட்டி, கீரிப்பட்டி துவங்கி உத்தப்புரம் வரை சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரமும் மதுரையின் அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழ் செம் மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்றத்தில் தனது உரையை துவக்கியவர். பத்தாண்டுகளில் எம்.பி.க்கள் சராசரியாக எழுப்பும் கேள்விகளின் எண்ணிக்கையைப்போல் இரு மடங்கு அதிகமான கேள்விகளை எழுப்பினார். தேசத்தின் நலன், தமிழக நலன், தொழிலாளி வர்க்கத்தின் உரிமை என மூன்று தளங்களில் அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துப் போராடி வந்தார்.

மதுரை மற்றும் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக சதா இயங்கியவர். அதுசார்ந்த பெருங்கனவை எந்நேரமும் தூக்கிச் சுமந்தவர். தான் நோய்வாய்பட்டு படுத்திருந்த இறுதி நாட்களில் கூட தென்னக்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக மதுரையில் பெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட வேண்டும் என்று சொல்லியவாறே இருந்தார்.

அவரது உடல் இறுதி மரியாதைக்காக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட அன்று பல்லாயிரம் பேர் வந்து அஞ்சலி செலுத்தினர். 'மதுரையோட மாணிக்கம் போச்சே...' என்று துப்புரவுத் தொழிலாளிகளும், சுமைப்பணி தொழிலாளிகளும் கதறிக் கதறி அழுதனர். 'மதுரைக்காக குரல் கொடுக்க இனியார் சார் இருக்கா?' என்று தொழில் அதிபர்களம், பெரும் வணிகர்களும் வேதனையோடு சொல்லிச் சென்றனர். இரு எதிரெதிர் துருவங்களில் வசிப்பவர்களின் மனதையும் வென்றெடுக்க முடிந்த மாமனிதராக அவர் வாழ்ந்தார். அவரது மூச்சுக் காற்றில் மார்க்சியமும், மாமதுரையும் கலந்திருந்தது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் சொல்லவொண்ணா அராஜகம் அரங்கேறியது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சொன்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை முடிந்து திரும்பும் பொழுது ஜெய்ஹிந்த்புரத்தில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கூட்டத்தில் பேசினார். 'இவ்வளவு கடுமையான போராட்டத்தைத் தோழர்கள் நடத்திய பொழுது நான் உடன் இருக்க முடியாது போய் விட்டேனே...' என்று பேசிய பொழுது நாதழுதழுத்து கண்ணீர் கொட்டியது. அதன் பின் அவர் பேசவில்லை.

இன்று அதே வரியை நாதழுதழுக்க கண்ணீர் சிந்தியபடி அவரை நினைத்து எத்தனையோ தோழர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

 

**************

'கடந்த சில மாதங்களாக குடல்வால்வு ரத்தக் கசிவுப் பிரச்சனையால் அவதியுற்று வந்த மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.மோகன் சென்னையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 30 அன்று காலமானார்.'

தோழர் மோகனின் மரணம் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்தும் மேற்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அவரது வாழ்வு பற்றிப் பேசுவது எவ்வளவு முக்கியத்துவம் உடையதோ அதே போல அவரது மரணம் பற்றிப் பேசுவதும் முக்கியத்துவம் உடையது.

தென் தமிழகத்தில் பெரும் அரசு மருத்துவமனையாக இருப்பது மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையே. நாளொன்றுக்கு பத்தாயிரம் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். 2500 உள்நோயாளிகளும், 7500 வெளிநோயாளிகளும் ஆனால் இம்மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், நுண் கருவிகள், படுக்கைகள், தரப்படும் மருந்துகளின் அளவுகள் எல்லாம் 30 ஆண்டுகள்கு முன்பு இருந்த நிலையிலே இருந்தது.

இத்தகைய பின்னணியில்தான் 1997 ஆம் ஆண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக பெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு மோகன் தலைமையேற்றார். போராட்.டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய கொடூரமான தடியடியில் பல தோழர்கள் படுகாயமடைந்தனர். தோழர் மோகனின் உடல் மீது காவல்துறையில் லத்திகள் இஷ்டபடி விளையாடின. மக்களின் உடல் நலம் மற்றும் மருத்துவ நல மேம்பாட்டிக்காகத் தங்களின் உடலையும் நலத்தையும் பணயம் வைத்த போராட்டம் அது. நல்ல சிகிச்சை கேட்டவர்களுக்குக் கிடைத்த கொடூரமான காயங்கள்.

இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 1999 ஆம் ஆண்டு மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். பத்து ஆண்டுகள் அவர் பொறுப்பில் இருந்த பொழுது மதுரை ராஜாஜி மருத்துவ மனையின் மேம்பாட்டிற்காக கண்ணும் கருத்துமாக உழைத்தார். அதுவரை மதுரை மற்றும் தென்னகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இம்மருத்துவமனைக்காக ஒதுக்கிய நிதி 10 சதவீதம் என்றால் தோழர் மோகன் ஒருவர் மட்டும் ஒதுக்கித் தந்தது 90 சதமான நிதியாகும்.

அதே போல, மருத்துவமனை மேம்பாட்டிற்காகவும், விரிவாக்கத்திற்காகவும் தொடர்ந்து இயங்கினார். மருத்துவர்களை அதிகரிக்க, மருந்தாளுனர்களை அதிகரிக்க, இன்சுலின் மருந்து தொடர்ந்து கிடைக்க, இவர் எடுத்த முயற்சிகள் நல்ல பலனைத் தந்தன. 'எய்ம்ஸ்' மருத்துவமனை மதுரைக்குக் கொண்டு வரத் தொடர்ந்து போராடினார். அவற்றின் ஒரு பகுதியாக ஆஸ்டின்பட்டியில் ரூ.150 கோடிக்கு சிறப்பு மருத்துவமனைக்கான அனுமதியைப் பெற்றார்.

உலகமய, தாராளமயமாக்கலின் விளைவாக மருத்துவச் சேவையில் இருந்து அரசு தன்னைப்படிப்படியாக விலக்கிக் கொண்டு தனியார் கையில் ஒப்படைப்பதுவும்,கார்ப்ரேட் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதுமான கொள்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடினார். குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் மருந்து உற்பத்தியை நிறுத்த அரசு முடிவு செய்த போது அதற்கு எதிராகப் போராட்டத்தில் முன்னணி வீரனாக நின்று செயலாற்றினார்

இவகைள் அனைத்தும் தான் நேசிக்கிற அடித்தட்டு மக்களுக்கு செய்கிற உளமார்ந்த சேவை என நினைத்து, தனக்கு நேர்கிற பொழுது தனியார் மருத்துவமனைக்கு ஓடோடிப் போய் சிகிச்சை எடுத்துக் கொண்டவரல்ல.

நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அவரது இரைப்பையில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார். சுமார் ஒருமாதம் அங்கு தங்கி சிசிச்சை பெற்றும் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை. நுணுக்கக் கருவிகள் பற்றாக்குறை, நிபுணர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அங்கிருந்த மருத்துவர்களின் தொடர் ஆலோசனை மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதலின் அடிப்படையில் வேறு வழியேயின்றி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேறு வார்த்தைகளில் சொல்லுவதாக இருந்தால் நமது மருத்துவமனைகளின் போதாமை, நோயாளிகளைத் தனியார் மருத்துவமனை நோக்கிக் கழுத்தைப் பிடித்துத்தள்ளுகிறது. அதற்கு எவ்வித விதிவிலக்கும் இல்லை.

இறுதியாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் உடல் நலங்கருதி முழு ஓய்வில் இருக்குமாறு கட்சி அவரை பணித்தது. முழு ஓய்வில் இருந்த அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதன் காரணமாக அக்டோபர் 20ம்தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார். அவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் வழக்கம்போல் தனியார் மருத்துவமனை நோக்கி அவரைத் தள்ளினர். காசு பறிப்பதையே குறியாகக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைக்கு நான்போகச் சம்மதிக்கவே மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தார்.

வசதியின்மையும், போதாமையும், நிரம்பி வழிகிற இடத்தில இருக்கும் மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லியும், அவரது நிலைபாட்டை மாற்ற முடியவில்லை. 12 தினங்கள் கழித்து மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்ற ஆலோசனையை ஏற்றார். அங்கும் 12 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால், அரசு மருத்துவமனைக்கே உரிய வசதியின்மைக்கு இடையேயும் மருத்துவர்கள் நம்பிக்கையோடு இயங்கியும் தேவையான சிறுபகுதியை மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது.

அவர் நினைவோடு இருந்த கடைசி நிமிடம் வரை தனியார் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்று அவர் நடத்திய போராட்டத்தை எழுதும் பொழுது மனதில் ரத்தம் கசிகிறது. பெரும் நிர்ப்பந்தம் கொடுத்து இறுதியாகத்தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தான் கொஞ்சமும் விரும்பாத அவ்விடத்தில் அவர் அதிக நாள் இருக்க விரும்பவில்லை. ஆறாவது நாளே வெளியேறிவிட்டார். வழக்கமான வழியில் இல்லாமல் இம்முறை மரணத்தின் வழியே

தமிழக முதலமைச்சர் தமது இரங்கல் செய்தியில் 'மோகனின் இழப்பு மதுரையின் இழப்பு' என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மை. அதற்கு இணையான இன்னொரு உண்மை அவரின் இழப்பு மக்கள் நல மருத்து வத்தின் இழப்பும் கூட.