ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரத்தினால் 400 ஆண்டு கால பழமைமிக்க பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டு ஆயிற்று ஆண்டுகள் பதினேழு. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான மண்டல் குழு பரிந்துரையை செயல்படுத்த முயன்ற போது அதை திசை திருப்புவதற்காக பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமர்கோவில் கட்டபோவதாக புறப்பட்டனர் 'மனு'வின் வாரிசுகள். ரதயாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் ரத்தக் களிறியை ஏற்படுத்தினர்.பாபர்மசூதியை இடிக்க அவர்கள் தேர்வு செய்த நாள் டிசம்பர் 6. இந்திய சமூக நீதி வானில் மங்கா ஒளி வீசும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாள் அது. சமூக நீதி போராட்டத்தை பின்னுக்கு தள்ள மதவெறி அரசியலை அவர்கள் முன்வைப்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 10 நாள் கழித்து, இதுகுறித்து விசாரிக்க நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஜனநாயக இந்திய வரலாற்றிலேயே அதிக காலம் இழுத்தடிக்கப்பட்ட விசாரணைக் குழு என்ற 'பெருமை'யை லிபரான் கமிஷன் பெற்றது. 17 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று கடந்த ஜூன் மாதத்தில் அறிக்கையை நீதிபதி லிபரான் மத்திய அரசிடம் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஒரு ஆங்கில நாளேடு அறிக்கையின் சிலப் பகுதிகளை வெளியிட்டது. இதை கசியவிட்டது யார் என்ற சர்ச்சை எழுந்தது. இதன் மூலம் லிபரான் கமிஷன் குற்றச்சாட்டை திசை திருப்ப பாஜக முயன்றது.

வேறு வழியில்லாத நிலையில் அரசு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் கனவில் மிதந்த எல்.கே.அத்வானி உள்பட பாஜக - ஆர்எஸ்எஸ் - விஎச்பி - பஜ்ரங் தள தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

அரசியலில் மதத்தை கலப்பதால் ஏற்படும் விபரீதத்தின் விளைவுதான் பாபர் மசூதி இடிப்பும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரமும் என்று நீதிபதி லிபரான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இடதுசாரிக் கட்சிகள் நீண்ட காலமாகவே இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றன.

லிபரான் கமிஷன் அறிக்கை 17 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது. அதன் தீர்ப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்ததன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்பை தகர்க்க முயன்றவர்களை கூண்டில் ஏற்றி தண்டிக்கும்போதுதான் நீதியின் பயணம் முழுமை பெறும்.