I

1897 ஆண்டு சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதன் முறையாக ஒரு சினிமா திரையிடப்பட்டது.அடுத்த 19 ஆண்டுகளில் -1916இல்  நடராஜ முதலியாரும் தர்மலிங்க முதலியாரும் சேர்ந்து கீசகவதம் படத்தைச் சென்னையிலேயே தயாரித்தார்கள்.இன்று இந்திய சினிமாவில் தமிழ்ச் சினிமாவின் வகிபாகம் மிக முக்கியமானதாக மாறிவிட்டது.ஆண்டுக்கு 100க்குக் குறையாத எண்ணிக்கையில் தமிழ்த் திரைப் படங்கள் வெளியாகின்றன.

இக்கட்டுரையில் தமிழ் சினிமாவின் கலா பூர்வமான செய்திகளைப் பற்றிப் பேசப் போவ தில்லை. அதன்  வியாபாரத்தன்மைகள் மற்றும்  ஏகபோகமாகிவரும் சினிமாத்துறையின் சில சிக்கல்கள் அது கலையை அழிக்கும் அபாயம் இவை பற்றியே பேச இருக்கிறோம்.ஆண்டுக்கு

300 கோடி ரூபாய் முதலீடு செய்யும் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் துவங்கி, எப்போதாவது

ஒரு வெண்ணிலா கபடிக்குழு மாதிரி 3 கோடி முதலீட்டில் ஒரே ஒரு படம் எடுக்கும் சின்னப் பட முதலாளிகள் வரை  பலதரப்பட்ட முதலீட்டாளர் கள் மோதும் களமாக இன்று கோலிவுட் /கோடம் பாக்கம் என்றழைக்கப்படும்  தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. 3 கோடியில் ‘பூ’ வருகிறது

100 கோடியில் ‘எந்திரன்’ வருகிறான்.

1931இல் காளிதாஸ் படத்துடன் தமிழ்ப் பேசும்படத்தின் வரலாறு துவங்குகிறது எனில்

1948 இல் ஜெமினி ஸ்டூடியோ வெளியிட்ட சந்திர லேகா அன்றைக்கே 30 லட்ச ரூபாய் (இன்றைய மதிப்பில் 25 மில்லியன் டாலர்) செலவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுதும் விநியோகிக் கப்பட்ட முதல் படம் என்ற பேர் பெற்றது. வியாபாரத்தை பெருக்கி ஒரு முன்மாதிரியை உருவாக்கிய படம் சந்திரலேகா. அதன்  இயக்குநர்/தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் ஆவார். அப்போ தெல்லாம் ஏ.வி.எம். மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்த விநியோக வியாபாரம் (அதில்தான் முற்போக்கான கலைப்படமான பாதை தெரியுது பார் முடக்கப் பட்டது) பின்னர்  பரவலானது.

தயாரிப்பாளர் பணம் கொடுப்பார். இயக்குநர் படம் எடுப்பார்.விநியோகஸ்தர் படத்தை வாங்குவார். தியேட்டர்களில் அது ஓடும். மக்கள் பணம் கொடுத்துப் படம் பார்ப்பார்கள். அந்தப்பணம் அப்படியே தியேட்டர்  முதலாளி யிலிருந்து தயாரிப்பாளர் வரை அவரவர்  விகிதாச் சாரப்படி பங்காகப் போகும் என்கிற எளிய சூத்திரமாக ஒருகாலத்தில் இருந்த சினிமா வியாபாரம் இன்று எளிதில் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்களும் மர்மங்களும் நிறைந்த சூதாட்டக்களமாக மாறி நிற்கிறது.

சினிமா வியாபாரத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக -  சொல்லப்போனால் ஆதிக்கம் செலுத் தும் ஒரு அங்கமாக  இன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் வந்து சேர்ந்துள்ளன.படம் தயாரிக்கப்பட்டு தமிழகத்தை சினிமா விநியோகத் துக்காகப் பிரித்து வைத்த ஏழு அல்லது எட்டு ‘ஏரியாக்களில்’ படத்தை விற்பது மட்டுமே  வியாபாரம் என்றிருந்த நிலை மாறி இன்று

1. படத்தின் வெளிநாட்டு விற்பனை உரிமை

2. படத்தின் பாடல் குறுந்தகடு (ஆடியோ சிடி) கேசட் உரிமை 3.தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி  ஒளிபரப்பு உரிமை 4.வலைத்தளங்களில் ஒளிபரப்பும் உரிமை 5. மொழி மாற்ற மற்றும் மறு தயாரிப்பு (ரீ-மேக்) உரிமை 6.வாகனங்களில் திரையிடும் உரிமை 7.படத்தின்  வீடியோ -குறுந் தகடு மற்றும் அடர் தகடு உரிமை(சிடி/டிவிடி) 8.டிடிஎச் உரிமை 9.எப்.எம். சேனல்களில் ஒலி பரப்பும் உரிமை 10.செல்பேசிகளில் ரிங் டோன்களாகப் பயன்படுத்தும் உரிமை 11. படத்தின் சில அம்சங்களை பனியனில் தொப்பியில் அச்சிட்டு விற்பனை செய்யும் உரிமை 12. படத் தைப் பற்றி விளம்பரம் செய்ய பல்வேறு உத்தி களுக்கான உரிமை என்று இன்னும் பல விதமான வியாபாரங்களை உள்ளடக்கியதாக  இன்றைய தமிழ்த் திரைப்படத் தொழில் மாறியுள்ளது.

மேற்குறிப்பிட்ட பலப்பல வியாபாரங் களுக்கு நடுவேதான்  இன்று சினிமா என்கிற கலை வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. கதையைத் தேர்வு செய்தோமா பொருத்தமான கலைஞர்களை யும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஒருங்கி ணைத்துப் படத்தைத் தயாரித்தோமா என்கிற கலாபூர்வமான உழைப்போடும் நிறைவோடும் இயக்குநர் என்கிற படைப்பாளி  இன்று நிம்மதி யாக ஒதுங்கிவிட முடியாது.கலைக்கு அப்பாற் பட்ட - கலைமனதை அழிக்கக்கூடிய - வேலைகள் தான்  70 சதவீதம் இன்று ஒரு இயக்குநர் பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.இது மிகவும் கவலை தரும் நிலையாகும்.

 

II

பொருளாதார உலகில் உலகமயம் தன் கொடுங்கரங்களை நீட்டுவதற்கு  முன்னோடியாக ஊடக உலகில் உலகமயம் தன் சுவடுகளை அழுந்தப் பதித்து விட்டது.உலகமயத்தின் முன் தேவையின் காரணமாகவும் இது நிகழ்ந்திருக்கலாம்.

பன்னாட்டு நிறுவனங்களின் பொருட் களுக்கேற்ற -பொருளாதார நடவடிக்கைகளுக் கேற்ற- நுகர்வோராக உலக மக்களின்  மனநிலை களைத் தகவமைக்க வேண்டிய பண்பாட்டுப் பணியை ஊடகம்தானே  சக்தியுடன் செய்ய முடியும்?

இந்தியாவைப் பொறுத்தவரை 1957 இல் தூர்தர்ஷன் தன் ஒளிபரப்பைத் துவங்கினாலும் அது பெரிதும் மத்திய அரசின் பிரச்சாரப்பீரங்கியாக மட்டுமே செயல்பட்டு வந்தது.அச்சு ஊடகம் இந்தியாவில் முழுக்க முழுக்க தனியார் கைகளில் அரசின் கட்டுப்பாடின்றி ஆகக்கூடுதலான

சுதந்திரத்துடன் செயல்படுவது வரலாறு.அதாவது

1980 வரையிலும்கூட கல்வி மறுக்கப்பட்ட பெரு வாரியான விவசாயிகள்,தொழிலாளிகளுக்கு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள  தூர்தர்ஷன் என்றும், படித்த மத்திய தர வர்க்கத்தின் மூளைகளுக்குத் தீனி போட சுதந்திரமான அச்சு ஊடகம் என்றும்  இந்திய ஊடக உலகம் வர்க்க ரீதியான கடமைகள் தீர்மானிக்கப்பட்டுத்  தெளிவாக இயங்கி வந்தது. இந்திராகாந்தி பிரதமராகவும் ஆர்.வெங்கட்ராமன் நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் நாட்டை அடமானம் வைத்து ஐ.எம்.எப்பிடம் கடன் பெற்ற கதை துவங்கியது.

இந்திரா  தொலைக்காட்சியை ‘தேசத்தை’க் கட்டும் சாதனமாகப் பார்த்தார்.அவர் ஆட்சிக் காலத்தில் மூன்று முக்கிய விஷயங்கள் நடந்தன.

1. வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டி களைப் பெரிய அளவில்  நாடு முழுக்கக் கொண்டு சேர்த்தது

2.இன்சாட்-1 செயற்கைக்கோளை விண் ணில் ஏவி  தொலைத் தொடர்பில் பெரும் புரட்சிக்கு வித்திட்டது.

3. ஒளிபரப்பு நிலையங்களின் எண்ணிக்கை யைப் பல மடங்கு பெருக்கியது.

இவ்வளவு செய்தாலும் தூர்தர்ஷன் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைக் கூட எதிர்கொள்ள முடியாத நிலையில்தான் இருந் தது. இதற்கு மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாக இந்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்த ‘ கதவைத் திறந்து விடும்’ கொள்கையின் காரணமாக உலக ஊடக ஜாம்பவான்கள் இந்தியாவுக்குள் சர்வ சாதாரணமாக நுழைந்தனர்.

1994இல் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட அந்நியப் படங்களுக்கு இந்தியாவில் இருந்த தடை நீக்கப்பட்டது. இந்தியப் படத்தயாரிப்பாளர்களின் அடிவயிறு கலங்க ஹாலிவுட் திரைப்படங்கள் அனகொண்டா, 23பருத்தி வீரர்கள்,ஹேரிபாட்டர் என்று வந்துகுவியத் துவங்கின.நல்ல தமிழ் பேசும் இந்த ஹாலிவுட் படங்கள் வசூலை அமெரிக்காவுக்கு அள்ளிக்கொண்டு போயின.

இலங்கை வானொலியைச் சமாளிக்க தூர்தர்ஷன் வயலும் வாழ்வும் போன்ற  நிகழ்ச்சி களோடு பழைய திரைப்படங்களைத் திரையிடும் முடிவை எடுத்தது. ஒளியும் ஒலியும் என்று வெள்ளிக்கிழமைகளில் புதிய திரைப்படப் பாடல் களையும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரைப்படங் களையும் திரையிடத் துவங்கியது. படத்தயாரிப் பாளர்கள் (குறைந்த பட்ஜெட் படங்களே) தூர் தர்ஷன் வாசலில் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந் தனர்.இவ்வளவு இருந்தும் இறுகிப்போன முட்டாள்தனமான அதிகார வர்க்க நடைமுறை களால் தூர்தர்ஷன் பெரிய அளவுக்கு வியாபார வெற்றியை ஈட்ட முடியவில்லை.

இந்நிலையில்தான் உலக நாயகர்களின் வருகை நிகழ்ந்தது.ஏற்கனவே உலக ஊடகம் குறிப்பிட்ட சில கம்பெனியாரின் ஆதிக்கத்துக்கு வந்திருந்தது.ஒரு கம்பெனி என்பது வெறும் தொலைக்காட்சிக் கம்பெனியாக மட்டும் இல்லா மல் அச்சு ஊடகம், திரைப்படத் தயாரிப்பு, கேபிள் தொழில் எனப் பலவற்றை ஒருங் கிணைக்கும் கார்ப்பொரேட் கம்பெனியாக உருவெடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராபர்ட் முர்தோக் 1960களில் இங்கிலாந்துச் சந்தையில் நுழைந்து 1980க்குள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க  ஊடக உலகின் சக்கரவர்த்தியாக உயர்ந்தார். அவருடைய நியூஸ் கார்ப்பொரேசன் கையில் கீழ்க் கண்ட மீடியா வலைப்பின்னல் இருக்கிறது:

• 132  தினசரிப் பத்திரிகைகள்

• ட்வெண்டியெத் செஞ்ச்சுரி ஃபாக்ஸ் எனப்படும் திரைப்படத் தயாரிப்பு, தொலைக் காட்சி சேனல் மற்றும் வீடியோ தயாரிப்பு நிறுவனம்

• ஆசியாவின் ஸ்டார் டிவி

• 22 அமெரிக்க டெலிவிஷன் சேனல்கள்

• டிவி கைடு உள்ளிட்ட 25 ஆங்கில இதழ்கள்

• ஹார்ப்பர் கோலின்ஸ் உள்ளிட்ட பல புத்தகப் பதிப்பு நிறுவனங்கள்

• ஃபாக்ஸ் செய்திச் சேனல்

• அமெரிக்கா,பிரிட்டன்,லத்தீன் அமெரிக்க நாடுகள்,ஜப்பான்,ஜெர்மனி,ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் பல்வேறு செனல்களில் அதிகபட்ச பங்குகள்

• இந்தியாவின் ஜீ டிவியில் 49.9 சத பங்கு (50 சதத்துக்கு மேல் அந்நிய பங்கு இருக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்த காலத்தில்)

• டைம் வார்னர்,வியாகாம்,டிசிஐ,சோனி, எம்ஜிஎம்  போன்ற பெரிய மீடியா நிறுவனங் களுடன் நீண்டகால ஒப்பந்தங்கள்.

ஒரு உதாரணத்துக்காக முர்தோக்கின்  கம்பெனியைப் பற்றி மட்டும் சொல்கிறோம். இதே போல மிகப் பெரும் வலைப்பின்னல் உள்ள கார்ப்பொரேட் கம்பெனிகள்  டைம் வார்னர் (புகழ் பெற்ற டைம் பத்திரிகை, HBO சேனல் உள்ளிட்டு), டிஸ்னி (டிஸ்னி லேண்ட் போன்ற பல பெரிய தீம் பார்க் குகள்,அமெரிக்காவின் ABC டெலிவிசன், ESPN, ESPN 2 maRRum Disney சேனல்)  மற்றும் வியாகாம், TCI போன்ற கார்ப்பொரேட் கம்பெனிகள் இன்று தமக்குள் கடும்போட்டியில் களத்தில் நிற்கின்றன. இவர்கள் எல்லோருமே இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி இருக்கிறார்கள். இக்கம்பெனிகள்தான் உலகில் வெளியாகும் எல்லாத் திரைப்படங்களையும் விலைக்கு வாங்கி வெளியிடுவதும் தங்கள் ஊடகத்தின் சொத்தாக அவற்றை மாற்று வதையும் செய்கிறார்கள்.

இந்த எல்லாக் கம்பெனிகளின் செயல்பாடு களையும் இயங்குமுறைகளையும் உலகப் போக்கு களையும் நன்றாக அறிந்த  முரசொலி மாறன் குடும்பத்தினர் அதே பாதையில் பயணிக்கும்  சன் டிவியின் தமிழ் மாலை என்கிற தமிழின் முதல் தனியார் சேனலைத் துவக்கினர்.

III

வெள்ளிக்கிழமை மட்டும் சினிமாப்பாடல் காட்சிகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்த தூர்தர்சன் சன் டிவியின் 24 மணிநேர சினிமா என்கிற தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இற்று வீழ்ந்தது.

தமிழில் போட்டிக்கு எவரும் உருவாகி யிராத காலத்தில் திறந்து கிடந்த பரந்த மைதானத் தில் டால்ஸ்டாயின் ஆறடி நிலம் கதையில் வருவது போல சன் டிவி குழுமம் ஓடி அளந்த இடம் பூராவும் தனக்கே சொந்தம் என்று சேர்த்துக் கொண்டது.இன்று தென்னாடு முழுக்கத் தன் கைக்குள் கொண்டு வந்து விட்டது. தமிழ்த் திரைப்படங்களின் வீடியோ உரிமைகளை வாங்கி வீடியோ கேசட் போட்டு விற்றுக்கொண்டிருந்த ராஜ் வீடியோ விஷன் கம்பெனி நெருக்கடிக்கு ஆளானது.ஒரு சேனலை ஆரம்பிப்பதைத் தவிர அதற்கு வேறு வழியின்றிப்போனது.இரண்டாவது தமிழ்த் தனியார் தொலைக்காட்சி அலை வரிசை யாக ராஜ் டிவி வந்தது.சினிமாவை நம்பி சேனல் கள் இருந்ததால் போட்டியும் சகலவிதமான முதலாளித்துக் கழுத்தறுப்பு அரசியலும்  மீடியா உலகத்துக்குள் வந்தது.எந்த ஆட்சி மத்தியில் இருந் தாலும் மாறன் அதில் அமைச்சராக இருந்தது அவர்களின் ஊடகத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருந்தது என்பது ஊரறிந்த ரகசியம்.சன் டிவியில் நேருக்கு நேர் மூலம் புகழ் பெற்ற ரபி பெர்ணார்டு துவக்கிய நிலா டிவி போட்டியில் நிற்க முடியாமல் அற்பாயுசில் அழிந் தது.முதலில் துவங்கப்பட்ட ஜேஜே டிவி வீழ்ந்து பின்னர் ஜெயா டிவியாக மறு உயிர்ப்புப் பெற்று வர வேண்டியிருந்தது.ஜெயலலிதாவின் வீட்டுக் குள் புகுந்து செருப்புகளின் அணிவரிசையைப் படம் பிடித்துக்காட்டியது முதல் நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது வரை எதைச் செய்தாகிலும் தன் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும்  வித்தை யை சன் டிவி அறிந்து வைத்துள்ளது.

தினகரன்,குங்குமம் போன்ற ‘நம்பர் ஒன்’ மற்றும் ‘ஒசத்தி கண்ணா’ இதழ்கள்,பல்வேறு மொழிகளில் சேனல்கள், செவிவழித் தாக்கும் சூரியன் எப்.எம் போன்ற ஒலி அலைவரிசைகள்  என நாம் மேலே குறிப்பிட்ட உலக நாயகர்களின் வரிசையில் மற்றும் பாதையில் சன் குழுமம் பயணப்பட்டு இந்தியாவின் முன்னணி முதலாளி களில் ஒருவராக 13000 கோடி சொத்துக்கு அதிபதியாக கலாநிதி மாறன் உயர்ந்துள்ளார்.இந்த சன்டிவி இன்று சன் பிக்சர்ஸ் என்கிற பெயரில் திரைப்படங்களைத் தயாரிக்கவும் விலைக்கு வாங்கி வெளியிடவும் செய்கிற தொழிலில் இறங்கியுள்ளது. குடும்பச் சண்டையின் காரணமாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் மூன்று உயிர்கள் எரிந்து பின்னர் அவர்கள் ராசி ஆயிட் டோம் என்று சொன்னாலும் எனக்கென்று ஒரு சேனல் என் நாடு என் மக்கள் என்று கலைஞர் டிவி தொடங்கப்பட்டது.துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின்  ரெட் ஜெயிண்ட் மூவீஸ் என்ற கம்பெனியையும் மாண்பு மிகு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி க்ளவுட் னைன் மூவீஸ் என்ற கம்பெனியையும் துவக்கித் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகக் களத்தில் குதித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர் களும் சொந்தமாக இதுபோன்ற ஒரு படக் கம்பெனியைத் துவங்கப்போவதாகச் செய்திகள் வருகின்றன.

சினிமாவை நம்பி தொலைக்காட்சி சேனல் கள் என்றிருந்த நிலையை சேனல்கள் தரும் விளம்பரத்தை நம்பியே சினிமா என்கிற நிலைக்கு மாற்றியதில் சன்டிவி யின் பங்கே பிரதானமானது. முன்பெல்லாம் ரேடியோவில் ஒரு திரைப்படப் பாடலை ஒலிபரப்பினால் அப்படத்தயாரிப் பாளருக்கும் கவிஞருக்கும் இசை அமைப்பாளருக் கும் வருடத்துக்கு இவ்வளவு என்று காசு கொடுக்கும் வழக்கம் இருந்தது. இலங்கை வானொலி ஒரு பாட்டுக்கு ஆண்டுக்கு 10 ரூபாய் தந்ததாகச் சொல்லுவார்கள்.சூரியன் எப்.எம். மற்றும் சன் தொலைக்காட்சி  தலையெடுத்த பிறகு  காசாவது ஒண்ணாவது போ போ என்கிற நிலை வந்து விட்டது. என்ன குப்பைப் படமானாலும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை டிவியில் விளம் பரம் வந்தால் மக்களில் ஒரு பகுதியினர் தாங்க மாட்டாமல்  திரை அரங்குகளுக்குப் போய்ப் படத்தைப் பார்த்து விடுவார்கள் என்கிற  உத்தியை நம்பியே இன்று பெரும்பாலான படங்கள் இருப் பதால் சன் டிவியில் வந்தால் போதும் என்று முந்தைய உரிமைகள் அத்தனையையும் படத் தயாரிப்பாளர்கள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.

படம் ஓடுமா ஓடாதா என்கிற அச்சம் கத்தி போல ஒவ்வொரு தயாரிப்பாளரின் தலைக்கு மேலும் எப்போதும் தொங்கிக் கொண்டிருப் பதாலும் முதல் 25 நாள் ஓடிவிட்டால் போட்ட காசை எடுத்து விடலாம் அதற்கு தொலைக்காட்சி சேனல்களின் விளம்பரமே ஒரே கதி என்று ஆகிவிட்டபடியால் சன் பிக்சர்ஸ் கேட்டால் தயாரிப்பாளர் தன் படத்தை அவுட்ரைட்டாக விலை பேசி இனி அப்படத்துக்கும் தனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு விற்கிற நடைமுறை இன்று பரவலாக வந்து விட்டது. படம் வெளியாகிச் சில ஆண்டுகளுக்குப் பிறகே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்கிற சட்டமெல்லாம் காற்றில் பறக்க “திரைக்கு வந்து சில மாதங்களே ஆன” திரைப்படங்களும் உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக என்கிற விளம்பரத் தோடு சேனல்களில் ஒளிபரப்பப் படுகின்றன. படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே சேனல் காரர்கள் தயாரிப்பாளருக்குத் துண்டு போட்டு விலை பேசி முடிக்கும் அளவுக்கு இந்த வியாபாரம் இன்று வேகம்  எடுத்துள்ளது. சிவாஜி படத்தையும் தசாவ  தாரம் படத்தையும் கலைஞர் டிவி அப்படி வாங்கியது.

பெரிய படத்தயாரிப்பாளர்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று படத் தயாரிப்பைக் கைவிட்டுள்ளனர். தமிழகம் முழு வதும் தியேட்டர்களை விலைக்கு வாங்கித் திரையிடும் அளவுக்கு வளர்ந்து வந்த சாய் மீரா குரூப் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சிடி தயாரிப்பு மற்றும் விற்பனை யில் முதலிடத்தில் உள்ள பீகாரைச் சேர்ந்த முதலாளியின் கார்ப்பரேட் நிறுவனமான மோசர் பேர் கூட படங்களைத் தயாரித்தாலும் அது சன் பிக்சர்ஸ்க்கும் கலைஞர் டிவிக்கும்தான் விற்க வேண்டியுள்ளது.

திரையரங்குகள் வணிக வளாகங்களோடு (ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்) இணைந்து அவற்றின் பகுதியாக கட்டப்படும் போக்கு இன்று வளர்ந்து வருகிறது.சென்னை நகரத்தில் மட்டும் இப்போது  அப்படியான 170 வளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவற்றில் பெரும்பகுதி சன் மற்றும் கலைஞர் குடும்பத்தினருக்கே சொந்தம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இன்னொரு பக்கம் கேபிள் தொழிலில் ஏகபோக உரிமை அழகிரி அவர்களின் சுமங்கலி கேபிள் விஷன் கையில் இருக்கிறது.அதற்காக நடந்த போராட்டங்கள் அடிதடிகள் வயர் அறுப்புகள் எல்லாம் தமிழகம் அறிந்த கதை.அரசு கேபிள் அதோகதியாக பாதியில் நிற்க அதற்காகக் குரல் கொடுத்த ஐஏஸ் அதிகாரி உமா சங்கர் படாத பாடு பட்டுக்கொண்டிருப்பது சமீபத்திய கதை.

பணபலம்,அதிகார பலம்,மீடியா பலம், அடிதடி பலம் ஆகிய நான்கும் ஒரு குடும்பத்தின் கையில் இருக்க   தமிழ்த்  திரையுலகின் எதிர்காலம் அவர்கள் கையில் இருக்க -  என்கிற நிலையை நோக்கித் தமிழகம்  வேகமாகச் சென்று கொண் டிருக்கிறது.சன் பிக்சர்ஸ் மற்றும் பேரன்மார்களின் நிறுவனங்கள் தமிழ் மக்களின் வாழ்வையும் பண்பாட்டையும் மையமாகக் கொண்ட படம் ஒன்று கூடத் தயாரிப்பதில்லை.வருவதெல்லாம் மசாலாச் சரக்குதான்.விளம்பரத்தாலும் ஓட வைக்க முடியாத சுறா போன்ற தேறாத சரக்குகள்தான்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் எதிர்காலமே இன்று சின்னச் சின்னத் தயாரிப் பாளர்கள்  எடுக்கும் சின்ன பட்ஜெட் படங்களை நம்பியே இருக்கிறது.அப்படித் தயாராகும் படங் களும் திரையரங்குகளுக்கு திமிங்கிலங்களைத் தாண்டியே வந்து சேர வேண்டி யிருக்கிறது.ஆகவே தயாரிப்பிலும் விநியோகத்திலும் திரையிடுவ திலும்  ஏகபோகங்களுக்கு மாற்றுகளை உருவாக்க வேண்டிய அவசர அவசியம் தமிழகத்தில் எழுந் துள்ளது.

தெரு சினிமா இயக்கம், குறும்பட ஆவணப் பட இயக்கம் மற்றும் நகரசபை மற்றும் பஞ் சாயத்துக்கள் சொந்தமாக சின்னச் சின்ன திரை யரங்குகளைக் கட்டிப் படங்களைத் திரையிடுவது என்று  இக்களத்தை மக்கள் மயமாக்க வேண்டிய அவசியம் உள்ளது.குற்றாலம் மற்றும் ஊட்டி டவுண்சிப்கள் கட்டிய திரையரங்குகள்கூட மூடப்பட்ட நிலை இன்று உள்ளது.

உலகமயத்துக்கு எதிராகப் பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் போராடும்போது நாம் சொல்கிறோம் ‘ வேறு மாற்றே இல்லை என்கிற உலகமய ஆதரவாளர்களின் வாதங்களை ஏற்க மாட்டோம். மாற்று நிச்சயம் உண்டு’  என் கிறோம்.அதே போல இன்று தமிழ்ச் சினிமா மற்றும் ஊடக உலகில் ஒரு  குழுவின் ஏகபோகம் உருவாகி விட்டது. தயாரிப்பு,விற்பனை, விநி யோகம்,விளம்பரம்,எப்.எம் ஒலி வரிசை,கேபிள் இணைப்புகள் என எல்லாமே லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு குழுவின்/குடும்பத்தின் கையில் என்கிற நிலைக்கு மாற்றுகளை நாம் தேட வேண்டும்.இல்லாவிட்டால் தமிழ்ச் சமூகத்தின் மனதைத் தகவமைக்கிற பண்பாட்டுச் செயல் பாட்டை அவர்கள் கையில் விடுவது என்றாகி விடும்.

திரைப்படத் துறையில் உள்ள ஜனநாயக உள்ளம் கொண்டோரும் வெளியில் உள்ள சக்தி களும் இணைந்து யோசிக்க வேண்டிய, செயல் படவேண்டிய தருணம் இது.