மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் மா. வள்ளலார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றதிலிருந்தே அந்த மாவட்டத்தின் பல்வகை வளர்ச்சியிலும் தனி அக்கறை கொண்டவராக அவரை மக்கள் உணரத் தொடங்கினார்கள். மாவட்டம் முழுதும் இந்த ஆண்டு மட்டும் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை நன்கு பராமரிக்கவும் சிறந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார். இது அடுத்த ஆண்டு 5 லட்சமாகவும், அதற்கு அடுத்த ஆண்டு 10 லட்சமாகவும் இரட்டிப்பாகிக்கொண்டே போகும்படியும் திட்டமிட்டிருக்கும் வள்ளலார் கலை ஆர்வமிக்கவர். இசையில் தீவிர ஈடுபாடுள்ளவர்.

திண்டுக்கல்லில் ஒரு கலையரங்கத்தினை நிர்மானித்து, நடனமும் கலைகளும் பயிற்றுவித்து அரங்கேற்றும் விதத்தில் அதனை உருவாக்கப் பெருவிருப்பம்கொண்டிருப்பவர். அண்மையில் திண்டுக்கல் நகரத்திலும், மாவட்டத்தில் மேலும் மூன்று இடங்களிலும் நான்கு நாட்களுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடகக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்ற கிராமியக் கலை விழாவினை மிகவும் புதுமையாகவும் எழுச்சியோடும் நடத்தியிருக்கும் மா. வள்ளலார் செம்மலருக்காக அளித்த பேட்டி இங்கே:

கிராமியக் கலைவிழா நடத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

கலை வடிவங்களில் இசை என்பது பொதுவாகவே நம் எல்லோர் ரத்தத்திலும் ஊறியதுதானே? நாம் எல்லோருமே இசையை விரும்பி ரசிப்பவர்கள்தானே? என்னைப் பொறுத்தளவில் கர்நாடக இசை என்றாலும், இந்துஸ்தானி இசை என்றாலும், மேற்கத்திய இசை என்றாலும், நமது தொன்மைமிக்க கிராமிய இசை என்றாலும் இவை எல்லாவற்றையுமே நான் மிகவும் ரசிப்பேன். எல்லா இசையிலும் எனக்கு ஈடுபாடுண்டு. இவற்றில் நமது நாட்டுப்புற கலைகளுக்கு, குறிப்பாக நாட்டுப்புற இசைக்கு எங்குமே வாய்ப்புகள் வாய்க்கவில்லை. சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற எந்த ஊடகங்களும் இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை.

இந்தப் பரிதாபப்பட்ட கலைஞர்கள் தங்களுக்கு ஆதரவில்லாததால் மேலும் வளரவே முடியவில்லை. அடுத்த கட்டத்திற்கு அவர்களால் போகவே முடியவில்லை. இது குறித்து நீண்டகாலமாக எனக்குள் ஒரு மனக்குறை இருந்துகொண்டேயிருந்தது. இப்போது அதற்கு ஏதாவது செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இவ்வளவு கலைஞர்களையும் கலைகளையும் ஒருங்கிணைக்க எனக்கு சக்தி கலைக்குழுவின் இயக்குநர் சகோதரி சந்திராவின் அறிமுகம்தான் பேருதவியாக இருந்தது. நாங்கள் ஒரு குழுவினை ஏற்படுத்தி இந்தச் சாதனையைச் செய்திருக்கிறோம்.

ஒர ு மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டுமே தனியாக இதனைச் செய்திருக்க முடியாதில்லையா? நான் சில ஆலோசனைகள் சொல்லலாம். அதனை அப்படியே உள்வாங்கிக் கொண்டு இவர்கள் மிக அருமையாக அதனைச் செயலாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த அனுபவம் நாட்டுப்புறக் கலைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அது மக்களைச் சென்றடையமுடியும் என்பதையே காட்டுகிறது. நாட்டுப்புறக் கலைகள் ஏதோ ஒதுங்கிப்போய் நிற்கிற கலைகளல்ல.

'இலக்கியக் களம்' எனும் ஒரு அமைப்பையும் துவங்கியிருக்கிறீகளாமே?

இலக்கியக் களம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, அதனைத் தனித்து இயங்கவிட்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் அதனைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அதற்கு ஏழு பேர் கொண்ட ஒரு குழு இருக்கிறது.

அந்த அமைப்பின் நோக்கம் என்ன?

இலக்கியம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? மனித வாழ்க்கையின் பரிணாமமே இலக்கியத்தில்தானே பதிவாகியிருக்கிறது. மனிதனின் அறிவு சுத்திகரிக்கப்படுவது இலக்கியத்தால்தானே? இலக்கியம் என்பது சமூகத்தைப் பிரதிபலிப்பது. தமிழ் மொழி இலக்கியங்களோடு பிற மொழி இலக்கியங்களையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

இசையில் உங்களது ஈடுபாடுதான் 'இசை விழா' யோசனைக்கும் காரணமா?

நாட்டுப்புற இசை மட்டுமல்ல, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, கஜல், மேற்கத்திய இசை என்று எல்லாவற்றையும் மேடையேற்றப் போகிறோம். கிராமியக் கலை விழா இப்போதுதான் நிறைவடைந்திருக்கிறது. அடுத்து இசை விழாவைப் பற்றி இனிதான் திட்டமிடவேண்டும்.

இனி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இந்த கிராமியக் கலைவிழாவை மக்கள் எதிர்பார்ப்பார்கள் இல்லையா?

நாங்கள் ஆரம்பித்து வைத்துவிட்டோம். அதை இனி தொடர்ந்து எடுத்துச்செல்ல வேண்டியது மக்கள்தான்.

'குறிஞ்சி' என்ற பெயரில் இதழ் ஒன்றினைத் துவக்கப் போகிறீர்களாமே?

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமங்கள்தோறும் நூலகங்களை அரசு துவங்கியிருக்கிறது. அவற்றில் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. கிராமப்புற மக்களை, குறிப்பாக இளைஞர்களை அந்த நூலகங்களுக்கு வரவழைக்கவேண்டும். அதற்காக நாங்கள் எல்லா ஊர்களிலும் வாசகர் வட்டம் துவக்கியிருக்கிறோம். ஒவ்வொரு பஞ்சாயத்து மட்டத்திலும் கூட்டங்கள் நடத்தி, உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டோம். அந்தக் கூட்டங்களில் கிராமப்புறங்களைச் சார்ந்த நிறையப் படைப்பாளர்களைச் சந்தித்தோம். தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பங்களே வாய்ப்பதில்லை. எனவே, 'குறிஞ்சி' அவர்களை வெளிக்கொண்டுவரப்போகிறது. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்று எழுதி அவர்கள் தயாராகிவிட்டார்கள். ஆசிரியர் குழுவும் தயார். உள்ளூர் எழுத்தாளர்களை அடையாளம் காணப்போகிறோம். அவர்கள் சமையல் குறிப்புகள் உள்ளிட்ட எதையும் எழுதலாம். 'குறிஞ்சி' தயாரிப்புப் பணிகள் விரைவில் முடிந்துவிடும்.

மாவட்ட ஆட்சியர் பொறுப்பே மிகவும் சுமைகள் மிகுந்ததாயிற்றே, அத்தோடு கலை- இலக்கியப் பணிகளுக்கும் எப்படி நேரம் ஒதுக்க முடிகிறது?

நான் செய்யவேண்டிய வழமையான வேலைகள் என்று இருக்கின்றன. அவற்றை நான் செய்தே ஆகவேண்டும். என் மனதிற்குப் பிடித்த வேலைகள் சிலவும் இருக்கும். அவற்றைச் செய்கிறபோதுதான் மன நிறைவாக நான் உணரமுடியும். எனக்கு அமைதியும் அதனால் கிடைக்கும். அரசு பணித்திருக்கும் எனது வழமையான பணிகளையும் நான் ஆர்வத்தோடு செய்ய அது துணைசெய்யும். கலைப்பணி என்பது எனக்குக் கூடுதல் சுமை இல்லை. அது நான் இளைப்பாறுகிற இடம்.

கிராமியக் கலைஞர்கள் நலிவு நீங்க என்ன ஆலோசனை வைத்திருக்கிறீர்கள்?

ஏன் அவர்கள் நலிந்திருக்கின்றனர்? வாய்ப்பின்றித்தானே? அதை மாற்றத்தானே நாங்கள் இந்த முயற்சியைச் செய்தோம்? தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரே கலைத்துறையைச் சார்ந்தவர்தானே? அவரது ஆட்சியில் கிராமியக் கலைஞர்கள்வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திண்டுக்கல் மாவட்ட அனுபவத்தை அரசுக்கு விரிவாக எழுதியிருக்கிறோம். எங்கள் அனுபவத்தினைக் கைக்கொண்டு தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்த விழா நடைபெற்றால் கிராமியக் கலைஞர்கள் நிச்சயமாக நலிவடைந்த கலைஞர்களாக இருக்கமாட்டார்கள்.

இசை ஆர்வம்மிக்க நீங்கள் அதனைப் பயில முயற்சிக்கவில்லையா?

பியானோ கொஞ்சம் வாசிப்பேன். வீட்டில் கீ போர்டு இருக்கிறது. என் மகள் படிக்கிறாள். நானும் கொஞ்சம் வாசிப்பேன்.

எந்த மாதிரியான நூல்களில் உங்களுக்கு நாட்டம்?

தினசரி நூல்களை வாசிக்க விருப்பம் அதிகம் உண்டு. இலக்கியம் என்று சொல்வதைவிட எனக்கு அதிக விருப்பமானவை வரலாற்று நூல்கள்தான். வரலாற்று நூல்கள் எது கிடைத்தாலும் அப்படியே விழுங்கிவிடுவேன். நான் எந்த நாட்டிற்குப் போனாலும் அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்ப்பதிலேயே ஆர்வமாக இருப்பேன். பெர்லின் போனபோதுகூட அங்கே பார்க்கவேண்டிய அழகான இடங்கள் பலவற்றைச் சொன்னார்கள். நான் ஹிட்லர் வாழ்ந்த இடம், செத்த இடம், கேஸ் சேம்பர் என்றுதான் சுற்றிக்கொண்டிருந்தேன்.

திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எப்போதும் டென்ஷனாகவே இருக்கும். இந்த ஆண்டு அது மிக அமைதியாக நடந்து முடிந்தது. அதற்கு உங்களது பங்களிப்பு முக்கியமானது என்று பேசப்பட்டது. நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் ஒன்றுமே செய்யவில்லை. இரண்டு தரப்பாரையும் புரிந்துகொள்ளச் செய்தோம். நான் ஒரேயொரு வார்த்தைதான் சொன்னேன். "மனங்கள் மலர்ந்தால் மதங்களுக்கு வேலையில்லை!" என்று மட்டும் சொன்னேன். அவர்களுக்குள் இருந்த ஈகோவைப் புரிய வைத்தோம். கடந்த 13 ஆண்டுகள் திண்டுக்கல் விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவரம்தான். இந்த ஆண்டு முஸ்லிம் மக்கள் விநாயகர் ஊர்வலத்தின்போது அதனை எதிர்கொண்டு வரவேற்றார்கள். அவர்களோடு ஒரு நாள் அல்ல, மூன்று மாதங்கள் தொடர்ந்து பேசினோம். முதலில் அவர்களின் மனங்களை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள முயன்றோம். மக்களோடு மக்களாக நாங்கள் கலந்தோம். அவர்களுக்கு ஏராளமான அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாமல் இருந்தன.

தண்ணீர் வசதியில்லை, சாக்கடை வசதியில்லை. அவற்றையெல்லாம் தீர்த்துவைக்க முயன்றோம். எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கருதுகிற நிலைமை ஏற்படச்செய்தோம். பிரச்சனை முடிந்த பிறகும்கூட நாம் தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்குப் போய் அவர்களுடன் நல்ல நட்பைப் பராமரித்தோம். தீபாவளி மற்றும் ரம்ஜான் ஆகிய பண்டிகைகளை இரண்டு சமூகத்தாரையும் ஒன்றாகக் கொண்டாடச் செய்தோம். ரம்ஜானின்போது இஸ்லாமிய மக்கள் பிரியாணியை இந்து மக்களுக்குக் கொடுத்து உபசரித்தனர். அதைப்போலவே, தீபாவளியன்று இனிப்புகளை முஸ்லிம் மக்களுக்குக் கொடுத்தனர். இந்த ஒற்றுமை நிரந்தரமாக நீடிக்கும் வகையில் எங்களது முயற்சிகள் அமைந்தன.

சந்திப்பு: சோழ. நாகராஜன்