USA_370

கே.அரங்கராஜன், பாதிரக்குடி

சென்னையில் ஆசிரியை உமா மகேஸ் வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் சினிமா பாணியில் கொலை செய்திருக் கிறானே?

கவிஞர்கள் பாடியது போல விதையாய்த் தூவ வேண்டிய கல்வியை ஆணியாய் அடித்து இறக்கு கிறார்கள். அது எகிறிக் குதிக்கிறது. கொலைகார மாணவனா? கொலைகாரக் கல்வி. நமது கல்வி முறையை முழுவதுமாய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்புறம், இந்தச் சினிமா! ஆகப் பெரும்பாலான படங்கள் அன்பு செலுத்துவது எப்படி என்று சொல்லுவதில்லை, வன்முறையில் ஈடுபடுவது எப்படி என்பதை விலாவாரியாகச் சொல்லித் தருகின்றன. தணிக்கை வாரியத்தை நம்புவதைவிட இத்தகைய படங்களுக்கு எதிராக மக்களின் கோபாவேசத்தை எழுப்புவது உத்தமம்.

திருச்சி மாவட்டம் திண்ணியத்தைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திரு வைக்கரை கிராமத்தில் கல்நெஞ்சம் படைத்த கல்குவாரி முதலாளி ஒரு கூலித் தொழிலாளியை மலம் தின்ன வைத்தக் கொடுமை நடந்துள்ளதே! அடுத்தடுத்து இப் படி நடைபெறுவதன் காரணம் தண்டனை சரியாக வழங்கப்படாததுதான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறியிருப்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?

அந்தத் தொழிலாளியின் மனையாள் தொலைக் காட்சியில் தோன்றி நடந்தைச் சொன்னபோது கேட்கவே மிரட்சியாக இருந்தது. மலத்தை வாயில் திணிக்கும்படி மிரட்டிப் பணிய வைத்திருக் கிறான் அந்த முதலாளி. இப்படி இரண்டு தொழிலாளிகள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அதைக் கைபேசியில் படம் எடுத்து பிற தொழிலா ளர்களிடம் காட்டி பயமுறுத்தியிருக்கிறான் அந்த முதலாளி. இந்த நாட்டு முதலாளித்துவத்தின் விசேஷம் என்னவென்றால் அது இப்போதும் நிலப்பிரபுத்துவத்தின் சில அநாகரிகக் குணங்களைக் கொண்டிருக்கிறது என்பது. அதை , அது சாதியக் கட்டமைப்பை ஆதரித்து நிற்பதிலும், இத்தகைய மனிதத்தனமற்ற தண்டனைகளை வழங்குவதிலும் துல்லியமாகக் காணலாம். காவல்துறையின் போக்கு அந்த முதலாளியை விடவும் கேவலமான தாக உள்ளது. அந்த மனையாள் இது பற்றிக் கொடுத்த புகாரைப் பதிவு செய்யவே அது முதலில் மறுத்துள்ளது. மார்க்சிஸ்டு கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தலையிட்ட பிறகுதான் அந்த முதலாளியும் அவரது துணையாட்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமை யாளர்களின் ஆவேசம் நியாயமானதே.

ரா.தட்சிணாமூர்த்தி, கடலூர்

சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்குச் சவால் விட்டது பற்றித் தங்கள் பதில் என்ன?

ஆஹா! இதில் நாமென்ன பதில் சொல்வது? அந்தச் சவாலை ஏற்றுத் தேர்தலைத் தனித்துச் சந்திக்கத் தயார் என்று விஜயகாந்த் ஏற்கெனவே பதில் கொடுத்துவிட்டார். தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் “ஜெயலலிதா முதல்வராவார், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராவார்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தீர்க்க தரிசனமாய்க் கூறி னார். அப்போதெல்லாம் அதில் முதல் பாதியை ரசித்த ஜெயலலிதா அடுத்த பாதியை ரசிக்க வில்லை போலும்! அது இப்போதுதான் தெரிய வருகிறது. கூட்டுச்சேர்ந்து தேர்தலில் நின்றுவிட்டு, பிறகு அதற்காக “வேதனைப் படுகிறேன், வெட்கப்படுகிறேன்” என்று பேசுவதெல்லாம் பேசுகிறவ ரின் நாணயக் குறையைக் காட்டும் என்பது முதல் வருக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது?

பி.மாரிமுத்து, திருப்பூர்

ராமாயணம், மகாபாரதம், சிலப்பதி காரம் முதலிய காப்பியங்களுக்கு தமுஎகச வைச் சேர்ந்தவர்கள் உரைநடை, விளக்க வுரை எழுதியிருக்கிறார்களா? திருக்குறள், பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ஆகியோரின் கவிதைகளுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார்களா?

தமுஎகசவின் ஸ்தாபகப் பொதுச் செயலாளர் கே.முத்தையா எழுதியுள்ள “தமிழ் இலக்கியம் கூறும் வர்க்க சமுதாயம்”, “இராமாயணம்: ஓர் ஆய்வு”, “சிலப்பதிகாரம்: ஓர் ஆய்வு” போன்ற வற்றில் காப்பியங்கள் மற்றும் திருக்குறளுக்கான மார்க்சிய நோக்கிலான விளக்கங்களைக் காண லாம். இராமாணம், மகாபாரதம், முப்பெருங் கவிஞர்கள், கண்ணதாசன் பற்றி அருணன், எஸ்.ஏ. பெருமாள் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். வெ.பெருமாள்சாமி, மயிலைபாலு, சு.பொ. அகத்தியலிங்கம், ப.முருகன் போன்றோர் சங்க இலக்கியம், நீதி இலக்கியம் பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது பதிப்பகங்கள் - பத்திரிகைகளின் வேலை என்றா லும், அவற்றைத் தேடி வாசகர்களும் போக வேண்டும்.

எனது நண்பர் தமுஎகசவைச் சேர்ந்தவர் தான். ஆனால், அவர் கம்யூனிசமே பொய், சோசலிசம் எல்லாம் ஒத்துவராது என் கிறார். மார்க்ஸ் சொன்ன தத்துவத்தில் ஒரு பகுதியை லெனினும், ஒரு பகுதியை ஸ்டா லினும், ஒரு பகுதியை மாவோவும் எடுத்துக் கொண்டார்கள். ஆதலால், தனித்த கொள்கை என்று அதற்கு இல்லை என்கிறார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?

ஜோதியிலிருந்து பல ஜோதிகள் ஏற்றப் பட்டால் முதல் ஜோதி இல்லாமல் போவ தில்லை. மார்க்சியம் என்பது மனிதகுல வழிகாட்டி. அதைக் காலத்திற்கு காலம், நாட்டிற்கு நாடு அமல் படுத்தும்போது சில தனித்துவங்கள் வெளிப்படு கின்றன அவ்வளவே. அது கோயில் சுண்டல் அல்ல; ஒவ்வொருவரும் ஒரு கை எடுத்ததும் தீர்ந்து போக. சோசலிசம் - கம்யூனிசம் எல்லாம் ஒத்துவராது எனச் சொல்லும் உங்கள் நண்பருக்குச் சொல்லுங்கள்: இப்படித்தான் நிலப்பிரபுத்துவ சமுதாயம் பற்றி அடிமைச் சமுதாயத்தினரும், முதலாளித்துவ சமுதாயம் பற்றி நிலப்பிரபுத்துவ சமுதாயத்தினரும் பேசி வந்தார்கள்; ஆனாலும், புதிய சமுதாயங்கள் பிறக்கவே செய்தன; அப்படி தற்போதைய முதலா ளித்துவ சமுதாயமும் ஒரு நாள் ஒழியத்தான் செய் யும்; அதனிடத்தில் இன்னொரு புதிய சமுதாயம் பிறக்கத்தான் செய்யும்; அதுதான் சோசலிசம் - கம்யூனிசம் என்பது. ஏற்கெனவே மனித சமுதாயம் மாறி வந்திருக்கிறது என்பதை அறியாத மனிதரே வரவிருக்கும் மாறுதலை எதிர்பார்க்க மாட்டார் என்பதை உங்கள் நண்பருக்குச் சொல்லுங்கள்.

எஸ்.நேதாஜி, ராமனாதபுரம்

“பொதுவுடைமை எண்ணம் கொண்ட ஒரு இயக்கம்தான் இந்தியாவை  ஆள வேண்டும் என்று விரும்புகிறேன். இதை ஓரளவு பூர்த்தி செய்வதாகக் காங்கிரஸ் இருக்கிறது. அதனாலேயே காங்கிரசுட னான கூட்டணியில் தொடர்கிறோம்” என்று தமது கழகத்தினருக்குக் கலைஞர் அறிவுரை (தினமணி 4-2-2012) கூறியிருக்கிறாரே?

பெரும் ஊழல் விவகாரங்களில் சிக்கியிருப்ப தால் இப்போதைக்கு காங்கிரசை விட்டுப் பிரிய மாட்டார் என்று படுகிறது. அந்தக்காலத்தில் பாஜக வோடு கூட்டுச் சேர்ந்து, மத்திய அரசாங்கத்திலே உட்கார்ந்தாரே அப்போது “பொதுவுடைமை” பற்றி யோசித்தாரா? காங்கிரஸ் அதை “ஓரளவு பூர்த்தி செய்கிறது” என்பதெல்லாம் கலைஞரின் பிரமாதமான நகைச்சுவை உணர்வைக் காட்டு கிறது!

ப.விஜயகுமார், மதுரை

கர்நாடகச் சட்டப்பேரவையில் பத்திரி கையாளர் மாடத்தில் தமிழ்ப் பத்திரிகையா ளர்கள் தங்களுக்குள் தமிழில் பேசிக் கொண் டதற்கு அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் தனிச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே? இந்த அணுகு முறை சரிதானா?

காங்கிரஸ் கட்சி தன்னை தேசியக் கட்சி என் கிறது, இந்திய ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறோம் என்கிறது. நெருங்கிப் பார்த்தாலோ மாநிலந் தோறும் இனவெறி, மொழிவெறி வாடை அடிக் கிறது. பாஜகவும் இப்படித்தான். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் இந்த வெறி யை இந்த இரு கட்சிகளிலும் துல்லியமாகக் காண முடிகிறது. எல்லாம் தேர்தல் அரசியலுக்குத்தான், பதவி நாற்காலிக்குத்தான். இதன் சின்ன பிரதி பலிப்பே அந்தச் செயலாளரின் அர்த்தமற்ற கோபம்.

து.சுந்தரமூர்த்தி, அரக்கோணம்

மக்கள் தொலைக்காட்சியில் வரும் “கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை” நிகழ்ச்சி பார்ப்பீர்களா? மனசு வலிக்கிறதே. உங்கள் கருத்து என்ன?

அப்பாவி போன்ற ஒருவர் மிகச்சாதாரணக் கேள்விகளைக் கேட்கிறார். அதற்குக் கூடப் பதில் சொல்லத் தெரியாமல் பொது மக்களும், மாணவர் களும் விழிப்பதைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது. இந்த மக்களிடம்தான் நாம் அரசியல், தத்துவம், இலக்கியம் இத்யாதி, இத்யாதி பேச வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே ஓரளவு சமூக விழிப்புணர்வு கொண்ட மாந்தரிடம் பேச வேண் டும், அவர்களிலும் பரிதாபமாக உள்ள சாதாரண மாந்தரிடம் கூடுதலாகப் பேச வேண்டும், அதற் கான பேச்சு - எழுத்து பாணி வேண்டும் எனும் கருத்து எனக்கு மேலும் வலுப்பட்டது அந்த நிகழ்ச் சியைப் பார்த்ததும். அதில் முதலில் வந்தவரின் தெக்கத்திப் பேச்சு மிகப்பொருத்தமாக இருந்தது. அவரையும் கொத்திக் கொண்டு போய்விட்டது இன்னொரு பிரபல டி.வி. இப்போது மக்கள் டி.வி.யில் அதை நடத்துகிறவர் இன்னொருவர். ஆனாலும், பரவாயில்லை.

எல்.கே.அப்துல்லா, வாணியம்பாடி

ஈரான் நாடு அணுசக்தியில் தேர்ச்சி பெறுவது கண்டு அமெரிக்கா அலறுகிறதே, என்ன காரணம்?

தனது ராணுவ ஆதிபத்தியத்திற்கு எங்கிருந்தும் சவால் வந்துவிடக்கூடாது என்பதற்குத்தான். அமெ ரிக்காவும் நேட்டோ நாடுகளும் மட்டும் அணு குண்டுகளை ஆயிரக்கணக்கில் தயாரித்து வைத்துக் கொள்ளுமாம், மற்ற நாடுகள் மின்சாரம் தயாரிக்கக் கூட அணுசக்தியைப் பயன்படுத்தக் கூடாதாம்! இது தான் உலக நாட்டாமைத்தனம் என்பது! எண்ணெய் வளம் மிக்க ஈரானும் அணுசக்தி தயாரிப்பில் தீவிர மாக இறங்கியிருப்பதை நோக்க வேண்டும். சக்தி யின் எந்தவொரு புதிய வடிவம் வந்துவிட்டாலும் அது உலகில் நிலைக்கவே, பரவவே செய்யும். அதைப் பாதுகாப்பாக எப்படிக் கையாளுவது என்றே தொடர்ந்து கற்க வேண்டும். சோவியத் ஒன் றியம் இல்லாத இன்றைய உலக அரசியலை நோக்கினால் அணுசக்தியில் வல்லமை என்பது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாக இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

ஜே.பி.மாணிக்கம் இருதயராஜ், திருப்பூர்

கர்நாடக சட்டமன்றத்தில் கைபேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்த மூன்று பாஜக மந்திரிகளில் ஒருவர் பெண் கள் மேம்பாட்டுத்துறைக்குப் பொறுப்பாள ராம்! எப்படியிருக்கு..?

பாஜக தன்னை “வித்தியாசமான கட்சி” என்று விடாமல் சொல்லி வருகிறது. பெண்கள் மேம் பாட்டிற்காக அந்தக் கட்சியின் மந்திரி மட்டும் “வித்தியாசமான பார்வை”யைக் கொண்டிருக்கக் கூடாதா? இதற்கும் எதிர்ப்பா? என்ன அநியாயம்!

சி.கனகவேல், சென்னை

சமீபத்தில் தாங்கள் படித்த நல்ல புத்தகம் பற்றிச் சொல்லுங்கள்..?

ஜீன் டிரசே மற்றும் அமர்த்தியாசென் எழுதிய “இந்தியா : வளர்ச்சியும் பங்கேற்பும்” என்பது அந்த நூல். அதில் இந்தியா - சீனா பொருளாதார ஒப்பீடு வருகிறது. தனி அத்தியாயமே உள்ளது. சீனாவிலும் தான் சீர்திருத்தங்கள் செய்கிறார்கள் என்று இங்கே பல முதலாளித்துவ அறிவுஜீவிகள் மொட்டை யாகப் பேசுகிறார்கள். ஆனால், 1950களில் அங்கே நடந்த நிலச்சீர்திருத்தம் மற்றும் கல்வி மேம்பாடு தற்போதைய சீர்திருத்தங்களைப் பெரிதும் வலியில் லாமல் கொண்டு செலுத்த உதவியிருக்கிறது என் கிறார்கள் நூலாசிரியர்கள். அத்தகைய அடிப்படை வேலைகள் இந்தியாவில் அப்போதும் நடக்க வில்லை, இப்போதும் நடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனால்தான் நரசிம்ம ராவ் காலத்தில் துவங்கிய “பொருளாதாரச் சீர்திருத் தங்கள்” எனப்பட்டவை இங்கே வெகுமக்களுக்குக் கொடும் வேதனையைத் தருகின்றன.