இந்தியாவின் பணம் கொழுத்த முதலாளிமார்களும், பெருத்த வணிக கனதனவான்களும், ஏற்றுமதியாளர்களும், ஆளுகிற - ஆளாத முதலாளித்துவக் கட்சிகளின் பல பெருத்த அரசியல் புள்ளிகளும், உச்சி நிலை அதிகாரிகளும் அரசுக்குப் பொய்க்கணக்கு காட்டி தாங்கள் மோசடியாக - சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணக் குவியலை பல அந்நிய நாடுகளின் வங்கிகளில் ரகசியக் கணக்குகளில் பதுக்கி வைத்திருக்கும் தொகையின் அளவு மட்டும் அவ்வப்போது ஒவ்வொரு விதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்தச் சட்ட விரோதத் திருட்டைக் கைப்பற்றுவதற்கான மத்திய அரசு நடவடிக்கை மட்டும் இல்லை.

ஸ்விட்சர்லாந்து, ஜெர்மன், மொரீசியஸ், பிரிட்டன் முதலான பல நாடுகளிலும் பல நாட்டவரின் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பவர்கள் இந்திய தனவான்கள் தான். தற்போது சொல்லப்பட்டுள்ள புத்தம் புதுத் தகவலின்படி அந்தக் கருப்புப் பணத்தொகையின் அளவு 25 லட்சம் கோடி ரூபாய்! இதைச் சொன்னவர் பரிசுத்த பிரதமரின் ஆட்சியை எதிர்க்கிற ஒரு அரசியல் தலைவரல்ல. சிபிஐ எனச் சொல்லப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஏ.பி.சிங்.

1983-84 ஆண்டின்போது ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஃபினான்ஸ் அண்டு பாலிஸி’ என்கிற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வின் கணக்குப்படி அன்றைய கருப்புப் பணம் ரூபாய் 31,584 கோடி முதல் 36,786 கோடி வரை. இன்று சிபிஐ இயக்குநர் தெரிவித்துள்ள கணக்குப் படி 25 லட்சம் கோடி! “பிளாக் எக்கானமி இன் இண்டியா” (இந்தியா வில் கருப்புப் பொருளாதாரம்) என்ற நூலில் டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் அருண்குமார் தெரிவித்துள்ள 2005-2006 ஆண்டுக்கணக்குப் படி கருப்புப் பணம் ரூபாய் 39 லட்சம் கோடியாம்!

ஊர்த் திருடர்கள் திருடும் பொருள்கள் கைப்பற்றப்படுவதும், தண்டனை வழங்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், உலக மகா திருடர் களின் திருட்டு மட்டும் கைப்பற்றப்படுவதோ, தண்டனை வழங்கப்படு வதோ நடைபெறுவதில்லை. அதுமட்டுமல்ல, அவர்களின் பெயர் களைக்கூட பகிரங்கமாக வெளியிட மறுத்து வருகிறது மத்தியஅரசு. கருப்புப் பணக்காரர்கள் மீது நடவடிக்கையெடுக்காதது குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தும்கூட, ஒரு அசைவும் இல்லை.

இந்திய அரசியலில் விளையாடவும், தேர்தலின்போது முதலாளித்துவ ஆளும் கட்சிகளுக்கும் ஆளாத கட்சிகளுக்கும் சுயநலன் கருதி தேர்தல் காலத்திலும் மற்ற சமயங்களிலும் கோடி கோடியாகக் கொடுக்கவும், நாட்டில் தேசவிரோதக் குற்றச்செயல்களை நிகழ்த்தவும் இந்தக் கருப்புப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய பணம் பறிமுதல் செய்யப்படவேண்டும், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். சம்பந்தப் பட்டோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை யாகவும் எதிர்பார்ப்பாகவும் மட்டுமே நெடுங்காலமாக இருந்து வருகிறது.

மத்திய ஐமுகூ அரசின் தாராளமயக் கொள்கை யாருக்குத் தாராளமாய் இருக்கிறது என்பதை இதன் மூலமும் நாம் புரிந்து கொள்ளலாம்.