'வறுமையைப் போல் துன்பமானது எதுவென்று கேட்டால் அது வறுமை ஒன்றுதான்' என்றார் வள்ளுவர். வறுமையின் கொடுமையை இதைவிடச் சரியாகச் சொல்லிவிட முடியாது. 'கொடிது கொடிது இளமையில் வறுமை' என்று. இளமைப் பருவத்திற்கே உரிய இனிய அனுபவங்களையும் சுகங்களையும் வறுமை பறித்துவிடும் என்று அவ்வை உணர்த்துகிறார்.

இத்தகைய வறுமையில் துயரப்படுகிறவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஏராளம் கோடி.

'கரீபி ஹட்டோ! கரீபி ஹட்டோ!' - வறுமையே வெளியேறு! வறுமையே வெளியேறு! - என்று இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் காங்கிரசும் அதன் ஆட்சியாளர்களும் நாடு முழுவதும் உரக்க முழக்கமிட்டனர். இவர்கள் போட்ட இந்த கோஷத்தினால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிதான் (1977-ல் தேர்தலில் தோற்று) வெளியேறியதே தவிர வறுமை வெளியேறவில்லை!

இன்று மன்மோகன்சிங் அரசின் மத்திய திட்டக்குழு வெகுநாட்களாய்த் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு நாடு 'முன்னேற' ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அந்த அபாரக் கண்டுபிடிப்பு என்னவென்றால், வறுமைக்கோடுக்கான அளவுகோல்.

நகரத்தில் வசிப்பவர் தினமும் 32 ரூபாய் சம்பாதித்தால், கிராமத்தில் வசிப்பவர் தினமும் 26 ரூபாய் சம்பாதித்தால் இவர்களெல்லாம் வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள். அதாவது, வறுமை இல்லாமல் வசதியாய் வாழ்கிறவர்கள்! குறைவாகச் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருப்பவர்கள் - அதாவது வறுமையில் வாடுகிறவர்கள்.

இந்த 36 ரூபாயும் 26 ரூபாயும் கொண்டு ஒருவர் ஒரு கிரோ அரிசிதான் வாங்கமுடியும். இந்த ஒரு கிரோ ஒரு குடும்பத்தின் ஒருநாள் உணவுத் தேவையையாவது உணவுத் தேவையையாவது நிறைவு செய்யுமா? நகரத்தில் ஹோட்டலில் சாப்பிட்டால் ஒருவருக்கான மதிய உணவுக்காவது இந்த ரூ.35 போதுமா? அப்புறம் குடும்பத்திற்கான துணிமணிகள், மருத்துவம், கல்வி, வீட்டுவாடகை, மின்கட்டணம், போக்குவரத்து மற்றும் இதர கட்டாயச் செலவுகள் இவற்றையெல்லாம் அரசே இலவசமாய் வழங்கிவிடுகிறதா?

ஒரு பேச்சுக்காக.... இவற்றையெல்லாம் அரசாங்கமே இலவசமாக வழங்கிவிட்டால்கூட இந்த 32-ம் 26-ம் ஒருநாள் உணவுக்கே போதாதே!

'வாங்குற சம்பளம் வாய்க்கும் வயித்துக்குமே போதல' என்று மனம் நொந்துபோகும் ஏழைகளின் வேதனைக் குரலை உச்சிநிலை அதிகார வர்க்கம் கேட்டிருக்குமா... என்றாவது கேட்டிருந்தாலும் அது அவர்களது மனதைப் போய்த் தொட்டிருக்குமா....

இந்த அளவுகோலின் வருமானத்தைக் கொண்டு தினசரி வாழ்க்கையை நடத்தும் மக்கள் எப்படி வறுமையைக் கடந்தவர்களாக இருக்க முடியும் என்கிற - சாமான்ய குடிமகனுக்கும் தெரிந்த எளிய உண்மையானது மத்திய திட்டக்குழுவின் மகா மனிதர்களுக்கு ஏன் தெரியாமற்போனது?

அரண்மனையைவிட்டு வெளியவே போகாத ஒரு ராஜா மந்திரியைப் பார்த்து, "மதி மந்திரியாரே! நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று கேட்டாராம். இப்படிப்பட்ட ராஜாவைப் போல்தான், வெளியே மக்களின் நிலை அறியாத 'மகா மதியூகியாக' நம் மத்திய திட்டக்குழு உள்ளது!

அரிசி, கோதுமை, ஜீனி போன்ற உணவுப் பொருட்களையும் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றையும் அரசாங்கத்தின் மானிய விலையில் பெறுகிற ஏழைகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்துவிடுவதற்கான இரக்கமற்ற ஏற்பாடுதான் இது.

நாள்தோறும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான விலையேற்றம் ஏழை - நடுத்தர மக்களையே வாட்டிவதைக்கிறது. உலகில் மேலும் 4 கோடியே 40 லட்சம் மக்கள் வறுமையினால் ஏழைகளாவார்கள் என்று சர்வதேச நிதி நிறுவனம் (ஐ.எம்.எப்.) தெரிவித்துள்ளது.

இத்தகைய குழுவில்தான் மத்திய திட்டக்குழுவின் இந்த மகா புதிய கண்டுபிடிப்பு வந்துள்ளது. மக்களின் வாழ்நிலையையே அறிந்திராத இவர்கள் கிழிக்கும் வறுமைக்கோட்டு அளவுகோல் யதார்த்தத்திற்கோ, மக்களின் நிஜ வாழ்க்கை நிலைமைக்கோ பொருந்தாது!

Pin It