மதுரையில் 1974 ஆம் ஆண்டு 32 பேருடன் துவக்கப்பட்ட தமுஎகச தற்போது 21 ஆயிரம் உறுப்பினர்களுடன் தமிழகம் முழுவதும் கிளை பரப்பி சிறப்பான முறையில் செயல்படுவதைக் காணும் போது துவக்கிய போது நம்பிக்கை இன்று நிறைவு பெற்றுள்ளது.

விருதுநகரில் 12 வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரலிங்கனார் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப்பெயரிட வேண்டும் எனப் போராட்டம் நடத்திய போது அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உலகநாதன் உறுதுணையாக நின்றரர். அவர் உண்ணாவிரதம் இருந்து இறப்பதற்கு முன்பு எழுதிய உயிலில் தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படையுங்கள் என எழுதியிருந்தார். அவரது உடலைப் பெற்று மதுரையில் தான் கம்யூனிஸ்ட்டுகள் இறுதிநிகழ்ச்சி நடத்தினர். அன்றைய தினம் இரவு மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் ஏ.கே.கோபாலன் கலந்து கொண்டு தியாகி சங்கரலிங்கனார் மறைவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். தியாகி சங்கரலிங்கனார் பாராம்பரியத்தை முழுமையாக முன்னெடுத்துச் செல்வது தமுஎகச தான்.

இந்த சங்கம் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழ் இலக்கியத்தை அனைத்தையும் வரவேற்கிறோம். பரந்துபட்ட ஜனநாயகத் தன்மையை இது மேலும் வலுப்படுத்தும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாரதியும்,சாதிய ஒடுக்குமுறையும்,பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக பாரதிதாசனும்,பொதுவுடமையை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் எடுத்துச் சென்ற கருத்துக்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டிய பணி உங்கள் முன் உள்ளது.

பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பிறந்த நாளன்று எட்டயபுரம், புதுச்சேரி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் தமுஎகச சார்பில் ஆண்டு தோறும் விழா நடத்த வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன். அதில் பல தரப்பட்ட அறிஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். மாணவ, மாணவிளுக்கான பேச்சுப்போட்டி.பாடல் நிகழ்ச்சி நடத்திட வேண்டும்.

உலகத்தில் பாசிசமும், கம்யூனிசமும் ஒன்று என ஐரோப்பாவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏகாதிபத்திய, ஏகபோகத்திற்கு ஆதரவான பாசிசத்தையும், உழைக்கும் மக்களுக்கான சோசலிசத்தையும் என்ற கருத்தை முறியடிப்பது நமது கடமையாகும். இந்த பித்தலாட்ட சித்தாந்தத்தை எதிர்த்து போராட வேண்டும். பாசிசம் முதலாளித்துவத்தின் கொடிய வடிவமாகும். சோசலிசம் மக்களுக்கான வடிவமாகும்.

இந்தியாவில் ஊழல் மிகக்கொடுமையான நோய் போல் மாறி வருகிறது. அதற்கு எதிராக கருத்துப்பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் மக்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கிறதா என நாம் கண்காணிப்பதுடன், அக்கொடுமைகளுக்கு எதிராக போராட முன் வரவேண்டும்.

பெரும்பான்மை மதவாதமும், சிறுபான்மை மதவாதமும் மிரட்டி வரும் வேளையில், அதை உறுதியான முறையில் எதிர்த்து போராட வேண்டியுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ இலக்கியங்கள் குறைவாக வருகிறது. அப்படிப்பட்ட படைப்பாளிகளை நீங்கள் ஆதர்சிக்க வேண்டும்.

இந்திய ஆளும்வர்க்கம் மேற்கு வங்கத்தில் 300 க்கும் மேற்பட்ட நமது தோழர்களைக் கொன்றுள்ளது. மேற்குவங்கத்தில் நடத்தப்படும் போராட்டம் இந்திய ஜனநாயகத்தைக் காக்க நடைபெறும் போராட்டமாகும்.கேரளா,மேற்குவங்கம், திரிபுரா ஆகியவை இந்திய ஜனநாயக இயக்கங்களின் தலங்களாகும். இதை நமது எழுத்தாளர்கள் எழுத்துகளில், குறும்படங்களில், ஆவணப்படங்களில் பிரதிபலிக்க வேண்டும்.

தமிழகத்தில் தீண்டாமைக்கொடுமைகளை ஒழிக்க போராடிக்கொண்டிருக்கிறோம். பரமக்குடியில் தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு சந்தித்த போது, எங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி தான் என அம்மக்கள் வரவேற்பு அளித்துள்ளார்கள். ஒடுக்கப்படும் தலித் மக்களின் நலனுக்கான நமது குரல்கள் எப்போதும் ஒலிக்கட்டும். இலங்கையில் உள்ள தமிழ் நுல்களை அறிமுகம் செய்ய வேண்டும். அத்துடன் அங்குள்ள தமிழ் அமைப்புகளடன் தொடர்பு கொண்டு படைப்புகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

இலக்கியம் என்றால் ஒரு இலக்கு இருக்க வேண்டும். இலக்கு இல்லாமல் இலக்கியம் இல்லை. எழுத மட்டுமின்றி நடவடிக்கைகளிலும் நீங்கள் இறங்க வேண்டும். ஜீவா மூலம் கலை இலக்கிய பெருமன்றம் உருவாக நாம் தான் காரணமாக இருந்தோம். தமுஎகசவும் உருவாகவும் நாம் தான் காரணம். இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்த இந்த இரண்டு கலை இலக்கிய அமைப்புகளும் பண்பாட்டுத்தளத்தில் கூட்டு நடவடிக்கைக்கு செய்வது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள இதர ஜனநாயக இயக்கங்களுடனும், மத்திய தர எழுத்தாள அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து எந்தந்த பிரச்சனைகளில் தலையிட முடிகிறதோ அதில் தலையீடு செய்யுங்கள். சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம், குறும்படம், ஆவணப்படம் குறித்த பயிற்சி வகுப்புகளை சங்க ஊழியர்களுக்கு நடத்துங்கள். நீ என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி என்ற நாடகம் கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளை ஆட்சியில் அமர்த்தியது. அது போன்ற நாடகங்களை தமிழகத்தில் நடத்துங்கள்.

இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது அனைத்துப்பகுதி மக்களும் போராடிப் பெற்றதாகும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இப்போராட்டத்திற்காக நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். அதை பாதுகாப்பது நமது கடமையாகும். மார்க்சிஸ்டுகள், பிரிந்து போகும் உரிமை தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறோம். சோவியத் யூனியன் வீழ்ந்ததற்கே காரணம் அங்கு அந்த உரிமைகொடுக்கப்பட்டது என பல அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். ஆகவே, பிரிந்து போகும் வேண்டாம் என்கிறோம். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சமஉரிமையும்.தமிழ்மொழிக்கு சமத்துவம் வழங்க தொடர்ந்து போராடுவோம்.

தொகுப்பு: ப.கவிதா குமார்

Pin It