பகலின் வெப்பத்தில்
வெந்துபோன சாம்பலில்
எதையோ கிளறிக் கொண்டிருந்தது
இரவு


மெழுகுவர்த்தியோடு
சேர்ந்து உருகிக் கொண்டிருந்தது
காலம்

உதிர்ந்து உலர்ந்த
வார்த்தைகள்
ஆங்காங்கே சிதறிக்கிடந்தன

படுத்துக்கிடந்த பாயின்
கோரைப் புற்களில்
ஏதோவொரு பெயர் தெரியா
நதி சலசலத்துக் கொண்டிருந்தது

 எதையோ பின்னமுயன்று
தோற்று
ஞாபக எச்சில் வறண்டு போக
சோர்ந்து விழுந்தது மனச்சிலந்தி

கண்களின் இமைகளில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது
தூக்கம்

காதுமடல் அருகே
மொட்டுகள் மோதுவது போல
யாரோ கிசுகிசுக்கிற
மெல்லொலி

யாரது? காற்றா என்றேன்
இல்லை! கனவு என்று
பதில் வந்தது

என்ன இந்த நேரத்தில்
என்றேன்
நித்திரை வாசலில்
நான் வரையும் கோலங்களை
உன் விழிப்பு கலைத்து விடுகிறது.
எனவே விழிப்பின் விளிம்பில்
வந்தேன் என்றது கனவு

உன் இருப்பு எது என்றேன்
நீ தான்
என்றது கனவு

நீ இருப்பது
உள்ளில்லா? வெளியிலா?
என்று வினவினேன்
உள்-வெளியில் என்று
புதிர்போட்டது கனவு

என்ன குழப்புகிறாய் என்றேன்
என் வேர்கள் வெளி வெளிச்சத்தில்
இரை தேடும்
கிளைகள் உள் இருட்டில்
பரவும் என்றது

பகல் கனவு
பலிக்காது என்கிறார்களே
சரியா என்றேன்
இருட்டில் கண்டது
எத்தனை பலித்ததாம் என்று
எதிர்க் கேள்வி கேட்டது கனவு

நாயின் கனவில்
எலும்பு மழை என
மனிதர்கள் சொல்வதை
கேட்டது உண்டா என்றேன்

இப்படி கேவலமாய்
நாய்கள் பேசிக் கேட்டது இல்லை
என்றது கனவு


மழலை சிரிப்பது
கனவில் கடவுள்
வருவதாலா எனக்கேட்டேன்

கற்பனை கசடுகள் படியாத
பரிசுத்த மூளையை
களங்கப்படுத்தாதே
என்றது கனவு

அப்படியென்றால்
பேய்கள் கூட
கனவில் வருவது இல்லையா?
என்றேன்

கடவுள் எனும் கற்பனையின்
மறுபக்கம்தான்
பேய்களும், பிசாசுகளும்
என்றது கனவு

கருப்பு வெள்ளையாய்
மட்டுமே
கனவு வரும் என்பது
உண்மையா? என்றேன்

நிழலின் நிறம் தான்
என் நிறம் என்றது கனவு
அப்படியென்றால்
நீ வெறும் நிழல்தானா
என்றேன்

நான் நிஜத்தின்
நீட்சி என்றது கனவு

வாழ்க்கையை ஜெயிக்க
கனவு கானச் சொல்கிறார்களே
எனக்கேட்டேன்

சமூகம் வாழவும்
சமத்துவம் காணவும்
கனவு காண கற்றுக்கொள்ளுங்கள்
என்றபடி
மூளை வானில்
மின்னலாய் வெட்டி
மறைந்தது கனவு

-மதுக்கூர் இராமலிங்கம்

Pin It