புகழ் சரியத்தொடங்கிய
காலக்கட்டங்களில் கோர்க்கப்பட்ட
பழைய செய்திகளின்மீது
அவனுக்கு அலாதியான மயக்கம் இருந்தது.

சில சமயம் அது போதுமானதாக இல்லை எனவும்
சில சமயம் அது நிறைவானதாகவும்
தனக்குத்தானே தர்க்க மனோபாவத்திலிருந்தான்

அபிப்ராயங்கள் முதல் ஆதாரமெனவும்
அவற்றை பரப்பும் சாகசத் தந்திரம்
கற்றிருந்த அவனுக்கு அவ்வேலை செய்வோரையும்
இணக்கத்தில் வைத்திருந்தான்

புகழ்பெறத் துடித்த பொழுதுகளில்
அவனது உள்ளார்ந்த விருப்பத்தின் நாற்றம்
அறிந்த உறவுகளின் கேலிக்கும்
அறியாத உறவுகளின் பாராட்டுக்கும்
உள்ளாயிற்று.

சோகை படிந்த அவனது பார்வை
மரணத் தருவாயில் திரியும்
கிழட்டு நாயுடையது.

கட்டிக் காக்கும் பூதத்தின் தீவிரத்துடன்
தனக்கான பழைய செய்தியை தூக்கமின்றி சேகரித்தான்

புகழ் சேர்க்க ஒரு காலமிருப்பதை போலவே
அது அழிய ஒரு காலமிருப்பதாக
புகழ்பெற ஏங்கி அலைபவர்களுக்கு
அருளினான்.

காலத்தால் சேகரிக்கப்படாத
அவனைப் பற்றிய குறிப்புகள்
தொடர் வண்டியின் பயணம் போலவே
கடந்து போனது.

Pin It