நவம்பர் புரட்சியை பற்றி நினைக்கும் போது இரண்டு காட்சிகள் மனதில் ஒடுகின்றன, ஒன்று ரஷ்யப்புரட்சி பற்றிய ஐசன்ஸ்டீனின் அக்டோபர் திரைப்படத்தின் முதல்காட்சி, பிரம்மாண்டமான ஜாரின் சிலையை கோபத்துடன் மக்கள் மேலேறி நின்று கைவேறு தலைவேறாக உடைத்து எறிகிறார்கள், தலை சிதறி விழும் போது மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள், 1917 ல் ருஷ்யாவில் நடைபெற்ற மக்கள்புரட்சி அதிகார பிம்பங்களை உடைத்தெறிந்து சமஉரிமையும் சம உழைப்பும் கொண்ட மக்களின் அரசை நிறுவியது,

மற்றொன்று 2003ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியான குட்பை லெனின் திரைப்படத்தில் ஹெலிகாப்டர் ஒன்றில் தூக்கிச் செல்லப்படும் லெனின் உருவக்காட்சி, அப்படத்தில் கம்யூனிசத்தின் மீது பற்று கொண்ட ஒரு தாய் நோயுற்று மருத்துவமனையில் இருக்கிறாள், அவளது மருத்துவமனைக்கு வெளியே ஆகாசத்தில் லெனின் சிலை ஒன்று பெயர்த்து எடுக்கப்பட்டு ஹெலிகாப்டர் ஒன்றில் மிதந்தபடியே கொண்டு செல்லும் காட்சி இடம் பெறுகிறது, ஆட்சியாளர்களால் லெனின் சிலைகள் அகற்றபடுகின்றன, காற்றில் மிதந்தபடியே லெனின் உருவம் கடந்து போகிறது, அதைக் கண்டு தனது தாய் நிலைகுலைந்து போய்விடுவாள் என்று அவளது இளவயது மகன் பதற்றமடைந்து ஒடுகிறான்,

அந்த பதற்றமும் சமன்குலைவும் இன்றுள்ள பல இடதுசாரிகளுக்கும் இருக்கவே செய்கிறது, லெனினை வரவேற்று கொண்டாடி, லெனின் தலைமையில் உருவான புரட்சிக்கும், குட்பை லெனின் என்று அவரது சிலைகளை அகற்றும் சமகால உலக அரசியல் சூழலுக்கும் இடையில் நடுவே 86 வருஷ இடைவெளியிருக்கிறது, இந்த இடைவெளி வெறும் காலக்கணக்கு மட்டுமில்லை, நம்பிக்கைகள் சிதறுண்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாகவே தோன்றுகிறது

லட்சியவாதமும் தீவிர இடதுசாரி செயல்பாடுகளும் புரிந்து கொள்ளப்படாத கேலிக்குள்ளாகி வரும் இன்றைய சூழலில் இளம் கம்யூனிஸ்ட்களின் மனதில் பொதுவுடமை சித்தாந்தமும் மக்கள் எழுச்சி குறித்த நம்பிக்கைகளும் ஆலமரம் போல ஆழமாக வேர் ஊன்றி இருப்பதற்கு பதிலாக கடிகாரத்தின் பெண்டுலம் போல சதா ஊசலாடிக் கொண்டிருக்கிறது,

உறுதியான மூத்த தலைமுறை கம்யூனிஸ்டுகளின் நெஞ்சுரமும் தியாகமும் நேசமும் அர்ப்பணிப்பும் இன்றைய இளம்தோழர்களுக்கு செய்திகளாகவே இருக்கின்றன, மகத்தான தியாகங்கள் வெறும் கதைகளாகிப்போகின்ற சோகத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்,

நவம்பர் புரட்சியை கொண்டாடும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது வரலாறு நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது என்பதையே, வரலாற்றை மறந்து போனதும் கற்பிதமான வரலாற்றை நம்பிக் கொண்டிருப்பதுமே நம் காலத்தின் முக்கிய பிரச்சனை,

உலகெங்கும் அதிகாரம் தன்னை விருத்தி செய்து கொள்ள தனக்காக வரலாற்றை புனைந்து கொண்டேயிருக்கிறது, அதை மக்களை நம்ப வைக்க சகல தந்திரங்களையும் பயன்படுத்துகிறது, இன்று நாம் கண்ணுக்கு தெரியாத பன்னாட்டு முதலாளித்துவத்தின் அதிகாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அது மொழி, உடல், சிந்தனை, என்று மூன்று தளங்களிலும் ஒவ்வொரு மனிதனையும் ஒடுக்கிக் கொண்டேயிருக்கிறது, கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை அழித்து நம்மை பிளாஸ்டிக் போல தட்டையாக உருவாக்குவதே பன்னாட்டு முதலாளித்துவத்தின் பெருங்கனவு, அதை நிறைவேற்றவே உலகம் ஒன்றாகிவிட்டது, நாம் இப்போது பிரபஞ்ச பிரiஜை என்ற போலி அடையாளத்தை முதன்மைபடுத்திக் கொண்டிருக்கிறது.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மூலமாக உலகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பன்னாட்டு வணிகர்களின் இரும்புக்கை தன்னுடைய விருப்பங்களை நமது கைகொண்டு நமது சொந்த நிலத்தில் சொந்த மனிதர்களுக்கு எதிராகவே பாதகங்கள் செய்ய வைக்கிறது,

நாம் பன்னாட்டு முதலாளித்துவத்தின் பாவைகளாகவும் அதன் உற்பத்தி பொருளை கேள்விகேட்பார் இன்றி உபயோகிக்க வேண்டிய நிர்பந்தம் கொண்டவர்களாகவும் இருக்கிறோம், இன்று அறிவும் தொழில்நுட்பமும் ஊடகமும் உலகை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வலை பின்னிக் கொண்டிருக்கிறது,

கடந்த கால உண்மைகளை பரிகசப்பது, இல்லாத அவதூறுகளை வாறி இறைப்பவது, தனிமனித தவறுகளை கொண்டு சித்தாந்த்த்தை கொச்சைப்படுத்துவது என்று அதிகாரத்திற்கு ஏவல் செய்யவே கலைஇலக்கியங்களும் ஊடகங்களும் ஆட்சியமைப்பும் துணை போகின்றன,

மதம் மனிதர்களை துண்டாடுவதற்கு தனது சகல சக்திகளையும் பயன்படுத்துகிறது, மொழியும் இனஅடையாளங்களும் கூட அரசியலாக்கப்பட்டு அதன்வழியே துவேசம் பீறிட துவங்குகிறது, எளிய மனிதர்கள் மூச்சு முட்டுமளவு ஒடுக்கபடுகிறார்கள், தொழில்நுட்பம் மனிதவிடுதலை விடவும் ஒடுக்குமுறைக்கே அதிகம் துணை நிற்கிறது, ஆகவே இன்று இடதுசாரிகளின் முன் உள்ள சவால் அளப்பறியது,

மதமும் அதிகாரமும் சுயநல சக்திகளும் வரலாற்றை புரட்டி இருட்டடிப்பு செய்யும் போது அதற்கான எதிர்குரல் தருவதும், மக்கள் வரலாற்றையும் சமகால பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு தூக்கிப் பிடிப்பதும், வரலாற்று உண்மைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுமே எழுச்சியான செய்லபாட்டினையும் புதிய நம்பிக்கையையும் உருவாக்ககூடியது, அது தான் நவம்பர் புரட்சி உணர்ந்தும் பாடமும் கூட,

வரலாற்றை திரும்பி பார்க்கையில் மகத்தான ருஷ்ய புரட்சியின் ஆரவாரமும் சந்தோஷமும் மட்டுமே நம் கண்ணிற்கு தெரிகிறதேயன்றி அதை உருவாக்கிய ஆழமான காரணிகள், உருவாக்கிய மனிதர்களின் போராட்டமிக்க வாழ்வும் களப்பலியும் நம் கண்ணிற்கு புலப்படவேயில்லை,

நவம்பர் புரட்சி ஒரு கொந்தளிப்பு, தண்ணீர் கொதிக்க துவங்குவது போல ஒரு சூடேற்றம், ஆனால் அந்த சூடு தானே உருவாகிவிடவில்லை, உருவாக்கப்பட்டது, பொருளாதாரம், சமூக கட்டுமானம், கலை இலக்கியம், தத்துவம், களச் செயல்பாடு என யாவும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய நெருப்பு அது,

இன்று அந்த நெருப்பு வலுவிழந்து காணப்படுகின்றன, இடதுசாரிகள் கவனத்துடன் கட்டமைக்க வேண்டிய அடிப்படை சாராம்சங்கள் இவையே, தத்துவப்பாடங்களை அறிந்த இளம்கம்யூனிஸ்ட்டுகள் குறைந்து போய்விட்டார்கள், அவர்கள் களச்செயல்பாட்டார்களாகவே தங்களை கருதிக் கொள்வதுடன் அதன் அன்றாட பணிகளிலே மூழ்கிகிடக்கிறார்கள், ஆனால் பொதுவுடமை சித்தாந்தம் தான் களச்செயல்பாட்டின் ஆதார ஊற்று என்பதை அவர்கள் இந்த 90 ஆண்டுகளுக்கு பின்னும் முழுமையாக உணரவேயில்லை,

புரட்சியின்போதும் அதற்கு முன்பும் பின்பும் கலைஇலக்கியங்களின் செயல்பாடு காத்திரமாகவே இருந்து வந்திருக்கிறது, முன்னோடி களப்பணியாளர்களை போலவே தான் எழுத்தாளர்களான கோகலும், புஷ்கினும் டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் செயல்பட்டிருக்கிறார், மாக்சிம் கார்க்கி, செகாவ், மாயகோஸ்வ்ஸ்கி என பலர் தங்களது வலிமையான படைப்புகளின் வழியே ருஷ்யா குறித்த புதுவெளிச்சத்தை உருவாக்கினார்கள், சகல அவதூறுகளையும் தாண்டி ருஷ்யா குறித்த உயர்வெண்ணங்களை உலக அளவில் ருஷ்ய எழுத்தாளர்களே உருவாக்கினார்கள்,

அந்த மரபு இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, நவீன தமிழ் இலக்கியத்தை உருவாக்கியதிலும் ருஷ்ய இலக்கியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது, ஸ்டெப்பியும் பீட்டர்ஸ்பெர்க்கும் சைபீரிய தண்டனைகூடங்களும் மௌனப்பனியும் தமிழ் எழுத்தாளர்கள் மனதில் அழியாத சித்திரங்களாக உள்ளன,

உலகில் வேறு எந்த நகரத்தையும் விடவும் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் தனிச்சிறப்பு வாய்ந்தது, காரணம் அது ருஷ்யப்புரட்சி என்ற மகத்தான வரலாற்று சம்பவத்தின் சாட்சியாக இருந்திருக்கிறது, டால்ஸ்டாய் தஸ்தாயெவ்ஸ்கி துவங்கி இன்று வரை எழுத்தாளர்களின் விருப்பத்திற்குரிய படைப்புகளகமாகவும் வரலாற்றுசின்னமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது,

பீட்டர்ஸ்பெர்கின் வரலாறு மானுடவிடுதலையின் வரலாற்றோடு பின்னிபிணைந்த ஒன்று, அந்த நகரின் ஒவ்வொரு கல்லிலும் வீரமிக்க அதன் கடந்தகாலம் பதிந்து போயிருக்கிறது, பீட்டர்ஸ்பெர்க் என்பது வெறும்நகரம் மட்டுமில்லை, அது மக்கள் எழுச்சியின் குறியீடு, பல்வேறு இலக்கியங்களின் வழியே பீட்டர்ஸ்பெர்கின் பகலும் இரவும் பனியும் குளிரும். குறுகிய வீதிகளும் நடைபாதை மனிதர்களும் உல்லாசமிக்க இரவு வாழ்க்கையும் போராட்டமிக்க மக்கள் எழுச்சியும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, பீட்டர்ஸ்பெர்க் காலத்தின் அழியாச்சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது,

நவம்பர் புரட்சிக்கு மூன்று முக்கிய காரணிகள் இருக்கின்றன, ஒன்று அதன் அரசியல் மற்றும் சமூக சித்தாந்தம் உருவாக்கியது, மற்றது பொருளாதார சீர்கேடும் ஏழ்மையின் சொல்லமுடியாத துயரங்களும் உருவாக்கியது, மூன்றாவது கலை இலக்கியங்கள் உருவாக்கிய புத்தொளிமிக்க நம்பிக்கைகள், லட்சியக்கனவுகள், இந்த மூன்றின் ஒருமித்த சங்கமமே மக்கள் எழுச்சியாகியது, பாரதி சொல்வது போல அது ஒரு யுகப்புரட்சி, மனித குலம் முன் எப்போதும் கண்டிராத மாபெரும் வரலாற்று நிகழ்வு,

ருஷ்ய புரட்சியின் முன்பு வரை பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருந்த கார்க்கியின் அறையே புரட்சியாளர்களின் தங்குமிடமாக இருந்து வந்தது, கவிஞரான மாயகோவ்ஸ்கியே புரட்சியை வாழ்த்திப்பாடி அதன் முக்கிய தூண்டுகோலாக இருந்தார், பரிசோதனை இலக்கிய கர்த்தாக்களாக அறியப்பட்ட ப்யூசரிஸ்டுகளும் புரட்சியை கொண்டாடினார்கள்,

அன்றும் இன்றும் ருஷ்ய இலக்கியங்களை உலகெங்கும் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் அது அடித்தட்டு மக்களின் துயரமிக்க வாழ்வை, உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்ததாகும், ருஷ்ய இலக்கியத்தின் பிரதான உணர்ச்சியே வேதனை தான் என்று சிமியோவ் என்ற விமர்சகர் குறிப்பிடுகிறார், உண்மை தான் அது, பசி, வறுமை, சிதறுண்ட குடும்ப உறவுகள், அதிகார நெருக்கடி, கொடுங்கோன்மை என்று சொல்லில் அடங்காத வேதனைகளை மக்கள் அனுபவித்த துயரத்தையே ரஷ்ய படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் முதன்மைபடுத்தினார்கள்,

இன்று இடதுசாரிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய இலக்கியச்செயல்பாடு ருஷ்ய படைப்பிலக்கியங்களை மறுவாசிப்பு செய்தலும் உரிய கவனப்படுத்துதலுமே, இலக்கியம் உருவாக்கிய நம்பிக்கைகள் தான் பல தேசங்களிலும் அதிகாரத்தை தூக்கி எறிய செய்திருக்கிறது. அதையே வரலாறு நினைவுபடுத்துகிறது

1905 ஆண்டு துவங்கப்பட்ட புரட்சி முறியடிக்கப்பட்டபோது லெனின் தோல்வியில் இருந்து பாடம் கற்போம் தவறுகளை திருத்திக் கொள்வோம் பெரும் வெற்றிபெறுவோம் என்பதை முன்மொழிந்தார், உலகெங்கும் கம்யூனிசம் குறித்த வாதபிரதிவாதங்களும் அவதூறுகளும் ஒய்வில்லாமல் நடந்து கொண்டேயிருக்கும் சூழலில் இந்த வாசகத்தையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது, காரணம் அந்த வாசகம் என்றைக்கும் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது,

Pin It