admk chennai cabinet ministers

தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். இல்லையென்றால் நான்கு ஆண்டுகளில் மூன்று பதவியேற்பு வைபவங்களை அவர்களால் பார்த்திருக்க முடியாது. ஒரு பதவியேற்பு விழா அழுகையும் கண்ணீருமாக நடைபெற்றது. இன்னொரு பதவியேற்பு விழாவோ கோரஸ் எனப்படும் சேர்ந்திசை நிகழ்ச்சி போல நடைபெற்றது. ஜனநாயக நாடு எனப்படும் இந்தியாவில் வேறெந்த மாநிலத்து மக்களுக்காவது இத்தகைய அரிய வாய்ப்புகளைக் காணும் பெரும்பேறு அமைந்திருக்கிறதா? இதுதான் ‘அம்மா’ஆட்சி அல்லது ‘அம்மா’வால் வழிநடத்தப்பட்ட ஆட்சியின் மகத்துவம்.

     தனிப்பெரும்பான்மையுடன் 2011ல் முதல்வரானார் செல்வி. ஜெயலலிதா. மக்களிடம் நிறைய எதிர் பார்ப்புகள் இருந்தன. பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாக அவரும் அறிவித்தார். இலவசம் என்பதை விலையில்லா.. என்று மாற்றியதைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லை. விலையில்லாப் பொருட்கள் பல இடங்களிலும் விநியோகிக்கப்பட்டன. அதனையடுத்து, அம்மா பெயரிலானத் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் விவசாயம், நெசவு, தொழில்துறை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் தேங்கின, முடங்கின.

     ஒரு ரூபாய் சம்பளத்தில் 65 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து அதிசயம் நிகழ்த்திய ஜெயலலிதா மீதான 18 ஆண்டு கால வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததால் அவரது பதவி பறிபோனது. முதல்வர் என்றே சொல்லிக்கொள்ளத் தயங்கிய ஒருவர் தமிழகத்தின் முதல்வரானார். சட்டத்தால் தண்டிக்கப்பட்டு பதவியிழந்தவர் மக்களின் முதல்வரானார். அவரை மறுபடியும் முதல்வராக்குவதற்கு இந்திய நீதித்துறையும் புதுவேகம் காட்டியது. மேல்முறையீட்டு வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு, விடுதலைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் குமாரசாமி. சொத்துகள் பற்றிய அவரது கணக்கீட்டு முறைகள் கணிதமேதைகளுக்கே ஆச்சரியமாக இருந்தன. உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்பதே சட்டம் அறிந்தவர்களின் கருத்தாகவும் மனசாட்சி உள்ளவர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் நாள், நட்சத்திரம் பார்த்து மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. 5வது முறையாக முதல்வராகி, கலைஞரின் சாதனையை ஜெயலலிதா சமன் செய்ததாகவும் கூசாமல் செய்தி வெளியிடுகின்றன ஊடகங்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஜெயலலிதாவின் சாதனையைத்தான் கலைஞராலோ மற்றவர்களாலோ சமன் செய்ய முடியாது. அந்த சாதனை என்பது, ஊழல் வழக்குகளுக்காக இருமுறை நீதிமன்றத் தீர்ப்பினால் பதவி பறிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே முதலமைச்சர் என்கின்ற  சாதனைதான் ஜெயலலிதாவின் சாதனை.

     இந்த சாதனைக்குச் சொந்தக்காரரான அவருக்கு அத்தனை அதிகார மையங்களும் துணையாக நிற்கின்றன. 6 மாதத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதால் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி காலி செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையிலேயே அதற்கான பணிகள் நடக்கின்றன. உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது.  எல்லாமே சட்டரீதியாக நடைபெறுவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அத்தனையும் ஜனநாயகத்தின் மாண்புகளை குழிதோண்டி புதைக்கும் வேலைகளே!

     சாலைப் பணியாளர், மக்கள் நலப் பணியாளர், சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்துதல் இவை தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை இறுதித் தீர்ப்பு என்று ஒப்புக்கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்ற அரசுதான் ஜெயலலிதாவின் அரசு. ஆனால் இன்று தனது சொத்து குவிப்பு வழக்கு பற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடனேயே நீதி வென்றது, தர்மம் வென்றது என்று பதாகை வைத்துக் கொண்டாடுகிறார்கள். பால்குடம், காவடி, மொட்டையடித்தல், மண்சோறு, தீமிதி என கடவுளர்களையும் ஏமாற்றுகிறார்கள். ஜனநாயகத்தின் கல்லறை மீது போடப்பட்டிருக்கிறது ஜெயலலிதாவின் பதவி சிம்மாசனம்.  

Pin It