1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மதுரையில் நடந்த ஐந்து நாள் இலக்கியப் பயிற்சி முகாமில் பங்கேற்று, மூன்றாம் நாளன்று பக்தி இலக்கியம் குறித்து இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கா. சிவத்தம்பி நடத்திய வகுப்பின் உரைச் சுருக்கம்.

பிற்போக்கான சக்திகள் என்று நாம் கருதுகின்றவர்கள் பக்தி இலக்கியங்களைப் பயன்படுத்துகின்றனர். முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாம் பக்தி இலக்கியங்களைப் புறக்கணிக்க முடியுமா? பக்தி இலக்கியத்தை நாம் எவ்வகை யில் நோக்குவது? பாரம்பரியத்தை நாம் நிராகரிக்க முடியுமா?

இன்றைய புதுக்கவிதைகளில் இப்பாரம்பரியத்தின் சாயலை நாம் காண் கிறோம். புராண மரபுகளை அவைகள் எடுத்தாள்கின்றன. (பாரம்பரியங்களை நிராகரிக்க முடியாது என்பதற்கு இவை உதாரணங்கள்.)

இலக்கியம் காலத்தின் கண்ணாடியா? இலக்கியம் கண்ணாடி மாதிரி பிரதி பலிக்கும் படைப்பு அல்ல. இலக்கியம் சமூக உற்பத்தியில் ஒன்று. ஆனால் அது சிறப்பானதொரு உற்பத்தி. இலக்கியம் சமூகத்தை உருவாக்குகிறதா? ‘சமூகத்தின் உருவாக்கத்தை இலக்கியத்தில் காணலாம்’ என்றார் கார்ல் மார்க்ஸ். (எத்தகைய சமூகம் என்பதை அங்கு அந்தக் காலத்தில் தோன்றிய இலக்கியத்தில் காணலாம்.)

பாரம்பரியம் வேண்டுமா? வேண்டாமா? என்ற வினாவுக்கு லெனின் பதில் அளிக்கிறார்: “மனித இனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து இலக்கியங் களின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்பவனே கம்யூனிஸ்ட் ஆக முடியும்” என்று. “இனி நாம் என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் குறிப்பிடுகிறார். எனவே மனித இனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சகல அறிவுக் களஞ்சியத் தையும் தனதாக்கிக் கொள்பவனே கம்யூனிஸ்ட் ஆவான்.

பாரதிதாசன் புதிய மணிமேகலை எழுதினார். பாரம்பரியத்தைச் சரியாக உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாரம்பரியத்துக்கு ஓர் சமூக நோக்கு உண்டு. மனிதாபிமானத்தை தமிழ் இலக்கியத்தில் காட்டியவர் ஜீவா. திரு.வி.க. மார்க்சியத்தை தமிழ்ப் பாரம்பரியத்துடன் இணைக்க முடியுமா என்று முயன்றார்.

எல்லோருக்கும் பொதுவான ஓர் பாரம்பரியத்தை நாம் இலக்கியத்தில் காண வேண்டும். மனிதாபிமான அடிப்படையே பொதுவான அம்சமாகும். மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத் திருச்சதகத்தைப் படித்தால் பைபிள் படிப்பது போலவே இருக்கும். எனவே தான் போப் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தார்.

‘அகலிகை கதை’ என்று தொடங்கினால் வால்மீகி ராமாயணம் தொடங்கி புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ வரை வரவேண்டும். திருவாதவூரார் கதையைப் புதுமைப்பித்தன் எழுதிய ‘அன்றிரவு’வரை ஆராய வேண்டும்.

பக்தி இலக்கியத்தின் தொடக்க கட்டத்தில் காரைக்கால் அம்மையார் வருகிறார். சங்க இலக்கியங்களில் உள்ள பல செய்திகள் பக்தி இலக்கியத்தில் காணப்படவில்லை. வெறியாடல் பாடல் வருகிறது.

குறுநில மன்னர்களை அடுத்து மன்னர்களும் மன்னர்களை அடுத்து முடியுடை மூவேந்தர்களும் தமிழகத்தை ஆண்டனர். சோழர்கள் காலத்தில்,

“உடும்போடு ஆமை ஊரும்

இடம் எல்லாம் அளவிட”ப்படுகிறது.

சைவ இலக்கியங்கள் சோழர்கள் காலத்தில் தோன்றின.

“சில சமயங்கள் தோன்றுகின்ற காலத்தில் வரலாற்றில் முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கும்”- என்று எங்கெல்ஸ் பழைய கிறிஸ்துவ சமய வரலாறு என்ற நூலில் குறிப்பிடு கிறார்.

இலக்கிய வரிசை என்று வரும் போது சிறந்த கவிஞர்களாக இளங்கோ, கம்பன், பாரதி என்று வருகின்றனர்.

மயாகோவ்ஸ்கி லெனின் இறந்த பிறகு பாடும் போது அவர் உயிரோடு இருக்கும் போது செய்த செயல்களை எல்லாம் பாடுகிறார்.

“பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்” என்று பௌத்தர்கள் கூறிய காலத்தில்தான் சிவனைக் காண “மனித்த பிறவியும் வேண்டுவதே” என்று பாடினார் திருநாவுக்கரசர். அவர் ஆண்டவனைத் தன் ஆண்டானாகவே பாவித்துப் பாடுகிறார்! எப்படி வந்தது இது? அவர் காலச் சமுதாய வழக்கில் இருந்து வந்தது இது. ஆண்டவன்-மனிதன் உறவு கூடச் சமுதாய உறவு போலவே வர்ணிக்கப் படுகிறது.

“தோழன்” உறவு கொண்டவர் சுந்தரர் ஒருவர் மட்டுமே. இதை நாம் தட்டிக் கழிக்க இயலாது.

ஆண்டவன் - மனிதன் உறவைக், கணவன் மனைவி உறவு போல் வர்ணித்தவர்களும் உண்டு. ஆண்டாள் வைஷ்ணவ யுவதி. காதல் உறவுகளை முதலில் சொன்னவர் அவர் ஒருவரே. ஆண்டாள் பாடலில் மனித உறவுகள் அனைத்தும் காணப்படு கின்றன. விரசம் உள்ளது, விரசம் இல்லாதது ஆகிய இரண்டும் உள்ளன. மாணிக்கவாசகரின் திருவெம் பாவையில் ஆண்டாளின் திருப்பாவையின் சாயலைக் காணலாம்.

சங்க இலக்கியம் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

ஆனால் அறிய வேண்டியவர்கள் பலராக (சாதாரண மக்களாக) இருக்கும் போது விளக்க மாகச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. மாணிக்க வாசகர் இறைவனை வணங்குவதைப் பற்றி மிக விரிவான முறையில் நெஞ்சுருகப் பாடுகிறார். நுண்மையான கருத்தைச் சொல்ல மொழி நெகிழ்ச்சி அடைய வேண்டியுள்ளது. அந்த வகையில் கம்பராமாயணமும் பெரிய புராணமும் நுண்ணிய கருத்துக்களை விரிவான முறையில் பாடிச் செல்கின்றன.

மேற்கோள் காட்டுவது ஏன்? என் அனுபவத்தை முன்னோர் அனுபவத்துடன் அடையாளம் கண்டு கொள்கிறேன். மணிவாசகர் அமைச்சர். ஞானி யைக் கண்டவுடன் அவருக்குத் துறவு மனப்பான் மை வருகிறது. அவரைக் குருவாக ஏற்று அமைச்சர் பதவியைத் துறக்கிறார்.

உணர்வு அச்சு (ஆடிவகைக) என்பது மக்களிடம் இருந்துவருகிறது. திருச்சதகம், திருத்தோள் என்பன மணிவாசகர் காலத்தில் வழக்கில் இருந்த பாடல் களின் படிவமே ஆகும்.

பக்தி இலக்கியம் சமூக இயக்கமாகவும் தன்னைத்தானே தேடுதலாகவும் பயன்படுத்தப் பட்டன.

சோழர் காலத்தில் நாயன்மார், ஆழ்வார் பாடல் மரபுகள் காணப்படவில்லை.

நச்சினார்க்கினியர் தன்னுடைய உரைகளில் தேவாரப் பாடல்களை மேற்கோள் காட்ட வில்லை. ஏன்?

கோயிலை மையமாகக் கொண்டு பிரதேசத்தை ஒன்றுபடுத்தினான் சோழ அரசன். சேக்கிழார் அமைச்சராகப் பணியாற்றியவர். அவர் பாடல் விரசம் இல்லாதது. காதலைச் சிறப்பாகப் பாடு கிறார். 63 நாயன்மார்களைச் சிலையாக வைத்து வழிபடும் முறை வளர்ந்தது.

“சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனிஎதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதனால் எற்றைக்குத் திருவருளுடை யேம், நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றி கொள் திருநீற்றொளியில் விளங்கும் மேன்மையும் படைத் தனம் என்பர்” என்ற சேக்கிழார் பாடலின் இறுதி அடியை மட்டும் மாற்றிக் கொண்டால் நம்முடைய கருத்துக்கு ஒத்து வரும் தன்மையைக் காணலாம்.

Pin It